வேதங்கள்
1 நேபி 17


அதிகாரம் 17

நேபி ஒரு கப்பலைக் கட்ட கட்டளையிடப்படுதல் – அவனது சகோதரர்கள் அவனை எதிர்த்தல் – அவன் இஸ்ரவேலுடன் தேவனின் நடவடிக்கைகளின் வரலாற்றை விவரித்து அவர்களுக்குப் புத்திகூறுதல் – தேவனுடைய வல்லமையால் நேபி நிரப்பப்படுதல் – அவனது சகோதரர்கள் உலர்ந்த நாணலைப்போல உதிராதபடிக்கு அவனை அவர்கள் தொட தடை செய்யப்படுதல். ஏறக்குறைய கி.மு. 592–591.

1 அந்தப்படியே, நாங்கள் வனாந்தரத்தில் மறுபடியும் எங்கள் பயணத்தை மேற்கொண்டோம், அந்தச் சமயம் முதல் நாங்கள் அநேகமாக கிழக்கு நோக்கிப் பயணம் செய்தோம். நாங்கள் வனாந்தரத்தில் மிகுந்த உபத்திரவங்களினூடாக கடந்துபோனோம்; மேலும் எங்கள் ஸ்திரீகள் வனாந்தரத்தில் பிள்ளைகளைப் பெற்றார்கள்.

2 நாங்கள் வனாந்தரத்தில் பச்சை மாமிசத்தை புசித்து ஜீவித்தபொழுதும், எங்கள் ஸ்திரீகள் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலை நிறையக் கொடுத்தும், ஆண்களைப்போல பெலமுள்ளவர்களாகவும் இருக்குமளவாய்க் கர்த்தருடைய ஆசீர்வாதம் எங்கள்மேல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் தங்கள் பயணத்தை முறுமுறுப்பில்லாமல் சகிக்கத் தொடங்கினார்கள்.

3 இவ்வாறு தேவனுடைய கட்டளைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நாம் பார்க்கிறோம். மேலும் மனுபுத்திரர் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வார்களெனில், அவர் அவர்களைப் போஷித்து, பெலப்படுத்தி, தாம் அவர்களுக்குக் கட்டளையிட்ட காரியத்தை அவர்கள் நிறைவேற்றும்படியான வழியை அவர்களுக்கு அளிப்பார்; ஆகையால் நாங்கள் வனாந்தரத்தில் தங்கி வாசமாயிருந்தபொழுது அவர் எங்களுக்கு வழிவகைகளை அளித்தார்.

4 நாங்கள் அநேக வருஷகாலம், ஆம், எட்டு வருஷம் வனாந்தரத்திலே தங்கியிருந்தோம்.

5 நாங்கள் வந்தடைந்த இடத்தை, அதனின் அதிகமான கனிகள் மற்றும் காட்டுத்தேனின் நிமித்தம் நாங்கள் அதை உதாரத்துவஸ்தலம் என்று அழைத்தோம்; மேலும் நாங்கள் அழிந்துபோகாதபடிக்கு அந்தக் காரியங்கள் எல்லாம் கர்த்தரால் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தன. நாங்கள் ஒரு சமுத்திரத்தைக் கண்டு அதை இரியாந்தூம் என்று அழைத்தோம். அதற்கு திரளான தண்ணீர்கள் என்று அர்த்தமாம்.

6 அந்தப்படியே, நாங்கள் கடற்கரையோரமாகப் பாளயமிறங்கினோம்; இருப்பினும் எங்களால் எழுதமுடியாத அளவிற்கு அநேக உபத்திரவங்களையும் கஷ்டங்களையும் நாங்கள் அனுபவித்தபோதிலும், ஆம், கடற்கரையருகே வந்தபொழுது நாங்கள் மிகுதியாய் களிகூர்ந்தோம்; மேலும் அங்கிருந்த அதிகமான கனிகளின் நிமித்தம் அந்த இடத்தை உதாரத்துவஸ்தலம் என்று அழைத்தோம்.

