வேதங்கள்
மோசியா 27


அதிகாரம் 27

மோசியா துன்புறுத்தலைத் தடைசெய்து, சமத்துவத்தைக் கட்டளையிடுதல் – ஆல்மா இளையவனும், மோசியாவின் நான்கு குமாரர்களும் சபையை அழிக்க வகை தேடுதல் – ஒரு தூதன் தோன்றி அவர்கள் தங்களுடைய துன்மார்க்க வழியிலிருந்து வெளியேறும்படி கட்டளையிடுதல் – ஆல்மா ஊமையாக்கப்படுதல் – மனுக்குலம் யாவும் இரட்சிப்பைப் பெற மறுபடியும் ஜெனிக்கவேண்டும் – ஆல்மாவும், மோசியாவின் குமாரர்களும் நற்செய்தியை அறிவித்தல். ஏறக்குறைய கி.மு. 100–92.

1 இப்பொழுதும், அந்தப்படியே, அவிசுவாசிகளினால், சபையின்மீது இழைக்கப்பட்ட துன்புறுத்துதல்கள் மிகவும் அதிகமானபடியாலே, சபையார் முணுமுணுத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவர்களுடைய தலைவர்களிடத்திலே முறையிடத் துவங்கினார்கள்; அவர்கள் ஆல்மாவினிடத்தில் முறையிட்டார்கள். ஆல்மா அவர்களுடைய ராஜாவாகிய மோசியாவின் முன்பு வழக்கை வைத்தான். மோசியா தன் ஆசாரியர்களுடன் ஆலோசித்தான்.

2 அந்தப்படியே, எந்த ஒரு அவிசுவாசியும், தேவனுடைய, சபையைச் சார்ந்த எவரொருவரையும் துன்புறுத்தக்கூடாதென்று, மோசியா ராஜா தேசமுழுவதிலும் அறிக்கையை அனுப்பினான்.

3 அவர்களுக்குள்ளே எல்லா சபைகளிலும் எந்த துன்புறுத்தலுமில்லாமல், எல்லா மனுஷருக்குள்ளும் சமத்துவம் இருக்கவேண்டுமெனவும் ஒரு கடுமையான கட்டளையிருந்தது.

4 கர்வமோ, மேட்டிமையோ, அவர்களுடைய சமாதானத்தை சீர்குலைக்க விடாதபடிக்கும், ஒவ்வொரு மனுஷனும் தன்னைப்போல தன் அயலானையும் மதித்து, தங்களை தாங்குவதற்கு சொந்த கைகளினாலே உழைக்கும்படிக்கும்,

5 ஆம், அவர்களுடைய எல்லா ஆசாரியர்களும், ஆசிரியர்களும், வியாதியாயும், அல்லது திக்கற்றவராயும் இருக்கும் சமயங்களைத் தவிர எல்லா நேரங்களிலும் தங்களின் சொந்த கைகளினாலே தங்கள் நலனுக்காக பிரயாசப்பட வேண்டும்; அவர்கள் இந்தக் காரியங்களைச் செய்து, தேவனின் கிருபையை அதிகமாய்ப் பெற்றார்கள்.

6 தேசத்திலே மறுபடியும் அதிக சமாதானம் நிலவியது; ஜனங்கள் பலுகிப்பெருகி, வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் பரந்த நகரங்களையும், கிராமங்களையும் தேசத்தின் எல்லா திசைகளிலும் எழுப்பி, பூமியின் பரப்பின் மீதெங்கும் பரவினார்கள்.

7 கர்த்தர் அவர்களை விசாரித்து, விருத்தியடையப் பண்ணினார். அவர்கள் பலுகிப்பெருகி செல்வந்தர்களானார்கள்.

8 இப்பொழுது மோசியாவின் குமாரர்கள் அவிசுவாசிகளுக்குள்ளே எண்ணப்பட்டார்கள்; ஆல்மாவின் குமாரர்களுள் ஒருவனும், தன் தகப்பனுடைய நாமத்தின்படியே அழைக்கப்பட்டவனுமாகிய ஆல்மா என்பவனும் அவர்களுக்குள் எண்ணப்பட்டான்; ஆனால் அவன் மிகவும் துன்மார்க்கனாயும், விக்கிரக ஆராதனைக்காரனாயுமானான். அவன் அநேக வார்த்தைகளைப் பேசுபவனாயும் இருந்தான். ஜனங்களிடம் அதிகமான இச்சகமானதைப் பேசினான்; ஆதலால் அநேக ஜனங்களை தன்னுடைய அக்கிரமங்களின் பிரகாரமாய் செய்யும்படி வழிநடத்தினான்.

