2010–2019
தெய்வத்துவமும் இரட்சிப்பின் திட்டமும்
ஏப்ரல் 2017


தெய்வத்துவமும் இரட்சிப்பின் திட்டமும்

தெய்வத்துவம் மற்றும் அவர்களுடன் நமது உறவு பற்றிய சத்தியத்தை நாம் பெற்றிருப்பதால், அநித்தியத்தின் ஊடே நமது பயணத்துக்கு இறுதியான சாலை வரைபடத்தை நாம் பெற்றிருக்கிறோம்.

நமது முதலாம் விசுவாசப் பிரமாணம் பிரகடனம் செய்கிறது: “நித்திய பிதாவாகிய தேவன், அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவரை நாங்கள் விசுவாசிக்கிறோம்.” ஒரு பிதாவிலும் குமாரனிலும், பரிசுத்த ஆவியானவரிலும் நம்புவதில் நாம் பிற கிறிஸ்தவர்களுடன் இணைகிறோம். ஆனால் அவர்களைப் பற்றி நம்புவது பிறரது நம்பிக்கையை விட வித்தியாசமானது. பரிசுத்த திருத்துவம் பற்றிய கோட்பாடு என்று கிறிஸ்தவ உலகம் அழைப்பதை நாம் நம்பவில்லை. அவரது முதல் தரிசனத்தில் தேவன் மற்றும் தெய்வத்துவம் பற்றிய, அப்போது நிலவிய நம்பிக்கைகள் உண்மையல்ல என தெளிவுபடுத்தும் விதமாக ஜோசப் ஸ்மித் இரு வித்தியாசமானவர்களை, இரு நபர்களைப் பார்த்தார்.

தேவன் அறிவுக்கு அப்பாற்பட்டவர், அறிந்துகொள்ள முடியாத வினோதம் என்ற நம்பிக்கைக்கு எதிராக, தேவ தன்மை என்ற சத்தியமும், அவருடன் நமது உறவும் நாம் அறிந்துகொள்ளக்கூடியவை, என்பது நமது கோட்பாடு அனைத்திலும் முக்கியமானது. இயேசுவின் பரிந்து பேசும் ஜெபத்தில், அவர் அறிவித்ததாவது “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும், அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3).

படம்
பரிசுத்த வேதாகமம்

தேவனை அறியும் முயற்சியும் அவரது பணியும், அநித்தியத்துக்கு முன்னமே தொடங்கியது, அது இங்கு நிறைவடையாது. தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் போதித்தார், “[மேன்மைப்படுதலின் அனைத்து கொள்கைகளையும்] அறிந்திடுவதற்கு முன்பே, நீங்கள் திரையைக் கடந்த பிறகும் அதிக காலம் ஆகும்.”1 நாம் அநித்தியத்துக்கு முந்தய ஆவி உலகத்தில் பெற்ற அறிவின் மீது நாம் கட்டுவோம். இவ்வாறாக, தேவ தன்மை பற்றியும், அவரது பிள்ளைகளுடன் அவரது உறவு பற்றியும் இஸ்ரவேலருக்குக் கற்பிக்க முயலும்போது வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டபடி தீர்க்கதரிசி ஏசாயா அறிவித்தான்:

“இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? …

“நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டது முதல் உணராதிருக்கிறீர்களா? (ஏசாயா 40:18,21).

தெய்வத்துவத்தின் மூவரும் தனித்தனியான வெவ்வேறு நபர்கள் என நாம் அறிவோம். தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் கொடுத்த அறிவுரையிலிருந்து நாம் இதை அறிகிறோம்: “பிதா மனுஷர் போல, தொட்டுணரக்கூடிய மாம்சமும் எலும்பும் கொண்ட சரீரம் பெற்றிருக்கிறார், குமாரனும்கூட, ஆனால் பரிசுத்த ஆவியானவர் மாம்சமும் எலும்புகளும் கொண்ட சரீரம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆவி நபராவார். அப்படியில்லையானால் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசம் பண்ண முடியாது” (கோ.உ 130:22).

தெய்வத்துவத்துக்குள் பிதாவாகிய தேவனின் உயர் நிலை பற்றியும், ஒவ்வொருவர் நிறைவேற்றுகிற தனித்தனி பங்குகள் பற்றியும் தீர்க்கதரிசி ஜோசப் விளக்கினார்:

படம்
தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்

“பரலோகங்கள் திறந்திருப்பதைப் பார்த்த யாரும், வல்லமைகளின் திறவுகோல்கள் தரித்திருக்கிற மூன்றுபேர் இருக்கிறார்கள், ஒருவர் அனைவருக்கும் தலைமை தாங்குகிறார் என அறிவர். ...

