வேதங்கள்
யாக்கோபு 1


நேபியின் சகோதரனான,
யாக்கோபுவின் புஸ்தகம்

தன் சகோதரர்களுக்கு அவன் பிரசங்கித்த வார்த்தைகள். அவன் கிறிஸ்துவின் உபதேசத்தை சீரழிக்க வகை தேடின மனுஷனை தாறுமாறாக்குதல். நேபியின் ஜனங்களுடைய வரலாற்றைக் குறித்து சில வார்த்தைகள்.

அதிகாரம் 1

கிறிஸ்துவிலே விசுவாசிக்கவும், அவரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும், மனுஷரை இசையச்செய்யும்படி யாக்கோபுவும், யோசேப்பும் நாடுதல் – நேபி மரித்தல் – நேபியர்கள் மத்தியில் துன்மார்க்கம் மேற்கொள்ளுதல். ஏறக்குறைய கி.மு. 544–421.

1 இதோ, அந்தப்படியே, எருசலேமைவிட்டு லேகி வந்த காலத்திலிருந்து ஐம்பத்தைந்து வருஷங்கள் கழிந்தாகிவிட்டது. ஆகையால், இந்தக் காரியங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்ற சிறிய தகடுகளைக் குறித்த ஒரு கட்டளையை, யாக்கோபாகிய எனக்கு நேபி கொடுத்தான்.

2 மிகவும் விலைமதிப்பற்றவை என நான் கருதிய காரியங்களில் சிலவற்றை இந்தத் தகடுகளின்மீது நான் எழுதவேண்டுமென்றும், நேபியின் ஜனமென்று அழைக்கப்படுகிற இந்த ஜனத்தைப்பற்றிய வரலாற்றை அதிகமாக எழுதக்கூடாது என்றும், ஒரு கட்டளையை அவன் யாக்கோபாகிய எனக்குக் கொடுத்தான்.

3 ஏனெனில் தன் ஜனத்தின் வரலாறு தன்னுடைய மற்ற தகடுகளின்மீது பொறிக்கப்படவேண்டுமென்றும், நான் இந்தத் தகடுகளைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறைதோறும் என் சந்ததிக்கு அவைகளை ஒப்படைக்கவேண்டுமென்றும் சொன்னான்.

4 பரிசுத்தமான பிரசங்கங்களோ, சிறப்பான வெளிப்படுத்தல்களோ, தீர்க்கதரிசனங்களோ இருந்ததேயானால், நான் இந்தத் தகடுகளின்மீது அவைகளின் முக்கியமானவைகளை பதிக்கவும், கிறிஸ்துவுக்காகவும், என் ஜனத்துக்காகவும், அவைகளை இயன்ற அளவில் எழுதவும் வேண்டும், என்றும் சொன்னான்.

5 விசுவாசத்தினாலும் மிகுந்த ஆவலின் நிமித்தமும், எங்கள் ஜனங்களைக் குறித்து, அவர்களுக்குள்ளே என்னென்ன காரியங்கள் சம்பவிக்குமென்று, எங்களுக்கு மெய்யாகவே வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

6 அநேக வெளிப்படுத்தல்களையும், அதிக தீர்க்கதரிசனத்தின் ஆவியையும் நாங்கள் பெற்றிருந்தோம். ஆகவே கிறிஸ்துவைப்பற்றியும், வரப்போகிற அவருடைய ராஜ்யத்தைப்பற்றியும் நாங்கள் அறிந்திருந்தோம்.

7 ஆகையால் கிறிஸ்துவண்டையில் வந்து, தேவனுடைய நன்மையைப் புசிக்கத்தக்கதாக எங்கள் ஜனங்களை இணங்கச் செய்யவும், அவர்கள் அவருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிக்கவும், சோதனை நாட்களில் வனாந்தரத்தில் இஸ்ரவேலின் பிள்ளைகள் இருந்தபோது, கோபமூட்டினதுபோல, இவர்களையும், பிரவேசிக்கக் கூடாது என்று எந்த வகையிலும் தம் உக்கிரத்திலே அவர் ஆணையிடாதபடிக்கு, அவர்கள் மத்தியில் கருத்தாய் பிரயாசப்பட்டோம்.

8 ஆகையால், தேவனுக்கு எதிராய்க் கலகம் செய்யாமல், அவரை கோபமூட்டாமல், ஆனால், கிறிஸ்துவிலே விசுவாசித்து, அவரின் மரணத்தை எண்ணி, அவரின் சிலுவையின் பாடனுபவித்து, உலகத்தினுடைய தூஷிப்பைச் சகித்திருக்கவேண்டுமென்று, எல்லா மனுஷரையும் நாங்கள் இணங்கச்செய்ய இயலும்பொருட்டு தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆகையால், யாக்கோபாகிய நான், என் சகோதரனாகிய நேபியின் கட்டளையை நிறைவேற்ற அதை என்மீது எடுத்துக்கொள்கிறேன்.

