வேதங்கள்
4 நேபி 1


நான்காம் நேபி

இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் ஒருவனான நேபியின் குமாரனாகிய
நேபியின் புஸ்தகம்

அவனுடைய பதிவேட்டின்படியே, நேபியின் ஜனங்களைப்பற்றிய விவரம்.

அதிகாரம் 1

நேபியரும் லாமானியருமான அனைவரும் கர்த்தருக்குள்ளாக மனம்மாற்றப்படுதல் – அவர்கள் சகலத்தையும் பொதுவாய் வைத்திருத்தல், அற்புதங்களைச் செய்தல், மற்றும் தேசத்தில் விருத்தியடைதல் – இரண்டு நூற்றாண்டுகள் கழித்து பிரிவினைகள், பொல்லாங்குகள், கள்ள சபைகள், துன்புறுத்தல்கள் எழுதல் – முன்னூறு வருஷங்களுக்குப் பின்பு, நேபியர்களும், லாமானியரும் துன்மார்க்கராயிருத்தல் – அம்மாரோன் பரிசுத்த தகடுகளை மறைத்து வைத்தல். ஏறக்குறைய கி.பி. 35–321.

1 அந்தப்படியே, முப்பத்து நான்காம் வருஷமும், முப்பத்து ஐந்தாம் வருஷமும் கடந்து போயின, இதோ, இயேசுவின் சீஷர்கள் சுற்றிலுமுள்ள தேசங்கள் அனைத்திலும் கிறிஸ்துவின் சபையை ஸ்தாபித்தார்கள். அவர்களிடத்தில் வந்த அநேகர், தங்கள் பாவங்களிலிருந்து உண்மையாகவே மனந்திரும்பி, இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்; அவர்கள் பரிசுத்த ஆவியானவரையும் பெற்றுக் கொண்டார்கள்.

2 அந்தப்படியே, முப்பத்து ஆறாம் வருஷத்தில் நேபியரும், லாமானியருமான தேசத்தின் மீதிருந்த ஜனங்கள் யாவரும் கர்த்தருக்குள்ளாக மனம்மாற்றப்பட்டார்கள். அவர்களுக்குள் எந்த பிணக்குகளும், பிணக்குகளும் இல்லை. ஒவ்வொரு மனுஷனும் மற்றவனிடம் நியாயமாய் நடந்துகொண்டான்.

3 அவர்களுக்குள் எல்லாமும் பொதுவாயிருந்தன; ஆதலால் அவர்களுக்குள் ஐஸ்வரியவான்களும் இல்லை, தரித்திரருமில்லை, அடிமைப்பட்டவர்களும் இல்லை, சுயாதீனர்களும் இல்லை. அவர்கள் யாவரும் சுயாதீனர்களாக்கப்பட்டு, பரலோக ஈவைப் புசிக்கிறவர்களாக இருந்தார்கள்.

4 அந்தப்படியே, முப்பத்து ஏழாம் வருஷமும் கடந்து போயிற்று, தேசத்தில் தொடர்ந்து சமாதானம் நிலவியது.

5 இயேசுவின் சீஷர்களால் அங்கே பெரிய அற்புதமான கிரியைகள் நடப்பிக்கப்பட்டன. அவர்கள் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார்கள். மரித்தோரை எழுப்பினார்கள், முடவரை நடக்கச் செய்தார்கள், குருடர் தங்கள் பார்வைகளைப் பெறச் செய்தார்கள். செவிடரைக் காது கேட்கச் செய்தார்கள். எல்லாவிதமான அற்புதங்களையும் அவர்கள் மனுபுத்திரர் மத்தியில் நடப்பித்தார்கள். இயேசுவின் நாமத்தினாலேயன்றி வேறு ஒன்றினாலும் அவர்கள் அற்புதங்களைச் செய்யவில்லை.

6 இப்படியே முப்பத்து எட்டாம் வருஷமும் முப்பத்து ஒன்பதாம் வருஷமும், நாற்பத்தி ஒன்றாம் வருஷமும், நாற்பத்தி இரண்டாம் வருஷமும், ஆம், நாற்பத்தி ஒன்பதாம் வருஷங்கள் வரைக்குமாய் கடந்து போயின. ஐம்பத்தி ஒன்றாம், ஐம்பத்தி இரண்டாம் வருஷங்களும், ஆம், ஐம்பத்தி ஒன்பதாம் வருஷங்கள் வரைக்குமாய் கடந்து போயின.

