வேதங்கள்
1 நேபி 4


அதிகாரம் 4

கர்த்தரின் கட்டளையின்படி, லாபானை நேபி கொல்லுதல், மேலும் வியூகத்தினால் பித்தளைத் தகடுகளைப் பெறுதல் – வனாந்தரத்தில் லேகியின் குடும்பத்துடன் சேர சோரம் தெரிந்துகொள்ளுதல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 நான் என் சகோதரர்களுடன் பேசி, நாம் மறுபடியும் மேலே எருசலேமுக்குப் போவோம், நாம் கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவதில் உண்மையுள்ளவர்களாயிருப்போம்; ஏனெனில் இதோ, அவர் பூமி முழுவதையும் விட வல்லவர். அப்படியாயின் லாபானையும் அவனுடைய ஐம்பது பேரையும், ஆம், அல்லது அவனுடைய பதினாயிரம் பேரைக் காட்டிலும் வல்லவராய் ஏன் இருக்கமுடியாது? என்றேன்.

2 ஆகையால் நாம் மேலே போவோம்; நாம் மோசேயைப்போல் பெலமுள்ளவர்களாயிருப்போம். ஏனெனில் அவன் உண்மையாகவே சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களிடத்தில் பேசினான், அவைகள் அங்கேயும் இங்கேயுமாகப் பிரிந்தன, நம்முடைய பிதாக்கள் சிறையிருப்பிலிருந்து வெளியே, அதன் வழியாய் வெட்டாந்தரையில் வந்தார்கள், பார்வோனுடைய சேனைகள் பின்தொடர்ந்து வந்து, சிவந்த சமுத்திரத்தின் தண்ணீர்களிலே அமிழ்ந்து போனார்கள்.

3 இப்பொழுதும் இதோ, இது உண்மை என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் ஒரு தூதன் உங்களிடம் பேசியதையும் நீங்கள் அறிவீர்கள், அதனால் நீங்கள் சந்தேகப்படலாமா? நாம் மேலே போவோம்; நம்முடைய பிதாக்களைப்போலவே நம்மை விடுவிப்பதற்கும், எகிப்தியர்களைப் போலவே, லாபானை அழிப்பதற்கும் கர்த்தரால் இயலும்.

4 இப்பொழுதும், நான் இந்த வார்த்தைகளைப் பேசியபொழுது, அவர்கள் இன்னும் கடுங்கோபமுடையவர்களாய், தொடர்ந்து முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள்; இருந்தபோதிலும், எருசலேமின் மதில்களுக்கு வெளிப்புறம் வரும்வரைக்கும் அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து மேலே வந்தார்கள்.

5 அது இரவாயிருந்தது; மதில்களுக்கு வெளியே அவர்களை ஒளிந்து கொள்ளும்படிச் செய்தேன். மேலும் அவர்கள் தங்களை ஒளித்துக்கொண்ட பின்பு, நேபியாகிய நான் நகரத்தினுள் ஊர்ந்து சென்று, லாபானுடைய வீட்டை நோக்கிப்போனேன்.

6 நான் செய்யவேண்டிய காரியங்களை முன்னதாகவே அறியாதவனாய், நான் ஆவியினால் நடத்திச் செல்லப்பட்டேன்.

7 இருந்தபோதிலும் நான் போய், லாபானுடைய வீட்டின் அருகில் வந்தபொழுது, நான் ஒரு மனுஷனைக் கண்டேன், அவன் எனக்கு முன்பாக பூமியில் விழுந்து கிடந்தான், ஏனெனில் அவன் திராட்சைரசத்தைக் குடித்து வெறித்தவனாயிருந்தான்.

8 நான் அவனிடத்தில் வந்தபொழுது, அது லாபான் எனக் கண்டேன்.

9 நான் அவனுடைய பட்டயத்தைக் கண்டு, அதை உறையிலிருந்து வெளியே இழுத்தேன்; அதனுடைய பிடி பசும்பொன்னாயும், அதிலுள்ள வேலைப்பாடு மிகவும் நேர்த்தியாயும் இருந்தது, மேலும் அதன் வாய்தாரை மிகவும் விலையுயர்ந்த எஃகினால் ஆனது என்பதையும் நான் கண்டேன்.

10 லாபானைக் கொல்ல வேண்டுமென, நான் ஆவியானவரால் நெருக்கி ஏவப்பட்டேன்; ஆனாலும் மனுஷனுடைய இரத்தத்தை எந்த சமயத்திலும் நான் சிந்தியதில்லை என என் இருதயத்தில் சொல்லிக்கொண்டேன். மேலும் அவனைக் கொல்லக்கூடாதென எண்ணி, நான் பின்வாங்கினேன்.

