வேதங்கள்
1 நேபி 5


அதிகாரம் 5

லேகிக்கு எதிராக சரயா குறை கூறுதல் – இருவரும் அவர்களின் குமாரர்களின் திரும்புதலினிமித்தம் களிகூருதல் – அவர்கள் பலிகளைச் செலுத்துதல் – மோசே மற்றும் தீர்க்கதரிசிகள் எழுதியவைகள் பித்தளைத் தகடுகளில் அடங்கியிருக்கின்றன – லேகியை யோசேப்பின் சந்ததி என தகடுகள் அடையாளம் காணுதல் – தன் சந்ததியாரையும், தகடுகளின் பாதுகாத்தலையும் குறித்து லேகி தீர்க்கதரிசனம் உரைத்தல். ஏறக்குறைய கி.மு. 600–592.

1 இதோ, நாங்கள் எங்கள் தகப்பனிடம் வனாந்தரத்திற்கு இறங்கி வந்த பின்பு, இதோ, அவர் ஆனந்தத்தால் நிரப்பப்பட்டார். என் தாயாகிய சரயாவும் மிகுதியாய் மகிழ்ச்சியடைந்தாள். ஏனெனில் அவள் எங்கள் நிமித்தம், மெய்யாகவே துக்கித்துக்கொண்டிருந்தாள்.

2 ஏனெனில் நாங்கள் வனாந்தரத்தில் அழிந்துபோனோமென அவள் எண்ணியிருந்தாள்; அவள் என் தகப்பனுக்கு எதிராக முறையிட்டு, அவரை தரிசனங்காண்கிற மனுஷன் என்று சொல்லி: இதோ, நம் சுதந்திர தேசத்திலிருந்து நீர் எங்களை நடத்திக்கொண்டு வந்தீர், என் குமாரர்களும் இல்லை, நாமும் வனாந்தரத்தில் அழிந்துபோகிறோம், என்றாள்.

3 பின்னர் இந்த விதமான வார்த்தைகளில் என் தாய், என் தகப்பனுக்கு எதிராக முறையிட்டாள்.

4 என் தகப்பன் அவளிடம் பேசிச் சொன்னதாவது: நான் தரிசனங்காணும் மனுஷன் என்பதை நான் அறிவேன்; நான் தேவனுடைய காரியங்களைத் தரிசனத்தில் காணாதிருந்தால், தேவனுடைய நன்மைகளை நான் அறியாதிருந்திருப்பேன், ஆனால் எருசலேமில் தங்கியிருந்திருப்பேன், என் சகோதரர்களோடு அழிந்துபோயிருப்பேன் என்றார்.

5 ஆனாலும் இதோ, வாக்குத்தத்தத்தின் தேசத்தை நான் அடைந்துகொண்டேன், அந்தக் காரியங்களில் நான் களிகூருகிறேன்; ஆம், லாபானுடைய கரங்களிலிருந்து என் குமாரரை கர்த்தர் விடுவித்து, வனாந்தரத்தில் நம்மிடம் மறுபடியும் கொண்டுவருவார் என நான் அறிவேன்.

6 நாங்கள் யூதருடைய பதிவேடுகளைப் பெறும்படி, வனாந்தரத்தில் எருசலேம் தேசத்தை நோக்கி மேலே பயணம் செய்தபொழுது, இந்த விதமான வார்த்தைகளில் என் தகப்பனாகிய லேகி, என் தாயாகிய சரயாவைத் தேற்றினார்.

7 நாங்கள் எங்கள் தகப்பனின் கூடாரத்திற்குத் திரும்பியபொழுது, அவர்கள் சந்தோஷம் நிறைவாயிருந்தது, என் தாய் ஆறுதலடைந்தாள்.

8 அவள் சொன்னதாவது: கர்த்தர் என் புருஷனை, வனாந்தரத்திற்கு ஓடிப்போகக் கட்டளையிட்டார் என்பதை நான் இப்பொழுது திட்டமாய் அறிவேன்; ஆம், கர்த்தர் என் குமாரர்களைப் பாதுகாத்து, லாபானுடைய கரங்களிலிருந்து விடுவித்து, கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிட்ட காரியத்தைச் செய்துமுடிக்கும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார் என்பதையும் நான் திட்டமாய் அறிவேன். இந்த விதமான வார்த்தைகளில் அவள் பேசினாள்.

