வேதங்கள்
மோசியா 21


அதிகாரம் 21

லிம்கியினுடைய ஜனத்தார் அடிக்கப்பட்டு, லாமானியர்களால் வீழ்த்தப்படுதல் – அவர்கள் அம்மோனைச் சந்தித்து பின்பு மனமாறுதல் – அவர்கள் யாரேதியர்களின் இருபத்தி நான்கு தகடுகளைக்குறித்து அம்மோனிடம் சொல்லுதல். ஏறக்குறைய கி.மு. 122–121.

1 அந்தப்படியே, லிம்கியும் அவனுடைய ஜனமும், நேபியின் பட்டணத்திற்குத் திரும்பிப் போய், தேசத்திலே திரும்பவும் சமாதானமாய் வாசம்பண்ணத் தொடங்கினார்கள்.

2 அந்தப்படியே, அநேக நாட்களுக்குப் பின்னர் லாமானியர்கள் திரும்பவும், நேபியர்களுக்கு விரோதமாய் கோபத்திலே தூண்டப்பட்டு, அவர்கள் சுற்றியுள்ள தேசத்தின் எல்லைகளுக்குள்ளே வரத்தொடங்கினார்கள்.

3 இப்பொழுது லிம்கியினிடத்தில், அவர்களின் ராஜா செய்த ஆணையினிமித்தம் அவர்களைக் கொலை செய்யத் துணியாமல், அவர்களின் கன்னத்திலே அடித்து அவர்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தினார்கள். அவர்களுடைய முதுகுகளிலே பாரமான சுமைகளை ஏற்றி செவிட்டு கழுதையைத் துரத்துவதுபோல் அவர்களைத் துரத்தத் தொடங்கினார்கள்.

4 ஆம், கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும் பொருட்டு இவையெல்லாம் சம்பவித்தன.

5 இப்பொழுதும் நேபியர்கள் படும் உபத்திரவம் அதிகமாயிருந்தது. லாமானியர்கள் அவர்களை சகல பக்கங்களிலும் சூழ்ந்துகொண்டதினாலே, அவர்களுடைய கைகளிலிருந்து தங்களைத் தப்புவித்துக்கொள்ள, ஒரு வழியுமில்லாதிருந்தது.

6 அந்தப்படியே, அவர்களின் உபத்திரவங்களினிமித்தம் ராஜாவினிடத்திலே ஜனங்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்கு விரோதமாய் யுத்தத்திற்குச் செல்ல விருப்பம் கொள்ளத் துவங்கினார்கள். அவர்கள் தங்களின் முறையீடுகளாலே ராஜாவை மிகவும் உபத்திரவப்படுத்தினார்கள்; ஆதலால் அவர்களுடைய விருப்பங்களுக்கேற்ப செய்யும்படி அவர்களுக்கு அனுமதியளித்தான்.

7 அவர்கள் மறுபடியும் ஏகமாய்க்கூடி தங்கள் கவசங்களை தரித்து, லாமானியர்களை தங்கள் தேசத்திலிருந்து துரத்த அவர்களுக்கு விரோதமாய்ப் போனார்கள்.

8 அந்தப்படியே, லாமானியர்கள் அவர்களை அடித்து, அவர்களைத் துரத்தி, அவர்களில் அநேகரைக் கொன்றுபோட்டார்கள்.

9 இப்பொழுதும் லிம்கி ஜனத்தாரிடையே மகா துக்கமும், புலம்பலும் இருந்தது, விதவை தன் புருஷனுக்காகவும், குமாரனும் குமாரத்தியும் தங்கள் தகப்பனுக்காகவும், சகோதரர்கள் தங்களின் சகோதரர்களுக்காகவும், துக்கித்தார்கள்.

10 இப்பொழுதும் தேசத்திலே, அநேக விதவைகள் இருந்தார்கள். லாமானியர்களைப்பற்றிய திகில், அவர்களை ஆட்கொண்டதினிமித்தம், நாள்தோறும் அவர்கள் மிகவும் கூக்குரலிட்டார்கள்.

11 அந்தப்படியே, அவர்கள் தொடர்ந்து கூக்குரலிட்டது, லிம்கியினுடைய ஜனத்தின் மீதியானோரையும் லாமானியர்களுக்கு விரோதமாய் கோபமடையத் தூண்டியது, அவர்கள் மறுபடியும் யுத்தத்திற்குச் சென்றார்கள். ஆனால் பேரிழப்புடன் திரும்பவும் துரத்தியடிக்கப்பட்டார்கள்.

12 ஆம், மூன்றாம் தடவையும் சென்று அவ்வண்ணமே பாடுபட்டார்கள். கொல்லப்படாதவர்கள் நேபியினுடைய பட்டணத்திற்கு மறுபடியும் திரும்பினார்கள்.