7 கர்த்தர் அவர்களை தேசத்தில் மிகுதியாய் விருத்தியடையப்பண்ணினார்; ஆம், எரிக்கப்பட்ட பட்டணங்கள் இருந்த இடத்திலேயே அவர்கள் மறுபடியும் பட்டணங்களைக் கட்டினார்கள்.

8 ஆம், அந்த பெரும் பட்டணமாகிய சாரகெம்லா மறுபடியும் கட்டப்படப் பண்ணினர்.

9 ஆனால் அநேக பட்டணங்கள் மூழ்கிப்போய், அவைகள் இருந்த இடங்களிலேயே தண்ணீர்கள் வந்ததால், இப்பட்டணங்கள் புதுப்பிக்கப்பட முடியவில்லை.

10 இப்பொழுதும் இதோ, அந்தப்படியே, நேபியின் ஜனங்கள் பெலவான்களாக வளர்ந்து, மிகவும் சீக்கிரமாய்ப் பெருகி, மிகவும் அழகான, வசீகரமுள்ள ஜனமானார்கள்.

11 அவர்கள் விவாகம் பண்ணினார்கள். விவாகம் செய்து கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கர்த்தர் செய்த திரளான வாக்குத்தத்தங்களின்படியே ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

12 அவர்கள் இதற்குமேல் மோசேயின் நியாயப்பிரமாணத்தினுடைய சடங்குகளின்படியேயும், நியமங்களின்படியேயும் நடவாமல், உபவாசத்திலும் ஜெபத்திலும் தரித்திருந்து, ஜெபிக்கவும், கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கவும் அடிக்கடி ஏகமாய்க் கூடி, அவர்கள் தங்கள் கர்த்தரும் தேவனுமானவரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட கட்டளைகளின்படியே நடந்தார்கள்.

13 அந்தப்படியே, தேசம் எல்லாவற்றிலுமிருந்த சகல ஜனங்களுக்குள்ளும் எந்த பிணக்கும் இல்லை; ஆனால் இயேசுவின் சீஷர்களுக்குள்ளே பெரும் அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டன.

14 அந்தப்படியே, எழுபத்தி ஒன்றாம் வருஷமும், எழுபத்தி இரண்டாம் வருஷமும், இப்படியே எழுபத்தி ஒன்பதாம் வருஷம் வரைக்குமாய் கடந்து போயிற்று, ஆம், நூறு வருஷங்கள் கடந்து போயிற்று; இயேசு தெரிந்துகொண்ட சீஷர்களில் தரித்திருக்கவேண்டுமென்ற அந்த மூவரைத் தவிர, மற்ற அனைவரும் தேவ பரதீசுக்குப் போனார்கள்; அவர்களுடைய ஸ்தானங்களில் மற்ற சீஷர்கள் நியமிக்கப்பட்டார்கள்; அந்த தலைமுறையினர் அநேகரும் கடந்து போனார்கள்.

15 அந்தப்படியே, ஜனங்களுடைய இருதயங்களில் வாசமாயிருந்த தேவ அன்பினிமித்தம் தேசத்தில் எந்த பிணக்கும் இல்லாமலிருந்தது.

16 அங்கு பொறாமைகளோ, பிணக்குகளோ, குழப்பங்களோ, வேசித்தனங்களோ, பொய்யுரைகளோ, கொலைகளோ, எந்த விதமான காமவிகாரமோ இருக்கவில்லை. தேவ கரத்தால் சிருஷ்டிக்கப்பட்ட ஜனங்கள் எல்லாருக்குள்ளும், இவர்களைக் காட்டிலும் மிகுந்த மகிழ்ச்சியான ஜனம் நிச்சயமாய் இருந்திருக்க முடியாது.

17 அங்கே திருடர்களோ, கொலைகாரர்களோ, லாமானியரோ அல்லது எந்தப் பிரிவும் இல்லை, அவர்கள் கிறிஸ்துவினுடைய பிள்ளைகளாய் ஒன்றாயும், தேவ ராஜ்யத்திற்கு சுதந்தரவாளிகளாயும் இருந்தார்கள்.

18 அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! ஏனெனில் கர்த்தர் அவர்களை அவர்களுடைய எல்லா நடவடிக்கைகளிலும் ஆசீர்வதித்தார்; ஆம், நூற்றிப்பத்து வருஷங்கள் கடந்துபோகுமட்டும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு விருத்தியடைந்தார்கள்; கிறிஸ்து தொடங்கி முதல் தலைமுறை கடந்துபோயிற்று. தேசம் முழுவதிலும் எந்தப் பிணக்குமில்லை.

