வேதங்கள்
யாரோம் 1


யாரோமின் புஸ்தகம்

அதிகாரம் 1

நேபியர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல், கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்குதல், தேசத்திலே விருத்திடைதல் – அநேக தீர்க்கதரிசிகள் சத்தியத்தின் பாதையிலே ஜனங்களை வைத்திருக்க பிரயாசப்படுதல். ஏறக்குறைய கி.மு. 399–361.

1 இப்பொழுது இதோ, யாரோமாகிய நான், எங்களின் வம்சவரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற, என் தகப்பனாகிய, ஏனோஸின் கட்டளையின்படியே சில வார்த்தைகளை எழுதுகிறேன்.

2 இந்தத் தகடுகள் சிறியனவாய் இருப்பதாலும், எங்களின் சகோதரர்களாகிய லாமானியர்களினுடைய நலனை நோக்கத்திற்கொண்டே இவை எழுதப்படுவதினாலும், சிலவற்றையே நான் எழுதவேண்டியது அவசியமானதாயிருக்கிறது. ஆனால் என் தீர்க்கதரிசனங்களையோ என்னுடைய வெளிப்படுத்தல்களைப்பற்றிய காரியங்களையோ நான் எழுதப்போவதில்லை. ஏனென்றால் என் பிதாக்கள் எழுதியவற்றைக்காட்டிலும் அதிகமாய் நான் எதை எழுதக்கூடும்? ஏன் அவர்கள் இரட்சிப்பின் திட்டத்தை வெளிப்படுத்தவில்லையா? ஆம், இதுவே எனக்குப் போதுமானதாயிருக்கிறது, என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.

3 இதோ, இவர்களின் இருதயங்களின் கடினத்தன்மையினிமித்தமும், காதுகளின் கேளாத்தன்மையினிமித்தமும், மனதின் குருட்டுத்தன்மையினிமித்தமும், வணங்காக் கழுத்தினிமித்தமும், இந்த ஜனங்களின் மத்தியில் அதிகமானவை செய்யப்படவேண்டும், என்பது அவசியமாயிருக்கிறது. இருப்பினும் தேவன் அவர்களிடத்தில் மிகவும் இரக்கமாயிருக்கிறார், இன்னும் அவர்களை பூமியின் மீதிருந்து வாரிக்கொண்டு போகவில்லை.

4 அநேக வெளிப்படுத்தல்களைப் பெற்ற பலர் எங்கள் மத்தியிலேயிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் எல்லாம் வணங்காக் கழுத்துடையவர்களாயிருக்கவில்லை. எவரெவர் வணங்காக் கழுத்துடையவர்களல்லாமல், விசுவாசத்தோடிருக்கிறார்களோ, அவர்களின் விசுவாசத்தின்படியே, மனுபுத்திரருக்கு வெளிப்படுத்துகிற பரிசுத்த ஆவியுடன் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

5 இப்பொழுதும், இதோ, இருநூறு வருஷங்கள் கழிந்து சென்றன. நேபியுடைய ஜனங்கள், தேசத்திலே விருத்தியடைந்தார்கள். அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணங்களைக் கைக்கொண்டு, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரித்தார்கள். பரிசுத்த குலைச்சலாய் இல்லை, தேவதூஷணம் பேசவும் இல்லை, தேசத்தின் நியாயப்பிரமாணங்களோ மிகவும் கண்டிப்பாயிருந்தன.

6 அவர்களும் லாமானியர்களும் தேசத்தின் மேற்பரப்பின் மீது அதிகமாய் சிதறடிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் எண்ணிக்கையிலே நேபியர்களைக்காட்டிலும் மிகவும் அதிகமாயிருந்தார்கள். அவர்கள் கொலையை நேசித்து, மிருகங்களின் இரத்தத்தைக் குடித்தார்கள்.

7 அந்தப்படியே, அவர்கள் சண்டையிட, நேபியர்களாகிய எங்களுக்கு விரோதமாய் அநேகம்முறை வந்தார்கள். ஆனால் எங்களின் ராஜாக்களும், தலைவர்களும் கர்த்தருடைய விசுவாசத்திலே பலவான்களாயிருந்தார்கள். அவர்கள் கர்த்தருடைய வழிகளை ஜனங்களுக்குப் போதித்தார்கள். ஆதலால், லாமானியர்களை நாங்கள் எதிர்த்து நின்று, எங்கள் தேசங்களிலிருந்து துரத்தினோம். எங்கள் பட்டணங்களோ, எங்களது சுதந்தரமான எந்த ஒரு இடமாயினும் அரணிப்புகளைப் பலப்படுத்த ஆரம்பித்தோம்.