7 அந்தப்படியே, நேபியாகிய நான் உதாரத்துவஸ்தலத்தில் அநேக நாட்களளவுமிருந்த பின்பு, கர்த்தருடைய சத்தம் எனக்குண்டாகி: எழுந்திருந்து மலைக்குப் போ என்றது. அந்தப்படியே, நான் எழுந்திருந்து மலையின்மேலே போய், கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டேன்.

8 அந்தப்படியே, கர்த்தர் என்னிடம் பேசி: நான் உன் ஜனத்தை இந்தத் தண்ணீர்களைக் கடந்து கொண்டு செல்லும்படி, நான் உனக்குக் காண்பிக்கும் விதமாக நீ ஒரு கப்பலைக் கட்டவேண்டும் என்றார்.

9 நான் அவரை நோக்கி: கர்த்தாவே, நீர் எனக்குக் காண்பித்த பிரகாரம், கப்பலைக் கட்டுவதற்கான கருவிகளை நான் செய்வதற்கு உருக்கக்கூடிய கனிமங்களைக் கண்டுபிடிக்க நான் எங்கே செல்ல வேண்டும், என்றேன்.

10 அந்தப்படியே, கருவிகளைச் செய்யும்படிக்கு, உலோகக் கனிமங்களை நான் கண்டுபிடிக்க எங்கே செல்லவேண்டுமென, கர்த்தர் எனக்குச் சொன்னார்.

11 அந்தப்படியே, நேபியாகிய நான் நெருப்பை ஊதும்படியாக, மிருகங்களின் தோல்களினால் ஒரு துருத்தியை உண்டுபண்ணினேன்; நான் துருத்தியை உண்டுபண்ணின பின்பு, ஊதுவதற்கு நெருப்பை உண்டுபண்ணும்படியாக, இரண்டு கற்களை ஒன்றாய் அடித்தேன்.

12 நாங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்யும்போது, நெருப்பை உண்டாக்கும்படி கர்த்தர் இதுவரை எங்களை விடவில்லை; ஏனெனில் அவர், நீங்கள் சமைக்கவேண்டியிராதபடி உங்கள் உணவை மதுரமாக்குவேன் என்றார்.

13 நான் வனாந்தரத்தில் உங்களுக்கு ஒளியாயிருப்பேன்; நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களெனில், நான் உங்களுக்கு முன்பாக வழியை ஆயத்தப்படுத்துவேன்; ஆகையால், என் கட்டளைகளைக் கைக்கொள்ளும் அளவில், நீங்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி நடத்திச் செல்லப்படுவீர்கள்; மேலும் என்னால் நடத்திச் செல்லப்படுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள் என்றார்.

14 ஆம், நீங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை வந்தடைந்தபின்பு, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதையும்; கர்த்தராகிய நான், அழிவிலிருந்து உங்களைத் தப்புவித்தேன், ஆம், எருசலேம் தேசத்திலிருந்து உங்களைக்கொண்டு வந்தவர் நான் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்றும் கர்த்தர் சொன்னார்.

15 ஆகையால், நேபியாகிய நான் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி முயன்றேன், மேலும் விசுவாசத்தோடும் கருத்தோடும் இருக்கும்படி என் சகோதரருக்குப் புத்தி சொன்னேன்.

16 அந்தப்படியே, கல்லிலிருந்து உருக்கிய உலோகத் தாதுவிலிருந்து நான் கருவிகளைச் செய்தேன்.

17 நான் கப்பலைக் கட்டப்போகிறேன் என்பதை என் சகோதரர் கண்டபொழுது, அவர்கள் எனக்கெதிராக முறுமுறுக்கத் தொடங்கி: எங்கள் சகோதரன் மதியீனன், ஏனெனில் தான் ஒரு கப்பலைக் கட்டலாம் என நினைக்கிறான்; ஆம், இந்தப் பெரிதான தண்ணீர்களைக் கடந்து செல்லலாம் எனவும் எண்ணுகிறான் என்றும் சொன்னார்கள்.

