வேதங்கள்
மோசியா 26


அதிகாரம் 26

சபையின் அநேக உறுப்பினர்கள் அவிசுவாசிகளால் பாவத்திற்குள் நடத்தப்படுதல் – ஆல்மா நித்தியஜீவன் பெறுவானென்று வாக்குத்தத்தம் கொடுக்கப்படுதல். மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெறுபவர்கள் மன்னிப்பைப் பெறுவார்கள் – மனந்திரும்பி ஆல்மாவினிடத்திலும் கர்த்தரிடத்திலும் அறிக்கை செய்யும் பாவத்திலிருக்கிற சபை உறுப்பினர்கள் மன்னிக்கப்படுவார்கள்; இல்லையெனில் சபையின் ஜனத்தோடே எண்ணப்பட மாட்டார்கள். ஏறக்குறைய கி.மு. 120–100.

1 இப்பொழுது, அந்தப்படியே, பென்யமீன் ராஜா தன்னுடைய ஜனங்களிடத்தில் பேசியபோது வளர்ந்து கொண்டிருந்த தலைமுறை, சிறுபிள்ளைகளாயிருந்தபடியாலே, அவனுடைய வார்த்தைகளை அவர்களால் புரிந்து கொள்ளக்கூடாமற் போயிற்று; அவர்கள் தங்களுடைய பிதாக்களின் பாரம்பரியங்களிலே விசுவாசிக்கவில்லை.

2 மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து சொல்லப்பட்டிருந்தவைகளையும் அவர்கள் விசுவாசிக்கவில்லை. கிறிஸ்துவினுடைய வருகையைக்குறித்தும் அவர்கள் விசுவாசிக்கவில்லை.

3 இப்பொழுதும் அவர்களின் அவிசுவாசத்தினிமித்தம் தேவனுடைய வார்த்தையை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இருதயங்கள் கடினமாயின.

4 ஞானஸ்நானம் பெறவோ, சபையிலே சேர்ந்துகொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்தின்படியே தனிப்பட்ட ஜனமாயிருந்து, அதன்பின்பு எப்பொழுதும் கர்த்தராகிய தங்கள் தேவனை கூப்பிடாததினிமித்தம், மாம்சப்பிரகாரமான பாவநிலையிலே நிலைத்திருந்தார்கள்.

5 இப்பொழுதும் மோசியாவின் ஆட்சியிலே, அவர்கள் எண்ணிக்கையிலே தேவனுடைய ஜனத்திலே பாதி தொகையினராயும் இருக்கவில்லை; ஆனால் சகோதரர்கள் மத்தியிலே இருந்த வாக்குவாதங்களினிமித்தம் அதிக எண்ணிக்கை உள்ளவர்களானார்கள்.

6 அந்தப்படியே, தங்களுடைய இச்சகமான வார்த்தையினாலே சபையிலிருந்த அநேகரை வஞ்சித்து, அவர்களை அநேக பாவங்களைச் செய்யவைத்தார்கள்; ஆதலால் சபையைச் சார்ந்திருந்து, பாவம் செய்தவரெல்லாம் சபையினால் புத்தி சொல்லப்பட வேண்டியது அவசியமாயிற்று.

7 அந்தப்படியே, அவர்கள் ஆசாரியர்களின் முன் கொண்டுவரப்பட்டு ஆசிரியர்களால் ஆசாரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்; ஆசாரியர்கள் அவர்களை பிரதான ஆசாரியனான ஆல்மாவிடம் கொண்டுவந்தார்கள்.

8 இப்பொழுது மோசியா ராஜா சபையின் மீதான அதிகாரத்தை ஆல்மாவினிடத்திலே கொடுத்திருந்தான்.

9 அந்தப்படியே, ஆல்மா அவர்களைக் குறித்து ஒன்றும் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு விரோதமாய் அநேக சாட்சிகளிருந்தார்கள்; ஆம், அவர்களுடைய அக்கிரமங்களைக் குறித்து ஜனங்கள் எழுந்து, மிகுதியாய் சாட்சியளித்தார்கள்.

10 அப்படிப்பட்ட எந்தவொரு சம்பவமும் சபையிலே முன்பு நடந்ததில்லை; ஆதலால் ஆல்மா ஆவியிலே கலக்கமுற்று, அவர்கள் ராஜாவின் முன்பு கொண்டு செல்லப்படும்படி செய்தான்.

11 அவன் ராஜாவை நோக்கி: இதோ, தங்களுடைய சகோதரர்களாலே குற்றம் சாட்டப்பட்ட, அநேகரை உனக்கு முன்பாக கொண்டுவந்திருக்கிறோம். ஆம், அவர்கள் பலவிதமான அக்கிரமங்கள் செய்தபோது பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அக்கிரமங்களுக்காக மனந்திரும்பவில்லை. அதன் நிமித்தம் அவர்களுடைய குற்றங்களுக்குத் தக்கவாறு நீர் அவர்களை நியாயம் விசாரிக்கும்படி, உமக்கு முன்பாக அவர்களைக் கொண்டு வந்திருக்கிறேன், என்றான்.