9 அவன் ஜனங்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டு, ஜனங்களுக்குள்ளே அநேக வாக்குவாதங்களை ஏற்படுத்தி, அவர்கள் மீது தேவனுடைய சத்துருவானவன் தன் வல்லமையைச் செலுத்த வழிவகுத்து, தேவனுடைய சபை விருத்தியடைவதற்கு பெரிய தடையாய் மாறினான்.

10 இப்பொழுதும், அந்தப்படியே, தேவனுடைய அல்லது ராஜாவினுடைய கட்டளைகளுக்கு விரோதமாய், அவன் தேவசபையை அழிப்பதற்கும், அவன் சபையை அழிப்பதற்கு வகைதேடுகிறவனாய் மோசியாவின் குமாரர்களோடு இரகசியமாய் சுற்றித்திரிந்தும், கர்த்தருடைய ஜனங்களை தவறான வழியில் நடத்துவதற்கும் போய்க்கொண்டிருந்தபொழுது,

11 நான் உங்களுக்குச் சொன்னதுபோல, தேவனுக்கு விரோதமாய் கலகம் செய்துகொண்டு அவர்கள் சென்றபோது, இதோ, கர்த்தருடைய தூதன் அவர்களுக்குத் தோன்றினான்; அவன் மேகத்திலிருந்து இறங்குவது போல கீழே இறங்கினான்; அவன் இடிமுழக்கத்தைப்போலப் பேசினான். அது அவர்கள் நின்றுகொண்டிருந்த பூமியை அதிரச் செய்தது.

12 அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து, நிலத்திலே விழுந்து, அவர்களிடம் அவன் பேசிய வார்த்தைகளை அறியாமலிருந்தார்கள்.

13 இருப்பினும், அவன் மறுபடியும் கூக்குரலிட்டு, சொன்னதாவது: ஆல்மாவே எழுந்து நில். நீ ஏன் தேவனுடைய சபையைத் துன்புறுத்துகிறாய்? கர்த்தர் சொன்னது என்னவெனில்: இது என்னுடைய சபை. நான் இதை ஸ்தாபிப்பேன்; என் ஜனத்தின் மீறுதலேயல்லாமல் வேறொன்றும் இதை அழிக்காது.

14 மறுபடியும் அந்த தூதன் சொன்னான்: இதோ, கர்த்தர் தம் ஜனங்களின் விண்ணப்பங்களையும், தம் தாசனும், உன் தகப்பனுமாகிய ஆல்மாவின் விண்ணப்பங்களையும் கேட்டிருக்கிறார்; ஏனெனில் நீ சத்தியத்தின் ஞானத்திற்கு கொண்டுவரப்படவேண்டும் என்று, உன்னைக்குறித்து மிகுந்த விசுவாசத்தோடே ஜெபித்திருக்கிறார்; ஆதலால் இந்த நோக்கத்திற்காகவே தேவனுடைய வல்லமையையும், அதிகாரத்தையும் உனக்கு உணர்த்தவும், அதினிமித்தம் அவருடைய ஊழியக்காரர்களின் ஜெபங்கள், அவர்களுடைய விசுவாசத்தின்படியே பதிலளிக்கப்படவுமே நான் வந்திருக்கிறேன்.

15 இப்பொழுதும் தேவ வல்லமையை உன்னால் சந்தேகிக்க இயலுமா? ஏனெனில் இதோ, என்னுடைய வார்த்தை பூமியை அதிரச் செய்கிறதில்லையா? உனக்கு முன்பாக நானிருப்பதை உன்னால் காணவும் இயலாதோ? நான் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறேன்.

16 இப்பொழுது நான் உனக்குச் சொல்வது என்னவெனில்: நீ போய் ஏலாம் தேசத்திலும், நேபியின் தேசத்திலும், இருந்த உன் பிதாக்களின் சிறையிருப்பை நினைவுகூருவாயாக; அவர் அவர்களுக்கு எவ்வளவு மகத்துவமான காரியங்களைச் செய்திருக்கிறார் என்பதை நினைவுகூருவாயாக. ஏனெனில் அவர்கள் சிறைத்தனத்திலிருந்தார்கள். அவர் அவர்களை விடுவித்திருக்கிறார். இப்பொழுதும் நான் உனக்குச் சொல்லுகிறேன், ஆல்மா நீ உன்னையே தள்ளப்படுவதற்கு ஒப்புக்கொடுத்தாலும், அவர்களின் விண்ணப்பங்கள் பதிலளிக்கப்படும் பொருட்டு, சபையை இனி ஒருபோதும் அழிக்க நாடாமல், உன் வழியே செல்வாயாக, என்றான்.