19 அந்தப்படியே, இந்தக் கடைசி பதிவேட்டை வைத்திருந்த அந்த நேபி மரித்துப் போனான் (அவன் நேபியின் பதிவேடுகள் மேல் அதை வைத்திருந்தான்) அவனுக்குப் பதிலாக அவன் குமாரன் ஆமோஸ் அதை வைத்திருந்தான்; அவனும் அதை நேபியின் தகடுகளின்மேல் வைத்திருந்தான்.

20 அவன் அதை எண்பத்தி நான்கு வருஷங்கள் வைத்திருந்தான், ஜனங்களில் சிறுபகுதியினர் சபையிலிருந்து கலகம்பண்ணி, தங்கள் மேல் லாமானியரின் பெயரை எடுத்துக்கொண்டதைத் தவிர, தேசத்தில் இன்னும் சமாதானம் நிலவியது; அங்கே தேசத்தில் மறுபடியும் லாமானியர் இருக்கத் துவங்கினார்கள்.

21 அந்தப்படியே, ஆமோஸும் மரித்துப் போனான், (அது கிறிஸ்துவின் வருகையிலிருந்து நூற்றி தொண்ணூற்று நான்காம் வருஷமாயிருந்தது) அவன் குமாரனாகிய ஆமோஸ் அவனுக்குப் பதிலாக பதிவேடுகளை வைத்திருந்தான் அவனும் அதை நேபியின் தகடுகளின்மேல் வைத்திருந்தான்; இந்தப் புஸ்தகமாகிய நேபியின் புஸ்தகத்தில் அதுவும் எழுதப்பட்டிருக்கிறது.

22 அந்தப்படியே, இருநூறு வருஷங்கள் கடந்து போயிற்று; சிலரைத் தவிர மற்ற அனைத்து இரண்டாம் தலைமுறையினரும் கடந்து போயினர்.

23 இப்பொழுதும் மார்மனாகிய நான், தேசத்தின் மேல் எங்கும் பரந்திருக்கும்படியாக ஜனங்கள் பெருகினார்களென்றும், அவர்கள் கிறிஸ்துவில் கொண்டிருந்த வளர்ச்சியினிமித்தம், மிகுந்த ஐஸ்வரியவான்களானார்களென்றும் நீங்கள் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

24 இப்பொழுதும் இந்த இருநூற்றி ஒன்றாம் வருஷத்தில், அவர்களுள் சிலர் விலையுயர்ந்த வஸ்திரங்களையும், எல்லாவிதமான அழகிய முத்துக்களையும், உலகத்தின் வசீகர பொருட்களையும் உடுத்துவது போன்ற பெருமையானவைகளில் தங்களை உயர்த்தத் துவங்கினார்கள்.

25 அந்தச் சமயம் தொடங்கி அவர்கள் தங்கள் சாமான்களையும், பொருட்களையும் பொதுவானதாய் பாவிக்கவில்லை.

26 அவர்கள் வகுப்பு வாரியாகப் பிரிக்கப்படத் துவங்கினார்கள்; லாபம்பெற அவர்கள் தங்களுக்கென்று சபைகளைக் கட்டத் துவங்கினார்கள், கிறிஸ்துவின் மெய்யான சபையை மறுதலிக்கத் துவங்கினார்கள்.

27 அந்தப்படியே, இருநூற்றி பத்து வருஷங்கள் கடந்து போனபோது, அங்கே தேசத்தில் அநேக சபைகளிருந்தன; ஆம், கிறிஸ்துவை அறிந்திருப்பதாக முழக்கமிட்ட அநேக சபைகள் அங்கே இருந்தன. இருப்பினும் அவர்கள் எல்லா வித துன்மார்க்கத்தையும் பெற்றுக்கொண்டு, அவர்களது தகுதியின்மையினிமித்தம் தடைசெய்யப்பட்டவனுக்கு பரிசுத்தமானதைக் கொடுக்குமளவுக்கு சுவிசேஷத்தின் பெரும் பகுதிகளை மறுதலித்தார்கள்.

28 அக்கிரமத்தினிமித்தமும், அவர்களுடைய இருதயங்களைப் பிடித்திருந்த சாத்தானின் வல்லமையினிமித்தமும் இந்தச் சபை மிகுதியாய் விருத்தியடைந்தது.