“ இந்த மூவரும் சிருஷ்டிகராகிய முதலாமானவரான தேவன், இரண்டாம் தேவனாகிய மீட்பர், மூன்றாம் தேவனானவர், சாட்சியானவர் மற்றும் அத்தாட்சி.

“முதன்மையானவராக அல்லது தலைவராக பிதாவின் உரிமை தலைமை தாங்குபவராகவும், இயேசு பரிந்து பேசுபவராகவும் மற்றும் பரிசுத்த ஆவியானவர் சாட்சியானவர் அத்தாட்சியாக இருப்பதுவே.”2

திட்டம்

இரட்சிப்பின் திட்டம் பற்றி வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து, தெய்வத்துவத்தின் அங்கத்தினர்களுடன் நமது உறவு பற்றி நாம் அறிகிறோம்.

நாம் எங்கிருந்து வந்தோம்? ஏன் இங்கிருக்கிறோம்? எங்கு போகிறோம்? போன்ற கேள்விகள், வேதங்கள் “இரட்சிப்பின் திட்டம்”, “மகிழ்ச்சியின் மாபெரும் திட்டம்”, அல்லது “மீட்பின் திட்டம்” என்றழைக்கிற அதில் பதிலளிக்கப்பட்டுள்ளன. (ஆல்மா 42:5, 8, 11). இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் இத்திட்டத்துக்கு மையமாக இருக்கிறது.

தேவனின் ஆவிக்குழந்தைகளாக அநித்தியத்துக்கு முந்தய நிலையில், நாம் நித்திய ஜீவனுக்கான ஒரு இலக்கை வாஞ்சித்தோம், ஆனால் மாம்ச சரீரத்தின் அநித்திய அனுபவம் இன்றி நம்மால் முடிந்த அளவு முன்னேறினோம். அந்த சந்தர்ப்பத்தை அளிக்க நமது பரலோக பிதா உலக சிருஷ்டிப்பில் தலைமை தாங்கினார், அப்போது நமது அநித்திய பிறப்புக்கு முன்னால் நடந்தது பற்றிய நினைவில்லாமல், அவரது கட்டளைகளைக் கைக்கொள்ள நமது விருப்பத்தையும், அநித்திய ஜீவியத்தின் பிற சவால்களையும் அனுபவித்து, வளர நம்மால் முடிந்தது. ஆனால் அந்த அநித்திய அனுபவப் பாதையில், நமது முதற்பெற்றோரின் வீழ்ச்சியின் விளைவாக, தேவ சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு, பாவத்தால் அழுக்கடைந்து, சரீர மரணத்துக்கு இலக்காகி, நாம் ஆவிக்குரிய மரணம் அடைவோம். இந்த தடைகளையெல்லாம் மேற்கொள்ள பிதாவின் திட்டம் எதிர்பார்த்து வழிகளைக் கொடுத்தது.

III. தெய்வத்துவம்

தேவனின் மாபெரும் திட்டத்தின் நோக்கத்தை அறிந்து, அத்திட்டத்தில் தெய்வத்துவத்தின் மூன்று அங்கத்தினர்களின் பங்குகளை நாம் இப்போது கருத்தில் கொள்வோம்.

வேதாகமத்திலிருந்து ஒரு போதனையோடு நாம் தொடங்குவோம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தை நிறைவு செய்யும்போது, அப்போஸ்தலனாகிய பவுல், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியாகிய தெய்வத்துவம் பற்றி கிட்டத்தட்ட முன் ஆயத்தம் இல்லாமலேயே குறிப்பிடுகிறான்: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும்3] உங்களனைவரோடுங் கூட இருப்பதாக” (2 கொரிந்தியர் 13:14).

இந்த வேதாகம வசனம் தெய்வத்துவத்தைக் குறிப்பிட்டு, பிதாவாகிய தேவனின் எல்லாவற்றுக்கும் மேலான, உற்சாகமூட்டும் அன்பையும், இயேசு கிறிஸ்துவின் இரக்கமிக்க இரட்சிக்கும் ஊழியத்தையும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியத்தையும் குறிப்பிடுகிறது.

