வேதங்கள்
மார்மன் 1


மார்மன் புஸ்தகம்

அதிகாரம் 1

அம்மாரோன் பரிசுத்த பதிவேடுகளைக் குறித்து மார்மனுக்குப் போதித்தல் – நேபியருக்கும் லாமானியருக்கும் இடையே யுத்தம் துவங்குதல் – அந்த மூன்று நேபியரும் எடுத்துச் செல்லப்படுதல் – துன்மார்க்கமும், அவிசுவாசமும், சூனியங்களும், பில்லிசூனியங்களும் இருத்தல். ஏறக்குறைய கி.பி. 321–326.

1 இப்பொழுதும் மார்மனாகிய நான் கண்டும் கேட்டதுமான காரியங்களைப் பதிவுசெய்து அதை மார்மன் புஸ்தகம் என்று அழைக்கிறேன்.

2 அம்மாரோன் கர்த்தருக்குள் பதிவேடுகளை மறைக்கவிருக்கும் சமயத்தில் அவன் என்னிடத்தில் வந்து (நான் பத்து வயதுடையவனாயும், என் ஜனங்களின் கல்வி முறையின்படியே நானும் சற்றே படிக்கவும் துவங்கினேன்) அம்மாரோன் என்னிடத்தில், நீ தெளிந்த புத்தியுள்ள பிள்ளை என்றும் புரிந்து கொள்வதில் விவேகமுள்ளவன் என்றும், நான் அறிவேன் என்றான்;

3 ஆதலால் நீ இருபத்தி நான்கு வயதாகிறபோது, இந்த ஜனத்தைக் குறித்து நீ கவனித்துக் கொண்டவைகளை நினைவுகூர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; நீ அந்த வயதாகிறபோது அந்தூம் தேசத்திலிருக்கும் ஷிம் என்றழைக்கப்படுகிற மலைக்குப் போ. இந்த ஜனத்தைக் குறித்த எல்லா பரிசுத்த பதிவுகளையும் நான் கர்த்தருக்குள்ளாக அங்கே புதைத்து வைத்திருக்கிறேன்.

4 இதோ, நீ உனக்கென்று நேபியின் தகடுகளை எடுத்துக்கொண்டு, மீதியானவைகளை அவைகள் இருக்கிற இடத்திலேயே விட்டுவிடு; இந்த ஜனத்தைக் குறித்து நீ கவனித்த எல்லா காரியங்களையும், நேபியின் தகடுகளின்மேல் பொறித்து வை.

5 நேபியின் சந்ததியான மார்மனாகிய நான் (என் தகப்பனின் பெயர் மார்மன் என்பதாகும்) அம்மாரோன் எனக்குக் கட்டளையிட்டவைகளை நினைவுகூர்ந்தேன்.

6 அந்தப்படியே, எனக்கு பதினோரு வயதாயிருக்கும்போது, நான் என் தகப்பனால் தென் தேசமாகிய சாரகெம்லா தேசத்துக்கு தூக்கிச் செல்லப்பட்டேன்.

7 தேசத்தின் மேற்பகுதி முழுவதும் கட்டிடங்களால் நிரப்பப்பட்டிருந்தது. ஜனங்கள் ஏறக்குறைய சமுத்திரத்தின் மணலைப்போல பெருகியிருந்தார்கள்.

8 அந்தப்படியே, இந்த வருஷத்தில் நேபியர்களும், யாக்கோபினரும், யோசேப்பினரும், சோரமியரும் அடங்கிய நேபியருக்கிடையே யுத்தம் துவங்கியது; இந்த யுத்தம் நேபியருக்கும், லாமானியருக்கும், லெமுவேலருக்கும், இஸ்மவேலருக்கும் இடையே நடந்தது.

9 இப்பொழுது லாமானியரும் லெமுவேலரும், இஸ்மவேலரும் லாமானியர் என்றழைக்கப்பட்டனர், இரண்டு குழுக்களாய் இருந்தவர்கள் நேபியர்களும் லாமானியர்களுமே.