29 மறுபடியும் கிறிஸ்துவை மறுதலித்த மற்றொரு சபையும் அங்கே இருந்தது; அவர்கள் கிறிஸ்துவின் மெய்யான சபையோரை அவர்களுடைய தாழ்மையினிமித்தமும், கிறிஸ்துவிலிருந்த அவர்களுடைய நம்பிக்கையினிமித்தமும் துன்புறுத்தினார்கள்; அவர்கள் மத்தியில் நடந்த அநேக அற்புதங்களினிமித்தமும் அவர்களை நிந்தித்தார்கள்.

30 அவர்களோடு தங்கியிருந்த இயேசுவின் சீஷர்களின்மேல் பலத்தையும் அதிகாரத்தையும் பிரயோகித்து அவர்களை சிறையினுள் போட்டார்கள், ஆனால் அவர்களுக்குள் இருந்த தேவ வார்த்தையின் வல்லமையினாலே, சிறைச்சாலைகள் இரண்டாகப் பிளந்தன, அவர்களுக்குள் பலத்த அற்புதங்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

31 இந்த அற்புதங்கள் எல்லாம் சம்பவித்தும் ஜனங்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, இயேசுவை அவருடைய வார்த்தையின்படியே கொலை செய்ய யூதர்கள் எருசலேமில் வகை தேடினது போலவே, இவர்களையும் கொலை செய்ய வகை தேடினார்கள்.

32 அவர்கள் அவர்களை அக்கினி சூளைகளிலே போட்டார்கள். அவர்கள் எந்தக் கேடும் அடையாமல் வெளியேறினார்கள்.

33 அவர்கள் அவர்களை காட்டு மிருகங்களின் கெபிகளினுள்ளும் போட்டார்கள். சிறுபிள்ளை ஆட்டுக்குட்டியோடு விளையாடுவதைப் போல அவர்கள் காட்டு மிருகங்களிடம் விளையாடினார்கள்; அவர்கள் அவைகளிடமிருந்து எந்தக் கேடும் அடையாமல் வெளிவந்தார்கள்.

34 ஆயினும் ஜனங்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினார்கள். ஏனெனில் அவர்கள் அநேக சபைகளைக் கட்டும்படியாகவும், எல்லாவிதமான அக்கிரமங்களைச் செய்யும்படியாகவும், அநேக ஆசாரியர்களாலும், கள்ளத்தீர்க்கதரிசிகளாலும் வழிநடத்தப்பட்டார்கள். அவர்கள் இயேசுவின் ஜனங்களை அடித்தார்கள்; ஆனால் இயேசுவின் ஜனம் அவர்களைத் திரும்ப அடிக்கவில்லை. இப்படியாக அவர்கள் வருஷா வருஷம் இருநூற்றி முப்பது வருஷங்கள் கடந்துபோகுமட்டுமாய் அவிசுவாசத்திலும், துன்மார்க்கத்திலும் படிப்படியாக நலிந்தார்கள்.

35 இப்பொழுதும், அந்தப்படியே, இந்த வருஷத்தில், ஆம், இருநூற்றி முப்பத்தோராம் வருஷத்தில் ஜனங்களுக்குள்ளே ஒரு பெரிய பிரிவினை உண்டாயிற்று.

36 அந்தப்படியே, இந்த வருஷத்தில், நேபியர்கள் என்று அழைக்கப்பட்ட, கிறிஸ்துவில் மெய்யான விசுவாசம் கொண்ட ஜனமொன்று எழுந்தது; அவர்களுள் யாக்கோபினர், யோசேப்பினர் மற்றும் சோரமியர் என்று லாமானியர்களால் அழைக்கப்பட்டவர்களும் இருந்தார்கள்.

37 (தரித்திருக்கவேண்டிய இயேசுவின் மூன்று சீஷர்கள் உள்ளிட்ட) கிறிஸ்துவில் மெய்யான விசுவாசிகளும், கிறிஸ்துவை மெய்யாகவே தொழுதுகொள்பவர்களும், நேபியரென்றும், யாக்கோபினரென்றும், யோசேப்பினரென்றும், சோரமியரென்றும் அழைக்கப்பட்டார்கள்.

38 அந்தப்படியே, சுவிசேஷத்தை மறுதலித்தவர்கள் லாமானியரென்றும், லெமுவேலரென்றும், இஸ்மவேலரென்றும் அழைக்கப்பட்டார்கள்; அவர்கள் அவிசுவாசத்தில் படிப்படியாக நலியாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை எதிர்த்து வேண்டுமென்றே கலகம் பண்ணினார்கள், அவர்களின் பிதாக்கள் ஆரம்பத்திலிருந்தே நலிந்திருந்ததைப் போல, தங்கள் பிள்ளைகளும் விசுவாசிக்கக் கூடாதென்று போதித்து வந்தார்கள்.

