வேதங்கள்
மோசியா 23


நோவா ராஜாவின் ஜனத்தாரால் வனாந்தரத்தினுள் துரத்தப்பட்ட ஆல்மா மற்றும் கர்த்தருடைய ஜனத்தாரின் ஒரு விவரம்.

அதிகாரங்கள் 23, மற்றும் 24 உள்ளிட்டவை.

அதிகாரம் 23

ஆல்மா ராஜாவாக இருக்க மறுத்தல் – அவன் பிரதான ஆசாரியனாயிருந்து சேவை செய்தல் – கர்த்தர் தம் ஜனத்தைக் கடிந்துகொள்ளுதல் – லாமானியர்கள் ஏலாம் தேசத்தைக் கைப்பற்றுதல் – நோவா ராஜாவினுடைய துன்மார்க்க ஆசாரியர்களின் தலைவனான அமுலோன், லாமானியர்களுக்குக் கீழ்ப்பட்டிருந்து அரசாளுதல். ஏறக்குறைய கி.மு. 145–121.

1 இப்பொழுதும் ஆல்மா, ராஜாவாகிய நோவாவினுடைய சேனைகள் அவர்கள் மீது வருவார்களென்று கர்த்தரால் எச்சரிக்கப்பட்டு, இதைத் தன் ஜனங்களுக்கு தெரிவிக்கச் செய்து, அவர்கள் ஏகமாய் தங்கள் மந்தைகளைக் கூட்டி, தங்களின் தானியங்களை எடுத்துக்கொண்டு, ராஜாவாகிய நோவாவின் சேனைகளுக்கு முன்பாக வனாந்தரத்தினுள் புறப்பட்டுப்போனார்கள்.

2 நோவா ராஜாவினுடைய ஜனங்கள் அவர்களை மேற்கொண்டு அவர்களை அழிக்காதபடி கர்த்தர் அவர்களைப் பெலப்படுத்தினார்.

3 வனாந்தரத்தினுள் எட்டு நாட்கள் பிரயாணமாய்ப் போனார்கள்.

4 மிகவும் அழகானதும், இன்பமானதும், சுத்தமான நீரைக்கொண்டதுமான ஒரு தேசத்துக்கு அவர்கள் வந்தார்கள்.

5 அவர்கள் கூடாரங்களைப்போட்டு, நிலத்தைப் பண்படுத்தி கட்டிடங்களைக் கட்டத்துவங்கினார்கள்; ஆம், அவர்கள் உழைப்பாளிகளாயிருந்து, அதிகமாய்ப் பிரயாசப்பட்டார்கள்.

6 தம் ஜனத்தால் மிகவும் நேசிக்கப்பட்டவனாய் ஆல்மா இருந்ததாலே, அவனே தங்களின் ராஜாவாயிருக்க வேண்டுமென ஜனங்கள் விரும்பினார்கள்.

7 ஆனால் அவன் அவர்களை நோக்கி: இதோ நமக்கு ஒரு ராஜா இருக்கவேண்டுமென்பது அவசியமற்றதாயிருக்கிறது. ஏனெனில் கர்த்தர் சொல்லுவதாவது, ஒரு மாம்சத்துக்குக்கு மேலாக மற்றொன்றை எண்ணாதே என்றும், ஒருவன் தன்னை மற்றொருவனைக்காட்டிலும் மேலானவனாகவும் எண்ணக்கூடாது, என்றான். ஆதலால் நீங்கள் ஒரு ராஜாவை பெற்றிருப்பது, அவசியமற்றதாயிருக்கிறது என்று நான் சொல்கிறேன்.

8 ஆயினும், நியாயமானவர்கள் உங்களின் ராஜாக்களாக இருக்கக் கூடுமானால், ஒரு ராஜா உங்களுக்கிருப்பது நலமாயிருக்கும்.

9 ஆனால் ராஜாவாகிய நோவா மற்றும் அவனுடைய ஆசாரியர்களின் அக்கிரமத்தை நினைத்துப்பாருங்கள்; நானும் கண்ணியிலே அகப்பட்டு, கர்த்தருடைய பார்வைக்கு அருவருப்பான அநேகக் காரியங்களைச் செய்ததினிமித்தம், கடினமாய் மனந்திரும்பும்படியாயிற்று.

10 இருப்பினும் அதிக பாடுகளுக்குப் பின்னர், கர்த்தர் என் கூக்குரலுக்குச் செவிகொடுத்து, என்னுடைய விண்ணப்பங்களுக்குப் பதிலளித்து, உங்களில் அநேகரை அவருடைய சத்தியத்தின் அறிவிற்குக்கொண்டு வருவதில், என்னை தம் கரங்களிலே ஒரு கருவியாய் ஆக்கினார்.

11 ஆயினும், நான் என்னைக்குறித்து மேன்மை பாராட்ட தகுதியற்றவனாயிருப்பதால், இதில் நான் மகிமை கொள்வதில்லை.