10 அந்தப்படியே, சீதோன் நதிக்கு அருகே, சாரகெம்லா எல்லைகளில் அவர்களுக்குள்ளே யுத்தம் துவங்கியது.

11 அந்தப்படியே, முப்பதாயிரம் எண்ணிக்கைக்கும் அதிகமான பெரும் எண்ணிக்கையுள்ள மனுஷரை நேபியர்கள் ஏகமாய்க் கூட்டிச் சேர்த்திருந்தனர். அந்தப்படியே, இந்த வருஷத்தில் அவர்கள் அநேக யுத்தங்கள் செய்தார்கள். அவைகளில் நேபியர்கள் லாமானியரை தோற்கடித்து அவர்களில் அநேகரை வெட்டிப்போட்டார்கள்.

12 அந்தப்படியே, லாமானியர் தங்கள் திட்டங்களைக் கைவிட்டுவிட்டார்கள். தேசத்தில் சமாதானம் நிலவியது. இரத்தம் சிந்துதல் இல்லாதவாறு ஏறக்குறைய நான்கு வருஷங்கள் அளவும் சமாதானம் நிலைத்திருந்தது.

13 ஆனால் கர்த்தர் தமது பிரியமான சீஷர்களை எடுத்துக் கொள்ளவும், ஜனங்களினுடைய அக்கிரமத்தினிமித்தம், அற்புதக் கிரியைகளும், சுகமாக்குகிற கிரியைகளும், நின்று போகுமளவும் தேசம் முழுவதிலும் துன்மார்க்கம் இருந்தது.

14 கர்த்தரிடத்திலிருந்து எந்த வரங்களும் அங்கே இல்லை. அவர்களுடைய துன்மார்க்கத்தினிமித்தமும் அவிசுவாசத்தினிமித்தமும், பரிசுத்த ஆவியானவர் ஒருவர் மேலும் வரவில்லை.

15 நான் பதினைந்து வயதுடையவனாயும் சற்று தெளிந்த மனமுள்ளவனாயும் இருந்தபடியால், நான் கர்த்தரால் சந்திக்கப்பட்டு, இயேசுவின் நன்மையை ருசிபார்த்து அறிந்து கொண்டேன்.

16 நான் இந்த ஜனத்திற்குப் போதிக்கப் பிரயத்தனம் பண்ணினேன். ஆனாலும் என் வாய் அடைக்கப்பட்டிருந்தது. நான் அவர்களுக்குப் பிரசங்கிப்பதற்கு தடைபண்ணப்பட்டேன்; இதோ, அவர்கள் தங்கள் தேவனுக்கு விரோதமாக மனதாரக் கலகம்பண்ணினார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தம் பிரியமான சீஷர்கள் தேசத்தைவிட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டார்கள்.

17 நான் அவர்களுக்குள்ளே இருந்தாலும், அவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் அவர்களுக்குப் போதிப்பதிலிருந்து தடை செய்யப்பட்டேன்; அவர்களுடைய இருதயங்களின் கடினத்தினிமித்தம் அவர்களுக்காக தேசம் சபிக்கப்பட்டது.

18 லாமானியர் மத்தியிலிருந்த இந்த காதியாந்தன் திருடர்கள், தேசத்தை ஆக்கிரமித்ததால், அதிலிருந்த குடிகள் பூமியிலே தங்கள் பொக்கிஷங்களை மறைக்க ஆரம்பித்தார்கள்; கர்த்தர் தேசத்தை சபித்ததினால், அவர்கள் அவற்றை வைத்திருக்கவும், மறுபடியும் தங்களிடத்தில் தக்கவைத்திருக்கவும் கூடாதபடிக்கு அவைகள் நழுவிப்போயின.

19 அந்தப்படியே, அங்கே சூனியங்களும், பில்லிசூனியங்களும், மாயாஜாலங்களும் இருந்தன; அபிநாதி மற்றும் லாமானியனான சாமுவேலின் எல்லா வார்த்தைகளும் நிறைவேறத்தக்கதாக தேசத்தின் மேல் எங்கும் பொல்லாங்கனின் வல்லமை சூழ்ந்திருந்தது.