18 இவ்வாறாக என் சகோதரர் எனக்கெதிராக முறையிட்டு, நான் கப்பலைக் கட்டுவேன் என்பதை அவர்கள் விசுவாசியாதலால், அவர்கள் வேலை செய்யாதிருக்க விரும்பினார்கள்; நான் கர்த்தரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன் என்பதையும் அவர்கள் நம்பவில்லை.

19 இப்பொழுதும் அந்தப்படியே, நேபியாகிய நான், அவர்களுடைய இருதயக் கடினத்தினிமித்தம் மிகுதியாய் துக்கமடைந்தேன்; நான் துக்கமடையத் தொடங்கினேன் என்பதை அவர்கள் கண்டபொழுது அவர்கள் தங்கள் இருதயங்களில் மகிழ்ந்து, என் நிமித்தமாகக் களிகூர்ந்து: நீ கப்பலைக் கட்டமுடியாது என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் நீ நிதானிப்பதில் குறைவுள்ளவனாயிருக்கிறாய் என்பதை அறிவோம்; ஆகையால் இப்படிப்பட்ட பெரிதான ஒரு காரியத்தை உன்னால் சாதிக்க முடியாது என்று சொன்னார்கள்.

20 தன் இருதயத்தின் மதியீன கற்பனைகளினால் நடத்திச் செல்லப்பட்ட, நம் தகப்பனைப்போல நீ இருக்கிறாய்; ஆம், அவர் நம்மை எருசலேம் தேசத்தைவிட்டு வழிநடத்தி வந்தார்; அநேக வருஷ காலமும் நாம் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தோம்; நம் ஸ்திரீகள் நிறைகர்ப்பிணிகளாய் பாடுபட்டார்கள்; அவர்கள் வனாந்தரத்தில் பிள்ளைகளைப் பெற்று, மரணத்தைத் தவிர சகல காரியங்களிலும் துன்பம் அனுபவித்தார்கள்; அவர்கள் இந்த உபத்திரவங்களை அனுபவிப்பதைக்காட்டிலும், எருசலேமைவிட்டு வருவதற்கு முன்னமே மரித்துப்போயிருப்பார்களானால், அது அவர்களுக்கு நலமாயிருந்திருக்கும்.

21 இதோ, இந்த அநேக வருஷகாலம் நாங்கள் வனாந்தரத்தில் பாடனுபவித்தோம், இந்தக் காலத்தில் நாங்கள் எங்கள் சுதந்திர தேசத்தையும் எங்களுக்குரியவைகளையும் அனுபவித்திருப்போம்; ஆம், நாங்கள் மகிழ்ச்சியாயிருந்திருப்போம்.

22 எருசலேம் தேசத்திலே இருந்த ஜனங்கள் நீதிமான்கள் என நாங்கள் அறிவோம்; ஏனெனில் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்கள் கர்த்தருடைய பிரமாணங்களையும், தீர்மானங்களையும் அவருடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொண்டார்கள்; ஆகையால் அவர்கள் நீதியுள்ள ஜனங்கள் என்று நாங்கள் அறிவோம், நம்முடைய தகப்பன் அவர்களுக்கு நியாயம்செய்து, நாம் அவர் வார்த்தைக்குச் செவிகொடுப்போம் என்பதால், நம்மை வழி விலக்கி நடத்தி வந்தார்; ஆம், நம் சகோதரனும் அவரைப்போலவே இருக்கிறான். மேலும் இந்த விதமான வார்த்தைகளாலே என் சகோதரர்கள் முறுமுறுத்து எங்களுக்கெதிராக முறையிட்டார்கள்.

23 அந்தப்படியே, நேபியாகிய நான் அவர்களிடம் பேசி: இஸ்ரவேல் புத்திரராகிய நம் பிதாக்கள், கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடாமல் இருந்திருந்தால், அவர்கள் எகிப்தியர்களின் கைகளிலிருந்து வெளியே நடத்திவரப்பட்டிருப்பார்கள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? என்றேன்.