12 இப்பொழுதும் நீங்கள் நோவா ராஜாவினால் ஒடுக்கப்பட்டு, அவனுக்கும் அவனுடைய ஆசாரியர்களுக்கும் அடிமைகளாகவிருந்து, அவர்களினாலே துன்மார்க்கத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளீர்கள்; ஆதலால் நீங்கள் அக்கிரமத்தின் கட்டுக்களினாலே கட்டப்பட்டிருந்தீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

13 இப்பொழுதும் இந்தக் கட்டுக்களிலிருந்தும், ஆம், நோவா ராஜா மற்றும் அவனுடைய ஜனங்களின் கைகளிலிருந்தும், அக்கிரமத்தின் கட்டுக்களிலிருந்தும் தேவனுடைய வல்லமையால் தப்புவிக்கப்பட்டமையால், நீங்கள் சுதந்தரமாக்கப்பட்ட இந்த சுதந்திரத்திலே நிலைத்திருந்து, ஒருவனையும் உங்களுக்கு ராஜாவாயிருக்க நம்பிக்கை வைக்காமலிருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

14 தேவனுடைய வழிகளிலே நடந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற தேவனுடைய மனுஷனைத் தவிர, வேறொருவனையும் உங்களின் ஆசிரியராகவும், ஊழியக்காரராகவும் இருக்க நம்பாதிருங்கள்.

15 இவ்விதமாய் ஜனங்களுக்குள்ளே பிணக்குகள் இல்லாமலிருக்க ஒவ்வொருவனும் தன்னைப்போல, தன் அயலானை நேசிக்கவேண்டுமென்று, ஆல்மா அவர்களுக்குக் கற்பித்தான்.

16 இப்பொழுதும், அவர்களுடைய சபையைத் தோற்றுவித்தவனாய் இருந்தபடியால், ஆல்மா அவர்களின் பிரதான ஆசாரியனாயிருந்தான்.

17 அந்தப்படியே, தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றவன் மூலமாக அல்லாமல் ஒருவனும் போதிப்பதற்கோ, பிரசங்கிப்பதற்கோ அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. ஆதலால் அவன் அவர்களுடைய சகல ஆசாரியர்களையும், சகல ஆசிரியர்களையும் நியமித்தான். நியாயவான்களைத் தவிர வேறொருவரும் நியமிக்கப்படவில்லை.

18 ஆதலால் அவர்கள் தங்கள் ஜனத்தைக் கண்காணித்து, நீதிக்குரிய காரியங்களால் அவர்களைப் போஷித்தார்கள்.

19 அந்தப்படியே, அவர்கள் தேசத்திலே மிகவும் விருத்தியடையத் தொடங்கினார்கள்; அவர்கள் அத்தேசத்தை ஏலாம் என்றழைத்தார்கள்.

20 அந்தப்படியே, அவர்கள் ஏலாம் தேசத்திலே பலுகிப்பெருகி, மிகவும் விருத்தியடைந்தார்கள்; அவர்கள் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதை ஏலாம் பட்டணம் என்றழைத்தார்கள்.

21 இருப்பினும் தம்முடைய ஜனத்தைக் கடிந்து கொள்வது ஏற்றதெனக் கர்த்தர் காண்கிறார்; ஆம், அவர்களுடைய பொறுமையையும் விசுவாசத்தையும் அவர் சோதிக்கிறார்.

22 ஆயினும், எவன் அவர் மீது தன் நம்பிக்கையை வைக்கிறானோ, அவனே கடைசி நாளிலே உயர்த்தப்படுவான். ஆம், இந்த ஜனத்திற்கும் அது அவ்வாறே இருந்தது.

23 ஏனெனில் இதோ, அவர்கள் அடிமைத்தனத்திற்குள்ளே கொண்டுபோகப்பட்டு, ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபின் தேவனானவரும், கர்த்தராகிய அவர்களுடைய தேவனேயல்லாமல் வேறொருவரும் அவர்களைத் தப்புவிக்க முடியவில்லை, என்பதை உங்களுக்குக் காண்பிப்பேன்.

24 அந்தப்படியே, அவர் அவர்களைத் தப்புவிக்கப்பண்ணி, தம்முடைய பலத்த வல்லமைகளைக் காண்பித்தார். அவர்களின் களிகூர்தல் அதிகமாயிருந்தது.

25 இதோ, அந்தப்படியே, ஏலாம் தேசத்திலுள்ள ஏலாம் பட்டணத்திலே, அவர்கள் சுற்றியுமுள்ள நிலத்தைப் பண்படுத்திக்கொண்டிருந்தபோது, தேசத்தின் எல்லைகளிலே லாமானியர்களுடைய ஒரு சேனை வருவதைக் கண்டார்கள்.

26 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மாவின் சகோதரர்கள் தங்கள் வயல்களிலிருந்து ஓடி, ஏலாம் பட்டணத்திலே ஏகமாய்க் கூடினார்கள்; லாமானியர்கள் வந்ததினிமித்தம் அதிகமாய் திகிலடைந்தார்கள்.

