வேதங்கள்
மரோனி 7


அதிகாரம் 7

கர்த்தருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிக்க ஓர் அழைப்பு கொடுக்கப்படுதல் – உண்மையான நோக்கத்தோடு ஜெபியுங்கள் – கிறிஸ்துவின் ஆவி தீமையிலிருந்து நன்மையை மனுஷன் அறியச் செய்கிறது – கிறிஸ்துவை மறுதலித்து பொல்லாப்பைச் செய்யும்படியாக சாத்தான் மனுஷனை இணங்கச் செய்கிறான் – கிறிஸ்துவின் வருகையை தீர்க்கதரிசிகள் வெளியரங்கப்படுத்துதல் – விசுவாசத்தினாலே அற்புதங்கள் நடப்பிக்கப்பட்டு தூதர்கள் பணிவிடை செய்தல் – நித்திய ஜீவனுக்காக மனுஷர் நம்பி தயாளத்துவத்தைப் பற்றிக்கொள்ளவேண்டும். ஏறக்குறைய கி.பி. 401–421.

1 இப்பொழுதும், மரோனியாகிய நான், விசுவாசத்தையும் நம்பிக்கையையும், தயாளத்துவத்தையும் குறித்து என் தகப்பனாகிய மார்மன் பேசிய வார்த்தைகளில் சிலவற்றை எழுதுகிறேன். ஏனெனில் ஜனங்கள் ஆராதனை ஸ்தலமாக இருக்கக் கட்டின ஜெப வீட்டிலே அவர் அவர்களுக்குப் போதித்தபோது, அவர்களிடத்தில் இவ்விதமாய்ப் பேசினார்.

2 இப்பொழுதும் என் பிரியமான சகோதரரே, மார்மனாகிய நான் உங்களிடத்தில் பேசுகிறேன்; பிதாவாகிய தேவன், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆகியோரின் கிருபையாலும், அவருடைய பரிசுத்த சித்தத்தாலும், எனக்குள்ள அவருடைய அழைப்பின் வரத்தின் நிமித்தமும், நான் இச்சமயத்தில் உங்களிடத்தில் பேச அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

3 ஆதலால் கிறிஸ்துவின் சமாதானமுள்ள சீஷர்களாயும் இக்காலம் முதற்கொண்டு, நீங்கள் அவரோடு பரலோகத்தில் இளைப்பாறும்வரைக்குமாய் இப்போதிலிருந்து கர்த்தருடைய இளைப்பாறுதலினுள் பிரவேசிக்கவேண்டிய போதுமான நம்பிக்கையைப் பெற்றவர்களுமாயிருக்கிற சபையோரே, உங்களிடத்தில் பேசுவேன்.

4 இப்பொழுதும் என் சகோதரரே, நீங்கள் மனுபுத்திரரோடு சமாதானமாய் நடக்கிறதாலே இக்காரியங்களை உங்களைக் குறித்து நிதானிக்கிறேன்.

5 ஏனெனில் அவர்களுடைய கிரியைகளினாலே அவர்களை நீங்கள் அறிவீர்கள் என்ற தேவ வசனத்தை நான் நினைவுகூருகிறேன்; ஏனெனில் அவர்களுடைய கிரியைகள் நல்லதாயிருந்தால், அப்போது அவர்களும் நல்லவர்களாய் இருக்கிறார்கள்.

6 ஏனெனில் இதோ, பொல்லாதவனாய் இருக்கிற மனுஷன் நல்லதைச் செய்யமுடியாதென்று தேவன் சொல்லியிருக்கிறார்; அவன் தேவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தாலோ அல்லது ஜெபித்தாலோ, அவன் அதை உண்மையான நோக்கத்தோடு செய்யவில்லையெனில், அவனுக்கு எந்தப் பிரயோஜனமுமில்லை.

7 ஏனெனில் இதோ, அது அவனுக்கு நீதியாய் எண்ணப்படாது.

8 இதோ, ஒரு பொல்லாத மனுஷன் பொருளைக் கொடுத்தால், அவன் அதை விருப்பமில்லாமல் செய்கிறான்; ஆகவே அது அவனே அப்பொருளை வைத்துக்கொண்டதற்குச் சமமாய் எண்ணப்படும்; ஆதலால் அவன் தேவனுக்கு முன்பாக தீயவனாக எண்ணப்படுவான்.

9 அதுபோலவே ஒரு மனுஷன் இருதயத்தின் உண்மையான நோக்கமிராமல் ஜெபிப்பானேயாகில், அது அவனுக்குத் தீமையானதாக எண்ணப்படும்; ஆம், அப்படிப்பட்டவைகளை தேவன் ஏற்றுக்கொள்ளாததினாலே, அது அவனுக்குப் பிரயோஜனப்படுவதில்லை.

