வேதங்கள்
மார்மன் 7


அதிகாரம் 7

பிற்காலங்களின் லாமானியருக்கு, கிறிஸ்துவில் விசுவாசிக்கவும் அவருடைய சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளவும், இரட்சிக்கப்படவும் மார்மன் அழைப்பு விடுத்தல் – வேதாகமத்தை விசுவாசிக்கிற யாவரும் மார்மன் புஸ்தகத்தையும் விசுவாசிப்பார்கள். ஏறக்குறைய கி.பி. 385.

1 இதோ, இந்த ஜனங்களின் தப்புவிக்கப்பட்ட மீதியானோர், தங்களுடைய பிதாக்களின் காரியங்களைக் குறித்து அறியத்தக்கதாக என் வார்த்தைகளை அவர்களுக்குக் கொடுப்பது தேவனுக்கு சித்தமாயிருந்தால், நான் அவர்களிடத்தில் சற்று பேசுகிறேன்; ஆம், இஸ்ரவேலின் வீட்டாரின் மீதியானவர்களே, நான் உங்களிடத்தில் பேசுகிறேன்; நான் பேசுகிற வார்த்தைகள் இவைகளே.

2 நீஙகள் இஸ்ரவேல் வீட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

3 நீங்கள் மனந்திரும்புதலுக்குள் வரவேண்டும், இல்லாவிடில் நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்டாலொழிய, நீங்கள் உங்களுடைய யுத்தக்கருவிகளை கீழே போட்டு, இனி ஒருபோதும் இரத்தம் சிந்துதலில் மனமகிழ்ச்சியாயிராமல், அவைகளை மறுபடியும் எடுக்க கூடாதென்று நீங்கள் அறியுங்கள்.

5 நீங்கள் உங்களுடைய பிதாக்களினுடைய ஞானத்திற்கு வந்து, உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும், அக்கிரமங்களிலிருந்தும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவே தேவ குமாரனென்றும், அவர் யூதர்களால் கொலையுண்டார் என்றும், பிதாவின் வல்லமையால் மறுபடியும் எழுந்தாரென்றும், அதினிமித்தம் கல்லறையின் மேல் ஜெயம் கொண்டாரென்றும், அவரில்தானே மரணத்தின் கொடுக்கும் விழுங்கப்பட்டதென்றும் விசுவாசிக்கவேண்டுமென்றும் அறியுங்கள்.

6 அதினிமித்தம் மனுஷர் அவருடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க எழுப்பப்பட்டு, அவர் மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுகிறார்.

7 அவர் உலகத்தின் மீட்பை சம்பவிக்கப்பண்ணினார், அதனாலே நியாயத்தீர்ப்பின் நாளிலே அவருக்கு முன்பாகக் குற்றமற்றவனாகக் காணப்படுகிறவன் தேவ சமுகத்தில் அவருடைய ராஜ்யத்தில் வாசம்பண்ணவும், ஒன்றான தேவனாயிருக்கிற பிதாவிற்கும் குமாரனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் உன்னதத்திலுள்ள பாடகர்களுடனே முடிவற்ற மகிழ்ச்சியான நிலையிலே இடைவிடாமல் துதிகளைப் பாடவும் அனுமதித்திருக்கிறார்.

8 ஆகவே மனந்திரும்பி, இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, உங்களுக்கு முன்பாக வைக்கப்படும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் இப்பதிவேடுகளில் மாத்திரமல்ல, யூதர்களிடமிருந்து புறஜாதியாருக்கும், பின்பு புறஜாதியாரிடத்திலிருந்து உங்களுக்கும் வரவிருக்கிற பதிவேடுகளையும், பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்.

9 ஏனெனில் இதோ, அதை நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு இது எழுதப்பட்டிருக்கிறது; நீங்கள் அதை விசுவாசித்தால் இதையும் விசுவாசிப்பீர்கள்; நீங்கள் இதை விசுவாசித்தால் நீங்கள் உங்கள் பிதாக்களைக் குறித்தும், அவர்களுக்குள் தேவ வல்லமையால் நடப்பிக்கப்பட்ட மகத்துவமுள்ள கிரியைகளைக் குறித்தும் அறிவீர்கள்.

10 நீங்கள் யாக்கோபின் சந்ததியாரின் மீதியானவர்கள் என்றும் அறிந்துகொள்வீர்கள்; ஆதலால் நீங்கள் முதல் உடன்படிக்கையின் ஜனங்களுக்குள்ளே எண்ணப்படுவீர்கள்; நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசித்து நம்முடைய இரட்சகர் நமக்குக் கட்டளையிட்டபடியே அவருடைய எடுத்துக்காட்டைப் பின்பற்றி நீங்கள் முதலில் ஜலத்தாலும், பின்பு அக்கினியாலும், பரிசுத்த ஆவியானவராலும், ஞானஸ்நானம் பெறுவீர்களானால், நியாயத்தீர்ப்பின் நாளிலே அது உங்களுக்கு நலமாயிருக்கும். ஆமென்.