12 ஆனால் மோசியா ராஜாவோ ஆல்மாவை நோக்கி: இதோ, நான் அவர்களை நியாயம் விசாரிக்கப்போவதில்லை; ஆதலால் அவர்கள் நியாயம் விசாரிக்கப்படும்படி அவர்களை உமது கைகளிலே ஒப்படைக்கிறேன், என்றான்.

13 இப்பொழுதும் ஆல்மாவின் ஆவி மறுபடியும் கலக்கமுற்றது; தேவனுடய பார்வையிலே குற்றம் செய்துவிடுவோமோ என்ற பயத்தினால், இந்தக் காரியத்தைக் குறித்து தான் என்ன செய்யவேண்டுமென அவன் சென்று கர்த்தரிடத்திலே வேண்டுதல் செய்தான்.

14 அந்தப்படியே, அவன் தன் முழு ஆத்துமாவையும் தேவனிடத்திலே ஊற்றிய பின்னர், கர்த்தருடைய சத்தம் அவனுக்கு உண்டாகி, சொன்னது:

15 ஆல்மாவே, நீ பாக்கியவான், மார்மன் தண்ணீர்களிலே ஞானஸ்நானம் பெற்றவர்களும் பாக்கியவான்கள். என் தாசனாகிய அபிநாதியின் வார்த்தைகளில் மாத்திரம், உனது மிகுந்த விசுவாசத்தினிமித்தம் நீ பாக்கியவான்.

16 அவர்களுக்கு நீ பேசிய வார்த்தைகளில் மாத்திரம், அவர்களுடைய மிகுந்த விசுவாசத்தினிமித்தம் அவர்கள் பாக்கியவான்கள்.

17 இந்த ஜனத்திற்குள்ளே ஒரு சபையை ஸ்தாபித்ததினிமித்தம் நீ பாக்கியவான்; அவர்கள் ஸ்திரப்படுத்தப்படுவார்கள், என் ஜனமாயுமிருப்பார்கள்.

18 ஆம், என் நாமத்தைத் தாங்க சித்தமாயிருக்கும் இந்த ஜனங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் என் நாமத்தினாலே அழைக்கப்படுவார்கள்; அவர்கள் என்னுடையவர்கள்.

19 மீறுகிறவனைக் குறித்து என்னிடம் விசாரித்ததினிமித்தம் நீ பாக்கியவான்.

20 நீ என்னுடைய தாசன்; நீ நித்திய ஜீவனைப் பெறுவாய் என்று நான் உன்னுடனே உடன்படிக்கை பண்ணுகிறேன். நீ என்னைச் சேவித்து, என் நாமத்திலே போய், என் ஆடுகளை ஒன்றாய்ச் சேர்ப்பாயாக.

21 என் சத்தத்தைக் கேட்கிறவனே என்னுடைய ஆடாயிருப்பான்; அவனை நீங்கள் சபையிலே ஏற்றுக்கொள்ளுங்கள். நானும் அவனை ஏற்றுக்கொள்வேன்.

22 ஏனெனில் இதோ, இது என்னுடைய சபையாயிருக்கிறது; ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் மனந்திரும்புதலுக்கேதுவாக ஞானஸ்நானம் பெறுவார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் என் நாமத்திலே விசுவாசிப்பார்கள்; அவனை நான் தாராளமாய் மன்னிப்பேன்.

23 ஏனெனில் உலகத்தின் பாவங்களை நான் என் மீது சுமந்துகொண்டேன்; ஏனெனில் நானே அவர்களை சிருஷ்டித்தேன்; முடிவுபரியந்தமும் விசுவாசிக்கிறவனுக்கு நானே எனது வலதுபாரிசத்திலே ஒரு இடத்தைக் கொடுக்கிறேன்.

24 ஏனெனில் இதோ, என்னுடைய நாமத்தினாலே அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்; என்னை அவர்கள் அறிவார்களெனில், அவர்கள் வந்து, என்னுடைய வலது பாரிசத்திலே ஒரு இடத்தை நித்தியமாய் பெற்றுக்கொள்வார்கள்.

25 இரண்டாம் எக்காளம் சத்தமிடுகிறபோது, என்னை அறியாதவர்கள் வந்து, என் முன்பாக நிற்பார்கள்.

26 கர்த்தராகிய தங்கள் தேவன் நானே என்றும், தங்களின் மீட்பரும் நானே என்றும், அறிந்துகொள்வார்கள்; ஆனாலும் அவர்கள் மீட்கப்படமாட்டார்கள்.

