வேதங்கள்
1 நேபி 19


அதிகாரம் 19

நேபி கனிமங்களால் தகடுகளைச் செய்து, அவன் ஜனத்தின் வரலாற்றைப் பதிவு செய்தல் – லேகி எருசலேமை விட்டுச்சென்று அறுநூறு வருஷங்களுக்குப் பின்பு இஸ்ரவேலின் தேவன் வருவார் – நேபி அவரின் பாடுகளையும் சிலுவையிலறைதலையும்பற்றி சொல்லுதல் – பிற்காலத்தில் கர்த்தரிடத்தில் யூதர்கள் திரும்பிவரும்வரைக்கும், அவர்கள் அவமதிக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். ஏறக்குறைய கி.மு. 588–570.

1 அந்தப்படியே, கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியால், நான் என் ஜனங்களின் வரலாற்றைத் தாதுக்களால் செய்யப்பட்ட தகடுகளின்மீது பதிக்கும்படிக்கு அவைகளை நான் செய்தேன். நான் செய்த அந்த தகடுகளின்மீது என்னுடைய தகப்பனின் பதிவையும், வனாந்தரத்தில் எங்களின் பயணங்களையும் என் தகப்பனின் தீர்க்கதரிசனங்களையும் நான் பொறித்தேன்; மேலும் என்னுடைய அநேக சொந்த தீர்க்கதரிசனங்களையும் அதன்மீது பொறித்திருக்கிறேன்.

2 நான் இவைகளைச் செய்யும் சமயத்தில், நான் இந்தத் தகடுகளைச் செய்ய கர்த்தரால் கட்டளையிடப்படுவேன் என்று நான் அறியாமலிருந்தேன்; ஆகையால் என் தகப்பனின் பதிவுகளும், அவரது பிதாக்களின் வம்சவரலாறும், வனாந்தரத்தில் எங்களுடைய நடவடிக்கைகளின் பெரும் பகுதிகளும் என்னால் பேசப்பட்டுள்ள அந்த முதற் தகடுகளின்மீது பொறிக்கப்பட்டுள்ளன; ஆகையால் நான் இந்தத் தகடுகளைச் செய்யும் முன்பு சம்பவித்த காரியங்களும், மெய்யாகவே அந்த முதற்தகடுகள் மீது மிக விசேஷமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 நேபியாகிய நான், கட்டளையின் பிரகாரம் இந்தத் தகடுகளைச் செய்த பின்பு, ஊழியம் மற்றும் தீர்க்கதரிசனங்கள் ஆகியவற்றின் மிகத் தெளிவான விலையேறப்பெற்ற பாகங்கள், இந்தத் தகடுகளின்மீது எழுதப்படுதல் வேண்டுமென்ற கட்டளையையும் பெற்றேன்; மேலும் எழுதப்பட்ட இந்தக் காரியங்கள் இந்த தேசத்தை சொந்தமாக்க வேண்டிய என் ஜனங்களின் போதனைக்காகவும், கர்த்தரால் அறியப்பட்டிருந்த இதர ஞானமான நோக்கங்களுக்காகவும் பாதுகாக்கப்பட வேண்டியதாயிருந்தது.

4 ஆகையால், நேபியாகிய நான், விவரத்தைக் கொடுக்கிற அல்லது என் ஜனத்தின் அழிவுகள், பிணக்குகள் மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மிகுதியான விவரத்தைத் தருகின்ற, மற்ற தகடுகள்மீது பதிவேட்டைச் செய்துள்ளேன். நான் செய்தவைகள் இவைகளே மற்றும் நான் போன பின்பு என் ஜனங்கள் என்ன செய்யவேண்டுமென்றும், கர்த்தரிடத்திலிருந்து வேறு கட்டளைகள் வரும்வரைக்கும், இந்தத் தகடுகள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கும் அல்லது ஒரு தீர்க்கதரிசியிலிருந்து மற்றவருக்கும் அப்படியே ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் அவர்களுக்கு நான் கட்டளையிட்டேன்.

5 நான் செய்த இந்தத் தகடுகளின் விவரம் இனி கொடுக்கப்படும். இதோ, நான் பேசியவைகளின்படியே தொடர்கிறேன்; மேலும் மிகவும் பரிசுத்தமான காரியங்களை என் ஜனம் அறிந்து கொள்ளும்படி இதை நான் செய்கிறேன்.

6 இருந்தபோதிலும் பரிசுத்தமானவை என்று நான் நினைக்கிறவைகளைத் தவிர, வேறெதையும் இந்தத் தகடுகளின்மீது நான் எழுதுவதில்லை. மேலும், பழைய காலத்தினவரும் பிழைகளைச் செய்ததைப்போல, நானும் பிழைகளைச் செய்யலாம்; மற்ற மனுஷர்களைக் காரணங்காட்டி நான் என்னுடைய குற்றத்தை நீக்குவதற்காக அல்ல, ஆனால் மாம்சத்தின்பிரகாரமாய் எனக்குள்ளிருக்கும் பெலவீனத்தால் என்னையே நான் விலக்கிக் கொள்கிறேன்.