13 அவர்கள் அடிமைத்தனத்தின் நுகத்தடிக்கு தங்களை ஒப்புவித்து, அடிக்கப்படுவதற்கும், அங்கேயும் இங்கேயும் அலைக்கழிக்கப்படுவதற்கும், தங்களின் சத்துருக்களின் விருப்பத்தின்படி சுமை சுமத்தப்படுவதற்கும், தங்களை தூசுக்கு சமானமாய் தாழ்த்தினார்கள்.

14 தாழ்மையின் ஆழங்களிலே தங்களைத் தாழ்த்தி தேவனிடத்தில் ஊக்கமாய் கூக்குரலிட்டார்கள்; ஆம், தங்களுடைய தேவன், தங்கள் உபத்திரவங்களிலிருந்து தங்களை விடுவிக்கும்படி, அவரிடத்திலே நாள் முழுவதும் கூக்குரலிட்டார்கள்.

15 இப்பொழுதும் கர்த்தர் அவர்களின் அக்கிரமங்களினிமித்தம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்க தாமதித்தார்; இருப்பினும் கர்த்தர் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு, அவர்களின் பாரங்களை லகுவாக்கும்படி லாமானியர்களுடைய இருதயங்களை மென்மையாக்கத் தொடங்கினார். ஆயினும் தேவன் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது ஏற்றதல்ல, எனக் கண்டார்.

16 அந்தப்படியே, அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் தேசத்திலே விருத்தியடையத் தொடங்கினார்கள். அவர்கள் பட்டினியால் வாடாதபடி, தானியங்களையும், மந்தைகளையும், ஆடுகளையும் மிகவும் அதிகமாக வளர்க்கத் தொடங்கினார்கள்.

17 இப்பொழுது புருஷரைக் காட்டிலும் ஸ்திரீகள் எண்ணிக்கையிலே அதிகமாயிருந்ததாலே, ராஜாவாகிய லிம்கி, விதவைகளும், அவர்களின் பிள்ளைகளும், பட்டினியால் அழிந்துபோகாதபடி ஒவ்வொரு புருஷனும் ஆதரவு கொடுக்குமாறு கட்டளையிட்டான். அவர்களில் அதிகமானோர் கொலை செய்யப்பட்டதினிமித்தம் இப்படிச் செய்தார்கள்.

18 இப்பொழுது லிம்கியினுடைய ஜனம் கூடிய அளவிற்கு ஒன்றாக இருந்துகொண்டு, தங்களின் தானியங்களையும், மந்தைகளையும் காத்தார்கள்.

19 பட்டணத்தின் அலங்கத்துக்கு வெளியே, தன்னுடன் காவற்காரர்களை அழைத்துச் செல்லாமல் போனால், லாமானியர்களின் கைகளுக்குள் எப்படியாவது விழுந்துவிடுவோமோ என்று பயந்து, ராஜா தன்னையே நம்பாமலிருந்தான்.

20 வனாந்தரத்திற்குள் ஓடிப்போனவர்களும், லாமானியர்களின் குமாரத்திகளை அபகரித்துக்கொண்டு, மகா அழிவு தங்கள்மீது வரக்காரணமான, அந்த ஆசாரியர்களைப் பிடிக்க, தன் ஜனத்தை சுற்றும் முற்றும் கண்காணிக்கச் செய்வித்தான்.

21 அவர்களைப் பிடித்து தண்டிக்கும்படி இவர்களும் ஆவலாயிருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் இரவிலே நேபியின் தேசத்தினுள் புகுந்து, அவர்களுடைய தானியங்களையும், அநேக விலையுயர்ந்த பொருட்களையும் தூக்கிச் சென்றார்கள்; ஆதலால் அவர்களுக்காகப் பதுங்கிக் காத்திருந்தார்கள்.

22 அந்தப்படியே, அம்மோனும் அவனுடைய சகோதரர்களும் தேசத்தினுள் வரும் காலமளவும், லாமானியர்களுக்கும் லிம்கியினுடைய ஜனங்களுக்கும் இடையே எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.

23 தன் காவற்காரரோடு ராஜா பட்டணத்தின் வாசல்களுக்கு வெளியே போனபோது, அம்மோனையும் அவனுடைய சகோதரர்களையும் கண்டு, அவர்களை நோவாவினுடைய ஆசாரியர்கள் என்று எண்ணி, அவர்களைப் பிடித்து, கட்டி, சிறையினுள் போடும்படிச் செய்வித்தான். அவர்கள் நோவாவின் ஆசாரியர்களாய் இருந்திருந்தால், அவர்களைக் கொன்று போடச் செய்திருப்பான்.

24 ஆனால் இவர்கள் அவர்களல்ல என்றும், சாரகெம்லாவிலிருந்து வந்த தன் சகோதரர்கள் என்றும் அவன் கண்டபோது, மிகுந்த சந்தோஷத்தாலே நிரப்பப்பட்டான்.

25 இப்பொழுதும், லிம்கி ராஜா அம்மோன் வருகைக்கு முன்னரே சாரகெம்லா தேசத்தைத் தேடிப்போகும்படி சில மனுஷரை அனுப்பியிருந்தான். ஆனால் அதைக் கண்டுபிடிக்க இயலாமல், வனாந்தரத்திலே அவர்கள் தொலைந்து போனார்கள்.