9 நேபி பூரண வயதடைந்து, தான் சீக்கிரம் மரிக்க நேரிடுமெனக் கண்டான். ஆகையால் அவன் ராஜாக்களின் ஆளுகைகளின்படியே, இப்பொழுது தன் ஜனத்தின்மீது ஒரு மனுஷனை, ராஜாவாகவும் அதிகாரியாகவும், அபிஷேகம் பண்ணினான்.

10 நேபி ஜனங்களுக்குச் சிறந்த காவலனாய் இருந்தபடியாலும், அவர்களின் பாதுகாப்பிற்காக, லாபானின் பட்டயத்தை சுழற்றியதாலும், அவர்களின் நலனுக்காக தன் எல்லா நாட்களிலும் உழைத்ததாலும், அவர்கள் அவனை மிகவும் நேசித்தார்கள்.

11 ஆதலால், அவன் பெயரை நினைவுகூர்தலுக்காக வைத்துக்கொள்ள ஜனங்கள் வாஞ்சையுள்ளவர்களாயிருந்தார்கள். ராஜாக்களின் ஆளுகையின்படி, அவன் ஸ்தானத்திலே ஆளுகை செய்கிற எவரும் ஜனங்களால் இரண்டாம் நேபி, மூன்றாம் நேபி என்றபடி அழைக்கப்பட்டார்கள். அவர்களின் பெயர் என்னவாயிருந்தாலும், அவ்வாறே ஜனங்களால் அழைக்கப்பட்டார்கள்.

12 அந்தப்படியே, நேபி மரித்தான்.

13 இப்பொழுது லாமானியர் அல்லாத ஜனங்கள் நேபியர்களாயிருந்தார்கள். ஆயினும் அவர்கள் நேபியர்கள், யாக்கோபினர், யோசேப்பினர், சோரமியர், லாமானியர், லெமுவேலர் மற்றும் இஸ்மவேலர் என்றழைக்கப்பட்டனர்.

14 ஆனாலும் யாக்கோபாகிய நான், இனிமேல் அவர்களை இந்த நாமங்களினாலே வேறுபடுத்தாமல், நேபியின் ஜனத்தை அழிக்க வகை தேடுகிறவர்களை லாமானியர்கள் என்றும், நேபியினிடத்தில் நட்பாயிருப்பவர்களை, நேபியர்கள் அல்லது நேபியின் ஜனம் என்றும், நான் ராஜாக்களின் ஆளுகைக்குத்தக்கதாக அழைப்பேன்.

15 இப்பொழுதும், அந்தப்படியே, நேபியின் ஜனங்கள், இரண்டாம் ராஜாவின் ஆளுகையின்கீழ், தங்கள் இருதயங்களைக் கடினமாக்கத் தொடங்கி, பழங்காலத்து தாவீதைப்போலவும், அவன் குமாரனாகிய சாலொமோனைப்போலவும், அநேக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் விரும்பி, துன்மார்க்கமான பழக்கங்களிலே சற்றே தங்களை உட்படுத்தினார்கள்.

16 ஆம், அவர்கள் அதிக பொன்னையும், வெள்ளியையும், தேட ஆரம்பித்து, பெருமையினாலும் தங்களை சற்றே உயர்த்தத் தொடங்கினார்கள்.

17 ஆகவே, யாக்கோபாகிய நான், தேவனிடத்திலிருந்து என்னுடைய அழைப்பை முதலில் பெற்றபின்பு, அவர்களுக்கு ஆலயத்தில் போதித்தபோது, இந்த வார்த்தைகளை அவர்களுக்கு அறிவித்தேன்.

18 ஏனெனில், யாக்கோபாகிய நானும், யோசேப்பாகிய என் சகோதரனும், நேபியின் கரத்தால், இந்த ஜனத்தின் ஆசிரியர்களாயும், ஆசாரியர்களாயும் பிரதிஷ்டை பண்ணப்பட்டோம்.

19 சகல கருத்தோடும், தேவனுடைய வார்த்தையை ஜனங்களுக்குப் போதிக்கவில்லையெனில், ஜனங்களின் பாவங்களை எங்களின் சொந்த சிரசுகளின்மீது சுமப்பவர்களாகவும், நாங்களே பொறுப்பாளிகளாயிருந்து, தேவனிடத்தில் எங்கள் பணியை நிறைவேற்றினோம். ஆதலால் சகல ஊக்கத்தோடு, ஊழியம் செய்வதினிமித்தம் அவர்களின் இரத்தம் எங்கள் வஸ்திரம் மீது படியாது, இல்லையேல் எங்களது வஸ்திரங்கள் மீது அவர்களது இரத்தம் இருக்கும், நாங்கள் கடைசி நாளிலே கறையற்றவர்களாகக் காணப்படமாட்டோம்.