வேதங்கள்
மோசியா 15


அதிகாரம் 15

கிறிஸ்து எப்படி பிதாவும், குமாரனுமாயிருக்கிறார் – அவர் தமது ஜனத்திற்காக பரிந்துபேசி, அவர்களின் மீறுதல்களைச் சுமப்பார். அவர்களும் மற்றும் எல்லா பரிசுத்த தீர்க்கதரிசிகளும் அவருடைய சந்ததியினராய் இருக்கிறார்கள். அவர் உயிர்த்தெழுதலைச் சம்பவிக்கப்பண்ணுவார் – சிறுபிள்ளைகள் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். ஏறக்குறைய கி.மு. 148.

1 இப்பொழுதும், அபிநாதி அவர்களை நோக்கி: தேவன் தாமே மனுபுத்திரர் மத்தியிலே வந்து, தம் ஜனத்தை மீட்பார் என்று, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன் என்றான்.

2 பிதாவினுடைய சித்தத்திற்கேற்ப மாம்சத்திலே கீழ்ப்படிந்தவராய் இருப்பதாலும், அவரே பிதாவாகவும் குமாரனுமாய் இருப்பதாலும், அவர் மாம்சத்திலே வாசமாயிருக்கிறபடியாலும், தேவகுமாரன் என்று அழைக்கப்படுவார்.

3 தேவனுடைய வல்லமையால் அவர் ஜெனிப்பிக்கப்பட்டதினிமித்தம் பிதாவெனவும், மாம்சத்தின் நிமித்தம் குமாரனெனவும், இப்படியாக பிதாவும், குமாரனுமாயிருக்கிறார்.

4 வானம் பூமியின் நித்திய பிதாவாகிய ஒரே தேவனாய் அவர்கள் இருக்கிறார்கள்.

5 ஆகவே இவ்விதமாய் மாம்சமானது ஆவிக்கு கீழ்ப்பட்டதாய், அல்லது குமாரனானவர் பிதாவிற்கு கீழ்ப்பட்டவராய், ஒரே தேவனாயிருந்து, சோதனையைச் சகித்து, ஆனாலும் சோதனையிலே விழாமல் தாம் நிந்திக்கப்படவும், அடிக்கப்படவும், வெளியே தள்ளப்படவும், தம் சொந்த ஜனத்தாராலே ஒதுக்கப்படவும், தம்மை ஒப்புக்கொடுக்கிறார்.

6 இவை அனைத்திற்கும் பின்பு, மனுபுத்திரருக்குள்ளே அநேக வல்லமையான அற்புதங்களைச் செய்த பின்பும், அவர் கொண்டுபோகப்படுவார். ஆம், ஏசாயா சொன்னதுபோல மயிர்க்கத்திரிக்கிறவன் முன்பு சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல, தம் வாயைத் திறவாமலிருந்தார்.

7 ஆம், அவர் இவ்விதமாய் வழிநடத்தப்பட்டு, சிலுவையிலறையப்பட்டு, கொல்லப்பட்டு, மரணத்திற்கு மாம்சம் கீழ்ப்படுவதுபோல, குமாரனுடைய சித்தம் பிதாவினுடைய சித்தத்தினால் விழுங்கப்பட்டிருக்கிறது.

8 இப்படியாக தேவன் மரணத்தின் மீது ஜெயம் கொண்டவராய் மரணக்கட்டுக்களை அறுத்துப்போடுகிறார்; மனுபுத்திரருக்காக பரிந்துபேச குமாரனுக்கு வல்லமையைக் கொடுக்கிறார்.

9 இரக்க உள்ளம் பெற்றவராய் பரலோகத்தினுள் ஏறிச்சென்று, மனுபுத்திரரின் மீது மனதுருக்கம் நிறைந்தவராய், அவர்களுக்கும் நியாயத்திற்கும் நடுவே நின்று, மரணத்தின் கட்டுக்களை அறுத்து, அவர்களின் அக்கிரமத்தையும், மீறுதல்களையும் தம்மீது எடுத்துக்கொண்டு, அவர்களை மீட்டு, நியாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுகிறார்.

