வேதங்கள்
மோசியா 9


சீநிப்புடைய பதிவேடு – அவன் ஜனத்தார் சாரகெம்லா தேசத்தைவிட்டு வந்தக் காலத்திலிருந்து, லாமானியர்களின் கைகளுக்குத் தப்புவிக்கப்பட்ட காலம் வரைக்குமான விவரம்.

அதிகாரங்கள் 9 முதல் 22 உள்ளிட்டவை.

அதிகாரம் 9

சாரகெம்லாவிலிருந்து ஒரு கூட்டத்தை லேகி-நேபி தேசத்தைச் சுதந்தரிக்கும்படி சீநிப் நடத்திச் செல்லுதல் – அந்த தேசத்தை அவர்கள் சுதந்தரிக்க லாமானிய ராஜா அனுமதித்தல் – லாமானியர்களுக்கும் சீநிப்பின் ஜனங்களுக்கும் இடையே யுத்தம் எழுதல். ஏறக்குறைய கி.மு. 200–187.

1 சீநிப்பாகிய நான், நேபியர்களுடைய பாஷை முழுவதையும் கற்பிக்கப்பட்டவனாயும், எங்கள் பிதாக்கள் முதற் சுதந்தரித்த தேசமான நேபி தேசத்தைப்பற்றி அறிந்தவனாயும், லாமானியர்களின் சேனைகளை வேவு பார்த்து, எங்களின் சேனை அவர்களை மேற்கொண்டு, அழித்துப்போட அவர்களுக்குள்ளே வேவுகாரனாக அனுப்பப்பட்டவனுமாயிருந்தேன்; ஆனால் அவர்களுக்குள்ளே நன்மையானதைக் கண்டபோது, அவர்கள் அழிக்கப்படக்கூடாது என வாஞ்சித்தேன்.

2 ஆதலால் அவர்களுடன் எங்களின் அதிகாரி ஒரு ஒப்பந்தம் செய்யவேண்டுமென்று, நான் என் சகோதரரோடு வனாந்தரத்திலே வாக்குவாதம் செய்தேன்; ஆனால் அவனோ கடினமானவனும் இரத்ததாகம் கொண்டவனாயும் இருந்தபடியால், நான் கொலை செய்யப்பட உத்தரவிட்டான்; அதிக இரத்தம் சிந்தப்பட்டு நான் காப்பாற்றப்பட்டேன், ஆனால் வனாந்தரத்திலே எங்களுடைய சேனையின் அதிகமானோர் அழிந்துபோகும்வரை, தகப்பனுக்கு விரோதமாய் தகப்பனும், சகோதரனுக்கு விரோதமாய் சகோதரனும் சண்டையிட்டார்கள்; தப்பவிடப்பட்ட நாங்கள், அவர்களின் மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும் நடந்த கதையைச் சொல்ல சாரகெம்லா தேசத்திற்குத் திரும்பினோம்.

3 ஆகிலும் நான் எங்களுடைய பிதாக்களின் தேசத்தை சுதந்தரிக்க அதிக வாஞ்சையுள்ளவனாய், தேசத்தை சுதந்தரிக்க விரும்பின அநேகரைக் கூட்டிச் சேர்த்து, தேசத்திற்குச் செல்ல வனாந்தரத்தினுள் மறுபடியும் எங்கள் பயணத்தை மேற்கொண்டோம். நாங்கள் தேவனாகிய எங்கள் கர்த்தரை நினைவுகூர மந்தமுள்ளவர்களாய் இருந்ததினிமித்தம், பட்டினியாலும் கொடிய உபத்திரவங்களினாலும் வாதிக்கப்பட்டோம்.

4 ஆயினும் வனாந்தரத்திலே அதிக நாட்கள் அலைந்து திரிந்த பின்பு, எங்களுடைய பிதாக்களின் தேசத்திற்கு அருகாமையிலே இருக்கிற, எங்கள் சகோதரர்கள் கொலை செய்யப்பட்ட இடத்திலே பாளயமிறங்கினோம்.

5 அந்தப்படியே, ராஜாவினுடைய சுபாவ குணத்தை அறியவும், நான் என் ஜனத்தாரோடு சென்று சமாதானமாய் என் ஜனத்தோடு அத்தேசத்தைச் சுதந்தரிக்கக்கூடுமா, என அறியவும் ராஜாவைச் சந்திக்க, என் மனுஷருள் நான்கு பேரோடு மறுபடியும் பட்டணத்தினுள் சென்றேன்.

6 நான் ராஜாவிடம் சென்றேன். லேகி-நேபி தேசத்தையும், சீலோம் தேசத்தையும் நான் சுதந்தரித்துக்கொள்ள என்னுடனே உடன்படிக்கை செய்துகொண்டான்.

7 தன்னுடைய ஜனத்தார் அந்த தேசத்திலிருந்து வெளியேற வேண்டுமென்றும் அவன் கட்டளையிட்டான். நானும் என்னுடைய ஜனமும் அத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி அதனுள் பிரவேசித்தோம்.

8 கட்டடங்களைக் கட்டவும், பட்டணத்தின் மதில்களைப் புதுப்பிக்கவும் துவங்கினோம். ஆம் லேகி-நேபி பட்டணத்தின் மதில்களையும் சீலோம் பட்டணத்தின் மதில்களையும் புதுப்பித்தோம்.