24 ஆம், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியே வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதை மோசேக்குக்குக் கர்த்தர் கட்டளையிடாதிருந்திருந்தால், அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்திச் செல்லப்பட்டிருப்பார்கள் என எண்ணுகிறீர்களா?

25 இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தில் இருந்தார்கள் என நீங்கள் அறிவீர்கள்; அவர்கள் செய்வதற்கு கடினமான வேலைகளால் சுமத்தப்பட்டிருந்தார்கள் எனவும் அறிவீர்கள்; ஆகையால் அவர்கள் அடிமைத்தனத்திற்கு வெளியே கொண்டுவரப்படவேண்டும் என்பது அவர்களுக்கு நன்மையான காரியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் அறிவீர்கள்.

26 இப்பொழுதும் அந்தப் பெரிதான காரியத்தைச் செய்யும்படி மோசே கர்த்தரால் கட்டளையிடப்பட்டிருந்தான் என்றும் நீங்கள் அறிவீர்கள்; அவனுடைய வார்த்தையினால் சிவந்த சமுத்திரம் இங்கேயும் அங்கேயுமாய்ப் பிரிக்கப்பட்டு அவர்கள் வெட்டாந்தரையின் வழியாகக் கடந்து போனார்கள் என்றும் நீங்கள் அறிவீர்கள்.

27 ஆனால் பார்வோனின் சேனைகளாகிய எகிப்தியர் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள் என்றும் நீங்கள் அறிவீர்கள்.

28 அவர்கள் வனாந்தரத்தில் மன்னாவினால் போஷிக்கப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

29 ஆம், மோசே தன்னுள்ளிருந்த தேவனின் வல்லமையின்படியே தன் வார்த்தையினால் கன்மலையை அடித்த பொழுது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தாகத்தைத் தணிக்கும்படி, அங்கிருந்து தண்ணீர் வந்ததையும் நீங்கள் அறிவீர்கள்.

30 அவர்களின் தேவனாகிய கர்த்தரும், மீட்பருமானவர் அவர்களுக்கு முன் சென்று, பகலிலே வழிநடத்தியும், இரவிலே ஒளியைத் தந்தும், மனுஷன் பெற்றுக்கொள்ளத் தகுதியான எல்லாக் காரியங்களையும் அவர்களுக்குச் செய்தும், வழிநடத்தப்பட்டும் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி மனங்களைக் குருடாக்கி, மோசேக்குக்கும், மெய்யான ஜீவனுள்ள தேவனுக்கும் எதிராகவும் நிந்தனை செய்தார்கள்.

31 அந்தப்படியே, தம்முடைய வார்த்தையின்படியே அவர் அவர்களைச் சங்கரித்தார்; தம்முடைய வார்த்தையின்படியே அவர் அவர்களை வழிநடத்திச் சென்றார்; தம்முடைய வார்த்தையின்படியே அவர் அவர்களுக்கு சகல காரியங்களையும் செய்தார்; அவருடைய வார்த்தையினாலேயல்லாமல் வேறு அங்கே ஒன்றும் செய்யப்படவில்லை.

32 யோர்தான் நதியைக் கடந்தபின்பு, அவர்கள் தேசத்தின் புத்திரரை வெளியே துரத்தும்படிக்கும், ஆம், அழிவுக்கேதுவாக அவர்களை சிதறடிக்கும்படிக்கும், அவர்களை வல்லமையுடையவர்கள் ஆக்கினார்.

33 இப்பொழுதும், வாக்குத்தத்தத்தின் தேசத்தில் இருந்த, நம் பிதாக்களால் துரத்தியடிக்கப்பட்ட தேசத்தின் புத்திரராகிய இவர்கள், நீதிமான்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இதோ, இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

34 அவர்கள் நீதிமான்களாயிருந்திருந்தால் நம் பிதாக்கள் அவர்களைப் பார்க்கிலும் தெரிந்துகொள்ளப்படத்தக்கவர்களாக இருந்திருப்பார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா? இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