10 ஆதலால் பொல்லாத மனுஷன் நன்மை எதுவும் செய்யமுடியாது; அவன் நன்மையான ஈவையும் கொடுக்கமாட்டான்.

11 ஏனெனில் இதோ, ஒரு கசப்பான ஊற்று நல்ல தண்ணீரைக் கொடுக்க முடியாது; ஒரு நல்ல ஊற்று கசப்பான தண்ணீரைக் கொடுக்க முடியாது. ஆதலால் மனுஷன் பிசாசுக்கு ஊழியனாயிருந்து கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது; அவன் கிறிஸ்துவைப் பின்பற்றினால் அவன் பிசாசின் ஊழியனாய் இருக்கமுடியாது.

12 ஆதலால் நன்மையான சகல காரியமும் தேவனிடத்திலிருந்து வருகிறது; பொல்லாதவை பிசாசினிடத்திலிருந்து வருகிறது; பிசாசு தேவனுக்கு விரோதமாயிருந்து, அவருக்கு விரோதமாய் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டு, பாவத்திற்கும், பொல்லாததைத் தொடர்ந்து செய்வதற்கும் நயம் காட்டி அழைக்கிறான்.

13 ஆனால் இதோ, தேவனாலானது நல்லதைத் தொடர்ந்து செய்யும்படி நயம் காட்டி அழைக்கிறது; ஆதலால் நன்மை செய்யவும், தேவனை நேசிக்கவும், அவரைச் சேவிக்கவும், நயம்காட்டி அழைக்கிற எல்லாம் தேவனால் ஏவப்பட்டவை.

14 ஆதலால் எனக்குப் பிரியமான சகோதரரே, பொல்லாததை தேவனாலானது என்றும், அல்லது நன்மையானதையும், தேவனாலானதையும் பிசாசினாலானது என்றும் நிதானிக்காமல் ஜாக்கிரதையாயிருங்கள்.

15 இதோ, என் சகோதரரே நீங்கள் தீமையிலிருந்து நன்மையை அறிய நிதானிக்கும்படி விடப்பட்டிருக்கிறீர்கள்; இருண்ட இரவிலிருந்து பகல் வெளிச்சத்தை அறிவதெப்படியோ அப்படியே பூரண ஞானத்தோடு அறியத்தக்கதாக நிதானிக்கிற வழி தெளிவாயிருக்கிறது.

16 ஏனெனில் இதோ, ஒவ்வொருவனும் தீமையிலிருந்து நன்மையை அறியத்தக்கதாக அவனுக்கு கிறிஸ்துவின் ஆவி கொடுக்கப்பட்டிருக்கிறது; ஆதலால் நிதானிக்கிற வழியை நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன்; ஏனெனில் நன்மையைச் செய்ய அழைத்து கிறிஸ்துவில் விசுவாசிக்க ஏவும் எதுவும் கிறிஸ்துவினுடைய வல்லமையாலும், ஈவினாலும் அனுப்பப்பட்டவை; ஆகையால் அது தேவனாலானது என்று நீங்கள் பூரண ஞானத்தோடு அறிந்துகொள்ளலாம்.

17 ஆனால் பொல்லாதவைகளைச் செய்யவும், கிறிஸ்துவில் விசுவாசியாதிருக்கவும், அவரை மறுதலிக்கவும், தேவனை சேவிக்காதிருக்கும்படியாக மனுஷனைத் தூண்டுகிற எதுவும் பிசாசினாலானது என்று நீங்கள் பூரண ஞானத்தோடு அறிந்து கொள்ளலாம். ஏனெனில் பிசாசு கிரியை செய்வது இவ்விதமாயிருக்கிறது. ஏனெனில் ஒருவனை, ஒரே ஒருவனைக்கூட நன்மை செய்ய, அவனோ, அவனுடைய தூதர்களோ, அவனுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களோ உணர்த்துவதில்லை.

18 இப்பொழுதும், என் சகோதரரே, நீங்கள் நிதானிக்கிற ஒளியாகிய கிறிஸ்துவின் ஒளியை நீங்கள் அறிந்திருக்கிறதைக் கண்டு, தவறாய் நிதானிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் எப்படி நிதானிக்கிறீர்களோ அதே தீர்ப்பைக்கொண்டு நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.

