வேதங்கள்
1 நேபி 14


அதிகாரம் 14

புறஜாதியார் மீது வரும் ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் குறித்து ஒரு தூதன் நேபிக்குச் சொல்லுதல் – தேவ ஆட்டுக்குட்டியானவரின் சபை மற்றும் பிசாசின் சபை என இரண்டு சபைகள் மாத்திரமே இருக்கின்றன – எல்லா தேசங்களிலுமிருக்கிற தேவனுடைய பரிசுத்தவான்களும், அந்தப் பெரிதும், அருவருப்புமான சபையால் துன்புறுத்தப்படுதல் – உலக முடிவைக் குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுவான். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 அந்த நாளிலே தேவ ஆட்டுக்குட்டியானவருக்கு புறஜாதியார் செவிகொடுப்பார்களெனில், அவர்களுக்கு வார்த்தையிலும், வல்லமையிலும், செயலிலும்கூட, அவர்களின் இடறுதற்கேதுவானவைகளை எடுத்துப்போடும்படிக்கு, அவர் தன்னையே வெளிப்படுத்துவார்.

2 தேவ ஆட்டுக்குட்டியானவருக்கு விரோதமாய்த் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாவிடில், அவர்கள் உன் தகப்பனின் சந்ததியோடு எண்ணப்படுவார்கள்; ஆம், இஸ்ரவேலின் வீட்டாரோடும் அவர்கள் எண்ணப்படுவார்கள்; வாக்குத்தத்தத்தின் தேசத்திலே என்றென்றைக்கும் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனமாய் இருப்பார்கள்; அவர்கள் சிறையிருப்பின் கீழ் இனி ஒருபோதும் கொண்டுவரப்படுவதில்லை; இஸ்ரவேல் வம்சத்தார் இனி ஒருபோதும் தாறுமாறாக்கப்படமாட்டார்கள்.

3 அந்தப் பெரிய படுகுழி, மனுஷர்களின் ஆத்துமாவை நரகத்திற்கு நடத்திச் செல்ல, அந்தப் பெரிதும் அருவருப்புமான சபையினரால் அவர்களுக்காக தோண்டப்பட்டது. அவன் மனுஷரின் ஆத்துமாக்களை நரகத்துக்கு வழிநடத்தும்படியாக, பிசாசாலும் அவனது பிள்ளைகளாலும் தோற்றுவிக்கப்பட்டது, ஆம், மனுஷர்களின் அழிவுக்காக தோண்டப்பட்ட அந்தப் பெரிய படுகுழி, அதைத் தோண்டியவர்களினாலேயே நிரப்பப்பட்டு, அவர்களின் முழுஅழிவுக்குக் காரணமாயிருக்கும், என்று தேவ ஆட்டுக்குட்டியானவர் சொல்லுகிறார்; ஆத்துமா முடிவில்லாத நரகத்திற்குள் தள்ளப்படுமே ஒழிய அது நிர்மூலமாக்கப்படமாட்டாது.

4 ஏனெனில் இதோ, இது அவருக்கு முன்பாகத் துன்மார்க்கம் மற்றும் அருவருப்பானவைகளைச் செய்கிற எல்லார் மீதும், பிசாசின் சிறைத்தனத்தின்படியும், தேவனுடைய நியாயத்தின்படியேயும் இருக்கிறது.

5 அந்தப்படியே, தூதன் நேபியாகிய என்னிடத்தில் சொன்னதாவது: புறஜாதியார் மனந்திரும்பினால் அது அவர்களுக்கு நலமாயிருக்கும் என்பதை நீ கண்டாய்; இஸ்ரவேலின் வீட்டாருடன் கர்த்தரின் உடன்படிக்கைகளைக் குறித்தும் நீ அறிந்திருக்கிறாய்; மனந்திரும்பாதவன் அழியவேண்டும் என்றும் நீ கேள்விப்பட்டிருக்கிறாய்.

6 ஆகையால் தேவ ஆட்டுக்குட்டியானவருக்கு விரோதமாய் தங்கள் இருதயங்களை புறஜாதியார் கடினப்படுத்தினால், அவர்களுக்கு ஐயோ.

7 ஏனெனில், மனுபுத்திரரின் மத்தியில் நான் பெரிதும் அற்புதமுமான கிரியைகளைச் செய்யும் காலம் வருகிறது; சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் அவர்களுக்கு உணர்த்துவதற்கோ, அல்லது நான் பேசிய பிசாசின் சிறைத்தனத்தின்படி, அவர்களைச் சரீரப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், சிறையிருப்புக்குள்ளாக்கும்படிக்கும், அழிக்கும்படிக்கும், அவர்களை அவர்களுடைய இருதயக் கடினத்திற்கும், மனதின் குருட்டுத்தனத்திற்கும், அவர்களுடைய விடுதலைக்காக, என்றுமுள்ள ஒரு கிரியையை, ஒரு விதத்திலோ அல்லது வேறு விதத்திலோ செய்வேன், என்று தேவ ஆட்டுக்குட்டியானவர் சொல்லுகிறார்.