39 ஆரம்பத்தில் இருந்ததைப் போல அவர்களுடைய பிதாக்களின் துன்மார்க்கத்தினாலும், அருவருப்பினாலுமே அது சம்பவித்தது. ஆரம்பத்திலிருந்தே லாமானியர் நேபியின் பிள்ளைகளை வெறுக்கப் போதிக்கப்பட்டதைப் போலவே, இவர்களும் தேவ பிள்ளைகளை வெறுக்கப் போதிக்கப்பட்டார்கள்.

40 அந்தப்படியே, இருநூற்றி நாற்பத்தி நான்கு வருஷங்கள் கடந்து போயிற்று. ஜனங்களின் விவகாரங்களும் இப்படி இருந்தது. ஜனங்களில் அதிக துன்மார்க்கரின் ஒரு பகுதி, பலம் பொருந்தி, தேவஜனத்தைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையுள்ளவர்களானார்கள்.

41 அவர்கள் தங்களுக்கென்று சபைகளைக் கட்டவும், அவைகளை எல்லாவித விலையுயர்ந்த பொருட்களால் அலங்கரிக்கவும் தொடர்ந்து ஈடுபட்டார்கள். இப்படியாக இருநூற்று ஐம்பது வருஷங்களும், இருநூற்று அறுபது வருஷங்களும் கடந்து போயின.

42 அந்தப்படியே, ஜனங்களில் துன்மார்க்கப் பிரிவினர் மறுபடியும் காதியாந்தனின் இரகசிய ஒப்பந்தங்களையும், சங்கங்களையும் ஸ்தாபிக்கத் துவங்கினார்கள்.

43 நேபியின் ஜனம் என்று அழைக்கப்பட்ட ஜனத்தார் தங்களின் மிகுந்த சம்பத்துகளினிமித்தம், தங்கள் இருதயங்களிலே பெருமைகொண்டு, லாமானியரான தங்கள் சகோதரரைப் போலவே வீணரானார்கள்.

44 இந்த சமயம் முதற்கொண்டு சீஷர்கள் உலகத்தின் பாவங்களுக்காக துக்கப்பட ஆரம்பித்தார்கள்.

45 அந்தப்படியே, முன்னூறு வருஷங்கள் கடந்து போனபின்பு, நேபியரும் லாமானியரும் ஒருவர்போல ஒருவர் மிகவும் துன்மார்க்கரானார்கள்.

46 அந்தப்படியே, காதியாந்தனின் திருடர்கள் தேசத்தின் மீதெங்கும் பரவினார்கள்; இயேசுவின் சீஷர்களைத் தவிர வேறு நீதிமான்கள் ஒருவரும் அங்கு இல்லை. அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் ஏராளமாய் சேர்த்திருந்தார்கள். எல்லாவிதமான வாணிகத்தையும் மேற்கொண்டார்கள்.

47 அந்தப்படியே, முன்னூற்று ஐந்து வருஷங்கள் கடந்த பின்னர் (இன்னும் ஜனங்கள் துன்மார்க்கத்தில் இருந்தார்கள்) ஆமோஸ் மரித்தான்; அவன் சகோதரனாகிய அம்மாரோன் அவனுக்குப் பதிலாக பதிவேடுகளை வைத்திருந்தான்.

48 அந்தப்படியே, முன்னூற்று இருபது வருஷங்கள் கடந்து போன பின்பு, அம்மாரோன் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு, கிறிஸ்து வருகையிலிருந்து முன்னூற்று இருபது வருஷம் வரைக்கும், தலைமுறை தலைமுறையாய் கையளிக்கப்பட்ட பரிசுத்தமான எல்லா பரிசுத்த பதிவேடுகளையும் மறைத்து வைத்தான்.

49 அவை கர்த்தருடைய தீர்க்கதரிசனங்கள் மற்றும் வாக்குத்தத்தங்களின்படியே, யாக்கோபின் வீட்டாரின் மீதியானோரிடத்திற்கு மறுபடியும் வரும்படியாக அவன் அவைகளைக் கர்த்தருக்குள்ளாக மறைத்து வைத்தான். இப்படியே அம்மாரோனின் பதிவேட்டின் முடிவு இருக்கிறது.