8 நாங்கள் மிகவும் பெருகி, தேசத்தின் மேற்பரப்பில் பெருகினோம். பொன்னிலும் வெள்ளியிலும், விலைமதிப்பற்ற பொருட்களிலும், மரத்தின் அழகிய வேலைப்பாடுகளிலும், கட்டிடங்களிலும், இயந்திரங்களிலும், இரும்பிலும், தாமிரத்திலும், பித்தளையிலும், எஃகிலும், மிகவும் ஐஸ்வரியவான்களாகி, பூமியைப் பண்படுத்த ஒவ்வொரு வகையிலான எல்லாவிதமான கருவிகளையும், யுத்தக் கருவிகளையும், ஆம் முனைகூர்மையான அம்பையும், அம்புறாத்துணியையும், எறிபடையையும், ஈட்டியையும் யுத்தத்திற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்தோம்.

9 இவ்வாறாக நாங்கள் லாமானியர்களைச் சந்திக்க ஆயத்தப்பட்டிருந்தபோது, அவர்கள் எங்களுக்கு எதிராய் முன்னேறவில்லை. ஆனால், என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அளவில், தேசத்திலே விருத்தியடைவீர்கள், என்று கர்த்தர், எங்கள் பிதாக்களிடம் பேசிய அவருடைய வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டது.

10 அந்தப்படியே, கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், மீறுதலினுள் விழுவார்களாகில், அவர்கள் தேசத்தின் மேற்பரப்பிலிருந்து அழிக்கப்படுவார்கள், என்ற தேவனுடைய வார்த்தையின்படியே, நேபியின் ஜனங்களை கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் எச்சரித்தார்கள்.

11 ஆகையால், தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், ஆசிரியர்களும் கருத்தாய்ப் பணிபுரிந்து, மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், அது கொடுக்கப்பட்டதின் நோக்கத்தையும் போதித்து, மேசியாவை எதிர்நோக்கி, அவர் ஏற்கனவே வந்ததைப்போல அவரில் விசுவாசிக்கவேண்டுமென்றும், கருத்தாயிருக்கும்படியும் ஜனங்களுக்கு சகல நீடிய பொறுமையோடு புத்தி சொன்னார்கள். இந்த பிரகாரமாய் அவர்களுக்குப் போதித்தனர்.

12 அந்தப்படியே, அப்படிச் செய்வதின்மூலமாக அவர்களின் இருதயங்கள் வார்த்தையால் குத்தப்பட்டு, மனந்திரும்பும்படி தொடர்ந்து உணர்த்தப்பட்டபடியால், நிலத்தின் மேற்பரப்பில் அழிக்கப்படுவதிலிருந்து காக்கப்பட்டார்கள்.

13 அந்தப்படியே, அதிக காலத்துக்கு, யுத்தங்களும், பிணக்குகளும் வேற்றுமைகளும் ஏற்பட்டபடியே, இருநூற்றி முப்பத்தெட்டு வருஷங்கள் கழிந்துசென்றன.

14 யாரோமாகிய நான், தகடுகள் சிறியனவாய் இருப்பதினிமித்தம் அதிகமாய் எழுதுவதில்லை. ஆனால் இதோ, என் சகோதரரே, நீங்கள் நேபியின் மற்ற தகடுகளைப் பார்க்கலாம், ஏனெனில் இதோ, ராஜாக்கள் எழுதியவாறோ, அல்லது எழுதும்படி அவர்களால் சொல்லப்பட்டவர்கள் எழுதியபடியோ, அவைகளின்மீது எங்களின் யுத்தங்களின் வரலாறுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

15 என் பிதாக்களின் கட்டளைகளின்படியே, இத்தகடுகள் பாதுகாக்கப்பட்டிருக்கும்பொருட்டு, இவைகளை என் குமாரனாகிய, ஓம்னியின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.