வேதங்கள்
1 நேபி 11


அதிகாரம் 11

நேபி கர்த்தரின் ஆவியைக் காணுதல், தரிசனத்திலே ஜீவவிருட்சம் காண்பிக்கப்படுதல் – அவன் தேவ குமாரனுடைய தாயைக் காணுதல். தேவ சித்தமிறங்கியதைப்பற்றி அறிந்துகொள்ளுதல் – அவன் தேவஆட்டுக்குட்டியின் ஞானஸ்நானம், ஊழியம் மற்றும் சிலுவையிலறையப்படுதலைக் காணுதல் – அவன் ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் அழைப்பையும், ஊழியத்தையும் காணுதல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 என் தகப்பன் கண்ட காரியங்களை அறிய வாஞ்சித்து, அவைகளை எனக்குக் கர்த்தர் தெரியப்படுத்துவார் என விசுவாசித்தவனாய், நான் அமர்ந்து என் இருதயத்தில் சிந்தனை செய்து கொண்டிருக்கையில், ஆம், நான் முன்பு கண்டிராததும், என் பாதம் பட்டிராததுமான மிக உயர்ந்த மலையின் மீது கர்த்தரின் ஆவியில் எடுத்துக்கொள்ளப்பட்டேன்.

2 ஆவியானவர் என்னை நோக்கி: இதோ, நீ வாஞ்சிப்பது என்ன? என்றார்.

3 என் தகப்பன் கண்ட காரியங்களைக் காண நான் வாஞ்சிக்கிறேன் என்றேன்.

4 ஆவியானவர் என்னை நோக்கி: உன் தகப்பனால் பேசப்பட்டிருக்கின்ற விருட்சத்தை அவன் கண்டானென்று விசுவாசிக்கிறாயா? என்றார்.

5 நான்: ஆம், என் தகப்பனின் எல்லா வார்த்தைகளையும் நான் விசுவாசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர், என்றேன்.

6 நான் இந்த வார்த்தைகளைப் பேசின பின்பு, ஆவியானவர் உரத்த சத்தமாய், அதி உன்னத தேவனாகிய கர்த்தருக்கு ஓசன்னா; அவர் பூமியனைத்தின் மேலும், ஆம், எல்லாவற்றிற்கும் தேவனாயிருக்கிறார். மேலும் நேபியே, நீ அதி உன்னத தேவனுடைய குமாரனை விசுவாசிப்பதால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருக்கிறாய்; எனவே நீ வாஞ்சித்த காரியங்களை நீ காண்பாய், என்றார்.

7 உன் தகப்பன் புசித்த கனியைக் கொடுத்த விருட்சத்தை நீ கண்டபின்பு, ஒரு மனுஷன் வானத்திலிருந்து இறங்குவதையும் நீ காண்பாய்; இதோ, இந்தக் காரியம் உனக்கு அறிகுறியாகக் கொடுக்கப்படும்; நீ அவரைத் தரிசிப்பாய்; மேலும் நீ அவரைத் தரிசித்த பின்பு, அவர்தான் தேவனுடைய குமாரன் என்பதை நீ சாட்சி கொடுப்பாயாக.

8 ஆவியானவர் என்னை நோக்கி: பார்! என்றார். நான் பார்த்தபொழுது ஒரு விருட்சத்தைக் கண்டேன். அது என் தகப்பன் கண்ட விருட்சம்போல இருந்தது; அதன் அழகு எல்லா அழகையும் மிஞ்சுவதாயிருந்தது; அதனுடைய வெண்மை சிதறிய பனியின் வெண்மையையும் மிஞ்சுவதாயிருந்தது.

9 அந்த விருட்சத்தை நான் பார்த்த பின்பு, நான் ஆவியானவரை நோக்கி: இதோ, எல்லாவற்றைக் காட்டிலும் விலையேறப்பெற்ற நீர் எனக்குக் காண்பித்த விருட்சத்தை நான் கண்டேன், என்றேன்.

10 அவர் என்னை நோக்கி: நீ வாஞ்சிப்பது என்ன? என்றார்.

11 நான் அவரை நோக்கி: அதன் அர்த்தத்தை அறியவேண்டும் என்றேன், ஏனெனில் நான் அவரோடு மனுஷன் பேசுகிற பிரகாரமாய்ப் பேசினேன்; ஏனெனில் அவர் ஒரு மனுஷனின் சாயலில் இருப்பதை நான் கண்டேன்; எனினும் அவர் கர்த்தருடைய ஆவி என்பதை நான் அறிவேன்; மேலும் ஒரு மனுஷன் மற்றொருவனுடன் பேசுவதைப்போல அவர் என்னிடத்தில் பேசினார்.