7 சரீரம், ஆத்துமா ஆகிய இரண்டும் பெருமதிப்புடையது என்று சில மனுஷரால் எண்ணப்படும் காரியங்களை, மற்றவர்கள் அற்பமாய் எண்ணி, தங்கள் பாதங்களால் அதை மிதிக்கிறார்கள். ஆம், மெய்யான இஸ்ரவேலின் தேவனைக்கூட மனுஷர் தம் பாதங்களால் மிதிக்கிறார்கள்; பாதங்களால் மிதிக்கிறார்கள் என நான் சொல்கிறேன், மற்ற வார்த்தைகளில் நான் சொன்னால், அவர்கள் அவரை அற்பமாய் எண்ணி, அவருடைய ஆலோசனைகளின் சத்தத்திற்குச் செவிகொடுப்பதில்லை.

8 இதோ, தூதனுடைய வார்த்தைகளின்படியே, என் தகப்பன் எருசலேமைவிட்டுச் சென்ற காலத்திலிருந்து, அறுநூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவர் வருகிறார்.

9 இந்த உலகம் அவர்களின் அக்கிரமத்தினிமித்தம் அவரை ஒரு அற்பமான பொருளென நியாயந்தீர்க்கும்; ஆகையால் அவரை வாரினால் அடிக்கிறார்கள், அவர் அதை பாடனுபவிக்கிறார்; அவரை அடிக்கிறார்கள், அவர் அதை பாடனுபவிக்கிறார். ஆம், அவர் மேல் அவர்கள் துப்புகிறார்கள், அவர் மனுபுத்திரர் மேலுள்ள அன்பான தயவின் நிமித்தமும், நீடிய பொறுமையினிமித்தமும், அவர் அவைகளின் பாடனுபவிக்கிறார்.

10 எகிப்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் புறம்பே வழிநடத்தப்பட்ட, வனாந்தரத்தில் அவரால் பாதுகாக்கப்பட்ட, நமது பிதாக்களின் தேவன், ஆம், சீனாக்கின் வார்த்தைகளின்படி உயர்த்தப்படவும், நெயூமின் வார்த்தைகளின்படி சிலுவையிலறையப்படவும், சமுத்திரத்தின் தீவுகளை சுதந்தரிக்கவிருப்பவர்களாகிய, அதிக விசேஷமாக இஸ்ரவேல் வீட்டாருக்கு, அவரது மரணத்தின் அடையாளமாக கொடுக்கப்படவிருக்கிற, இருளின் மூன்று நாட்கள் குறித்து பேசிய, சீனஸின் வார்த்தைகளின்படி, கல்லறையிலே அடக்கம்பண்ணப்படவிருக்கிற, ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமானவர், தூதர்களின் வார்த்தைகளின்படியே துன்மார்க்கரின் கரங்களில் தன்னை மனுஷனாக ஒப்புக்கொடுக்கிறார்.

11 இவ்வாறு தீர்க்கதரிசி பேசினான்: சிலரை அவர்களின் நீதியினிமித்தம், அவர்கள் மிகுந்த சந்தோஷத்தையும், இரட்சிப்பையும்பெற தம்முடைய சத்தத்தாலும், மற்றோரைத் தம் வல்லமையின் இடிமுழக்கத்தாலும், மின்னல்களாலும், புயலாலும், நெருப்பாலும், புகையினாலும், இருளின் மூடுபனியாலும், பூமியின் பிளப்புகளினாலும், உயர்த்தப்படவிருக்கிற மலைகளினாலும், மெய்யாகவே எல்லா இஸ்ரவேல் வீட்டாரையும் அந்த நாளிலே கர்த்தராகிய தேவன் சந்திப்பார்.

12 இந்த எல்லாக் காரியங்களும் மெய்யாகவே வருமென்று, சீனஸ் தீர்க்கதரிசி சொல்லுகிறான். மேலும் இயற்கையின் தேவன் பாடனுபவிக்கிறார் என்று ஓலமிட, பூமியிலுள்ள பாறைகள் பிளக்க வேண்டும்; மேலும் பூமியின் குமுறுதலால் சமுத்திரத்தின் தீவுகளின் அநேக ராஜாக்கள், தேவனின் ஆவியால் வசப்படுத்தப்பட வேண்டும்.

13 இஸ்ரவேலின் தேவனை சிலுவையிலறைவதாலும், தம் இருதயங்களை ஒரு பக்கமாய் ஒதுக்கினபடியாலும், இஸ்ரவேலின் தேவனின் மகிமையையும் வல்லமையையும், அற்புதங்களையும், அடையாளங்களையும், தள்ளிவிட்டதின் நிமித்தமாக எருசலேமிலுள்ளவர்கள், எல்லா ஜனங்களாலும் வாரினால் அடிக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசி கூறுகிறான்.

14 தம் இருதயங்களை ஒதுக்கினதாலும், இஸ்ரவேலின் பரிசுத்தரை நிந்தித்ததாலும், அவர்கள் மாம்சத்திலே அலைந்து, அழிந்து, எல்லா தேசத்தாராலும் இகழப்பட்டு, பரிகாசம் பண்ணப்பட்டு, எல்லா தேசத்தாருக்குள்ளும் வெறுக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான்.

