வேதங்கள்
மார்மன் 2


அதிகாரம் 2

மார்மன் நேபிய சேனைகளை நடத்துதல் – இரத்தமும், சங்காரமும் தேசத்தில் எங்கும் இருத்தல் – நேபியர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டவர்களோடு துக்கித்து, புலம்பி சோகம் அனுஷ்டித்தல் – அவர்களுடைய கிருபையின் நாள் கடந்து போகுதல் – நேபியின் தகடுகளை மார்மன் பெறுதல் – யுத்தங்கள் தொடர்தல். ஏறக்குறைய கி.பி. 327–350.

1 அந்தப்படியே, அதே வருஷத்தில் நேபியர்களுக்கும் லாமானியர்களுக்கும் இடையே மறுபடியும் யுத்தம் துவங்கியது. நான் வாலிபனாயிருந்தாலும் உருவத்தில் பெரியவனாயிருந்தேன். ஆதலால் நேபியின் ஜனங்கள் நான் அவர்களுடைய தலைவனாயோ, அல்லது அவர்களுடைய சேனைகளின் தலைவனாயோ இருக்க என்னை நியமித்தார்கள்.

2 ஆனபடியால், அந்தப்படியே, என்னுடைய பதினாறாவது வயதில், நேபிய சேனைகளின் முன்னின்று லாமானியருக்கு விரோதமாய்ப் போனேன். அதிலிருந்து முந்நூற்றி இருபத்தாறு வருஷங்கள் கடந்து போயின.

3 அந்தப்படியே, முன்னூற்றி இருபத்தி ஏழாம் வருஷத்தில் அவர்கள் என் சேனையைப் பயமுறுத்தும் அளவில், லாமானியர் எங்கள் மேல் மிகுந்த வல்லமையோடு வந்தார்கள்; ஆனாலும் அவர்கள் யுத்தம் செய்யாமல், வடதேசங்களுக்கு நேராய் பின்வாங்கிப் போனார்கள்.

4 அந்தப்படியே, நாங்கள் அங்கோலா என்ற பட்டணத்திற்கு வந்து பட்டணத்தைக் கைப்பற்றி, லாமானியருக்கு விரோதமாக எங்களைத் தற்காக்க ஆயத்தங்களை மேற்கொண்டோம். அந்தப்படியே, நாங்கள் பட்டணத்தை எங்கள் பெலத்தால் அரண் அமைத்தோம். எங்களுடைய எல்லா அரண்களும் இருந்தபோதிலும் லாமானியர் எங்கள் மேல் வந்து எங்களைப் பட்டணத்தைவிட்டுத் துரத்தினார்கள்.

5 அவர்கள் எங்களை தாவீதின் தேசத்தைவிட்டும் துரத்தினார்கள்.

6 நாங்கள் அணிவகுத்து கடற்கரையோரமாய், மேற்கு எல்லைகளில் அமைந்த, யோசுவாவின் தேசத்திற்கு வந்தோம்.

7 அந்தப்படியே, எங்களால் முடிந்தவரை வேகமாக எங்கள் ஜனங்களை ஒரு குழுவாய்ச் சேர்க்க, அவர்களை ஏகமாய்க் கூடச் செய்தோம்.

8 இதோ, அந்த தேசம் திருடர்களாலும், லாமானியர்களாலும் நிறைந்திருந்தது; என் ஜனத்தின்மேல் தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பெரிய அழிவையும் பொருட்படுத்தாமல், அவர்கள் தங்களுடைய பொல்லாத செய்கைகளிலிருந்து மனந்திரும்பவில்லை; ஆதலால் நேபியர்களுக்குள்ளும், லாமானியர்களுக்குள்ளும், இரண்டு பக்கத்திலும் இரத்தம் சிந்துதலும், கொலைகளும் தேசத்தின் மேல்முழுவதும் பரவியது; அது தேசம் முழுவதும் ஒரு முழு புரட்சியைக் கொண்டுவந்தது.

9 இப்பொழுதும், லாமானியருக்கு ஒரு ராஜா இருந்தான். அவன் பெயர் ஆரோன் என்பதாகும்; அவன் எங்களுக்கு விரோதமாக நாற்பத்தி நான்கு ஆயிரம்பேர் அடங்கிய சேனையோடுகூட வந்தான். இதோ, நான் அவனை நாற்பத்தி இரண்டு ஆயிரத்தோடு எதிர்கொண்டேன். அந்தப்படியே, நான் என் சேனையைக்கொண்டு அவன் எனக்கு முன்பாக ஓடும்படிக்கு அடித்தேன். இதோ, இவை யாவும் சமபவித்து, முன்னூற்றி முப்பது வருஷங்கள் கடந்துபோயிற்று.