12 அவர், என்னை நோக்கி: பார்! என்றார். மேலும் அவரின் மீது பார்வையைச் செலுத்த பார்த்தபோது, அவரை நான் காணவில்லை; ஏனெனில் என் முன்னிருந்து அவர் சென்றுவிட்டார்.

13 நான் பார்த்தபொழுது, மகா எருசலேம் பட்டணத்தையும், மற்ற பட்டணங்களையும் கண்டேன். மேலும் நான் நாசரேத்து பட்டணத்தையும் கண்டேன்; நாசரேத்து பட்டணத்தில் ஒரு கன்னிகையைக் கண்டேன், அவள் மிகுந்த சௌந்தரியமும் வெண்மையும் உடையவளாக இருந்தாள்.

14 நான் வானங்கள் திறப்பதைக் கண்டேன்; ஒரு தூதன் கீழே இறங்கிவந்து எனக்கு முன்பாக நின்றான்; மேலும் அவன் என்னை நோக்கி: நேபியே, நீ என்ன காண்கிறாய்? என்றான்.

15 நான் அவனை நோக்கி: மற்ற எல்லா கன்னிகைகளையும் விட மிகுந்த அழகும் சௌந்தரியமுமுள்ள ஒரு கன்னிகையை என்றேன்.

16 அவன் என்னை நோக்கி: நீ தேவ சித்தமிறங்கியதை அறிவாயா? என்றான்.

17 நான் அவனை நோக்கி: அவர் தம் பிள்ளைகளை நேசிக்கிறாரென அறிவேன்; எனினும் எல்லாக் காரியங்களின் அர்த்தத்தையும் நான் அறியேன் என்றேன்.

18 அவன் என்னை நோக்கி: இதோ நீ காண்கிற கன்னிகை மாம்சப்பிரகாரமான தேவகுமாரனின் தாய் என்றான்.

19 அவள் ஆவிக்குள்ளாக எடுத்துக்கொள்ளப்பட்டதைக் கண்டேன்; அவள் ஆவிக்குள்ளாக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு ஒரு தூதன் என்னிடம்: பார்! என்றான்.

20 நான் பார்த்தபோது, அந்தக் கன்னிகை தன் கரங்களில் ஒரு குழந்தையை ஏந்திக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

21 தூதன் என்னை நோக்கி: இதோ, தேவ ஆட்டுக்குட்டி. ஆம், நித்திய பிதாவின் குமாரன்! உன் தகப்பன் கண்ட விருட்சத்தின் பொருளை நீ அறிந்திருக்கிறாயா? என்றான்.

22 நான் பிரதியுத்தரமாக: ஆம், அதுதான் மனுபுத்திரரின் இருதயங்களில் முழுவதுமாக ஊற்றப்படுகிறதான தேவனின் அன்பு; ஆகையால் அது எல்லாக் காரியங்களுக்கும் மேலாக வாஞ்சிக்கத்தக்கது என்றேன்.

23 அவன் என்னை நோக்கி: ஆம், ஆத்துமாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக்கூடியது என்றான்.

24 இந்த வார்த்தைகளைச் சொன்னபின்பு, அவன் என்னை நோக்கி: பார்! என்றான். நான் பார்த்தபொழுது தேவ குமாரன் மனுபுத்திரர் மத்தியில் செல்வதைக் கண்டேன்; மேலும் அநேகர் அவர் பாதங்களில் விழுந்து தொழுதுகொள்ளுவதையும் நான் கண்டேன்.

25 நான், என் தகப்பன் கண்ட இருப்புக்கோலைப் பார்த்தேன், அது ஜீவதண்ணீருள்ள நீர்வீழ்ச்சிக்கு அல்லது ஜீவவிருட்சத்தினிடத்திற்கு நடத்திச் செல்கிற, தேவனுடைய வார்த்தையாயிருந்தது. அந்தத் தண்ணீர்கள் தேவனுடைய அன்புக்கு அடையாளமாய் இருப்பவை; மேலும் ஜீவவிருட்சமும் தேவனுடைய அன்புக்கு அடையாளமாய் இருந்தது என நான் கண்டேன்.

26 மறுபடியும் தூதன் என்னை நோக்கி: இதோ, தேவனுடைய அனுக்கிரகத்தையும் பார்! என்றான்.

27 நான் பார்த்தபொழுது என் தகப்பனால் பேசப்பட்டிருக்கின்ற உலகத்தின் மீட்பரைக் கண்டேன்; அவருக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்தவேண்டிய தீர்க்கதரிசியையும் கண்டேன். தேவ ஆட்டுக்குட்டியானவர் போய் அவரால் ஞானஸ்நானம் பெற்றார்; மேலும் அவர் ஞானஸ்நானம் பெற்றபின்பு வானங்கள் திறக்கப்பட்டதையும், பரிசுத்த ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி, புறாவின் வடிவில் அவர்மேல் அமர்வதையும் கண்டேன்.