19 ஆதலால் சகோதரரே நீங்கள் தீமையிலிருந்து நன்மையை அறியத்தக்கதாக, கிறிஸ்துவின் ஒளியிலே கருத்தாய்த் தேடவேண்டுமென்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்; நீங்கள் எல்லா நன்மையானவைகளையும் ஏற்றுக்கொண்டு அதைக் குற்றமெனத் தீர்க்காமலிருந்தால், நீங்கள் நிச்சயமாகவே கிறிஸ்துவின் பிள்ளையாய் இருப்பீர்கள்.

20 இப்பொழுதும் என் சகோதரரே, நீங்கள் எல்லா நன்மையான காரியத்தையும் எப்படி ஏற்றுக்கொள்ளக் கூடும்?

21 இப்பொழுதும், நான் பேசுவேன் என்று நான் சொன்ன அந்த விசுவாசத்திற்கு வருகிறேன்; நீங்கள் எல்லா நன்மையான காரியத்தையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான வழியை உங்களுக்குச் சொல்லுவேன்.

22 ஏனெனில் இதோ, அநாதியாய் என்றென்றுமாய் சகலத்தையும் தேவன் அறிந்து, இதோ, கிறிஸ்துவின் வருகையைக் குறித்து வெளியரங்கமாக்கவும், மனுபுத்திரருக்குள்ளே ஊழியம் பண்ணவும் தூதர்களை அனுப்பினார்; ஒவ்வொரு நல்ல காரியமும் கிறிஸ்துவினாலே வர வேண்டும்.

23 தேவனும் தம்முடைய சொந்த வாயினால், கிறிஸ்து வருவாரென்று தீர்க்கதரிசிகளுக்கு அறிவித்தார்.

24 இதோ, நன்மையானவைகளை மனுபுத்திரருக்கு பல வழிகளில் வெளிப்படுத்தினார்; நன்மையான காரியங்கள் அனைத்தும் கிறிஸ்துவினிடத்திலிருந்து வருகிறது; இல்லாவிடில் மனுஷர் வீழ்த்தப்பட்டார்கள், நன்மையான ஒன்றும் அவர்களுக்கு வந்திருக்காது.

25 ஆதலால் தூதர்களின் ஊழியத்தினாலும், தேவனின் வாயிலிருந்து புறப்பட்டுப் போகிற ஒவ்வொரு வார்த்தையினாலும், மனுஷர் கிறிஸ்துவில் விசுவாசத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்தார்கள்; இப்படியாக விசுவாசத்தினாலே அவர்கள் ஒவ்வொரு நன்மையான காரியத்தையும் ஏற்றுக் கொண்டார்கள்; கிறிஸ்துவின் வருகை வரைக்குமாய் இப்படியிருந்தது.

26 அவர் வந்த பிறகு, மனுஷரும் அவருடைய நாமத்தில் வைத்த விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டார்கள்; விசுவாசத்தினால் அவர்கள் தேவ குமாரர்களாகிறார்கள். கிறிஸ்து ஜீவிப்பது நிச்சயமாயிருப்பதுபோலவே, அவர் நம்முடைய பிதாக்களுக்கு நிச்சயமாய் பேசிச் சொன்ன வார்த்தைகளாவன: நீங்கள் நன்மையான எதையும் விசுவாசத்தோடே பெற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடனே, என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்கிற எதுவும், இதோ, அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.

27 ஆதலால், எனக்குப் பிரியமான சகோதரரே, கிறிஸ்து மனுபுத்திரர் மேல் வைத்திருந்த தம்முடைய இரக்க உரிமைகளைப் பிதாவினிடத்திலிருந்து கோரத்தக்கதாக, அவர் பரலோகத்திற்கு ஏறி, தேவனுடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்ததினிமித்தம் அற்புதங்கள் ஓய்ந்துபோனதா?

28 ஏனெனில் அவர் நியாயப்பிரமாணத்தின் முடிவுகளை நிறைவேற்றினார். அவர் தம்மில் விசுவாசம் வைத்திருப்போர் யாவர் மேலும் உரிமை கோருகிறார்; அவரில் விசுவாசம் வைத்திருக்கிறவர்கள் எல்லா நன்மையான காரியத்தையும் பற்றிக் கொள்வார்கள்; ஆதலால் அவர் மனுபுத்திரருக்காக பரிந்துரைக்கிறார்; அவர் நித்தியமாய் பரலோகங்களில் வாசம் பண்ணுகிறார்.

29 எனக்குப் பிரியமான சகோதரரே, அவர் இதைச் செய்ததினிமித்தம் அற்புதங்கள் ஓய்ந்ததோ? இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அப்படியல்ல, மனுபுத்திரருக்குள்ளே தூதர்களும் பணிவிடை செய்வதிலிருந்து ஓய்ந்து போகவில்லை.