26 இருப்பினும் ஜனங்கள் முன்பு வாசமாயிருந்த ஒரு தேசத்தை கண்டார்கள்; அப்பூமி காய்ந்த எலும்புகளால் நிறைந்திருந்தது; ஆம், ஜனம் வாசமாயிருந்து அழிந்துபோன தேசம் அது; அவர்கள் அதை சாரகெம்லா என எண்ணி, நேபி தேசத்திற்குத் திரும்பி, அம்மோன் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், அத்தேசத்தின் எல்லைகளை அடைந்திருந்தார்கள்.

27 அவர்கள் தங்களோடு ஒரு பதிவேட்டினைக் கொண்டு வந்தார்கள். அது அவர்கள் எலும்புகளைக் கண்டு பிடித்த, அந்த ஜனத்தினுடைய பதிவேடாயிருந்தது. அது தாதுக்களாலான தகடுகளில் பொறிக்கப்பட்டிருந்தது.

28 இப்பொழுதும் ராஜாவாகிய மோசியா அப்படிப்பட்ட பொறித்தல்களை வியாக்கியானம்பண்ண தேவனிடத்திலிருந்து வரத்தைப் பெற்றிருக்கிறான், என்று அம்மோன் வாயாலறிந்து லிம்கி மறுபடியும் சந்தோஷத்தால் நிரப்பப்பட்டான்; ஆம், அம்மோனும் களிகூர்ந்தான்.

29 இருப்பினும் அம்மோனும் அவனுடைய சகோதரர்களும் துக்கத்தால் நிரப்பப்பட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய சகோதரர்களில் அநேகர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

30 நோவா ராஜாவும் அவனுடைய ஆசாரியர்களும், ஜனங்களை தேவனுக்கு விரோதமாய் அநேக பாவங்களையும் அக்கிரமங்களையும் செய்ய வைத்திருந்தார்கள். அபிநாதியின் மரணத்தினிமித்தமும், தேவனுடைய வல்லமையாலும் பெலத்தாலும், தேவனுடைய சபையை ஸ்தாபித்தவர்களும், அபிநாதி பேசிய வார்த்தைகளை விசுவாசித்தவர்களுமாகிய, ஆல்மாவும் அவனோடேகூட போன ஜனமும், புறப்பட்டுச் சென்றதினிமித்தமும் அவர்கள் துக்கித்தார்கள்.

31 ஆம், அவர்கள் எங்கே போனார்கள் என்று அறியாததினிமித்தமும், அவர்கள் விட்டுச் சென்றதினிமித்தம் அவர்கள் துக்கித்தார்கள். தேவனைச் சேவித்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவோம் என்று, அவருடன் ஒரு உடன்படிக்கையினுள் இப்பொழுது பிரவேசித்ததினிமித்தம், இவர்களும் அவர்களோடே கூட மகிழ்ச்சியாய் சேர்ந்திருப்பார்கள்.

32 இப்பொழுதும் அம்மோனுடைய வரவிற்குப் பின்பு, லிம்கி ராஜாவும், அவன் ஜனத்தாரில் அநேகரும் தேவனைச் சேவித்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவோம் என்று, அவருடனே ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

33 அந்தப்படியே, லிம்கி ராஜாவும், அவனுடைய ஜனத்தாரிலே அநேகரும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களாயிருந்தார்கள்; ஆனால் அத்தேசத்திலே தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றவர்கள் எவருமில்லை. அம்மோன் தன்னை தகுதியற்ற ஊழியக்காரன் என்று கருதி இந்தக் காரியத்தைச் செய்ய மறுத்தான்.

34 ஆதலால் அச்சமயத்திலே அவர்கள் தாங்களே ஒரு சபையை அமைக்காமல், கர்த்தருடைய ஆவியானவருக்காக காத்திருந்தார்கள். இப்பொழுதும் வனாந்தரத்தினுள் ஓடிப்போன ஆல்மாவையும் அவனுடைய சகோதரர்களையும் போலவே இவர்களும் ஆகும்படி விரும்பினார்கள்.

35 அவர்கள் தேவனை தங்களுடைய முழு உள்ளத்தோடும் சேவிக்க மனமுள்ளவர்களாயிருக்கிறோம் என்று, சாட்சியாயும் சாட்சியமாயும் இருக்கும்பொருட்டு, ஞானஸ்நானம் பெற விரும்பினார்கள். ஆயினும் அவர்கள் காலதாமதம் செய்தார்கள். அவர்களுடைய ஞானஸ்நானத்தின் விவரம் இதற்குப் பின்பு கொடுக்கப்படும்.

36 இப்பொழுதும் லாமானியர்களின் கைகளிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் நீங்கி, தங்களையே தப்புவித்துக்கொள்வதுபற்றியே அம்மோனும், அவனுடைய ஜனமும், லிம்கி ராஜாவும் அவனுடைய ஜனமும், ஆழ்ந்து சிந்தித்தார்கள்.