15 இருந்தபோதிலும், அந்த நாள்வரும்போது, அவர்கள் தங்கள் இருதயங்களை இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு எதிராய் ஒருபோதும் விலக்கமாட்டார்கள். அதன்பின்பு அவர் அவர்களுடைய பிதாக்களுக்குச் செய்த உடன்படிக்கைகளை நினைவுகூருவாரென தீர்க்கதரிசி சொல்லுகிறான்.

16 ஆம், பின்பு அவர் சமுத்திரத்தின் தீவுகளை நினைவுகூருவார்; ஆம், தீர்க்கதரிசி சீனஸின் வார்த்தைகளின்படியே, பூமியின் நான்கு திசைகளிலிருந்தும் இஸ்ரவேல் வீட்டாரான எல்லா ஜனங்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

17 ஆம், பூமிமுழுவதும் கர்த்தரின் இரட்சிப்பைக் காணும் என்று தீர்க்கதரிசி சொல்லுகிறான்; ஒவ்வொரு தேசத்தாரும், இனத்தாரும், பாஷைக்காரரும், ஜனமும் ஆசீர்வதிக்கப்படும்.

18 நேபியாகிய நான், மீட்பராகிய, அவர்களின் கர்த்தரை, அவர்கள் நினைவுகூரும்படி, ஒருவேளை நான் உணர்த்தலாம் என்று இந்தக் காரியங்களை என் ஜனத்திற்கு எழுதியுள்ளேன்.

19 ஆகையால் இந்தக் காரியங்களை அவர்கள் பெறவேண்டுமென்பதால், நான் எல்லா இஸ்ரவேல் வீட்டாருடனும் பேசுகிறேன்.

20 ஏனெனில் இதோ, எருசலேமிலிருப்பவர்களுக்காக நான் ஆவியால் கிரியைகள் நடப்பித்ததால், என்னுடைய எல்லா மூட்டுகளும் தளர்ச்சியடையும்படிக்கு, என்னை ஆயாசப்படுத்துகிறது; பூர்வகால தீர்க்கதரிசிகளுக்கு அவர் செய்ததுபோல, அவர்களைக் குறித்து எனக்குக் காட்ட, கர்த்தர் இரக்கமுள்ளவராயில்லாதிருந்தால், நானும் அழிந்திருப்பேன்.

21 அவர்களைக் குறித்து எல்லாக் காரியங்களையும், அவர் மெய்யாகவே, பூர்வகாலத் தீர்க்கதரிசிகளுக்குக் காட்டினார்; மேலும் நம்மைக் குறித்தும் அநேகருக்கு அவர் காட்டினார்; ஆதலால் அவைகள் பித்தளைத் தகடுகளின்மீது எழுதப்பட்டிருப்பதால், நாம் அவைகளைக் குறித்து அறிவது தேவையாயிருக்கிறது.

22 இப்பொழுது, அந்தப்படியே, நேபியாகிய நான், என் சகோதரருக்கு இந்தக் காரியங்களைப் போதித்தேன்; அந்தப்படியே, பூர்வகால ஜனங்களுக்குள்ளே, மற்ற தேசங்களிலும், கர்த்தருடைய கிரியைகளைக் குறித்து, அவர்கள் அறியவேண்டுமென பித்தளைத் தகடுகள்மீது பதிக்கப்பட்ட அநேகக் காரியங்களை அவர்களுக்கு வாசித்தேன்.

23 நான் மோசேயின் புஸ்தகங்களில் எழுதியிருந்த அநேகக் காரியங்களை அவர்களுக்கு வாசித்தேன்; ஆனால் கர்த்தராகிய அவர்களின் மீட்பரில் அவர்கள் விசுவாசிக்க இன்னும் முழுமையாய் இசையச்செய்ய, தீர்க்கதரிசி ஏசாயா எழுதியவைகளை அவர்களுக்கு நான் படித்தேன்; ஏனென்றால் எங்களுடைய ஆதாயத்திற்காகவும், கற்றுக்கொள்வதற்காகவும் அவைகள் இருக்கவேண்டுமென, நான் எல்லா வசனங்களையும் எங்கள் செயல்களுக்கு ஒப்பிட்டேன்.

24 ஆகையால் நான் அவர்களை நோக்கிச் சொன்னதாவது, முறிக்கப்பட்ட கிளையாயிருக்கிறவர்களாகிய, இஸ்ரவேல் வீட்டாரின் மீதியானவர்களாகிய நீங்கள், இஸ்ரவேல் வீட்டார் எல்லாருக்கும் எழுதப்பட்ட, தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். மேலும் நீங்களும், முறிக்கப்பட்ட உங்களுடைய சகோதரரும் கூட, நம்பிக்கை பெறும்படிக்கு, அவற்றை உங்களோடு ஒப்பிடுங்கள். ஏனெனில் தீர்க்கதரிசி இவ்விதமாகவே எழுதியுள்ளான்.