27 ஆனால் ஆல்மா போய் அவர்கள் மத்தியிலே நின்று, அவர்கள் பயப்படக்கூடாதென்றும் கர்த்தராகிய தங்கள் தேவனை நினைவுகூரவேண்டும் என்றும், அவர் அவர்களைத் தப்புவிக்கப்பண்ணுவார் என்றும், புத்தி சொன்னான்.

28 ஆதலால் அவர்கள் தங்கள் பயத்தை அடக்கி, லாமானியர்களின் இருதயங்களை மிருதுவாக்க வேண்டுமெனவும், தங்களையும், தங்கள் மனைவிகளையும், பிள்ளைகளையும், அவர்கள் தப்பவிடும்படி கர்த்தரிடத்திலே கூக்குரலிட்டார்கள்.

29 அந்தப்படியே, கர்த்தர் லாமானியர்களின் இருதயங்களை மிருதுவாக்கினார். ஆல்மாவும் அவனுடைய சகோதரரும் போய் அவர்களுடைய கைகளுக்குள்ளே தங்களை ஒப்புவித்தார்கள்; லாமானியர்கள் ஏலாம் தேசத்தை ஆக்கிரமித்துக்கொண்டார்கள்.

30 இப்பொழுது லிம்கி ராஜாவினுடைய ஜனத்தைப் பின் தொடர்ந்துபோன லாமானியர்களின் சேனைகள், அநேக நாட்களாய் வனாந்தரத்திலே தொலைந்து போனார்கள்.

31 இதோ, அவர்கள் அந்த நோவா ராஜாவினுடைய ஆசாரியர்களை, அமுலோன் என்று அவர்கள் அழைத்த ஒரு இடத்திலே கண்டார்கள்; அவர்கள் அமுலோன் தேசத்தைச் சுதந்தரித்து, நிலத்தைப் பண்படுத்தத் துவங்கியிருந்தார்கள்.

32 இப்பொழுது அந்த ஆசாரியர்களின் தலைவனுடைய பெயர் அமுலோன் என்பதாகும்.

33 அந்தப்படியே, அமுலோன் லாமானியர்களிடம் கெஞ்சினான்; அவன், லாமானியர்களின் குமாரத்திகளான தங்கள் மனைவிகள், தங்களுடைய புருஷர்களை தங்கள் சகோதரர்கள் சங்கரிக்கக்கூடாதென்று, அவர்களிடம் கெஞ்சும்படி அனுப்பினான்.

34 அவர்களுடைய மனைவிகளினிமித்தம் லாமாமானியர்கள், அமுலோன் மீதும், அவனுடைய சகோதரர் மீதும் இரக்கம்கொண்டு, அவர்களைச் சங்கரிக்கவில்லை.

35 அமுலோனும் அவன் சகோதரர்களும் லாமானியரோடு சேர்ந்து, நேபியின் தேசத்தைத் தேடி வனாந்தரத்திலே போகும்போது, ஆல்மாவும் அவன் சகோதரரும் சுதந்தரித்த, ஏலாம் தேசத்தைக் கண்டார்கள்.

36 அந்தப்படியே, ஆல்மாவும், அவன் சகோதரர்களும், நேபியின் தேசத்திற்குப் போகும் வழியை தங்களுக்கு காண்பிப்பார்களெனில், அவர்கள் ஜீவனையும் சுதந்தரத்தையும் கொடுப்போமென்று லாமானியர்கள் வாக்குத்தத்தம் கொடுத்தார்கள்.

37 ஆனால் ஆல்மா நேபியின் தேசத்திற்கு செல்லும் வழியை அவர்களுக்குக் காண்பித்த பின்பு, லாமானியர்கள் தங்களின் வாக்கை நிறைவேற்றாமல், ஆல்மாவின் மீதும் அவன் சகோதரர் மீதும், ஏலாம் தேசத்தைச் சுற்றியும், காவல் வைத்தார்கள்.

38 அவர்களில் மீதியானோர் நேபியின் தேசத்திற்குச் சென்றார்கள். அவர்களுடைய ஒரு பகுதியினர் ஏலாம் தேசத்திற்குத் திரும்பி, தங்களுடன் தேசத்திலே விடப்பட்ட காவற்காரர்களின் மனைவிகளையும், பிள்ளைகளையும் கூட்டி வந்தார்கள்.

39 லாமானியர்களின் ராஜா, ஏலாம் தேசத்திலே இருந்த தன் ஜனங்களின் மீது, அமுலோன் ராஜாவாகவும், அதிகாரியாகவும் இருக்க அனுமதித்தான். இருப்பினும் அவன் லாமானியர்களின் ராஜாவினுடைய சித்தத்திற்கு விரோதமாய் ஒன்றையும் செய்ய அதிகாரம் இல்லாதிருப்பான்.