10 அந்தப்படியே, நேபியர் தங்கள் அக்கிரமங்களுக்காக மனந்திரும்பத் துவங்கி, தீர்க்கதரிசி சாமுவேல் தீர்க்கதரிசனமுரைத்தது போலவே அழ ஆரம்பித்தார்கள்; ஏனெனில் இதோ, தேசத்திலே திருடர்களும், கொள்ளையர்களும், கொலைகாரர்களும், மாயாஜாலமும், சூனியமும் இருந்ததால், ஒருவனும் தனக்குரியதை தன்னிடத்தில் வைத்திருக்க முடியவில்லை.

11 இவைகளினிமித்தம், தேசமெங்கிலும், மிகக் குறிப்பாக நேபியின் ஜனங்களுக்குள்ளே துக்கமும், புலம்பலும் ஏற்படத் துவங்கியது.

12 அந்தப்படியே, மார்மனாகிய நான், கர்த்தருக்கு முன்பாக அவர்களுடைய புலம்பலையும், அவர்களுடைய துக்கிப்பையும், அவர்களுடைய துன்பத்தையும் கண்டபோது, கர்த்தருடைய இரக்கங்களையும், நீடியபொறுமையையும் அறிந்தவனாய், என் இருதயம் எனக்குள் களிகூரத் துவங்கியது, ஆதலால் அவர் அவர்களுக்கு இரக்கமாய் இருந்து, அவர்கள் மறுபடியும் நீதியுள்ள ஜனமாவார்கள், என்று நான் எண்ணினேன்.

13 இதோ, இந்த என் சந்தோஷம் வீணாயிருந்தது. ஏனெனில் தேவனின் நன்மையினிமித்தம், அவர்களுடைய துக்கிப்பு, மனந்திரும்புதலுக்கேதுவாய் இருக்கவில்லை; ஆனால் பாவத்திலே தங்களை கர்த்தர் மகிழ்ச்சியாய் எப்போதும் இருக்கச் செய்வதில்லையே என்று, அது ஆக்கினைக்குள்ளானவர்களின் துக்கிப்பாயிருந்தது.

14 அவர்கள் நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவிகளோடும் இயேசுவினிடத்தில் வராமல், தேவனை சபித்து சாகவிரும்பினார்கள். இருப்பினும், தங்கள் ஜீவன்களுக்காக பட்டயத்தோடு போராட மனதாயிருந்தார்கள்.

15 அந்தப்படியே, என் துக்கம் மறுபடியும் என்னிடத்திலே திரும்பினது. கிருபையின் நாள், அவர்களை இம்மைக்குரியவற்றிலும், ஆவிக்குரியவற்றிலும் கடந்துபோனதை நான் கண்டேன். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் தேவனுக்கு விரோதமாய், வெளியரங்கமாய் கலகம் பண்ணினதால் வெட்டப்பட்டு தேசத்தின்மேல் சாணம் போல குவிக்கப்பட்டிருந்தனர். இப்படியாக முன்னூற்று நாற்பத்தி நான்கு வருஷங்கள் கடந்து போயின.

16 அந்தப்படியே, முன்னூற்று நாற்பத்தி ஐந்தாவது வருஷத்திலே நேபியர்கள் லாமானியருக்கு முன்பாக ஓட ஆரம்பித்தார்கள். அவர்கள் பறந்தோடுவதை நிறுத்த முடிவதற்கு முன்னதாக, அவர்கள் யாசோன் தேசம் வரும் மட்டுமாய் பின் தொடரப்பட்டார்கள்.

17 இப்பொழுதும், பதிவேடுகள் அழியக்கூடாதென்று அம்மாரோன் கர்த்தருக்குள்ளாக புதைத்த பூமிக்கு அருகே, யாசோன் பட்டணம் இருந்தது. இதோ, நான் அம்மாரோனின் வார்த்தையின்படியே போய், நேபியின் தகடுகளை எடுத்து அம்மாரோனின் வார்த்தைகளின்படியே ஒரு பதிவேட்டைச் செய்தேன்.

18 நேபியின் தகடுகளின் மேல் சகல துன்மார்க்கத்தையும், அருவருப்புகளையும் பற்றிய முழுக் குறிப்பை நான் எழுதினேன்; ஆனால் அவர்களுடைய துன்மார்க்கத்தையும் அருவருப்புகளையும்பற்றிய முழுக்குறிப்பை நான் இந்தத் தகடுகளின் மேல் எழுதுவதில்லை, ஏனெனில் இதோ, மனுஷனுடைய வழிகளைக் காணும்படியாக நான் போதுமான வயதை அடைந்தது முதல், என் கண்களுக்கு முன்பாக துன்மார்க்கமும், அருவருப்புகளுமான தொடர் காட்சி இருந்து கொண்டிருக்கிறது.

