வேதங்கள்
மார்மன் 3


அதிகாரம் 3

நேபியர் மனந்திரும்பும்படி மார்மன் கூக்குரலிடுதல் – அவர்கள் பெரும் ஜெயம்கொண்டு தங்களின் சுயபெலத்தில் மேட்டிமைகொள்ளுதல் – அவர்களை வழிநடத்த மார்மன் மறுத்தல், மற்றும் அவர்களுக்காக அவனது ஜெபம் விசுவாசமின்றி இருத்தல் – சுவிசேஷத்தை விசுவாசிக்கும்படி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரை மார்மன் புஸ்தகம் அழைத்தல். ஏறக்குறைய கி.பி. 360–362.

1 அந்தப்படியே, மேலும் பத்து ஆண்டுகள் கடந்து போகுமட்டும் லாமானியர் மறுபடியும் யுத்தத்திற்கு வரவில்லை. இதோ என் ஜனமாகிய நேபியர்களை தங்கள் தேசங்களையும், தங்கள் ஆயுதங்களையும், யுத்த சமயத்திற்காக ஆயத்தம் பண்ணும்படிச் செய்தேன்.

2 அந்தப்படியே, கர்த்தர் என்னிடத்தில் சொன்னதாவது: நீங்கள் மனந்திரும்பி, என்னிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்று, என் சபையை மறுபடியும் கட்டுங்கள். நீங்கள் தப்புவிக்கப்படுவீர்கள், என்று இந்த ஜனத்திற்கு கூக்குரலிடு.

3 நான் இந்த ஜனத்தை நோக்கி கூக்குரலிட்டேன், ஆனால் அது வீணாய்ப்போயிற்று; அவர்கள் கர்த்தரே தங்களைத் தப்புவிக்கப்பண்ணினார் என்றும், மனந்திரும்பும்படியாக ஒரு தருணத்தை தங்களுக்குத் தந்திருக்கிறார் என்றும் உணராமல் இருந்தார்கள். மேலும் இதோ, அவர்கள் தங்கள் இருதயங்களை தேவனாகிய தங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கடினப்படுத்தினார்கள்.

4 அந்தப்படியே, இந்த பத்தாவது வருஷமும் கடந்துபோன பின்பு, கிறிஸ்துவின் வருகையிலிருந்து எல்லாம் சேர்ந்து முன்னூற்று அறுபது வருஷங்கள் ஆனபோது, அவர்கள் எங்களுக்கு விரோதமாக மறுபடியும் யுத்தம் செய்யும்படிவர ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனக்குத் தெரிவிக்கும்படியாக, லாமானியரின் ராஜா எனக்கு ஒரு நிருபத்தை அனுப்பினான்.

5 அந்தப்படியே, தென்தேசத்திற்குப் போகிற குறுகிய வழியோரமாய், எல்லைகளுக்கு அருகே இருந்த பாழ்க்கடிப்பு என்ற தேசத்தில் அமைந்த பட்டணத்தில் என் ஜனம் ஏகமாய்க்கூடச் செய்தேன்.

6 லாமானிய சேனைகளைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் எங்கள் சேதங்களில் யாதொன்றையும் கைப்பற்றக்கூடாதபடிக்கும், அங்கே எங்களுடைய சேனைகளை நிறுத்தினோம்; ஆகவே எங்களுடைய எல்லா சேனைகளோடும் அவர்களுக்கு எதிராக பெலப்படுத்தினோம்.

7 அந்தப்படியே, முன்னூற்றி அறுபத்தோராம் வருஷத்தில், லாமானியர் எங்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய பாழ்க்கடிப்பு பட்டணத்திற்கு வந்தார்கள்; அந்தப்படியே, அந்த வருஷத்தில் அவர்கள் மறுபடியும் தங்கள் சொந்த தேசங்களுக்கு திரும்புமளவுக்கு நாங்கள் அவர்களை அடித்தோம்.

8 முன்னூற்றி அறுபத்தி இரண்டாம் வருஷத்தில் அவர்கள் மறுபடியும் யுத்தத்திற்கு வந்தார்கள். நாங்கள் அவர்களை மறுபடியும் அடித்து அவர்களில் பெரும் எண்ணிக்கையினரை வெட்டி, அவர்களில் மரித்தோர் சமுத்திரத்தினுள் எறியப்பட்டனர்.

9 இப்பொழுதும் என் ஜனமாகிய நேபியர் செய்த இந்த பெரிய காரியத்தினிமித்தம், அவர்கள் தங்கள் சுயபெலத்தில் பெருமைகொள்ளத் துவங்கி, தங்கள் விரோதிகளால் கொல்லப்பட்ட தங்களுடைய சகோதரர்களின் இரத்தத்திற்காக தாங்களே நீதியைச் சரிக்கட்டுவோம் என்று பரலோக சாட்சியாக ஆணையிடத் துவங்கினார்கள்.

10 அவர்கள் தங்கள் விரோதிகளுக்கு விரோதமாய் யுத்தத்திற்குப் போய் அவர்களை பூமியின் மீதிருந்து நிர்மூலமாக்குவோம் என்று பரலோகத்தின் பேரிலும், தேவ சிங்காசனத்தின் பேரிலும் ஆணையிட்டார்கள்.