35 இதோ, கர்த்தர் மாம்சமான யாவரையும் ஒன்றாக எண்ணுகிறார்; நீதிமான் எவனும் தேவனால் ஆதரிக்கப்படுவான். ஆனாலும் இதோ, இந்த ஜனங்கள் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் தள்ளி, அக்கிரமத்தில் பழுத்திருக்கிறார்கள்; தேவனுடைய உக்கிரத்தின் நிறைவு அவர்கள் மேலிருந்து, கர்த்தர் தேசத்தை அவர்களுக்கு எதிராக சபித்து, நம்முடைய பிதாக்களுக்கு அதை ஆசீர்வதித்தார்; ஆம், அவர்கள் அழிவிற்கேதுவாக அதைச் சபித்தார், மேலும் நம்முடைய பிதாக்கள் அதன்மேல் வல்லமை பெற்றுக்கொள்ளும்படியாக அதை ஆசீர்வதித்தார்.

36 இதோ, வாசமாயிருக்கும்படியாக பூமியைக் கர்த்தர் சிருஷ்டித்தார்; தம்முடைய பிள்ளைகள் அதைச் சொந்தமாக்கிக் கொள்ளும்படி அவர் அதைப் படைத்தார்.

37 அவர் நீதியுள்ள தேசத்தை உயர்த்துகிறார், துன்மார்க்கரின் தேசங்களை அழித்துப் போடுகிறார்.

38 அவர் நீதிமான்களை செழிப்பான தேசங்களுக்கு வழிநடத்துகிறார், ஆனால் துன்மார்க்கரையோ அவர் அழித்து, அவர்கள் நிமித்தமாக, அவர்களுடைய தேசத்தைச் சபிக்கிறார்.

39 அவர் வானங்களின் உன்னதத்தில் ஆளுகை செய்கிறார், ஏனெனில் அது அவருடைய சிங்காசனமாயிருக்கிறது, இந்தப் பூமி அவருடைய பாதபடியாயிருக்கிறது.

40 தம்மை அவர்களுடைய தேவனாகக் கொண்டவர்களை அவர் நேசிக்கிறார். இதோ, அவர் நம்முடைய பிதாக்களை நேசித்து, ஆம், ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களுடன் கூட உடன்படிக்கை செய்தார்; அவர் தாம் செய்த உடன்படிக்கைகளை நினைவுகூர்ந்தார்; ஆகையால் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்.

41 அவர் வனாந்தரத்தில் தம்முடைய கோலினால் அவர்களை நெருக்கினார்; ஏனெனில் உங்களைப்போலவே அவர்களும் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தம் கர்த்தர் அவர்களை நெருக்கினார். பறக்கும் கொள்ளிவாய் சர்ப்பங்களை அவர்கள் மத்தியில் அவர் அனுப்பினார், அவைகள் அவர்களைக் கடித்த பின்பு அவர்கள் சுகமடையும்படி வழியையும் ஆயத்தப்படுத்தினார்; நோக்கிப்பார்ப்பது மட்டுமே அவர்கள் செய்யவேண்டிய வேலையாயிருந்தது; இந்த வழியின் எளிமையினிமித்தம் அல்லது இலகுவின் நிமித்தமும் அநேகர் அங்கே அழிந்துபோனார்கள்.

42 அவர்கள் அவ்வப்போது தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, மோசேக்குக்கு எதிராகவும் தேவனுக்கு எதிராகவும் நிந்தனை செய்தார்கள்; இருந்தபோதிலும் அவருடைய இணையற்ற வல்லமையினால், வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குள்ளாக வழிநடத்திச் செல்லப்பட்டார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.

43 இப்பொழுதும், இந்தக் காரியங்களுக்குப் பின்பும், கிட்டத்தட்ட பழுக்கக்கூடிய அளவில் துன்மார்க்கர் ஆகிற நேரம் வந்திருக்கிறது; இந்த நாளிலேயும் அவர்கள் அழியவிருப்பதைத் தவிர எதையும் நான் அறியேன், ஏனெனில் சிறையிருப்புக்குள்ளாக வழிநடத்திச் செல்லப்படவிருக்கிற சிலரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் அழிக்கப்படும் நாள் நிச்சயம் வரும் என்பதை நான் அறிவேன்.