9 நாங்கள் பூமியைப் பண்படுத்தத் தொடங்கினோம், சகல விதமான விதைகளையும், மற்றும் சோளம், கோதுமை, வாற்கோதுமை, நீஸ், சும் ஆகியவைகளின் விதைகளையும் எல்லாவிதமான கனிகளின் விதைகளையும், பூமியில் பயிரிடத் துவங்கினோம்; நாங்கள் பலுகிப் பெருகி தேசத்திலே விருத்தியடைந்தோம்.

10 இப்பொழுதும் லாமான் ராஜா என்னுடைய ஜனத்தை அடிமைத்தனத்திற்குள்ளாக கொண்டுவரும்படிக்கே, நாங்கள் அத்தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடுத்தான். அது அவனுடைய தந்திரமும் வஞ்சனையுமாயிருக்கிறது.

11 ஆனபடியால், பன்னிரண்டு வருஷமளவும், நாங்கள் அத்தேசத்திலே வாசம்பண்ணின பின்பு, அவர்கள் என் ஜனத்தின்மீது அதிகாரம் செலுத்த முடியாமலும், அவர்களை அடிமைத்தனத்திற்குள் கொண்டுவரக்கூடாதபடி தேசத்திலே எவ்விதத்திலும் என் ஜனம் பெலன் பெற்றுவிடுமோ என்று, லாமான் ராஜா மனங்கலங்கினான்.

12 இப்பொழுதும், அவர்கள் சோம்பேறிகளும், விக்கிரக ஆராதனை செய்யும் ஜனங்களாயும் இருந்தார்கள்; ஆதலால் எங்களுடைய கரங்களின் பிரயாசங்களால் புசித்து, எங்கள் வயல்வெளியின் மந்தைகளை புசித்துக் களிப்பதற்காக அடிமைத்தனத்திற்குள் எங்களைக் கொண்டு வர விரும்பினார்கள்.

13 ஆனபடியால், லாமான் ராஜா தன் ஜனம் என்னுடைய ஜனத்தோடு கலகம் செய்ய வேண்டுமென்று தூண்டிவிட்டான்; ஆதலால் தேசத்திலே யுத்தங்களும் பிணக்குகளும் நடக்கத் தொடங்கின.

14 நான் நேபியின் தேசத்தை ஆண்ட பதிமூன்றாம் வருஷத்திலே சீலோம் தேசத்திலிருந்து தெற்கு திசையிலே, என்னுடைய ஜனத்தார் தங்களின் மந்தைகளுக்கு தண்ணீர் காட்டி, மேய்த்துக்கொண்டும், தங்கள் நிலங்களை பண்படுத்திக்கொண்டுமிருக்கும்போது, அவர்களின் மந்தைகளையும், வெளியின் தானியங்களையும் எடுத்துச் செல்லும்படி லாமானியர்களின் ஏராளமான சேனைகள் அவர்கள் மேல் விழுந்து, அவர்களை வெட்டிப்போடத் துவங்கினார்கள்.

15 ஆம், அந்தப்படியே, மேற்கொள்ளப்படாதவர்களெல்லாம் நேபியர்களின் பட்டணத்திற்குள்ளே ஓடி, பாதுகாப்பிற்காக என்னை அழைத்தார்கள்.

16 அந்தப்படியே, அவர்களை நான் விற்களாலும், அம்புகளாலும், பட்டயங்களாலும், உடைவாள்களாலும், தண்டாயுதங்களினாலும், கவண்களாலும், எங்களால் செய்யமுடிந்த சகல விதமான ஆயுதங்களாலும் ஆயுதந்தரித்து, லாமானியர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ண நானும் என் ஜனமும் போனோம்.

17 ஆம், கர்த்தருடைய பெலத்தாலே லாமானியர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணப் போனோம். ஏனெனில் எங்கள் பிதாக்கள் தப்புவிக்கப்பட்டதை நினைவுகூரும்படி விழித்தெழுந்தவர்களாய், எங்களுடைய சத்துருக்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவிக்கும்படி நானும் என் ஜனமும் அவரிடத்திலே உருக்கமாய் கூக்குரலிட்டோம்.

18 எங்களின் கூக்குரலைக் கேட்டு, தேவன் பதிலளித்தார். அவருடைய பெலத்திலே சென்றோம். லாமானியர்களுக்கு விரோதமாய்ப் போய், ஒரு இரவு மற்றும் பகலுக்குள் மூவாயிரத்து நாற்பத்தி மூன்றுபேரை சங்கரித்தோம்; எங்களின் தேசத்தைவிட்டு அவர்களை நாங்கள் துரத்தும் மட்டிலுமாய் சங்கரித்தோம்.

19 அவர்களில் மரித்தோரை என் சொந்தக் கைகளால் அடக்கம்பண்ண உதவினேன். இதோ நாங்கள் மிகவும் துக்கித்துப் புலம்பும்படிக்கு, எங்கள் சகோதரர்களில் இருநூற்று எழுபத்தி ஒன்பது பேர் மரித்துப்போனார்கள்.