வேதங்கள்
ஏனோஸ் 1


ஏனோஸின் புஸ்தகம்

அதிகாரம் 1

ஏனோஸ் ஊக்கத்துடன் ஜெபித்து தன் பாவங்களுக்காக மன்னிப்பைப் பெறுதல் – லாமானியர்களுக்கு எதிர்காலத்திலே இரட்சிப்பு உறுதியளிக்கப்பட்டு, கர்த்தருடைய சத்தம் அவன் மனதிலே வருதல் – லாமானியர்களை திரும்பக்கொண்டுவர நேபியர்கள் நாடுதல் – ஏனோஸ் தன் மீட்பரிலே களிகூருதல். ஏறக்குறைய கி.மு. 420.

1 இதோ அந்தப்படியே, என் தகப்பன் ஒரு நியாயவானென்று ஏனோஸாகிய நான் அறிவேன். ஏனெனில் அவர் தன் பாஷையில், கர்த்தருடைய போஷிப்பிலும், புத்திமதியிலும் எனக்குப் போதித்தார். அதனிமித்தம் என் தேவனின் நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

2 நான் பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறுவதற்கு முன்பு, தேவனுக்கு முன்பாக எனது போராட்டத்தைப்பற்றி, உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.

3 இதோ, நான் காடுகளில் விலங்குகளை வேட்டையாடச் சென்றேன்; நித்திய ஜீவனையும், பரிசுத்தவான்களின் சந்தோஷத்தைப்பற்றியும், என் தகப்பன் பேசி, நான் அடிக்கடிக் கேட்ட வார்த்தைகள் என் இருதயத்திலே ஆழமாய்ப் பதிந்தன.

4 என் ஆத்துமா பசியுற்றது; என்னை உண்டாக்கினவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு என்னுடைய சொந்த ஆத்துமாவிற்காக அவரிடத்தில் ஊக்கமான ஜெபத்திலும் வேண்டுதலிலும் கூக்குரலிட்டேன்; நாள் முழுவதும் அவரிடத்தில் கூக்குரலிட்டேன்; ஆம், இரவு வந்தபோது வானங்களை எட்டும்படியாய், என் சத்தத்தை இன்னும் அதிகமாய் உயர்த்தினேன்.

5 அங்கே ஒரு சத்தம் எனக்கு உண்டாகி: ஏனோஸே, உன்னுடைய பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன. நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், என்றது.

6 தேவன் பொய்யுரைக்கமாட்டார், என ஏனோஸாகிய நான், அறிவேன்; ஆகையால், என் குற்ற உணர்ச்சி என்னிலிருந்து துடைக்கப்பட்டது.

7 நான்: கர்த்தாவே, அது எப்படி நடந்தது? என்றேன்,

8 அவர் என்னை நோக்கி: நீ முன்னே கேட்டும் கண்டுமிராத, கிறிஸ்துவிலே விசுவாசித்ததினிமித்தமே. அவர் மாம்சத்திலே தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு அநேக வருஷங்கள் கடந்து செல்லும்; ஆகையால் போ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, என்றார்.

9 இப்பொழுது, அந்தப்படியே, இந்த வார்த்தைகளை நான் கேட்டபோது, நேபியர்களாகிய என் சகோதரர்களின் நலனுக்கேதுவான ஒரு வாஞ்சையை உணர ஆரம்பித்தேன்; ஆகையால் அவர்களுக்காகத் தேவனிடத்தில் என் முழு ஆத்துமாவை ஊற்றினேன்.

10 நான் ஆவியிலே இவ்வாறாக போராடிக்கொண்டிருந்தபோது, இதோ, கர்த்தரின் சத்தம் மறுபடியும் என் மனதிலே வந்து, என்னுடைய கட்டளைகளை உன் சகோதரர்கள் கருத்தாய் கைக்கொள்ளுகிறதற்குத்தக்கதாக நான் அவர்களை விசாரிப்பேன்; நான் அவர்களுக்கு இந்த தேசத்தைக் கொடுத்திருக்கிறேன். அது பரிசுத்த தேசம்; அக்கிரமத்திற்காகவேயன்றி, வேறு எதற்காகவும் நான் அதை சபிக்கமாட்டேன்; ஆகையால் நான் சொன்னபடியே உன் சகோதரர்களை விசாரிப்பேன்; அவர்களின் மீறுதல்களை வேதனையுடன் கூட அவர்களின் சொந்த சிரசுகளின்மீது கொண்டுவருவேன், என்றார்.