11 அந்தப்படியே, மார்மனாகிய நான் இந்த ஜனத்தினுடைய துன்மார்க்கத்தினிமித்தமும், அருவருப்பினிமித்தமும், இச்சமயம் துவங்கி அவர்களுக்கு சேர்வைக்காரனாயும் தலைவனாயுமிருக்க முழுமையாக மறுத்தேன்.

12 இதோ, நான் அவர்களை வழிநடத்தினேன். அவர்களுடைய துன்மார்க்கத்தைப் பொருட்படுத்தாமல், நான் அவர்களை அநேகந்தரம் யுத்தத்திற்கு வழிநடத்தி, எனக்குள் இருக்கிற தேவ அன்பின்படியே என் முழுஇருதயத்தோடு அவர்களை நேசித்தேன்; அவர்களுக்காக நாள் முழுவதும் என் ஆத்துமா என் தேவனிடத்தில் ஜெபத்தில் ஊற்றப்பட்டது; இருப்பினும் அவர்களுடைய இருதயங்களின் கடினத்தினிமித்தம் அது விசுவாசமற்றிருந்தது.

13 மும்முறை அவர்களை அவர்களுடைய பகைவரின் கைகளிலிருந்து விடுவித்தேன். அவர்களோ தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பவில்லை.

14 அவர்கள் தங்கள் விரோதிகளுடன் யுத்தத்திற்கென்று போய், தங்களுடைய சகோதரரின் இரத்தத்திற்காக தாங்களே நீதியைச் சரிக்கட்டுவோம், என்று நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவினால், தங்களுக்கு தடை செய்யப்பட்ட எல்லாவற்றினாலும், அவர்கள் ஆணையிட்டபோது, இதோ, கர்த்தருடைய சத்தம் எனக்குண்டாகி:

15 பழிவாங்குதல் என்னுடையது. நானே திரும்பக் கொடுப்பேன். நான் இந்த ஜனத்தை விடுவித்த பிறகும் அவர்கள் மனந்திரும்பாததினால், இதோ, அவர்கள் பூமியின் பரப்பின் மேலிருந்து அறுப்புண்டு போவார்கள், என்றது.

16 அந்தப்படியே, நான் என்னுடைய விரோதிகளுக்கு விரோதமாகப் போக முழுமையாய் மறுத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தேன். வரப்போகிறவைகளைக் குறித்து சாட்சி கொடுத்த ஆவியினுடைய வெளிப்படுதல்களின்படியே, நான் கண்டதும் கேட்டதுமானவைகளை உலகத்திற்கு வெளியரங்கமாக்க வெறும் பார்வையாளனாக நின்று கொண்டிருந்தேன்.

17 ஆதலால், புறஜாதியாராகிய உங்களுக்கும், இஸ்ரவேலின் வீட்டாராகிய உங்களுக்கும், நான் எழுதுகிறதென்னவெனில், கிரியை துவங்கும்போது, நீங்கள் உங்களுடைய சுதந்திர பூமிக்குத் திரும்பிப்போக ஆயத்தம் செய்யவிருப்பீர்கள்.

18 ஆம், இதோ, நான் பூமியின் கடையாந்திரமனைத்திற்கும் எழுதுகிறேன். ஆம், எருசலேம் தேசத்தில் இயேசு தம்முடைய சீஷர்களாகத் தெரிந்துகொண்ட பன்னிருவரால் உங்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படப் போகிற இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தாரே, உங்களுக்கும் நான் எழுதுகிறேன்.

19 இயேசு இத்தேசத்தில் தெரிந்துகொண்ட பன்னிருவராலும் நியாயந்தீர்க்கப்படப் போகிற இந்த ஜனத்தின் மீதியானோருக்கும் எழுதுகிறேன்; அவர்களோ இயேசு எருசலேம் தேசத்தில் தெரிந்துகொண்ட மற்ற பன்னிருவரால் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.

20 இவைகளை ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துகிறார்; ஆதலால் நான் உங்கள் யாவருக்கும் எழுதுகிறேன். நீங்கள் அனைவரும் ஆம், ஆதாமின் முழு மனுஷ குடும்பத்தைச் சேர்ந்த சகல ஆத்துமாவும், கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டுமென்றும், நன்மையானாலும் தீமையானாலும், உங்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும்படிக்கு, நீங்கள் நிற்கவேண்டும் என்பதையும், நீங்கள் அறியவேண்டும் என்னும் காரணத்துக்காகவும், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

21 உங்கள் மத்தியில் இருக்கப்போகும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நீங்கள் விசுவாசிக்கவும், கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனமாகிய யூதர்கள், தாங்கள் கொன்றுபோட்ட அந்த இயேசுவே மெய்யான கிறிஸ்து என்றும், மெய்யான தேவனென்றும் சாட்சி பகர, அவரைத் தவிர, தாங்கள் கண்டு, கேட்ட, பிற சாட்சி உண்டாயிருக்கவும், இதை உங்களுக்கு எழுதுகிறேன்.

22 உலகத்தின் கடையாந்திரங்கள் யாவிலும் உள்ள நீங்கள் அனைவரும் மனந்திரும்பி, கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க ஆயத்தப்பட்டிருக்கும்படி ஏவிட நான் விரும்புகிறேன்.