17 இப்பொழுதும், அந்தப்படியே, ஆல்மாவினிடத்திலே தூதன் பேசிய கடைசி வார்த்தைகள் இவைகளே. பின்பு அவன் சென்றான்.

18 இப்பொழுதும் ஆல்மாவும் அவனோடு கூட இருந்தவர்களும் தங்களின் மிகுதியான ஆச்சரியத்தினாலே பூமியிலே மறுபடியும் விழுந்தார்கள்; ஏனெனில் தங்களுடைய சொந்தக் கண்களாலே கர்த்தருடைய தூதனைக் கண்டார்கள். அவனது சத்தம் இடிமுழக்கத்தைப்போல பூமியை அதிரச் செய்தது; தேவனுடைய வல்லமையே அல்லாமல் வேறொன்றாலும் பூமியை அசைத்து, அதைப் பிளப்பதைப்போல நடுங்கச் செய்ய முடியாதென அறிந்தார்கள்.

19 இப்பொழுதும் ஆல்மா மிகுதியாய் ஆச்சரியமடைந்ததாலே அவன் தன்னுடைய வாயைத் திறக்க முடியாதபடி ஊமையானான்; ஆம், அவன் பெலவீனமடைந்து, தன் கைகளை அசைக்க முடியாதிருந்தான்; ஆதலால் அவனோடுகூட இருந்தவர்களால் தூக்கிவிடப்பட்டு, திக்கற்றவனாய் தூக்கிச் செல்லப்பட்டு அவனது தகப்பனுக்கு முன்பாகக் கிடத்தப்பட்டான்.

20 அவர்களுக்கு நேர்ந்தது எல்லாவற்றையும் அவர்கள் அவனுடைய தகப்பனிடம் சொன்னார்கள்; அது தேவனுடைய வல்லமையே என்றறிந்து, அவனது தகப்பன் களிகூர்ந்தான்.

21 அவன் தன் குமாரனுக்கும், அவனோடு இருந்தவர்களுக்கும், கர்த்தர் செய்ததை காணும்படிக்கு ஒரு திரள்கூட்டத்தை ஏகமாய்க் கூடிவரும்படி செய்தான்.

22 ஆசாரியர்கள் தங்களை ஏகமாய் ஒன்றுகூட்டும்படிச் செய்தான்; அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தர், ஆல்மா பேசும்படி அவனுடைய நாவைத் திறக்கவும் அவனுடைய கை, கால்கள் பெலத்தைப் பெறவும், தேவனுடைய நன்மையையும், மகிமையையும் ஜனங்கள் பார்க்கும்படிக்கு அவர்களது கண்கள் திறக்கப்படவும், அவரிடத்திலே உபவாசமிருந்து, ஜெபிக்கலானார்கள்.

23 அந்தப்படியே, அவர்கள் இரண்டு பகல்களும், இரண்டு இரவுகளும் உபவாசமிருந்து ஜெபித்தபோது, ஆல்மாவின் கை கால்கள் பெலனைப் பெற்று, அவன் எழுந்திருந்து அவர்களைத் தேற்றும்படியான வார்த்தைகளைப் பேசலானான்.

24 நான் என் பாவங்களுக்காக மனந்திரும்பியதால், கர்த்தரால் மீட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறேன்; இதோ, நான் ஆவியாலே ஜெனிப்பிக்கப்பட்டுள்ளேன், என்றான்.

25 கர்த்தர் என்னை நோக்கி: ஆம், புருஷரும் ஸ்திரீகளுமான சகல மனுக்குலமும், எல்லா தேசத்தாரும், இனத்தாரும், பாஷைக்காரரும் ஜனங்களும் மறுபடியும் ஜெனிக்கவேண்டும் என்பதால் திகையாதே; ஆம், அவர்கள் தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டு, தங்களுடைய மாம்சமான வீழ்ந்த நிலையிலிருந்து தேவனால் மீட்கப்பட்டு, நீதியின் நிலைக்கு மாற்றப்பட்டு, அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாவார்கள்.

26 இவ்விதமாய் அவர்கள் புது சிருஷ்டியாகிறார்கள்; இதைச் செய்யாவிடில், அவர்கள் ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்கமுடியாது.

27 இப்படிச் செய்யாவிடில் அவர்கள் புறம்பே தள்ளப்படுவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நானும் புறம்பே தள்ளப்பட இருந்ததினாலே, இதை அறிவேன்.

28 இருப்பினும் அதிக உபத்திரவங்களிலே தடுமாறி, மரணத்திற்கு அருகில் சென்று மனந்திரும்பின பின்பு, கர்த்தர் தம் இரக்கத்தினாலே அவியாத அக்கினியிலிருந்து என்னை நீக்கிப்போடுவது நலம் என்று கண்டார். தேவனால் நான் ஜெனிப்பிக்கப்பட்டுள்ளேன்.