44 ஆகையால், வனாந்தரத்தினுள் புறப்பட்டுப்போகவேண்டுமென என் தகப்பனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டார்; மேலும் யூதர்கள் அவருடைய ஜீவனை வாங்கத் தேடினார்கள்; ஆம், நீங்களும் அவருடைய ஜீவனை வாங்கத் தேடினீர்கள்; ஆகையால் நீங்கள் உங்கள் இருதயங்களில் அவர்களைப்போலவே கொலைபாதகராயிருக்கிறீர்கள்.

45 நீங்கள் அக்கிரமம் செய்ய தீவிரமுள்ளவர்களாயும், தேவனாகிய உங்களுடைய கர்த்தரை நினைவுகூர தாமதமுள்ளவர்களாயும் இருக்கிறீர்கள். ஒரு தூதனை நீங்கள் கண்டிருக்கிறீர்கள், அவன் உங்களோடு பேசினான்; ஆம், அவருடைய சத்தத்தை அவ்வப்போது நீங்கள் கேட்டுமிருக்கிறீர்கள்; மேலும் அவர் அமர்ந்த, மெல்லிய சத்தத்தில் உங்களோடு பேசினார், ஆனால் நீங்கள் அவருடைய வார்த்தைகளை உணராதபடிக்கு உணர்வில்லாதவர்களானீர்கள்; ஆகையால் அவர் இடிமுழக்கத்தின் சத்தத்தைப்போல உங்களிடம் பேசினார், அது பூமி இரண்டாகப் பிளந்துபோவதைப்போல அதைக் குலுக்கிற்று.

46 அவர் தம்முடைய சர்வவல்லமையுள்ள வார்த்தையின் மூலமாக, பூமியைக் கடந்து போகும்படிச் செய்யலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள்; ஆம், அவர் தமது வார்த்தையினால் கடினமான இடங்களை மிருதுவாகவும், மிருதுவான இடங்களைப் பிளந்து போகும்படியும் செய்வாரெனவும் அறிவீர்கள். அப்படியானால், நீங்கள் ஏன் உங்கள் இருதயங்களில் இவ்வளவு கடினமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்?

47 இதோ, உங்கள் நிமித்தம் வியாகுலத்தினால் என் ஆத்துமா கிழிந்து போயிருக்கிறது, என் இருதயம் வேதனைப்பட்டிருக்கிறது; நீங்கள் என்றென்றைக்குமாய் தள்ளப்பட்டுப் போவீர்களோ என நான் அஞ்சுகிறேன். இதோ, என் சரீரம் பெலனற்றுப் போகத்தக்கதாய், நான் தேவனுடைய ஆவியினால் நிறைந்திருக்கிறேன்.

48 இப்பொழுதும் அந்தப்படியே, நான் இந்த வார்த்தைகளைப் பேசியபோது, அவர்கள் என்மேல் கோபமடைந்தவர்களாய் என்னை சமுத்திரத்தின் ஆழங்களில் எறிந்துபோட விருப்பமுடையவர்களாயிருந்தார்கள்; அவர்கள் என்மேல் தங்கள் கைகளைப்போட வந்தபொழுது நான் அவர்களை நோக்கி: சர்வ வல்லமையுள்ள தேவனின் நாமத்தினால் நீங்கள் என்னைத் தொடாதிருங்கள் என்று கட்டளையிடுகிறேன், ஏனெனில் என் மாம்சம் எரிந்து போகத்தக்கதாய் நான் தேவனுடைய வல்லமையினால் நிறைக்கப்பட்டிருக்கிறேன்; என்மேல் தன் கைகளைப்போடுகிறவன் உலர்ந்த நாணலைப்போல மடிந்து போவான்; அவன் தேவனுடைய வல்லமையின் முன்பாக ஒன்றுமில்லாமற் போவான், ஏனெனில் தேவன் அவனை அடிப்பார் என்றேன்.