30 ஏனெனில் இதோ, பெலமான விசுவாசமும், எல்லா வகையான தெய்வத் தன்மையைக்கொண்ட உறுதியான மனதோடு இருப்பவர்களுக்கு தங்களையே காண்பித்து, அவருடைய வார்த்தையின் கட்டளையின்படியே ஊழியம்பண்ணவும், அவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.

31 அவர்களுடைய ஊழியத்தின் அலுவலாவது, மனுஷரை மனந்திரும்புதலுக்கு அழைத்தலும், மனுபுத்திரருக்குள்ளே பிதா செய்த தம்முடைய உடன்படிக்கைகளை நிறைவேற்றி, அதன் கிரியையைச் செய்தலும், அவர்கள் அவரைக் குறித்து சாட்சியம் கொடுக்கும்படியாக, கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரவான்களுக்கு கிறிஸ்துவினுடைய வார்த்தையை அறிவித்து, மனுபுத்திரருக்குள்ளே வழியை ஆயத்தப்படுத்துவதுமாகும்.

32 இப்படிச் செய்வதின் மூலமாக, தேவனாகிய கர்த்தர் மனுஷரில் மீதியானோர் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கவும், பரிசுத்த ஆவியானவர் தம்முடைய வல்லமைக்கேற்ப அவர்களுடைய இருதயங்களில் இடம்கொள்ளும்படியாகவும், ஒரு வழியை ஆயத்தப்படுத்துகிறார்; இப்படியாக பிதா தாம் மனுபுத்திரருடன் செய்துகொண்ட உடன்படிக்கைகளை நிறைவேறப்பண்ணுகிறார்.

33 கிறிஸ்து, நீங்கள் என்னில் விசுவாசம் கொண்டிருந்தால், எனக்குத் தேவையான எந்த காரியத்தையும் செய்ய வல்லமையை நீங்கள் பெறுவீர்கள் என்று சொல்லியிருக்கிறார்.

34 அவர், பூமியின் கடையாந்தரங்களே, நீங்கள் இரட்சிக்கப்படும்படி, மனந்திரும்பி என்னிடத்தில் வந்து, என் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, என்னை விசுவாசியுங்கள், என்றும் சொல்லியிருக்கிறார்.

35 இப்பொழுதும், எனக்குப் பிரியமான சகோதரரே, நான் உங்களிடத்தில் பேசின இக்காரியங்கள் உண்மையானவையானால், அவை சத்தியமானவையென்பதை கடைசி நாளில் வல்லமையோடும் மகா மகிமையோடும் தேவன் உங்களுக்குக் காண்பிப்பார். அவைகள் உண்மையாய் இருக்குமானால், அற்புதங்களின் நாள் ஒழிந்து போனதோ?

36 அல்லது மனுபுத்திரர் முன்பு தூதர்கள் தோன்றுவதை நிறுத்திவிட்டார்களோ? அல்லது அவர் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை அவர்களிடத்திலிருந்து எடுத்துக்கொண்டாரோ? அல்லது அவர் காலத்தின் கடைசிவரைக்கும், அல்லது பூமி நிலைத்திருக்கும்வரைக்கும், அல்லது அதின்மேல் இரட்சிக்கப்பட ஒரு மனுஷன் இருக்கும்வரைக்குமாய் அப்படிச் செய்வாரோ?

37 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படியல்ல; ஏனெனில் விசுவாசத்தினாலே அற்புதங்கள் நடப்பிக்கப்படுகின்றன; விசுவாசத்தினாலே தூதர்கள் தோன்றி மனுஷருக்குள்ளே ஊழியம் செய்கிறார்கள்; ஆகையால் இவைகள் ஓய்ந்து போயிருந்தால், இது அவிசுவாசத்தினிமித்தமே என்பதினால் மனுபுத்திரருக்கு ஐயோ, மற்றும் எல்லாம் வீணானது.

38 ஏனெனில் கிறிஸ்துவின் வார்த்தைகளின்படி, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தாலொழிய, ஒருவனும் இரட்சிக்கப்பட முடியாது; ஆகையால் இவைகள் ஒழிந்து போயிருக்குமானால், விசுவாசமும் ஒழிந்து போயிருக்கும்; மீட்பு செய்யப்படாததைப்போல அவர்கள் இருப்பதால், மனுஷனின் நிலை பரிதாபத்திற்குரியதாயிருக்கிறது.