27 அப்பொழுது அவர்களை நான் ஒருபோதும் அறியேன் என்று அவர்களிடம் அறிக்கையிடுவேன்; பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்ட என்றுமுள்ள அக்கினிக்குள்ளே அவர்கள் பிரவேசிப்பார்கள்.

28 ஆகையால் உங்களுக்கு நான் சொல்வது என்னவெனில், என் சத்தத்திற்கு செவிகொடாதவன் எவனோ, அவனை என் சபையினுள் ஏற்றுக்கொள்ளாமலிருப்பீர்களாக. நானும் அவனை கடைசி நாளிலே ஏற்றுக்கொள்ளாமலிருப்பேன்.

29 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன், போ, எனக்கு விரோதமாய் எவன் மீறுதல் செய்கிறானோ, அவன் செய்த பாவங்களின் படியே, அவனை நியாய விசாரணை செய்வாயாக; அவன் தன் பாவங்களை உனக்கும் எனக்கும் முன்பு அறிக்கையிட்டு, தன் இருதயத்தின் உத்தமத்திலே மனந்திரும்புவானேயாகில், அவனை மன்னித்து விடுவாயாக. நானும் அவனை மன்னிப்பேன்.

30 ஆம், எவ்வெப்போது என் ஜனங்கள் மனந்திரும்புவார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமான அவர்களது மீறுதல்களை நான் மன்னிப்பேன்.

31 நீங்களும் ஒருவருக்கொருவர் உங்கள் மீறுதல்களை மன்னியுங்கள். ஒருவன் தான் மனந்திரும்புகிறேன் என்று சொல்லியும், தன் அயலானின் மீறுதலை மன்னியாமலிருப்பவன், தன்மீது ஆக்கினையை வரவழைத்துக்கொண்டான், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

32 இப்பொழுது நான் உனக்குச் சொல்கிறேன், போ. தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பாமலிருப்பவன் எவனோ அவன் என் ஜனத்திற்குள்ளே எண்ணப்படமாட்டான்; இந்தச் சமயம் முதற்கொண்டு இது அனுசரிக்கப்படும்.

33 அந்தப்படியே, ஆல்மா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தான் அவைகளை வைத்திருக்கவும், தேவனுடைய கட்டளைகளுக்கேற்ப அந்த சபையின் ஜனத்தை விசாரிக்கும்படிக்கும் அவைகளை எழுதிக்கொண்டான்.

34 அந்தப்படியே, ஆல்மா போய் கர்த்தருடைய வார்த்தையின்படியே அக்கிரமங்களில் இருப்பவர்களை நியாயம் விசாரித்தான்.

35 அவன் தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, அவைகளை அறிக்கையிட்டவர்களை, சபையின் ஜனத்தோடே எண்ணினான்.

36 தங்களின் பாவங்களை அறிக்கையிடாமலும், தங்களின் மீறுதலிலிருந்து மனந்திரும்பாமலும் இருந்தவர்கள், சபையின் ஜனத்தோடே எண்ணப்படாமல் அவர்களுடைய நாமங்கள் நீக்கப்பட்டன.

37 அந்தப்படியே, ஆல்மா சபையினுள் எல்லாக் காரியங்களையும் ஒழுங்குபடுத்தினான்; அவர்கள் சபையின் காரியங்களிலே அதிகமாய் விருத்தியடைந்து, மறுபடியும் சமாதானத்தை அடைய ஆரம்பித்தார்கள். அவர்கள் தேவனுக்கு முன்பாக ஜாக்கிரதையாய் நடந்து, அநேகரை ஏற்றுக்கொண்டு, அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

38 இப்பொழுது சபையின் பொறுப்பாளிகளாக இருந்த ஆல்மாவும், அவனுடைய உடன் ஊழியக்காரர்களும் இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் செய்தார்கள்; சகல கருத்தோடும் நடந்து, சகல காரியங்களிலேயும், தேவனுடைய வார்த்தையைப் போதித்து, எல்லா விதமான உபத்திரவங்களையும் அனுபவித்து தேவசபையைச் சாராதவர் எல்லோராலும் துன்புறுத்தப்பட்டார்கள்.

39 அவர்கள் தங்கள் சகோதரருக்கு புத்தி சென்னார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும், தன் பாவத்தின்படியேயும், அல்லது அவன் செய்த பாவங்களுக்குத் தக்கதாயும் தேவனுடைய வார்த்தையால் புத்தி சொல்லப்பட்டும், இடைவிடாமல் ஜெபிக்கும்படிக்கும், எல்லா காரியங்களிலும் நன்றி செலுத்தும்படிக்கும் தேவனால் கட்டளையிடப்பட்டார்கள்.