19 அவர்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம் நான் சஞ்சலம் அடைந்துள்ளேன்; அவர்களுடைய துன்மார்க்கத்தினிமித்தம் என் இருதயம் என் நாட்களெல்லாம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது; இருப்பினும் கடைசி நாளின்போது, நான் உயர்த்தப்படுவேன் என்று அறிவேன்.

20 அந்தப்படியே, இந்த வருஷத்தில் நேபியின் ஜனங்கள் மறுபடியும் வேட்டையாடப்பட்டு துரத்தப்பட்டார்கள். அந்தப்படியே, வடக்கேயிருந்த சேம் என்றழைக்கப்பட்ட தேசத்திற்கு வரும் வரைக்குமாய் நாங்கள் துரத்தியடிக்கப்பட்டோம்.

21 அந்தப்படியே, நாங்கள் சேம் பட்டணத்தை அரண் அமைத்து, ஒருவேளை எங்கள் ஜனங்களை அழிவிலிருந்து எங்களால் மீட்கக்கூடும் என்பதினால், முடிந்தமட்டும் எங்கள் ஜனங்களைக் கூட்டினோம்.

22 அந்தப்படியே, முன்னூற்றி நாற்பத்தாறாம் வருஷத்தில் அவர்கள் மறுபடியும் எங்கள் மேல் வரத் துவங்கினார்கள்.

23 அந்தப்படியே, நான் என் ஜனங்களிடத்தில் பேசி, அவர்கள் லாமானியருக்கு முன்பாக தைரியமாய் நின்று, தங்கள் மனைவிகளுக்காகவும், தங்கள் பிள்ளைகளுக்காகவும், தங்கள் வீடுகளுக்காகவும், தங்கள் குடும்பங்களுக்காகவும் யுத்தம் பண்ணும்படியாக அவர்களைப் பெரும் ஊக்கத்தோடு ஏவினேன்.

24 இதனால் அவர்கள் லாமானியருக்கு முன்பாக ஓடாமல், அவர்களுக்கு விரோதமாக தைரியமாய் நிற்கும்படிக்கு, என் வார்த்தைகள் அவர்களைச் சற்று வேகம்கொள்ள எழுப்பிற்று.

25 அந்தப்படியே, முப்பதாயிரம் அடங்கிய சேனையோடு, நாங்கள் ஐம்பதாயிரம் அடங்கிய சேனைக்கு விரோதமாக யுத்தம் பண்ணினோம். அந்தப்படியே, நாங்கள் அவர்களுக்கு முன்பாக மிகுந்த உறுதியோடு நின்றபடியால், அவர்கள் எங்களுக்கு முன்பிருந்து ஓடினார்கள்.

26 அந்தப்படியே, அவர்கள் ஓடிய பின்பு, நாங்கள் எங்கள் சேனைகளோடு அவர்களைப் பின்தொடர்ந்து, அவர்களை மறுபடியும் சந்தித்து அவர்களை அடித்தோம்; ஆனாலும் கர்த்தருடைய பெலன் எங்களோடு இருக்கவில்லை; ஆம், நாங்கள் தனியே விடப்பட்டோம். கர்த்தருடைய ஆவியானவர் எங்களிடத்தில் தரித்திருக்கவில்லை; ஆதலால் நாங்கள் எங்கள் சகோதரரைப்போல பெலவீனரானோம்.

27 என் ஜனங்களினுடைய துன்மார்க்கத்தினிமித்தமும், அருவருப்புகளினிமித்தமும், அவர்களுக்குள்ளிருந்த இந்தப் பெரும் சீரழிவினிமித்தமும், என் இருதயம் துக்கமடைந்தது. ஆனால், இதோ, நாங்கள் எங்கள் சுதந்திர தேசங்களை மறுபடியும் ஆக்கிரமிக்கும் வரைக்குமாக, லாமானியருக்கும் காதியாந்தன் திருடர்களுக்கும் விரோதமாகப் போனோம்.

28 முன்னூற்று நாற்பத்தி ஒன்பது வருஷங்கள் கடந்து போயின. முன்னூற்றி ஐம்பதாவது வருஷத்தில் எங்களுடைய சுதந்திர தேசங்களை நாங்கள் பெறும்படியாக, ஒரு ஒப்பந்தத்தை லாமானியரோடும், காதியாந்தன் திருடர்களோடும் செய்து கொண்டோம்.

29 தென் தேசத்திற்குப் போகிற குறுகிய வழி உள்ளிட்ட வடதேசத்தை லாமானியர் எங்களுக்குக் கொடுத்தார்கள். தென் தேசம் அனைத்தையும் நாங்கள் லாமானியரிடம் கொடுத்தோம்.