10 இப்பொழுதும் அவருடைய தலைமுறையை அறிவிப்பவன் யார், என்று உங்களைக் கேட்கிறேன். இதோ, தம் ஆத்துமா பாவத்திற்கென்று காணிக்கையாக்கப்பட்டிருக்கும்போது, அவர் தம் சந்ததியைக் காண்பார், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுது நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள், அவருடைய சந்ததியாக யார் இருப்பார்கள்?

11 இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கர்த்தருடைய வருகையைக்குறித்து தீர்க்கதரிசனமுரைத்த சகல பரிசுத்த தீர்க்கதரிசிகளாகிய, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்டு, அவர்களின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, தம்முடைய ஜனத்தைக் கர்த்தர் மீட்டுக்கொள்வார் என்று விசுவாசித்து, தங்களின் பாவங்களின் மன்னிப்புக்காக அந்த நாளை எதிர்நோக்கியிருக்கிற அனைவரும் அவருடைய சந்ததியாயும், அல்லது தேவனுடைய ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளுமாயிருக்கிறார்கள், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

12 இவர்களின் பாவங்களையே அவர் சுமந்தார். இவர்களுடைய மீறுதல்களிலிருந்து மீட்பதற்காகவே அவர் மரித்தார். இப்பொழுதும், இவர்களே அவருடைய சந்ததியல்லவா?

13 ஆம், தீர்க்கதரிசனமுரைக்க நாவைத் திறந்த ஒவ்வொருவரும், மீறுதலினுள் விழாதவர்களுமான தீர்க்கதரிசிகள், அதாவது உலகம் துவங்கினது முதலிருந்த பரிசுத்த தீர்க்கதரிசிகள் யாவரும் அவருடைய சந்ததியே, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

14 இவர்களே சமாதானத்தைப் பிரஸ்தாபமாக்கி, நன்மையான நற்செய்தியைக்கொண்டு வந்து, இரட்சிப்பை அறிவித்து சீயோனை நோக்கி: உனது தேவன் ராஜரீகம்பண்ணுகிறார், என்றவர்கள்.

15 பர்வதங்களின் மீது அவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன!

16 மறுபடியும் சமாதானத்தை இன்னும் பிரஸ்தாபமாக்குகிறவர்கள் பாதங்கள் பர்வதங்களின் மேலே எவ்வளவு அழகாயிருக்கின்றன!

17 இச்சமயம் முதற்கொண்டு இனி என்றென்றும் சமாதானத்தை பிரஸ்தாபமாக்குகிறவர்களின் பாதங்கள், பர்வதங்களின் மீது எவ்வளவு அழகாயிருக்கின்றன!

18 இதோ, இது மாத்திரமல்ல என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நற்செய்தியை அறிவிக்கிறவரும், சமாதானத்தின் காரணரும், தமது ஜனத்தை மீட்டுக்கொண்டவரும், ஆம், தம் ஜனத்திற்கு இரட்சிப்பை வழங்கியவருமான, கர்த்தருடைய பாதங்கள் பர்வதங்களின் மீது எவ்வளவு அழகாயிருக்கின்றன, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

19 தம் ஜனத்திற்காக அவர் செய்ததும், உலகம் அஸ்திபாரமிடப்பட்டதிலிருந்து ஆயத்தம் பண்ணப்பட்டதுமான மீட்பு இல்லாமலிருந்திருந்தால், மனுக்குலம் அனைத்தும் கெட்டுப்போயிருக்குமே.

20 ஆனால் இதோ, மரணக்கட்டுக்கள் அறுக்கப்படும். குமாரன் ராஜரீகம்பண்ணுகிறார், மரணத்தின் மீது வல்லமை பெற்றிருக்கிறார், மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுகிறார்.

21 அப்போது முதலாம் உயிர்த்தெழுதலாகிய உயிர்த்தெழுதல் வருகிறது, ஆம், இருந்தவர்கள், இருப்பவர்கள், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்வரை, இருக்கப்போகிறவர்களின் உயிர்த்தெழுதல் வருகிறது, ஏனெனில் அவர் அப்படியே அழைக்கப்படுவார்.