பிதாவாகிய தேவன்

எல்லாம் பிதாவாகிய தேவனுடன் தொடங்குகிறது. ஒப்பீட்டில் நாம் அவரைப் பற்றி சிறிதளவே அறிந்தாலும், அவரது உயர் நிலை, அவருடன் நமது உறவு, இரட்சிப்பின் திட்டம், சிருஷ்டிப்பு மற்றும் அதைத் தொடர்ந்த அனைத்திலும் அவரது மேற்பார்வையாளரான பங்கை நாம் அறிந்திருப்பது முடிவானது.

அவரது மரணத்துக்கு சற்று முன்பு மூப்பர் புரூஸ் ஆர். மெக்கான்கி எழுதியதுபோல, “வார்த்தையின் இறுதியும் கடைசியுமான பார்வையில், ஒரே ஒரு உண்மையான ஜீவிக்கிற தேவன் இருக்கிறார். அவரே பிதா, சர்வ வல்ல ஏலோகிம், உன்னதமானவர், பிரபஞ்சத்தை சிருஷ்டித்து ஆளுகை செய்பவர்.”4 அவரே தேவன், இயேசு கிறிஸ்து மற்றும் நம் அனைவரின் பிதா. தலைவர் டேவிட் ஓ. மெக்கே போதித்ததாவது, “இயேசு கிறிஸ்துவால் பரிந்துரைக்கப்பட்ட முதலாம் அடிப்படை சத்தியமாவது, இதிலும், பின்னாலும், மேலேயும், எல்லா இடங்களிலும் பிதாவாகிய தேவனும் பரலோகம் மற்றும் பூமியின் கர்த்தரும் இருக்கிறார்கள்.”5

பிதாவாகிய தேவனின் தன்மை பற்றி கிட்டத்தட்ட நாம் அறிவது, அவரது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியத்திலிருந்தும் போதனைகளிலிருந்துமே. மூப்பர் ஜெப்ரி ஆர். ஹாலண்ட் போதித்தார், “இயேசுவின் ஊழியத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று, மனுஷருக்கு, நமது நித்திய பிதாவாகிய தேவன் எப்படிப்பட்டவர்,... நமது பரலோக பிதாவாகிய அவரது பிதாவின் உண்மை நிலையை வெளிப்படுத்தி, நமக்கு சொந்தமாக்குவதே.”6 இயேசு அவரது பிதாவின் தன்மையின் சொரூபமும் உடையவர் என்ற அப்போஸ்தல சாட்சி வேதாகமத்தில் இருக்கிறது. (எபிரேயர் 1:3), அது “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்ற இயேசுவின் போதனையையே விளக்குகிறது. (யோவான் 14:9).

பிதாவாகிய தேவன் நமது ஆவிகளின் பிதா. நாம் அவரது பிள்ளைகள். அவர் நம்மை நேசிக்கிறார், அவர் செய்வது அனைத்துமே நமது நித்திய ஆதாயத்துக்காகவே. அவரே இரட்சிப்பின் திட்டத்துக்கு அதிகாரி. அவரது பிள்ளைகளின் முடிவான மகிமையின் நோக்கத்தை அவரது வல்லமையால் அவரது திட்டம் அடைகிறது.

குமாரன்

மனுஷருக்கு தெய்வத்துவத்தின் மிகவும் கண்கண்ட நபர் இயேசு கிறிஸ்து. 1909ல் பிரதான தலைமையின் ஒரு மாபெரும் கோட்பாட்டு வாசகம் அவரைப் பற்றி அறிவிக்கிறது, “தேவ குமாரர்கள் மத்தியில் முதற்பேறானவர், ஆவியில் முதற்பேறானவர், மாம்சத்தில் ஒரேபேறானவர்.”7 அனைவரிலும் உயர்வானவராகிய குமாரன், பிதாவின் திட்டத்தை நிறைவேற்றவும், எண்ணற்ற உலகங்களை சிருஷ்டிக்க பிதாவின் வல்லமையை பிரயோகிக்கவும், (மோசே 1:33), அவரது உயிர்த்தெழுதலால் மரணத்திலிருந்தும், அவரது பாவ நிவர்த்தியால் பாவத்திலிருந்தும் தேவனின் பிள்ளைகளை இரட்சிக்கவும், தெரிந்துகொள்ளப்பட்டார். அந்த உயர்வான பலி, “முழு மனிதகுல சரித்திரத்தின் மையமான செயல்” என அழைக்கப்படுகிறது.8