11 ஆவியானவர், மறுபடியும் என்னை நோக்கி: இதோ, கர்த்தர் அவனை உன் கரங்களில் ஒப்புவித்திருக்கிறார் என்றார். ஆம், அவன் என் ஜீவனை எடுத்துப்போடும்படி வகை தேடினான் என்பதையும் நான் அறிவேன்; ஆம், அவன் கர்த்தருடைய கட்டளைகளுக்குச் செவிகொடுக்கவும் மாட்டான்; மேலும் அவன் எங்கள் ஆஸ்தியையும் எடுத்துக்கொண்டான்.

12 மறுபடியும் ஆவியானவர் என்னை நோக்கி: அவனைக் கொல், ஏனெனில் கர்த்தர் அவனை உன் கரங்களில் ஒப்புவித்திருக்கிறார்;

13 இதோ, அவரின் நீதியான நோக்கங்களை நிறைவேற்றும்படியாகக் கர்த்தர் துன்மார்க்கரைக் கொல்கிறார். ஒரு தேசம் அவிசுவாசத்தில் நலிந்து, அழிவதைக்காட்டிலும் ஒரு மனுஷன் அழிந்துபோவது நலமாயிருக்கும் என்றார்.

14 இப்பொழுதும், நேபியாகிய நான் இந்த வார்த்தைகளைக் கேட்டபொழுது, என் கட்டளைகளை உன் சந்ததியார் கைக்கொள்கிற அளவில், அவர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்திலே செழிப்படைவார்கள் என்று வனாந்தரத்தில் என்னுடன் பேசிய கர்த்தருடைய வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன்.

15 ஆம், நியாயப்பிரமாணம் இருந்தாலொழிய, அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியான, கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள முடியாது என்பதையும் நான் எண்ணிப்பார்த்தேன்.

16 நியாயப்பிரமாணம், பித்தளைத் தகடுகளின்மேல் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் அறிவேன்.

17 மீண்டும் அவருடைய கட்டளைகளின்படியே நான் இந்தப் பதிவேடுகளைப் பெறுதல் வேண்டும் என்ற அந்தக் காரணத்திற்காக, லாபானை கர்த்தர் என்னுடைய கரங்களில் ஒப்புவித்தார் என்பதை நான் அறிவேன்.

18 ஆகையால் நான் ஆவியானவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, லாபானை நான் தலைமயிரைப் பிடித்து, அவனுடைய சொந்தப் பட்டயத்தாலேயே, அவனது தலையை வெட்டிப்போட்டேன்.

19 அவனுடைய தலையை அவனுடைய சொந்தப் பட்டயத்தினாலே வெட்டிப்போட்ட பின்பு, நான் லாபானுடைய வஸ்திரங்களை எடுத்து என் சொந்த சரீரத்தின்மேல் போட்டுக்கொண்டேன்; ஆம், ஒவ்வொன்றையும் கூட; மேலும் அவனுடைய கவசத்தை என் அரையில் கட்டிக்கொண்டேன்.

20 நான் இதனைச் செய்தபின்பு, லாபானுடைய பொக்கிஷ அறைக்குச் சென்றேன். மேலும் அவ்வாறு நான் லாபானுடைய பொக்கிஷ அறைக்குச் சென்றபொழுது இதோ, பொக்கிஷ அறையின் திறவுகோல்களை வைத்திருந்த லாபானுடைய வேலைக்காரனை நான் கண்டேன். நான் லாபானுடைய குரலிலே, அவன் என்னுடன் பொக்கிஷ அறைக்குள் வரவேண்டுமெனக் கட்டளையிட்டேன்.

21 வஸ்திரங்களையும், என் அரையில் கட்டப்பட்டிருந்த பட்டயத்தையும் கண்டபடியால், என்னைத் தன்னுடைய எஜமானனாகிய லாபான் என அவன் எண்ணிக்கொண்டான்.

22 அவன் தன் எஜமானனாகிய லாபான், இரவில் யூதர்களின் மூப்பர் மத்தியில் இருந்ததை அறிந்தவனாய், அவர்களைக் குறித்து அவன் என்னுடனே பேசினான்.

23 லாபானைப் போலவே, நான் அவனிடம் பேசினேன்.

24 பித்தளைத் தகடுகளின் மேல் பொறிக்கப்பட்டிருப்பவைகளை, மதிலுக்கு வெளிப்புறமாய் உள்ள என் மூத்த சகோதரரிடத்திற்கு நான் கொண்டு செல்லவேண்டும் என்றும் அவனிடம் சொன்னேன்.

25 அவன் என்னைப் பின்பற்றி வரவேண்டும் எனவும் நான் அவனுக்குக் கட்டளையிட்டேன்.