22 இப்பொழுதும் முதலாம் உயிர்த்தெழுதலில் சகல தீர்க்கதரிசிகளும், அவருடைய வார்த்தைகளில் விசுவாசித்தவர்களும், அல்லது தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்ட சகலமானோரும் உயிர்த்தெழுவார்கள். ஆதலால் அவர்களே முதலாம் உயிர்த்தெழுதல் ஆவார்கள்.

23 தங்களை மீட்டுக் கொண்ட தேவனோடு கூட வாசம் செய்ய அவர்கள் எழுப்பப்படுகிறார்கள். ஆகவே மரணக்கட்டுக்களை அறுத்த கிறிஸ்துவினாலே நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

24 இவர்களே முதலாம் உயிர்த்தெழுதலிலே பங்காளிகளாய் இருக்கிறார்கள். இவர்களே கிறிஸ்து வருவதற்கு முன்பு, தங்களுக்கு இரட்சிப்பு அறிவிக்கப்படாமல், தங்களின் அறியாமையிலேயே மரித்தவர்கள். இந்தப்படியே கர்த்தர் இவர்களை மீண்டும் கொண்டு வருவார்; அவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்காளிகளாயிருக்கிறார்கள், அல்லது கர்த்தரால் மீட்கப்பட்டு, நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

25 சிறுபிள்ளைகளும் நித்திய ஜீவனைப் பெறுகிறார்கள்.

26 ஆனால் இதோ, தேவனுக்கு முன்பாக நடுக்கங்கொள்வது அவசியமாதலால், பயத்துடனே நடுக்கங்கொள்ளுங்கள். ஏனெனில் தமக்கு விரோதமாய் கலகம்செய்து, தங்களின் பாவங்களிலே மரிக்கிறவர்களில் ஒருவரையும் கர்த்தர் மீட்பதில்லை. ஆம், உலகத் தொடக்க முதல், தேவனுடைய கட்டளைகளை அறிந்திருந்தும், அவைகளைக் கைக்கொள்ளாமல், தேவனுக்கு விரோதமாய் அறிந்தே கலகம் செய்து, பாவங்களினால் கெட்டுப்போன அனைவரையும் அவர் மீட்டுக்கொள்வதில்லை. இவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு இல்லாதவர்கள்.

27 ஆதலால் நீங்கள் நடுக்கங்கொள்ளாமலிருக்கலாகுமோ? அப்படிப்பட்டவர்களை கர்த்தர் மீட்காததினிமித்தம், அவர்களுக்கு இரட்சிப்பு வருவதில்லை. ஆம் அப்படிப்பட்டவர்களைக் கர்த்தர் மீட்கவும் இயலாது; ஏனெனில் நியாயம் உரிமை பாராட்டும்போது அதை அவர் மறுதலிக்க முடியாதென்பதால், கர்த்தர் தம்மையே மறுதலியார்.

28 ஒவ்வொரு தேசத்திற்கும், இனத்திற்கும், பாஷைக்காரருக்கும், ஜனத்திற்கும், கர்த்தருடைய இரட்சிப்பை அறிவிக்க வேண்டிய காலம் வருமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

29 ஆம், கர்த்தாவே உமது காவற்காரர்கள் தங்கள் சத்தத்தை உயர்த்தி ஏகமாய்ப் பாடுவார்கள்; ஏனெனில் கர்த்தர் சீயோனை மறுபடியுமாய் ஸ்தாபிக்கும் போது அதை அவர்கள் கண்ணாரக் காண்பார்கள்.

30 கர்த்தர் தன் ஜனத்தை தேற்றி, எருசலேமை மீட்டுக்கொண்டதாலே, எருசலேமின் பாழான இடங்களே, சந்தோஷத்தால் பூரித்தெழுந்து, ஏகமாய்ப் பாடுங்கள்.

31 கர்த்தர் தம் புயத்தை சகல தேசங்களின் கண்களுக்கு முன்பாக வெளிப்படுத்தியுள்ளார். பூமியின் சகல கடையாந்திரங்களும் தேவனுடைய இரட்சிப்பைக் காணும்.