படம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து

பிதாவாகிய தேவன் தாமே குமாரனை அறிமுகப்படுத்திய மிகச்சிறந்த பரிசுத்த தருணங்களில், அவர் சொல்லியிருக்கிறார், இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள். (மாற்கு 9:7; லூக்கா 9:35; 3 நெபி 11:7; ஜோசப் ஸ்மித் வரலாறு 1:17ம் பார்க்கவும்.) இவ்விதமாக, இயேசு கிறிஸ்து யேகோவா, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், தீர்க்கதரிசிகளுக்கும், தீர்க்கதரிசிகள் மூலமும், பேசுபவர். 9ஆகவே இயேசு அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நெப்பியர்களுக்குத் தரிசனமானபோது, அவர் தம்மை, பூமியனைத்தின் தேவன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். (3 நெப்பி 11:14) 100 ஆண்டுகளுக்கு முன்பு, பிரதான தலைமை மற்றும் பன்னிருவர் குழுமத்தின் உணர்த்தப்பட்ட கோட்பாட்டு அறிவிப்பில், விளக்கப்பட்டுள்ள பட்டத்துடன் “பிதாவும் குமாரனுமாக” மார்மன் புத்தக மற்றும் பிற்காலப் பரிசுத்தவான் தீர்க்கதரிசிகளுடன், அடிக்கடி பேசுபவர் இயேசுவே.10

பரிசுத்த ஆவியானவர்

தெய்வத்துவத்தின் மூன்றாம் நபர் பரிசுத்த ஆவியானவர், பரிசுத்த ஆவி எனவும், கர்த்தரின் ஆவி எனவும், தேற்றரவாளன் எனவும் குறிப்பிடப்படுகிறார். அவர் தெய்வத்துவத்தில் ஒரு அங்கத்தினர். தனிப்பட்ட வெளிப்படுத்தலின் பிரதிநிதி. ஒரு ஆவி நபராக (கோ.உ 130:22) அவர் நம்மில் தரித்திருந்து, பிதாவுக்கும், குமாரனுக்கும், பூமியிலுள்ள தேவ பிள்ளைகளுக்கும் தொடர்பாளராக முக்கிய பங்காற்றுகிறார். அவரது ஊழியம் பிதா மற்றும் குமாரன் பற்றி சாட்சி கொடுப்பது என அனேக வசனங்கள் போதிக்கின்றன. (யோவான் 15:26; 3  நெப்பி 28:11; கோ.உ 42:17 பார்க்கவும்.) தேற்றரவாளனே உங்களுக்கு எல்லாவற்றையும் போதித்து, எல்லாவற்றையும் நினைப்பூட்டி, எல்லா சத்தித்துக்கும் வழிநடத்துவார் என இரட்சகர் வாக்குத்தத்தம் கொடுத்தார். (யோவான் 14:26; 16:13) இவ்வாறு பரிசுத்த ஆவியானவர், சத்தியத்தையும் பொய்யையும் பிரித்தறியவும், முக்கிய முடிவுகளில் நம்மை வழிநடத்தவும், அநித்தியத்தின் சவால்களை கடக்கவும் நமக்கு உதவுகிறார்.11 நாம் பாவத்திலிருந்து கழுவப்பட்டு பரிசுத்தப்படுத்தப்படுகிற வழியும் அவரே. (2 நெப்பி 31:17; 3 நெப்பி 27:20; மரோனி 6:4).

ஆகவே தெய்வத்துவம் மற்றும் இரட்சிப்பின் திட்டம் பற்றிய பரலோகத்தால் வெளிப்படுத்தப்பட்ட கோட்பாட்டைப் புரிந்துகொள்வது நமது இன்றைய சவால்களில் நமக்கு உதவும்?

