வேதங்கள்
மார்மன் 6


அதிகாரம் 6

இறுதி யுத்தங்களுக்காக, குமோரா தேசத்தில் நேபியர்கள் கூடுதல் – மார்மன் பரிசுத்த பதிவேடுகளை குமோரா குன்றில் மறைத்து வைத்தல் – லாமானியர் ஜெயம் கொள்ளுதல், நேபிய தேசம் அழிக்கப்படுதல் – ஆயிரக்கணக்கானோர் பட்டயத்தால் வீழ்த்தப்படுதல். ஏறக்குறைய கி.பி. 385.

1 இப்பொழுதும் நேபியர்களாகிய என் ஜனத்தின் அழிவைக் குறித்த என் பதிவேட்டினை முடிக்கிறேன். அந்தப்படியே, நாங்கள் லாமானியர் முன்பாக அணிவகுத்துச் சென்றோம்.

2 மார்மனாகிய நான் லாமானிய ராஜாவுக்கு ஒரு நிருபத்தை எழுதி, அவர்களோடு நாங்கள் யுத்தம் தொடுக்கும்படியாக குமோரா என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயுள்ள, குமோரா தேசத்தில் எங்களுடைய ஜனங்களை நாங்கள் ஏகமாய்க் கூடச் செய்ய, எங்களுக்கு அனுமதி வழங்கும்படி அவனிடத்தில் விருப்பம் தெரிவித்தேன்.

3 அந்தப்படியே, நான் விரும்பின காரியத்தைக் குறித்த அனுமதியை, லாமானிய ராஜா எனக்கு வழங்கினான்.

4 அந்தப்படியே, நாங்கள் குமோரா தேசத்திற்கு அணிவகுத்துப்போய், குமோரா குன்றைச் சுற்றிலும் எங்களுடைய கூடாரங்களைப் போட்டோம்; அது அநேக தண்ணீர்கள், நதிகள், ஊற்றுக்கள் கொண்ட தேசமாயிருந்தது; இங்கே நாங்கள் லாமானியர்மேல் அனுகூலம் கொள்ள நம்பிக்கையாயிருந்தோம்.

5 முன்னூற்றி எண்பத்தி நான்கு வருஷங்கள் கடந்து போனபோது, நாங்கள் குமோரா தேசத்தில் எங்களுடைய ஜனங்களில் மீதியானோர் அனைவரையும் கூட்டினோம்.

6 அந்தப்படியே, நாங்கள் எங்களுடைய ஜனங்கள் எல்லோரையும் குமோரா தேசத்தில் ஒன்றுகூட்டியபோது, மார்மனாகிய நான் முதுமையடையத் தொடங்கினேன்; இது என் ஜனத்தினுடைய கடைசிப் போராட்டம் என்பதை அறிந்தவனாயும், எங்களுடைய பிதாக்களால் கையளிக்கப்பட்டுவந்த பரிசுத்தமான பதிவேடுகளை, லாமானியர் கைகளுக்குள் விழ நான் அனுமதிக்கக்கூடாதென்று (ஏனெனில் லாமானியர் அவைகளை அழித்துப் போடுவார்கள்) கர்த்தரால் கட்டளையிடப்பட்டதாலும், நான் இந்தப் பதிவேட்டை நேபியின் தகடுகளிலிருந்து எழுதி, என் குமாரனாகிய மரோனிக்கு நான் கொடுத்த அந்த சில தகடுகளைத் தவிர, கர்த்தருடைய கரத்தால் என் பொறுப்பில் விடப்பட்ட மற்ற எல்லா பதிவேடுகளையும், குமோரா குன்றில் மறைத்து வைத்தேன்.

7 அந்தப்படியே, என் ஜனம் தங்கள் மனைவிகளோடும், தங்கள் பிள்ளைகளோடும் இப்பொழுது லாமானிய சேனைகள் தங்களுக்கு நேராக வருவதைக் கண்டு, எல்லா துன்மார்க்கரின் இருதயங்களையும் நிரப்புகிற அந்த மரணத்தின் அஞ்சத்தக்க பயத்தோடுகூட, அவர்களை எதிர்கொள்ளக் காத்திருந்தார்கள்.

8 அந்தப்படியே, அவர்கள் எங்களுக்கு விரோதமாக யுத்தம் செய்ய வந்தார்கள். அவர்களுடைய எண்ணிக்கையின் மிகுதியினிமித்தம், ஒவ்வொரு ஆத்துமாவும் திகிலால் நிறைந்திருந்தது.

9 அந்தப்படியே, அவர்கள் என் ஜனத்தின்மேல் பட்டயத்தோடும், வில்லோடும், அம்போடும், கோடரியோடும் மற்றும் எல்லா விதத்திலான யுத்தக் கருவிகளோடும் விழுந்தார்கள்.

10 அந்தப்படியே, என்னோடு இருந்த என் பத்தாயிரம் மனுஷரும் வெட்டப்பட்டார்கள், அவர்களுக்கு மத்தியிலே நான் காயப்பட்டு விழுந்தேன்; அவர்கள் என் ஜீவனுக்கு முடிவுகட்டாமல் என் அருகே கடந்து போனார்கள்.