28 வல்லமையிலும், அதிக மகிமையிலும் ஜனங்களிடத்தில் அவர் சென்று ஊழியம் செய்வதை நான் கண்டேன்; மேலும் திரளானோர் அவரைக் கேட்பதற்கு ஒன்றாகக் கூடினார்கள்; அவர்கள் மத்தியிலிருந்து அவரை அவர்கள் புறம்பே தள்ளுவதையும் கண்டேன்.

29 பிற பன்னிரண்டுபேர் அவரைப் பின்தொடர்வதையும் நான் கண்டேன். என் முகத்திற்கு முன்பிருந்து அவர்கள் ஆவியில் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள், நான் அவர்களைப் பார்க்கவில்லை.

30 தூதன் மறுபடியுமாய் என்னிடம்: பார்! என்றான். நான் பார்த்தபோது வானங்கள் மறுபடியும் திறப்பதையும், தூதர்கள் மனுபுத்திரரிடம் இறங்குகிறதையும் கண்டேன்; அவர்கள் அவர்களுக்கு ஊழியம் செய்தார்கள்.

31 அவன் மறுபடியும் என்னிடம்: பார்! என்றான். நான் பார்த்தேன், மனுபுத்திரர் மத்தியில் தேவ ஆட்டுக்குட்டியானவர் செல்வதைக் கண்டேன். எல்லா வியாதியஸ்தரையும், சகலவித நோய்களினாலும், பிசாசுகள் மற்றும் அசுத்த ஆவிகளினாலும் துன்பப்பட்டிருந்தவர்களையும், திரள் ஜனமாய்க் கண்டேன்; மேலும் தூதன் என்னிடம் பேசி, இந்த எல்லாக் காரியங்களையும் காண்பித்தான். அவர்கள் தேவ ஆட்டுக்குட்டியானவரின் வல்லமையால் சொஸ்தமாக்கப்பட்டார்கள்; பிசாசுகளும் அசுத்த ஆவிகளும் துரத்தப்பட்டன.

32 தூதன் மறுபடியும் என்னிடம்: பார்! என்றான். நான் பார்த்து, தேவ ஆட்டுக்குட்டியானவரையும் அவர் ஜனத்தால் பிடித்துச் செல்லப்படுவதையும், ஆம், நித்திய தேவனின் குமாரனாகிய அவர் உலகத்தால் நியாயந்தீர்க்கப்படுவதையும் கண்டேன்; நான் பார்த்தவற்றைச் சாட்சி கொடுக்கிறேன்.

33 அவர் சிலுவையின் மீது உயர்த்தப்பட்டு, உலகத்தின் பாவங்களுக்காகக் கொலை செய்யப்பட்டதையும் நேபியாகிய நான் கண்டேன்.

34 அவர் கொலை செய்யப்பட்ட பின்பு, ஆட்டுக்குட்டியானவரின் அப்போஸ்தலர்களுக்கு எதிராகச் சண்டையிட, பூமியின் திரளானோர் கூட்டப்பட்டிருப்பதைக் கண்டேன்; ஏனெனில், கர்த்தரின் தூதனால் இவ்விதமாய்ப் பன்னிரண்டு பேரும் அழைக்கப்பட்டார்கள்.

35 பூமியின் திரளானோர் ஒன்றாகக் கூட்டப்பட்டார்கள்; என் தகப்பன் கண்ட கட்டிடத்தைப்போலவே, ஒரு பெரிய விசாலமான கட்டிடத்தில் அவர்கள் இருப்பதைக் கண்டேன்; மேலும் கர்த்தரின் தூதன் மறுபடியும் என்னிடம்: உலகத்தையும் அதிலுள்ள ஞானத்தையும் பார்; ஆம், ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலரையும் எதிர்த்துச் சண்டையிட இஸ்ரவேல் வீட்டார் ஒன்றாகக் கூடியிருப்பதையும் பார், என்றான்.

36 நான் பார்த்து சாட்சி பகர்வது என்னவென்றால், அந்த பெரிய, விசாலமான கட்டிடம் உலகத்தின் கர்வமாக இருந்தது; அது விழுந்தது, அதனுடைய வீழ்ச்சி மகா பயங்கரமானதாயிருந்தது. கர்த்தருடைய தூதன் மறுபடியும் என்னிடம்: ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலருக்கு எதிராய்ச் சண்டையிடுகிற சகல ஜனங்கள், தேசத்தார், இனத்தார், பாஷைக்காரரின் அழிவு இப்படிப்பட்டதாயிருக்கும் என்றான்.