8 அந்தப்படியே, தூதன் இந்த வார்த்தைகளைப் பேசியபொழுது, அவன் என்னை நோக்கி: இஸ்ரவேல் வீட்டாருடன் பிதாவினுடைய உடன்படிக்கைகளை நீ நினைவில் வைத்திருக்கிறாயா? என்றான். நான் அவனை நோக்கி, ஆம், என்றேன்.

9 அந்தப்படியே, அவன் என்னை நோக்கி: இதோ, பிசாசு ஸ்தாபகனாக இருக்கிற, அருவருப்பானவைகளின் தாயாகவும் இருக்கும், அந்தப் பெரிதும் அருவருப்புமான சபையைப் பார், என்றான்.

10 அவன் என்னை நோக்கி: இதோ, இரண்டு சபைகள் மாத்திரமே உள்ளன; ஒன்று தேவ ஆட்டுக்குட்டியானவரின் சபை. மற்றொன்று பிசாசின் சபை; ஆதலால் தேவ ஆட்டுக்குட்டியானவரின் சபையைச் சார்ந்திராதவன் எவனும், எல்லா அருவருப்புகளுக்கும் தாயான, அந்தப் பெரிய சபையைச் சார்ந்தவனாயிருக்கிறான்; மேலும் அவள் பூமியனைத்திற்கும் வேசியாயிருக்கிறாள், என்றான்.

11 அந்தப்படியே நான் பார்த்தபொழுது, பூமியனைத்திற்கும் வேசியான அவள் திரளான தண்ணீர்களின்மேல் அமர்ந்திருப்பதைக் கண்டேன்; அவள் பூமியனைத்தின் மேலும், எல்லா தேசங்கள், வம்சங்கள், பாஷைக்காரர் மற்றும் ஜனங்களின் மத்தியிலும் ஆளுகை செய்பவளாயிருந்தாள்.

12 அந்தப்படியே, நான் தேவ ஆட்டுக்குட்டியானவரின் சபையையும், திரளான தண்ணீர்களின்மேல் அமர்ந்திருந்த, வேசியின் துன்மார்க்கம் மற்றும் அருவருப்புகளினிமித்தம், அதனுடைய எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் கண்டேன்; இருந்தபோதிலும் தேவனுடைய பரிசுத்தவான்கள் அடங்கிய, ஆட்டுக்குட்டியானவரின் சபை, பூமியின் பரப்பின் மேலெல்லாம் இருப்பதை நான் கண்டேன்; நான் கண்ட பெரும் வேசியின் துன்மார்க்கத்தால், பூமியின் பரப்பின்மீது அவர்களின் ஆளுகை சிறியதாயிருந்தது.

13 அந்தப்படியே, அருவருப்புகளின் பெரும் தாய், தேவ ஆட்டுக்குட்டியானவருக்கு எதிராய்ச் சண்டையிட, புறஜாதியாரின் எல்லா தேசங்களிலிருந்தும், பூமியின் முழு மேற்பரப்பின் மீதும், திரளானோரை ஒன்றாகக் கூட்டியதை நான் கண்டேன்.

14 அந்தப்படியே, நேபியாகிய நான், ஆட்டுக்குட்டியானவரின் சபையின் பரிசுத்தவான்கள் மீதும், பூமியின் பரப்பின் மீதும், சிதறடிக்கப்பட்டிருந்த கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனத்தின் மீதும் தேவ ஆட்டுக்குட்டியானவரின் வல்லமை, இறங்கக் கண்டேன்; அவர்கள் நீதியினாலும் மகா மகிமையிலிருக்கிற தேவனுடைய வல்லமையினாலும் ஆயுதந்தரித்திருந்தார்கள்.

15 அந்தப்படியே, தேவனுடைய உக்கிரம், பெரிதும் அருவருப்புமான சபையின்மேல் ஊற்றப்பட்டபடியால், சகல தேசத்தார் மற்றும் பூமியின் கோத்திரத்தார் மத்தியிலும், யுத்தங்கள் மற்றும் யுத்தங்களின் வதந்திகளும் இருப்பதைக் கண்டேன்.

16 அருவருப்புகளின் தாய்க்குச் சொந்தமான சகல தேசங்களுக்குள்ளே, யுத்தங்களும் மற்றும் யுத்தங்களின் வதந்திகளும், தொடங்குகையில் தூதன் என்னை நோக்கி: இதோ, தேவனுடைய உக்கிரம் வேசிகளின் தாயானவளின் மீது இருக்கிறது, இதோ, இந்தக் காரியங்கள் அனைத்தையும் நீ காண்கிறாய் என்றான்.