49 அந்தப்படியே, நேபியாகிய நான், அவர்களை நோக்கி, அவர்கள் இனி ஒருபோதும் என் தகப்பனுக்கு எதிராக முறுமுறுக்கக்கூடாது எனவும்; நான் ஒரு கப்பலைக் கட்டவேண்டும் என்றும் தேவன் கட்டளையிட்டதினால், அவர்கள் தங்கள் உழைப்பை நிறுத்தக்கூடாது எனவும் சொன்னேன்.

50 நான் அவர்களை நோக்கி: சகல காரியங்களையும் செய்யும்படி தேவன் எனக்குக் கட்டளையிட்டிருப்பாரெனில் என்னால் அவைகளைச் செய்யக்கூடும். பூமியாகக்கடவாய் என்று இந்தத் தண்ணீரைப் பார்த்து சொல்லும்படி அவர் எனக்குக் கட்டளையிடுவாரெனில், அது பூமியாகும்; நான் அதைச் சொல்வேனெனில் அது அப்படியே செய்யப்படும் என்றேன்.

51 இப்பொழுதும் கர்த்தர் அவ்வளவு பெரிதான வல்லமையுடையவராய், மனுபுத்திரர் மத்தியில் அநேக அற்புதங்களை நடப்பித்திருப்பாரெனில், ஒரு கப்பலை நான் கட்டும்படி, அவர் எனக்கு அறிவுறுத்தக் கூடாமலிருப்பதெப்படி?

52 அந்தப்படியே, நேபியாகிய நான், அநேக காரியங்களை என் சகோதரருக்குச் சொன்னதினால், அவர்கள் தாறுமாறாக்கப்பட்டு, என்னை எதிர்த்துப் போராட முடியாமற் போனார்கள்; அநேக நாட்களளவும் அவர்கள் என்மேல் தங்கள் கைகளைப் போடவோ, விரலினால் தொடவோ இல்லை. இப்பொழுதும் தேவனுடைய ஆவி மிக வல்லமையாய் இருந்தபடியால், அவர்கள் எனக்கு முன்பாக மடிந்து போகாதபடி, பயந்து இதை அவர்கள் செய்யவில்லை. மேலும் அது இவ்விதமாய் அவர்கள்மீது வாசம்கொண்டது.

53 அந்தப்படியே, கர்த்தர் என்னை நோக்கி: மீண்டும் உன் கையை உன் சகோதரரை நோக்கி நீட்டு, அவர்கள் உன் முன்னால் மடிந்து போவதில்லை, ஆனால் அவர்களுக்கு நான் அதிர்ச்சியூட்டுவேன், நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி நான் இதைச் செய்வேன், என்றார்.

54 அந்தப்படியே, நான் என் சகோதரரை நோக்கி என் கையை நீட்டினேன், அவர்கள் என் முன்னால் மடிந்து போகவில்லை; ஆனால் கர்த்தர் தாம் பேசிய அவருடைய வார்த்தையின்படியே அவர்களைக் குலுக்கினார்.

55 இப்பொழுதும் அவர்கள்: கர்த்தர் உன்னோடிருக்கிறார் என்பதை நாங்கள் நிச்சயமாய் அறிகிறோம், ஏனெனில் எங்களைக் குலுங்கச் செய்தது, கர்த்தருடைய வல்லமை என்பதை நாங்கள் அறிவோம், என்றார்கள். மேலும் அவர்கள் என் முன் விழுந்தார்கள், என்னைத் தொழுதுகொள்ளவிருந்தார்கள், ஆனால் நான் அவர்களை அப்படிச் செய்யவிடாமல், அவர்களை நோக்கி, நான் உங்கள் சகோதரன், ஆம், உங்களுடைய இளைய சகோதரனாயிருக்கிறேன்; ஆகையால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே உங்கள் வாழ்நாட்கள் நீடித்திருப்பதற்கு, உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொண்டு, உங்கள் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவீர்களாக என்றேன்.