வேதங்கள்
மோசியா 16


அதிகாரம் 16

தேவன் மனுஷரை, அவர்களின் தொலைந்த, மற்றும் வீழ்ந்த நிலையிலிருந்து மீட்டுக்கொள்ளுதல் – மாம்சப்பிரகாரமானவர்கள், மீட்பு சம்பவிக்காததுபோல் இருத்தல் – நித்திய ஜீவனைப் பெறவோ, அல்லது நித்திய ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படவோ, கிறிஸ்து உயிர்த்தெழுதலை சம்பவிக்கப் பண்ணுதல். ஏறக்குறைய கி.மு. 148.

1 இப்பொழுதும், அந்தப்படியே, அபிநாதி இந்த வார்த்தைகளைப் பேசி முடித்த பின்பு, அவன் தன் கையை நீட்டி, அனைவருக்கும் கர்த்தருடைய இரட்சிப்பைக் காணும் காலம் வரும்; அப்போது சகல தேசமும், இனமும், பாஷைக்காரரும், ஜனமும், முகமுகமாய் தேவனைக் கண்டு, அவருடைய தீர்ப்பு நியாயமுள்ளது, என்று அவருடைய சமுகத்திலே அறிக்கையிடுவார்கள்.

2 அப்போது துன்மார்க்கர் வெளியே துரத்தப்படுவார்கள். அவர்கள் அலறி, அழுது, புலம்பி, பற்கடிக்க முகாந்தரம் உண்டாயிருக்கும். இது அவர்கள் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடாததினிமித்தம் உண்டாயிருக்கும்; ஆதலால் கர்த்தர் அவர்களை மீட்டுக்கொள்வதில்லை.

3 அவர்கள் மாம்சப்பிரகாரமானவர்களும், பிசாசுத்தன்மை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். பிசாசு அவர்களின் மீது வல்லமை கொண்டிருக்கிறான்; அந்த பூர்வ சர்ப்பம் நமது முதற் பெற்றோரை வஞ்சித்து, அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணனாயிருக்கிறான்; அதுவே, சகல மனுக்குலமும் மாம்சப்பிரகாரமாயும. உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவராயும், பிசாசுத்தன்மை கொண்டவராயும், நன்மையிலிருந்து தீமையை அறிந்தவராயும், பிசாசுக்குத் தங்களை கீழ்ப்படுத்திக்கொள்பவராயும் மாறக்காரணமாயிருந்தது.

4 இப்படியாக சகல மனுக்குலமும் கெட்டுப்போனது; இதோ, தேவன் தமது ஜனத்தை அவர்களின் வீழ்ந்த, மற்றும் தொலைந்த நிலையிலிருந்து மீட்டிராவிட்டால், அவர்கள் யாவரும் நித்தியமாய் கெட்டுப்போயிருப்பார்கள்.

5 தன்னுடைய சொந்த மாம்ச சுபாவத்தை விடாமல், தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ணி பாவத்தின் வழிகளிலே போகிற மனுஷன், தன் வீழ்ந்த நிலையிலேயே நிலைத்திருக்கிறான் என்றும், பிசாசு அவன் மீது சகல வல்லமையும் கொண்டிருக்கிறான் என்றும், நினைவில் கொள்ளுங்கள். ஆதலால் அவன் மீட்பு இல்லாததைப்போல, தேவனுக்கு விரோதியாயிருக்கிறான்; பிசாசும் தேவனுக்கு விரோதியாயிருக்கிறான்.

6 இப்பொழுதும் சம்பவிக்கப்போவதை, ஏற்கனவே சம்பவித்தது போல பேசி, கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வரவில்லையெனில், மீட்பு இல்லாதிருந்திருக்கும்.

7 கல்லறை ஜெயம் பெறாதபடிக்கு, மரணத்தின் வேதனை இல்லாதபடிக்கு, கிறிஸ்து மரணக்கட்டுக்களை அறுக்காமல், அல்லது மரித்தோரிலிருந்து உயிர்த்தெழாதிருந்தால், உயிர்த்தெழுதலும் இல்லாமற் போயிருக்கும்.

8 ஆனால் உயிர்த்தெழுதல் இருப்பதால், கல்லறை ஜெயம் கொள்ளுகிறதில்லை. மரணத்தின் வேதனை கிறிஸ்துவிலே விழுங்கப்பட்டிருக்கிறது.

9 அவரே உலகத்தின் ஒளியாயும், ஜீவனுமாயிருக்கிறார்; ஆம், அந்த ஒளி நித்தியமானதாயும், ஒருபோதும் அந்தகாரமடையாததாயும் இருக்கிறது, ஆம், இனிமேலும் மரணமே இல்லாதபடிக்கு முடிவற்ற ஜீவனுமாயிருக்கிறார்.

10 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொண்டு, அவர்களுடைய நன்மையான அல்லது தீமையான கிரியைகளுக்குத்தக்கதாய், தேவனால் நியாயந்தீர்க்கப்படும்படி அவருடைய நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக நிற்கும்படி கொண்டுவரப்படுவார்கள்.

11 அவைகள் நன்மையாக இருப்பின், முடிவற்ற ஜீவன் மற்றும் சந்தோஷத்தின் உயிர்த்தெழுதலையும், அவைகள் தீமையாக இருப்பின், ஆக்கினையாகிய, அவர்களைக் கீழ்ப்படுத்திய, பிசாசினிடத்தில் ஒப்படைக்கப்பட்டு, முடிவற்ற ஆக்கினையின் உயிர்த்தெழுதலையும் அடைவார்கள்.

12 ஏனெனில் அவர்கள், தங்களின் சொந்த மாம்ச சிந்தைகளின்படியேயும் விருப்பங்களின்படியேயும் நடந்து, தங்களுக்கு நேராய் இரக்கத்தின் கரங்கள் நீட்டப்பட்டிருந்தபோதும், கர்த்தரை ஒருபோதும் கூப்பிடாமலிருந்தார்கள். ஏனெனில் இரக்கத்தின் கரங்கள் அவர்களுக்கு நேராய் நீட்டப்பட்டிருந்தது. அவர்களோ கூப்பிடவில்லை; அவர்கள் தங்களின் அக்கிரமங்களைக்குறித்து எச்சரிக்கப்பட்டும் அவைகளிலிருந்து விலகாமலும், அவர்கள் மனந்திரும்புமாறு கட்டளையிடப்பட்டும் மனந்திரும்பாமலும் இருந்தார்கள்.

13 இப்பொழுதும், நீங்கள் நடுக்கங்கொண்டு, உங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, கிறிஸ்துவாலும், அவர் மூலமும் மாத்திரமே இரட்சிக்கப்படுவீர்கள், என்று நினைவில் கொள்ள வேண்டாமா?

14 ஆதலால் நீங்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதிப்பீர்களெனில், அவைகள் வரவிருக்கிறவைகளின் நிழலாட்டமாய் இருக்கிறதென்றும், போதியுங்கள்.

15 ஒரே நித்திய பிதாவும், கர்த்தருமாகிய கிறிஸ்துவின் மூலமே மீட்பு வருகிறது என்று அவர்களுக்கு உபதேசியுங்கள். ஆமென்.