11 ஏனோஸாகிய நான் இந்த வார்த்தைகளைக் கேட்டபின்பு, கர்த்தரிலே என் விசுவாசம் அசைக்கமுடியாததானது; மேலும் என் சகோதரர்களாகிய லாமானியர்களுக்காக, அதிக நீடிய போராட்டங்களுடன் அவரிடத்தில் ஜெபித்தேன்.

12 அந்தப்படியே, அதிகக் கருத்தோடு நான் ஜெபித்து பிரயாசப்பட்ட பின்னர், கர்த்தர் என்னை நோக்கி: உன் விசுவாசத்தினிமித்தம், உன் விருப்பங்களின்படியே உனக்கு நான் அருளுவேன், என்றார்.

13 இப்பொழுது, இதோ என் ஜனமாகிய நேபியர்கள் மீறுதலினுள் விழுந்து, எந்த வகையினாலாவது அழிக்கப்பட்டாலும், லாமானியர்கள் அழிக்கப்படக் கூடாதென்றும், என் ஜனமாகிய நேபியர்களின் பதிவேட்டைக் கர்த்தராகிய தேவன், அவருடைய பரிசுத்த புயத்தின் வல்லமையினால், பாதுகாப்பாரென்றும், அவர்களை இரட்சிப்புக்குள்ளாகக் கொண்டு செல்லும்படிக்கு, லாமானியர்களிடத்தில் சில காலத்திற்குப் பின்பு அது கொண்டுவரப்பட வேண்டும், என்பதே அவரிடத்தில் நான் விரும்பியதாகும்.

14 ஏனெனில் இச்சமயத்திலே அவர்களை மெய்யான விசுவாசத்திற்குள்ளே கொண்டுவர எங்களின் முயற்சிகள் விருதாவாய்ப்போயின. அவர்களோ, எங்களையும், எங்களின் பதிவேடுகளையும், எங்கள் பிதாக்களின் அனைத்து பாரம்பரியங்களையும், முடியுமானால் அழித்திடுவோம், என்று தங்கள் கோபத்திலே ஆணையிட்டார்கள்.

15 ஆகையால், எங்களின் பதிவேடுகளைப் பாதுகாக்க கர்த்தராகிய தேவனால் இயலுமென்று, நான் அறிந்தவனாய் அவரிடத்தில் தொடர்ந்து கூக்குரலிட்டேன். ஏனெனில் அவர் என்னிடம், கிறிஸ்துவின் நாமத்திலே நீ பெற்றுக்கொள்வாய், என்று நம்பி, விசுவாசத்தில் நீ எதைக் கேட்டாலும், நீ பெற்றுக் கொள்வாய், என்று சொல்லியிருந்தார்.

16 நான் விசுவாசித்து, தேவன் பதிவேடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்று அவரிடத்திலே கூக்குரலிட்டேன். அதை லாமானியர்களிடத்தில் தன் சொந்த, ஏற்ற காலத்திலே கொண்டுவருவார், என்று என்னிடம் உடன்படிக்கை செய்தார்.

17 ஏனோஸாகிய நான் அவர் செய்த உடன்படிக்கையின்படியே அது நிறைவேறுமென்று அறிந்திருந்தேன். அதினிமித்தம் என் ஆத்துமா இளைப்பாறியது.

18 கர்த்தர் என்னை நோக்கி: உன் பிதாக்களும் இந்தக் காரியத்தை என்னிடம் வேண்டியிருந்தார்கள், அவர்களின் விசுவாசத்திற்குத்தக்கதாய் அது அவர்களுக்குச் செய்யப்படும்; ஏனெனில் அவர்களின் விசுவாசமும் உன்னுடையதுபோலவே இருந்தது, என்றார்.

19 இப்பொழுதும் அந்தப்படியே, ஏனோஸாகிய நான், நேபியின் ஜனங்கள் மத்தியில் சென்று, வரப்போகிற காரியங்களைக்குறித்து தீர்க்கதரிசனமுரைத்து, நான் கேட்டும் கண்டுமிருந்தவைகளைக் குறித்து சாட்சியளித்தேன்.