39 ஆனால் இதோ, எனக்குப் பிரியமான சகோதரரே, உங்களைக் குறித்து நான் மேன்மையானவைகளை நிதானிக்கிறேன்; உங்களுடைய சாந்த குணத்தினிமித்தம் நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசிக்கிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன்; ஏனெனில் அவரில் உங்களுக்கு விசுவாசம் இல்லையெனில், அவருடைய சபையின் ஜனங்களுக்குள்ளே நீங்கள் எண்ணப்பட அபாத்திரராய் இருப்பீர்கள்.

40 எனக்குப் பிரியமான சகோதரரே, மறுபடியும் நான் உங்களிடத்தில் நம்பிக்கையைக் குறித்துப் பேசுகிறேன். நீங்கள் நம்பிக்கை இல்லாமல், விசுவாசத்தைப் பெறுவதெப்படி?

41 நீங்கள் எதை நம்புவீர்கள்? இதோ கிறிஸ்துவின் பாவநிவர்த்தி மற்றும் நித்திய ஜீவனுக்கேதுவாய் எழும்பும்படியான அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையின் மூலம், நீங்கள் நம்பிக்கையைப் பெற்றிருப்பீர்கள், என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். வாக்குத்தத்தத்தின்படியே அவரில் உள்ள உங்களுடைய விசுவாசத்தினிமித்தம் ஆகும்.

42 ஆதலால், ஒரு மனுஷனுக்கு விசுவாசமிருந்தால் அவன் நம்பிக்கையை உடையவனாக இருக்கவேண்டும்; ஏனெனில் விசுவாசமில்லாமல், எந்த நம்பிக்கையும் இருக்கமுடியாது.

43 மறுபடியும் அவன் சாந்தமாயும், இருதயத்தின் தாழ்மையோடும் இராவிட்டால், இதோ அவன் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் பெறமுடியாது என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.

44 அப்படியிருந்தால் அவனது விசுவாசமும், நம்பிக்கையும் வீணே. ஏனெனில் சாந்த குணமுள்ளவர்களையும், இருதயத்தில் தாழ்மையுள்ளவர்களையும் தவிர, வேறு ஒருவரும் தேவனுக்கு முன் ஏற்கப்படுவதில்லை; சாந்தமாயும் இருதயத்தில் தாழ்மையாயுமிருந்து, இயேசுவே கிறிஸ்து என்று பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே அறிக்கை பண்ணுகிறவன் நிச்சயமாய்த் தயாளத்துவத்தைப் பெறவேண்டும். ஏனெனில் அவனுக்குத் தயாளம் இல்லையானால், அவன் வெறுமையானவன். ஆகவே அவன் தயாளம் கொண்டிருக்க வேண்டும்.

45 தயாளத்துவம் நீடிய பொறுமையும் தயவுமுள்ளது, பொறாமைப்படாது, இறுமாப்பு அடையாது. சுயமாய் நாடாது. எளிதில் கோபப்படாது, பொல்லாப்பு நினையாது. அக்கிரமத்தில் களிகூராமல் சத்தியத்தில் களிகூரும். சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் விசுவாசிக்கும். சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும்.

46 ஆகையால் எனக்குப் பிரியமான சகோதரரே, உங்களுக்குத் தயாளத்துவம் இல்லையெனில் நீங்கள் ஒன்றுமில்லை. ஏனெனில் தயாளத்துவம் ஒருக்காலும் ஒழியாது. ஆதலால் சகலத்திலும் மேன்மையான தயாளத்துவத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் சகலமும் ஒழிந்துபோகும்.

47 ஆனால் தயாளத்துவம் கிறிஸ்துவின் தூய அன்பாய் இருக்கிறது. அது என்றென்றும் நிலைத்திருக்கும்; கடைசி நாளின்போது, அதை உடையவனாய்க் காணப்படுகிற எவனும், நன்மையை அடைவான்.

48 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, பிதா தம்முடைய குமாரனான, இயேசு கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாய் இருக்கிற யாவர் மேலும், அவர் அருளின இந்த அன்பினால் நீங்களும் நிரப்பப்படவும், தேவனுடைய குமாரர்களாக, அவர் இருக்கிற விதமாகவே நாம் அவரைப் பார்ப்போம் என்பதால், அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாமும் இருக்கும்படிக்கு, இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருக்கவும், அவர் தூயவராயிருப்பதைப் போலவே நாமும் தூய்மையாக்கப்படவும், அவரிடத்தில் இருதயத்தின் முழு ஊக்கத்தோடும் ஜெபியுங்கள். ஆமென்.