26 நான் சபையின் சகோதரர்களைக் குறித்துப் பேசினேன் என்பதாலும், நான் கொன்றுபோட்ட லாபான் மெய்யாகவே நான்தான் என எண்ணிக்கொண்டபடியாலும், அவன் என்னைப் பின்பற்றி வந்தான்.

27 நான், மதிலுக்கு வெளிப்புறமாயிருந்த என் சகோதரரிடத்திற்குச் செல்லும்பொழுது, யூதர்களின் மூப்பர்களைக் குறித்து அவன் அநேகந்தரம் என்னோடு பேசினான்.

28 லாமான் என்னைக் கண்டு மிகவும் பயந்தான், லெமுவேலும், சாமும், கூட பயந்தார்கள். மேலும் அவர்கள் என் சமுகத்தைவிட்டு ஓடிப்போனார்கள்; ஏனெனில் அவர்கள் அது லாபான் எனவும், அவன் என்னைக் கொன்றுபோட்டு, அவர்கள் ஜீவனையும் வாங்கத் தேடுகிறான் எனவும் எண்ணிக்கொண்டார்கள்.

29 நான் அவர்களை அழைத்தபொழுது, அவர்கள் என் சத்தத்தைக் கேட்டார்கள்; ஆகையால் அவர்கள் என் சமுகத்திலிருந்து ஓடாமல் நின்றார்கள்.

30 என் சகோதரரை லாபானின் வேலைக்காரன் கண்டபோது, அவன் நடுங்கத்தொடங்கி, என் முன்பிருந்து ஓடி எருசலேம் பட்டணத்திற்கு திரும்பிப் போகவிருந்தான்.

31 இப்பொழுதும், நேபியாகிய நான் உருவமைப்பில் பெரிய மனுஷனாயும், கர்த்தரிடமிருந்து மிகுந்த பெலத்தைப் பெற்றிருந்தபடியால், நான் லாபானுடைய வேலைக்காரனைப் பற்றிப் பிடித்து, அவன் ஓடிப்போகாதபடி பிடித்துக்கொண்டேன்.

32 நான் அவனிடம் பேசி, அவன் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பானெனில், கர்த்தர் ஜீவிக்குமளவுக்கும், நான் ஜீவிக்குமளவுக்கும், அவன் எங்கள் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பானெனில், நாங்கள் அவன் ஜீவனைத் தப்புவிப்போம் என்றேன்.

33 அவன் பயப்படவேண்டியதில்லை என நான் அவனிடம் வாக்களித்தேன்; அவன் எங்களுடனே கீழே வனாந்தரத்தினுள் வருவானெனில் எங்களைப்போல அவனும் சுதந்திரமுள்ள மனுஷனாக இருப்பான், என்றேன்.

34 நான் அவனிடம், மெய்யாகவே கர்த்தர் இந்தக் காரியங்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்; கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளும்படி நாம் கருத்தாய் இருக்கவேண்டாமா? ஆகையால், கீழே என் தகப்பனிடம் வனாந்தரத்திற்கு வருவாயெனில், எங்களுடனே தங்க உனக்கு இடமிருக்கும் என்று சொன்னேன்.

35 நான் பேசிய வார்த்தைகளால் சோரம் தைரியமடைந்தான். அந்த வேலைக்காரனின் பெயர் சோரம் என்பதாயிருந்தது. அவன் எங்களுடன் எங்கள் தகப்பனிடத்திற்கு வனாந்தரத்திற்கு இறங்கி வருவதாக வாக்களித்தான். ஆம், அந்த சமயம் முதல் எங்களுடன் தங்கியிருப்பதாக அவன் எங்களிடத்தில் ஆணையிட்டான்

36 இப்பொழுதும் யூதர்கள், நாங்கள் வனாந்தரத்தினுள் ஓடிப்போனதைக் குறித்து அறிந்து, அவர்கள் எங்களைப் பின்தொடர்ந்து வந்து அழித்துப்போடக்கூடாது என்ற இந்தக் காரணத்திற்காகவே, அவன் எங்களுடன் தங்கியிருக்கவேண்டுமென நாங்கள் வாஞ்சித்தோம்.

37 சோரம் எங்களிடம் ஆணையிட்டபொழுது, அவனைக் குறித்த எங்களுடைய பயம் நீங்கியது.

38 நாங்கள் பித்தளைத் தகடுகளை எடுத்துக்கொண்டு லாபானுடைய வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு, வனாந்தரத்திற்குப் புறப்பட்டுச் சென்று, எங்கள் தகப்பனின் கூடாரத்திற்குப் பயணம் செய்தோம்.