9 அவர்கள் மிகுதியாக களிகூர்ந்து பலிகளையும் தகனபலிகளையும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

10 இஸ்ரவேலின் தேவனுக்கு அவர்கள் நன்றி செலுத்திய பின்பு, என் தகப்பனாகிய லேகி, பித்தளைத் தகடுகளின்மேல் பொறிக்கப்பட்டிருந்த பதிவேடுகளை எடுத்து, அவைகளைத் தொடக்கத்திலிருந்து ஆராய்ந்து பார்த்தார்.

11 அவைகள் உலகத்தின் சிருஷ்டிப்பையும், நம் முதல் பெற்றோராகிய ஆதாம், ஏவாளைப்பற்றிய விவரங்களையும் கொண்ட, மோசேயின் ஐந்து புஸ்தகங்களை உடையனவாயிருந்ததை அவர் கண்டார்.

12 ஆதிமுதலான யூதர்களின் பதிவேடுகளையும் யூதேயாவின் ராஜாவாகிய சிதேக்கியாவின் ஆளுகையின் தொடக்கம்வரை உள்ளவற்றையும்;

13 ஆதிமுதலிருந்து, சிதேக்கியாவின் ஆளுகையின் தொடக்கம்வரை உள்ள பரிசுத்த தீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களையும், எரேமியாவின் வாயினால் உரைக்கப்பட்ட அநேக தீர்க்கதரிசனங்களையும் அவர் கண்டார்.

14 என் தகப்பனாகிய லேகி, பித்தளைத் தகடுகளின்மேல் அவருடைய பிதாக்களின் வம்சவரலாற்றையும் கண்டார்; ஆம், எகிப்தியருக்கு விற்கப்பட்டு, தம்முடைய தகப்பனாகிய யாக்கோபுவையும், அவருடைய குடும்பத்தார் அனைவரையும் பஞ்சத்தால் அழிந்துபோகாமல் காக்கும்படியாக, கர்த்தருடைய கரத்தால் பாதுகாக்கப்பட்ட, யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பின் சந்ததி, தான் என்பதையும் அவர் கண்டுகொண்டார்.

15 அவர்களைப் பாதுகாத்த அதே தேவனால், அவர்கள் சிறையிருப்பிலிருந்தும், எகிப்து தேசத்திலிருந்தும் வழிநடத்திச் செல்லப்பட்டார்கள்.

16 இப்படியாக என் தகப்பனாகிய லேகி, தம்முடைய பிதாக்களின் வம்சவரலாற்றை அறிந்தார். மேலும் லாபானும் யோசேப்பின் சந்ததியாயிருந்தான். ஆகையால் அவனும் அவன் பிதாக்களும் பதிவேடுகளை வைத்திருந்தார்கள்.

17 மேலும் இப்பொழுது இந்தக் காரியங்களை எல்லாம் என் தகப்பன் பார்த்தபொழுது, ஆவியினால் நிரப்பப்பட்டவராய் தன் சந்ததியைக் குறித்தும்,

18 இந்த பித்தளைத் தகடுகள், தம்முடைய சந்ததியாராகிய, சகல தேசத்தாருக்கும், இனத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனங்களுக்கும் செல்லவேண்டும் எனவும், தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினார்.

19 ஆகையால், இந்தப் பித்தளைத் தகடுகள் ஒருபோதும் அழியக்கூடாது என்றார்; காலத்தால் இனிமேல் அவைகள் மங்கிப்போகவும் கூடாது. மேலும் அவர் தம்முடைய சந்ததியைக் குறித்து அநேக காரியங்களை தீர்க்கதரிசனமாக உரைத்தார்.

20 இதுவரைக்கும் நானும் என் தகப்பனும் கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்ட கட்டளைகளைக் கைக்கொண்டுவந்தோம்.

21 கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்ட பதிவேடுகளை நாங்கள் பெற்று, அவைகளை ஆராய்ந்து, அவைகள் விரும்பப்படத்தக்கவையாய் இருப்பதைக் கண்டோம்; ஆம் கர்த்தருடைய கட்டளைகளை எங்கள் பிள்ளைகளுக்குப் பாதுகாத்து வைக்கும்படி எங்களுக்கு அவைகள் அவ்வளவு பெருமதிப்பு உடையனவாய் இருந்தன.

22 ஆகையால் வாக்குத்தத்தத்தின் தேசத்தை நோக்கி வனாந்தரத்தில் நாங்கள் பயணம் செய்யும்போது, அவைகளை எங்களுடன் எடுத்துச் செல்வது கர்த்தரின் ஞானமாயிருந்தது.