20 தேவனில் மெய்யான விசுவாசத்திலே லாமானியர்களைத் திரும்பவும் சேர்க்கும்படியாய் நேபியின் ஜனங்கள் கருத்தாய் பிரயாசப்பட்டார்கள், என்று நான் சாட்சி பகருகிறேன். ஆனாலும் எங்களின் பிரயாசங்கள் விருதாவாய்ப்போயின; அவர்களின் வெறுப்பு நிலையானதாயிருந்தது. தங்களின் கேடான சுபாவத்தால் நடத்தப்பட்டமையால், துஷ்டர்களாய், கொடியவர்களாய், இரத்த தாகம் கொண்ட ஜனங்களாய், விக்கிரக ஆராதனையும், அசுசியும் நிறைந்தவர்களாய், வேட்டையாடும் விலங்குகளை உண்பவர்களாய், கூடாரங்களில் வாசம்செய்து, தங்களின் அரைகளிலே சிறிய தோல் கச்சையைக் கட்டி, தங்கள் தலைகளை சிரைத்தவர்களாய், வனாந்தரத்திலே அலைந்தார்கள்; அவர்களின் ஆற்றலோ, விற்களிலும் உடைப்பட்டயங்களிலும், கோடாரிகளிலும் இருந்தது. அவர்களில் அநேகர் பச்சையிறைச்சியைத் தவிர வேறெதையும் உண்ணவில்லை; எங்களை அழிக்க அவர்கள் தொடர்ந்து வகைதேடினார்கள்.

21 அந்தப்படியே, நேபியின் ஜனங்கள் பூமியைப் பண்படுத்தி, எல்லா வகையான தானியங்களையும், பழங்களையும், மந்தைகளையும், ஒவ்வொரு விதமான கால்நடை ஜீவன்களைக் கொண்ட மந்தைகளையும், ஆடுகளையும், காட்டு ஆடுகளையும், அநேக குதிரைகளையும் வளர்த்தார்கள்.

22 எங்கள் மத்தியிலே மிகுதியாக அநேக தீர்க்கதரிசிகளிருந்தார்கள். ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனமாயும், புரியாதவர்களுமாயிருந்தார்கள்.

23 அங்கே உக்கிரம், யுத்தங்கள், பிணக்குகள், அழிவுகளைப்பற்றிய பிரசங்கங்களும், தீர்க்கதரிசனங்களும், நித்தியத்தின் கால அளவு, மரணம், நியாயத்தீர்ப்புகள், தேவனுடைய வல்லமை, ஆகிய இந்தக் காரியங்களெல்லாவற்றாலும் தொடர்ந்து அவர்கள் நினைவூட்டப்பட்டு கர்த்தரிடம் பயத்திலே வைத்திருக்கப்படுவது தவிர அங்கே ஒன்றுமில்லை. சீக்கிரமாய் அவர்கள் அழிவிற்குள் செல்லாதபடி, காத்துக்கொள்ள, அங்கே இவைகள் ஒன்றும் குறைவுபடாமல் மிகவும் தெளிவாகப் பேசப்பட்டது, என்று நான் சொல்லுகிறேன். இந்த விதத்திலேயே நான் அவர்களைக் குறித்து எழுதுகிறேன்.

24 என் நாட்களில் நேபியர்களுக்கும் லாமானியர்களுக்குமிடையேயான யுத்தங்களைக் கண்டேன்.

25 அந்தப்படியே, நான் முதிர்ச்சியடையத் தொடங்கினேன். எருசலேமை விட்டு எங்கள் தகப்பனாகிய லேகி வந்த காலத்திலிருந்து நூற்றி எழுபத்தி ஒன்பது வருஷங்கள் கழிந்துவிட்டன.

26 தேவனுடைய வல்லமையால் ஆட்கொள்ளப்பட்டு, நான் இந்த ஜனங்களுக்கு பிரசங்கிக்கவும், தீர்க்கதரிசனமுரைக்கவும், கிறிஸ்துவிலேயிருக்கிற சத்தியத்தின்படியே வார்த்தையை அறிவித்த பின்பு, என் கல்லறைக்குள்ளே சீக்கிரம் செல்லவேண்டும் என்பதைக் கண்டேன். அதை நான் என் வாழ்நாட்கள் முழுவதும் அறிவித்து, உலகத்திலுள்ளவைகளுக்கும் மேலாக அதிலே நான் களிகூர்ந்தேன்.

27 என் மீட்பரிடமிருக்கிற என் இளைப்பாறுதலின் இடத்திற்கு சீக்கிரமாய் நான் போகிறேன்; ஏனெனில் அவரில் நான் இளைப்பாறுவேன், என அறிந்திருக்கிறேன். மேலும் அழிவுள்ள நான் அழியாமையைத் தரிக்கும் நாளிலே களிகூர்ந்து, அவரின்முன் நிற்பேன். பின்பு நான் அவர் முகத்தை மகிழ்ச்சியுடன் காண்பேன். அவர் என்னை நோக்கி, ஆசீர்வதிக்கப்பட்டவனே, என்னிடம் வா. என் பிதாவினுடைய வாசஸ்தலங்களிலே உனக்கு ஒரு இடம் ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிறது, என்பார். ஆமென்.