29 என்னுடைய ஆத்துமா கசப்பான பிச்சிலிருந்தும், அக்கிரமத்தின் கட்டுக்களிலிருந்தும் மீட்கப்பட்டது. நான் காரிருளிலிருந்தேன்; ஆனால் இப்பொழுதோ தேவனுடைய அற்புதமான ஒளியைக் காண்கிறேன், என் ஆத்துமா நித்திய வேதனையிலே கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் நான் காப்பாற்றப்பட்டேன். இனி ஒருபோதும் என் ஆத்துமா துன்பமடையாது.

30 நான் என் மீட்பரைத் தள்ளி, நம் பிதாக்களால் பேசப்பட்டவைகளை மறுத்தேன்; ஆனால் இப்பொழுது தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு சிருஷ்டியையும் அவர் நினைவுகூருகிறாரென்றும், அவர் வருவார் என்றும் அவர்கள் எதிர்பார்க்கலாம், அவர் தம்மையே சகலமானோருக்கும் வெளிப்படுத்துவார்.

31 ஆம், ஒவ்வொரு முழங்காலும் முடங்கும். ஒவ்வொரு நாவும் அவருக்கு முன்பாக அறிக்கையிடும். ஆம், கடைசி நாளிலே அவரால் நியாயம் விசாரிக்கப்படும்படி சகல மனுஷரும் நிற்கும்போது, அவரே தேவனென்று அறிக்கையிடுவார்கள். பின்பு உலகத்திலே தேவனை அறியாமல் ஜீவிக்கிறவர்கள் தங்கள் மீது கொடுக்கப்பட்ட என்றுமுள்ள தண்டனையின் நியாயத்தீர்ப்பு, நியாயமானதென்று அறிக்கையிடுவார்கள்; அவர்கள் அதிர்ந்து, நடுங்கி, சகலத்தையும் காணவல்ல அவர் கண்களின் பார்வைக்குக் கீழே சுருங்கிக்கொள்வார்கள்.

32 இப்பொழுதும், அந்தப்படியே, இந்த சமயம் முதற்கொண்டு ஆல்மாவும் ஜனங்களுக்கு போதிக்கத்துவங்கி தூதன் தோன்றியபோது அவனோடு கூட இருந்தவர்களும் தேசம் முழுவதையும் சுற்றித் தாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிற காரியங்களை சகல ஜனங்களுக்கும் அறிவித்து, அவிசுவாசிகளால் பெரிதும் துன்பப்படுத்தப்பட்டும், அவர்களில் அநேகரால் அடிக்கப்பட்டும், அதிக உபத்திரவங்களின் மத்தியிலும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கத் துவங்கினார்கள்.

33 இவை எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல், ஆறுதலையும் தங்கள் விசுவாசத்தின் உறுதியையும் சபைக்கு அளித்து, அவர்கள் நீடிய சாந்தத்தோடும், வேதனையிலும் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுமாறு புத்தி சொன்னார்கள்.

34 அவர்களுள் நால்வர் மோசியாவின் குமாரர்களாயிருந்தார்கள்; அம்மோன், ஆரோன், ஓம்னர், ஈம்னி என்பது அவர்களுடைய பெயர்கள்; இவைகள் மோசியாவின் குமாரர்களின் பெயர்கள்.

35 அவர்கள் சாரகெம்லா தேசம் முழுவதிலும், மோசியா ராஜாவின் ஆட்சிக்குக் கீழிருந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரயாணம்பண்ணி, சபைக்குத் தாங்கள் செய்திருந்த சகல குறைகளையும் ஊக்கத்தோடே நிவர்த்தி செய்து, தங்களின் சகல பாவங்களையும் அறிக்கையிட்டு. தாங்கள் கண்ட சகல காரியங்களையும் பிரஸ்தாபம்பண்ணி, அவற்றுக்கு செவிகொடுக்க விரும்பின எல்லோருக்கும் தீர்க்கதரிசனங்களையும் வேதங்களையும் விவரித்தார்கள்.

36 இப்படியாக அவர்கள் அநேகரை சத்தியத்தின் ஞானத்திற்கும், ஆம், தங்களின் மீட்பருடைய ஞானத்திற்கும் கொண்டுவருவதில், தேவனுடைய கரங்களிலே கருவிகளாயிருந்தார்கள்.

37 அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்! ஏனெனில் அவர்கள் சமாதானத்தை பிரஸ்தாபப்படுத்தினார்கள்; நன்மையான நற்செய்திகளை பிரஸ்தாபப்படுத்தினார்கள்; கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறாரென்று ஜனங்களுக்கு அறிவித்தார்கள்.