வேதங்கள்
1 நேபி 2


அதிகாரம் 2

சிவந்த சமுத்திரத்தின் எல்லையோரத்திலுள்ள வனாந்தரத்தினுள், லேகி தன் குடும்பத்தினரை அழைத்துக்கொண்டுபோதல் – அவர்கள் தங்கள் சம்பத்துக்களை விட்டுவிட்டுப் போதல் – கர்த்தருக்கு லேகி பலியைச் செலுத்தி, கட்டளைகளைக் கைக்கொள்ளுமாறு தன் குமாரர்களுக்குப் போதித்தல் – தங்கள் தகப்பனுக்கு எதிராக லாமான், லெமுவேல் முறுமுறுத்தல் – நேபி கீழ்ப்படிந்து, விசுவாசத்திலே ஜெபித்தல்; கர்த்தர் அவனிடத்தில் பேசுதல், மற்றும் தன் சகோதரரை ஆளுகை செய்யும்படி அவன் தெரிந்து கொள்ளப்படுதல். ஏறக்குறைய கி.மு. 600.

1 இதோ, கர்த்தர் என் தகப்பனுடன் பேசினார், ஆம் ஒரு சொப்பனத்திலே கூட அவரிடம் சொன்னதாவது: லேகி, நீ செய்த காரியங்களினிமித்தம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருக்கிறாய்; மேலும் நீ உண்மையுள்ளவனாயிருந்து, நான் உனக்குக் கட்டளையிட்டவைகளை இந்த ஜனங்களுக்கு அறிவித்ததினிமித்தம், இதோ, அவர்கள் உன் ஜீவனை வாங்க வகைதேடுகிறார்கள்.

2 தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு வனாந்தரத்திற்குள்போகும்படி ஒரு சொப்பனத்தில்கூட, கர்த்தர் என் தகப்பனுக்குக் கட்டளையிட்டார்.

3 அவர் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதலுடையவராயிருந்தார், ஆகையால் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவர் செய்தார்.

4 அவர் வனாந்தரத்திற்குள் போனார். அவர் தன் குடும்பத்தாரையும், ஆகாரங்களையும், கூடாரங்களையும் தவிர வேறெதையும் எடுத்துக்கொள்ளாமல், தம்முடைய வீட்டையும், தம் சுதந்திர தேசத்தையும், தம் பொன்னையும், வெள்ளியையும், தம்முடைய விலையேறப்பெற்ற பொருட்களையும் விட்டுவிட்டு, வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

5 அவர் சிவந்த சமுத்திரத்தின் கரையோரமான எல்லைப்பகுதிகளுக்கு வந்தார்; அவர் சிவந்த சமுத்திரத்தின் எல்லைகளுக்கு அருகாமையிலுள்ள வனாந்தரத்தில் பயணம் செய்தார்; அவர் என் தாயாகிய சரயா, என் மூத்த சகோதரர்களாகிய லாமான், லெமுவேல், சாம் ஆகியோர் அடங்கிய தம் குடும்பத்துடன் வனாந்தரத்தில் பயணம் செய்தார்.

6 அவர் வனாந்தரத்தில் மூன்று நாள் பயணம் செய்தபின்பு, அவர் ஒரு பள்ளத்தாக்கிலே தண்ணீருள்ள நதியின் பக்கத்திலே பாளயமிறங்கினார்.

7 அவர் கற்களினால் ஒரு பலிபீடத்தைக்கட்டி, கர்த்தருக்குப் பலிசெலுத்தி, எங்களின் தேவனாகிய கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.

8 அவர் அந்த நதியின் பெயரை லாமான் என அழைத்தார், அந்த நதி சிவந்த சமுத்திரத்தினுள் பாய்ந்தது; அதனுடைய முகத்துவாரத்தின் அருகாமையின் எல்லைகளிலே அந்தப் பள்ளத்தாக்கு இருந்தது.

9 அந்த நதியின் தண்ணீர்கள் சிவந்த சமுத்திரத்தின் ஊற்றுக்கண்களில் கலப்பதை என் தகப்பன் கண்டபொழுது அவர் லாமானை நோக்கிச் சொன்னார்: நீ இந்த நதியைப்போல சகல நீதியின் ஊற்றுக்கண்ணை நோக்கி தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பாயாக.

10 அவர் லெமுவேலை நோக்கி சொன்னார்: இதோ நீ கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில், இந்தப் பள்ளத்தாக்கைப்போல உறுதியாயும், திடமாயும், அசைக்கப்பட முடியாதவனுமாயும் இருப்பாயாக!

11 இப்பொழுதும் அவர் லாமான், லெமுவேல் ஆகியோருடைய வணங்காக்கழுத்தினிமித்தம் இவைகளைச் சொன்னார்; ஏனெனில் அவர் தரிசனங்காண்கிறவராயிருந்து, அவர்கள் சுதந்தரித்த தேசத்தையும், பொன்னையும் வெள்ளியையும், விலையேறப்பெற்ற பொருட்களையும் அவர்கள் விட்டுவிட்டு, வனாந்தரத்தில் அழியும்படியாய், அவர்களை எருசலேம் தேசத்தை விட்டு வழிநடத்தி வந்தார் என அவர்கள் தம் தகப்பனுக்கு எதிராக அநேக காரியங்களில் முறுமுறுத்தார்கள். மேலும் அவருடைய இருதயத்தின் புத்தியற்ற யோசனைகளினிமித்தம் அவர் இதைச் செய்தார் என்றும் சொன்னார்கள்.