11 அவர்கள் போய் எங்களில் இருபத்தி நாலுபேரைத் தவிர (அவர்களுக்குள் என் மகன் மரோனியுமிருந்தான்) மற்ற என் ஜனங்கள் யாவரையும் வெட்டிப்போட்டார்கள். எங்கள் ஜனங்கள் மரித்திருக்க, நாங்கள் பிழைத்திருந்து, மறுநாள் காலையில் லாமானியர் தங்கள் பாளயங்களுக்குத் திரும்பின பின்பு, நான் முன்னிருந்து வழிநடத்திப்போன என் ஜனங்களில் பதினாயிரம்பேர் வெட்டப்பட்டுக் கிடப்பதை குமோரா குன்றின் மேலிருந்து பார்த்தோம்.

12 என் குமாரனாகிய மரோனியால் வழிநடத்திப்பட்டுப்போன, என் ஜனங்களின் பதினாயிரம்பேரையும் கண்டோம்.

13 இதோ, கித்கித்தோனாவின் பதினாயிரம் பேரும் வீழ்ந்து போனார்கள். அவர்களுக்குள்ளே அவனும் இருந்தான்.

14 லாமா தன்னுடைய பதினாயிரம் பேரோடு விழுந்தான்; கில்கால் தன்னுடைய பதினாயிரம் பேரோடு விழுந்தான்; லிம்கா தன்னுடைய பதினாயிரம் பேரோடு விழுந்தான்; எனீயும் தன்னுடைய பதினாயிரம் பேரோடு விழுந்தான்; குமேனிகாவும், மரோனிகாவும், அந்தியோனமும், சிப்லோமும், சேமும், யோசும் ஆக ஒவ்வொருவரும் தங்களுடைய பதினாயிரம் பேரோடு விழுந்தார்கள்.

15 அந்தப்படியே, அங்கே இன்னும் பத்துபேர், ஒவ்வொருவரும் தங்களின் பதினாயிரம் பேருடன் பட்டயத்தால் வீழ்ந்து போனார்கள்; என்னோடுகூட இருந்த அந்த இருபத்தி நான்கு பேரையும், தென் நாடுகளுக்குத் தப்பிப்போன சிலரையும், லாமானியரோடு சேர்ந்துகொண்ட சிலரையும் தவிர, என் எல்லா ஜனங்களும் வீழ்ந்துபோனார்கள்; பூமியின் மேல் கிடக்கும் அவர்களின் சரீரமும் எலும்புகளும், இரத்தமும், பூமியின் பரப்பின்மீது அழுகி, மண்ணோடு மண்ணாகி தங்களின் தாய் பூமிக்கே திரும்பிப்போக அவர்களை வெட்டிப் போட்டவர்களின் கைகளால் விடப்பட்டிருக்கின்றன.

16 என் ஜனங்களில் கொன்று போடப்பட்டவர்களினிமித்தம் என் ஆத்துமா வியாகுலத்தால் கிழிந்தது, நான் கூக்குரலிட்டு:

17 சௌந்தரியமுள்ளவர்களே, நீங்கள் கர்த்தருடைய வழிகளிலிருந்து விலகிப்போனதெப்படி! சௌந்தரியமுள்ளவர்களே, உங்களை ஏற்றுக்கொள்ள கரங்களை விரித்து நின்ற, அந்த இயேசுவை உங்களால் எப்படி தள்ளிவிட முடிந்தது!

18 இதோ, இதை நீங்கள் செய்திருக்கவில்லையெனில், நீங்கள் வீழ்ந்து போயிருக்கமாட்டீர்கள். ஆனால் இதோ, நீங்கள் வீழ்ந்து போனீர்கள். உங்கள் இழப்பினிமித்தம் நான் துக்கிக்கிறேன்.

19 சௌந்தரியமுள்ள குமாரரே, குமாரத்திகளே, தகப்பன்மாரே, தாய்மாரே, புருஷரே, மனைவிகளே, சௌந்தரியமானவர்களே, நீங்கள் எப்படி வீழ்ந்து போனீர்கள்!

20 ஆனால், இதோ, நீங்கள் போனீர்கள், என் வேதனை உங்களைத் திரும்பி அழைத்துவராது.

21 உங்களுடைய சாவுக்கேதுவான சரீரங்கள் சாவாமையைத் தரித்துக்கொள்ளும் நாள் சீக்கிரத்தில் வருகிறது, அழிவினால் கெட்டுப்போகிற இந்த சரீரங்கள் சீக்கிரத்தில் அழிவில்லாத சரீரங்களாக மாற வேண்டும்; அப்பொழுது நீங்கள் உங்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும்படி கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பு நிற்க வேண்டும்; நீங்கள் நீதிமான்களாயிருந்தால், உங்களுக்கு முன்போன உங்களுடைய பிதாக்களோடு ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

22 இந்தப் பெரும் அழிவு உங்கள்மேல் வருமுன்னே நீங்கள் மனந்திரும்பியிருக்க வேண்டும். ஆனால் இதோ, நீங்களோ கடந்து போனீர்கள், பிதா, ஆம், பரலோகத்தின் நித்திய பிதா, உங்களுடைய நிலையை அறிந்திருக்கிறார்; அவர் தம்முடைய நியாயம் மற்றும் இரக்கத்தின்படியே உங்களுக்குச் செய்வார்.