17 அந்த நாள் வரும்போது பிசாசு, ஸ்தாபகனாக இருக்கின்ற, பூமியில் எங்கும் இருக்கிறதுமான, அந்தப் பெரிதும் அருவருப்புமான சபையாகிய, வேசிகளின் தாயின் மீது தேவனுடைய உக்கிரம் ஊற்றப்படும். அப்பொழுது, அந்நாளில், இஸ்ரவேலின் வீட்டாராகிய, தன் ஜனத்துடன் தான் செய்த, தன்னுடைய உடன்படிக்கைகளை நிறைவேற்ற, ஒரு வழியை ஆயத்தப்படுத்துகிற பிதாவினுடைய கிரியை துவங்கும்.

18 அந்தப்படியே, தூதன் என்னுடன் பேசி, பார் என்றான்.

19 நான் பார்த்தபொழுது ஒரு மனுஷனைக் கண்டேன், அவன் வெள்ளை அங்கியைத் தரித்திருந்தான்.

20 தூதன் என்னை நோக்கி: இதோ ஆட்டுக்குட்டியானவரின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவன், என்றான்.

21 இதோ, இந்தக் காரியங்களின் மீதியானவைகளையும்; ஆம், நடந்த, அநேக காரியங்களையும் அவன் பார்க்கவும், எழுதவும் செய்வான்.

22 அவன் உலகத்தின் முடிவைக் குறித்தும் எழுதுவான்.

23 ஆனபடியால், அவன் எழுதப்போகும் காரியங்கள் நியாயமும், சத்தியமுமானவை; இதோ, நீ கண்ட யூதனுடைய வாயிலிருந்து வெளிப்பட்ட, புஸ்தகத்தில் அவை எழுதப்பட்டுள்ளன, அவை யூதனுடைய வாயிலிருந்து வெளிப்பட்டபோது, அல்லது யூதனுடைய வாயிலிருந்து அந்தப் புஸ்தகம் வெளிப்பட்டபொழுது, எழுதப்பட்ட காரியங்கள் தெளிவாகவும், தூய்மையாகவும் மிகுந்த விலைமதிப்பற்றதும், எல்லா மனுஷரும் எளிதில் அறிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

24 இதோ, தேவஆட்டுக்குட்டியானவரின் இந்த அப்போஸ்தலன் எழுதும் காரியங்களில், நீ கண்ட அநேக காரியங்கள் இருக்கின்றன; இதோ மீதியானவற்றை நீ காண்பாய்.

25 ஆனால் இனிமேல் நீ காண்கிற காரியங்களை நீ எழுதாமல் இருப்பாயாக; ஏனெனில் தேவனாகிய கர்த்தர், அவைகளை எழுதும்படி, தேவ ஆட்டுக்குட்டியானவரின் அப்போஸ்தலனை நியமித்திருக்கிறார்.

26 அதற்கு முன் இருந்தவர்களுக்கும் அவர் எல்லாக் காரியங்களையும் காட்டினார், அவர்கள் அவைகளை எழுதினார்கள்; இஸ்ரவேல் வீட்டாருக்கு, கர்த்தருடைய சொந்த ஏற்ற காலத்தின்படி ஆட்டுக்குட்டியானவரில் இருக்கிற சத்தியத்தின்படியே, அவைகளின் தூய்மையிலே வரும்படியாய் அவைகள் முத்திரிக்கப்பட்டுள்ளன.

27 தூதனுடைய வார்த்தையின்படியே, அந்த ஆட்டுக்குட்டியானவரின் அப்போஸ்தலனின் பெயர் யோவான் என்பதை, நேபியாகிய நான் கேட்டு சாட்சி கொடுக்கிறேன்.

28 இதோ, நேபியாகிய நான், கண்ட மற்றும் கேட்ட மீதியான காரியங்களை எழுதுவதற்குத் தடை செய்யப்பட்டிருக்கிறேன்; ஆதலால் நான் எழுதிய காரியங்கள் எனக்குப் போதுமானவையாய் இருக்கின்றன; நான் கண்ட காரியங்களில் சிறிய பகுதியை மாத்திரமே நான் எழுதியிருக்கிறேன்.

29 என் தகப்பன் கண்ட காரியங்களை நானும் கண்டிருக்கிறேன் எனவும், கர்த்தரின் தூதன் எனக்கு அவைகளைத் தெரியப்படுத்தினான் எனவும், நான் சாட்சி கொடுக்கிறேன்.

30 நான் ஆவியிலே எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நான் கண்ட காரியங்களைக் குறித்துப் பேசுவதை முடிக்கிறேன்; மேலும் நான் கண்ட எல்லாக் காரியங்களும் எழுதப்பட்டிராவிடினும், நான் எழுதியுள்ள காரியங்கள் சத்தியமானவை. இது இப்படியாக இருக்கிறது. ஆமென்.