தெய்வத்துவம், அவர்களோடு நமது உறவு, வாழ்க்கையின் நோக்கம், நமது நித்திய நோக்கத்தின் தன்மை பற்றிய சத்தியத்தை நாம் கொண்டிருப்பதால், நமது அநித்திய பயணத்தில் முடிவான சாலை வரைபடத்தையும் உறுதியையும் நாம் பெற்றிருக்கிறோம். நாம் யாரை ஆராதிக்கிறோம், எதற்காக ஆராதிக்கிறோம் என நாம் அறிவோம். நாம் யார், நாம் எதுவாக முடியும் எனவும் அறிவோம். (கோ.உ 93:19) இதை எல்லாம் யார் சாத்தியமாக்குகிறார்கள் என நாம் அறிவோம், தேவனின் இரட்சிப்பின் திட்டத்தின் மூலம் எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவிக்க நாம் என்ன செய்ய வேண்டும் எனவும் நாம் அறிவோம். இவை அனைத்தையும் நாம் எப்படி அறிகிறோம்? அவரது தீர்க்கதரிசிகளுக்கும், தனித்தனியாக நம் ஒவ்வொருவருக்கும் தேவனுடைய வெளிப்படுத்தல்களால் நாம் அறிகிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்தபடி “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சிக்குத் தக்க பூரண புருஷராவதற்கு”, (எபேசியர் 4:13) அறிவு பெறுவதை விட அதிகம் தேவைப்படுகிறது. நாம் சுவிசேஷத்தில் திருப்தியடைவது மட்டும் போதாது, நாம் அதனால் மனமாற்றம் அடையும் விதமாக நினைத்து செயல்பட வேண்டும். ஒன்றை அறிய நமக்குப் போதிக்கிற உலக அமைப்புகளுக்கு மாறாக, இரட்சிப்பின் திட்டமும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷமும் ஒன்று ஆகுமாறு நமக்கு சவால் விடுகிறது.

படம்
தலைவர் தாமஸ்எஸ். மான்சன்

நமது கடந்த பொது மாநாட்டில் தலைவர்  தாமஸ் எஸ். மான்சன் நமக்கு போதித்தபடி:

“இரட்சிப்பின் திட்டத்துக்குத் தேவையானவர் நமது இரட்சகரான இயேசு கிறிஸ்து. அவரது பாவநிவாரண பலியின்றி அனைத்தும் இழக்கப்படும். எனினும் அவரையும் அவரது ஊழியத்தையும் மட்டுமே நம்புவது போதாது. நாம் உழைத்து, கற்று, தேடி, ஜெபித்து, மனந்திரும்பி முன்னேற வேண்டும். நாம் தேவனின் நியாயப்பிரமாணங்களை அறிந்து அவற்றின்படி வாழ வேண்டும். நாம் அவரது இரட்சிக்கும் நியமங்களைப் பெற வேண்டும். அப்படிச் செய்வதால் மட்டுமே, நாம் உண்மையான நித்திய மகிழ்ச்சியை அடைவோம். ...

தலைவர் தாமஸ் எஸ். மான்சன் அறிவித்தார், “உள்ளத்தின் ஆழத்திலிருந்து, முழு தாழ்மையுடன் நமக்கு நமது பிதாவின் மாபெரும் பரிசு பற்றி நான் சாட்சியளிக்கிறேன். இங்கும் வரவிருக்கிற உலகத்திலும் சமாதானத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இது ஒரு பரிபூரண பாதை.”12

நமது அன்பு தீர்க்கதரிசி/தலைவர் சாட்சியுடன் எனது சாட்சியையும் சேர்க்கிறேன், நம்மை நேசிக்கிற ஒரு பரலோக பிதா இருக்கிறார் என நான் சாட்சியளிக்கிறேன். நம்மை வழிநடத்துகிற ஒரு பரிசுத்த ஆவியானவர் நமக்குண்டு என நான் சாட்சியளிக்கிறேன். எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிற நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பற்றியும் நான் சாட்சியளிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென்.

குறிப்புகள்

  1. Teachings of Presidents of the Church: Joseph Smith (2007), 268.

  2. Teachings: Joseph Smith, 42.

  3. This was a common meaning of communion when that word was chosen by the King James translators (see The Oxford Universal Dictionary, 3rd ed., rev. [1955], 352).

  4. Bruce R. McConkie, A New Witness for the Articles of Faith (1985), 51.

  5. David O. McKay, in Conference Report, Oct. 1935, 100.

  6. Jeffrey R. Holland, “The Grandeur of God,” Liahona, Nov. 2003, 70.

  7. First Presidency, “The Origin of Man,” Ensign, Feb. 2002, 26, 29.

  8. See, for example, Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 40; “The Living Christ: The Testimony of the Apostles,” Liahona, Apr. 2000, 2.

  9. See Joseph Fielding Smith, Doctrines of Salvation, comp. Bruce R. McConkie (1954), 1:27.

  10. See First Presidency and Quorum of the Twelve Apostles, “The Father and the Son,” Ensign, Apr. 2002, 13–18.

  11. See Robert D. Hales, “The Holy Ghost,” Liahona, May 2016, 105–7.

  12. Thomas S. Monson, “The Perfect Path to Happiness,” Liahona, Nov. 2016, 80–81.