12 இவ்வாறாக மூத்தவர்களாயிருந்த லாமானும், லெமுவேலும் தங்கள் தகப்பனுக்கு எதிராக முறுமுறுத்தார்கள். மேலும் அவர்களை சிருஷ்டித்த தேவனுடைய நடவடிக்கைகளை அறியாததினிமித்தம் அவர்கள் முறுமுறுத்தார்கள்.

13 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளின்படியே மகா நகரமாகிய எருசலேம் அழிக்கப்படும் என்பதையும் அவர்கள் விசுவாசிக்கவில்லை. என் தகப்பனின் ஜீவனை வாங்க வகைதேடிய எருசலேமிலிருந்த யூதர்களைப்போலவே அவர்கள் இருந்தார்கள்.

14 லெமுவேலின் பள்ளத்தாக்கிலே, வல்லமையோடு, ஆவியால் நிரப்பப்பட்டவராய் அவர்களுடைய சரீரங்கள் அவருக்கு முன்னாக நடுங்கும் வரைக்கும் என் தகப்பன் அவர்களிடம் பேசினார். மேலும் அவர்கள் அவருக்கு எதிராகப் பேசாதபடிக்கு அவர் அவர்களை மலைக்கப்பண்ணினார்; ஆகையால் அவர்கள் அவர் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

15 என் தகப்பன் ஒரு கூடாரத்திலே வாசமாயிருந்தார்.

16 நேபியாகிய நான் மிகவும் இளையவனாய் இருந்தபோதிலும், பெரிய சரீரம் உடையவனாயிருந்தபடியாலும், தேவனுடைய இரகசியங்களை அறிந்துகொள்ள பெரும் வாஞ்சையுடையவனாயிருந்ததாலும், நான் கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட்டேன்; இதோ அவர் என்னைச் சந்தித்து, என் இருதயத்தை மிருதுவாக்கினபடியால், என் தகப்பனால் பேசப்பட்ட எல்லா வார்த்தைகளையும் நான் விசுவாசித்தேன்; ஆனபடியால் என் சகோதரர்களைப்போல நான் அவருக்கு எதிராகக் கலகஞ் செய்யவில்லை.

17 நான் சாமிடம் பேசி, கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியினால் எனக்கு வெளிப்படுத்திய காரியங்களை அவனுக்குத் தெரியப்படுத்தினேன். அவன் என்னுடைய வார்த்தைகளை விசுவாசித்தான்.

18 ஆனாலும் இதோ, லாமானும் லெமுவேலும் என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை; அவர்களுடைய இருதயக்கடினத்தினிமித்தம் துக்கமடைந்தவனாய், நான் கர்த்தரிடம் அவர்களுக்காகக் கூக்குரலிட்டேன்.

19 கர்த்தர் என்னை நோக்கி: நேபியே, உன்னுடைய விசுவாசத்தினிமித்தம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருக்கிறாய், ஏனெனில் மனத்தாழ்மையுடன், கருத்தாய் என்னைத் தேடினாய் என்றார்.

20 நீ என் கட்டளைகளைக் கைக்கொள்கிற அளவில், நீ செழிப்படைவாய். ஆம், நான் உனக்காக ஆயத்தம்பண்ணியிருக்கிற தேசமாகிய வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு நீ நடத்திச் செல்லப்படுவாய்; ஆம், அந்த தேசம் மற்ற எல்லாத் தேசங்களுக்கும் மேலாகத் தெரிந்துகொள்ளப்பட்டது.

21 உன் சகோதரர்கள் உனக்கெதிராக கலகம் செய்கிற அளவில், அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்திலிருந்து அறுப்புண்டு போவார்கள்.

22 நீ என் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அளவில், நீ உன் சகோதரர் மேல் அதிகாரியாயும், ஆசிரியனாயும் ஏற்படுத்தப்படுவாய்.

23 ஏனெனில் இதோ, அவர்கள் எனக்கெதிராகக் கலகஞ்செய்யும் நாளிலே நான் அவர்களைக் கொடிய சாபத்தால் சபிப்பேன். எனக்கெதிராய் கலகஞ் செய்தாலொழிய, உன்னுடைய சந்ததியார்மேல் அவர்களின் பலம் செல்லாது.

24 இந்த நிலைமையில் எனக்கெதிராக அவர்கள் கலகஞ்செய்வார்களெனில், நினைவுகூரும்விதமாக அவர்களுக்கு உணர்த்தும்படியாய், அவர்கள் உன் சந்ததியாருக்கு ஒரு சவுக்காயிருப்பார்கள்.