வேதங்கள்
மரோனி 8


அதிகாரம் 8

சிறு பிள்ளைகளின் ஞானஸ்நானம் பொல்லாத அருவருப்பானதாய் இருக்கிறது – பாவநிவர்த்தியின் மூலம் சிறுபிள்ளைகள் கிறிஸ்துவில் ஜீவனுள்ளோராய் இருக்கிறார்கள் – விசுவாசம், மனந்திரும்புதல், சாந்தம், இருதயத்தில் தாழ்மை, பரிசுத்த ஆவியானவரைப் பெறுதல், மற்றும் முடிவுபரியந்தம் நிலைத்திருத்தல் ஆகியவை இரட்சிப்புக்கு வழிநடத்தும். ஏறக்குறைய கி.பி. 401–421.

1 என் தகப்பனாகிய மார்மன், மரோனியாகிய எனக்கு எழுதின ஒரு நிருபம்; நான் ஊழியத்திற்கு என் அழைப்பினைப் பெற்றவுடனே, அது எனக்கு எழுதப்பட்டது. அவர் எனக்கு எழுதின விதமாவது,

2 எனக்குப் பிரியமான குமாரனாகிய மரோனியே, உன்னுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னைக் குறித்து சிந்தையுள்ளவராய், உன்னைத் தம்முடைய ஊழியத்திற்கும், தம்முடைய பரிசுத்த பணிக்கும் அழைத்திருப்பதினிமித்தம், நான் மிகவும் களிகூருகிறேன்.

3 நான் எப்பொழுதும் உன்னை என் ஜெபங்களில் நினைவுகூர்ந்து, பிதாவாகிய தேவன், நீ முடிவுபரியந்தமும் அவருடைய நாமத்தில் விசுவாசமாய் நிலைத்திருக்கும்வரை, அவர் உன்னைத் தம்முடைய முடிவற்ற நன்மையினாலும், கிருபையினாலும் பராமரிக்க வேண்டுமென்று, அவருடைய பரிசுத்த குழந்தையாகிய இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

4 இப்பொழுதும் என் குமாரனே, என்னை மிகவும் சஞ்சலப்படுத்துகிறதைக் குறித்து நான் உனக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் எழுமோ என்று என்னை சஞ்சலப்படுத்துகிறது.

5 ஏனெனில், நான் அறிந்தது மெய்யானால், உங்களுடைய சிறுபிள்ளைகளின் ஞானஸ்நானத்தைக் குறித்து உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் இருந்தன.

6 இப்பொழுதும் என் குமாரனே, இந்தப் பெரும் தவறு உங்களுக்குள்ளிருந்து நீக்கப்படும்படியாக, நீ கருத்தாய் ஊழியம் பண்ணவேண்டும். ஏனெனில் இந்த நோக்கத்திற்காகவே நான் இந்த நிருபத்தை எழுதினேன்.

7 ஏனெனில் நான் இந்தக் காரியத்தை உன்னிடத்திலிருந்து அறிந்த உடனே, நான் இதைக் குறித்து கர்த்தரிடத்தில் விசாரித்தேன். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே கர்த்தருடைய வார்த்தை என்னிடத்தில் உண்டாகி:

8 உங்களுடைய மீட்பரும், உங்களுடைய கர்த்தரும், உங்களுடைய தேவனுமான கிறிஸ்துவினுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். இதோ, நான் உலகத்திற்கு நீதிமான்களை அல்ல, பாவிகளை மனந்திரும்ப அழைக்கவே வந்தேன்; பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கல்ல; ஆதலால் சிறுபிள்ளைகள் பாவம் செய்யக் கூடாதவர்களாதலால் அவர்கள் சுகமுள்ளவர்களாக இருக்கிறார்கள்; ஆகவே ஆதாமின் சாபம் அவர்கள்மேல் வல்லமை கொள்ளாதபடி, அது அவர்களிடமிருந்து என்னுள் எடுத்துக் கொள்ளப்பட்டது; விருத்தசேதன நியாயப்பிரமாணமும் என்னில் ஒழிந்துபோயிற்று.

9 பரிசுத்த ஆவியானவர் இவ்விதமாய் தேவனுடைய வார்த்தையை எனக்கு வெளிப்படுத்தினார்; ஆதலால் என் பிரியமான குமாரனே, நீ சிறுபிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்பது, தேவனுக்கு முன்பு முற்றிலும் கேலி செய்வதாயிருக்கிறது, என்று நான் அறிகிறேன்.

10 இதோ, பொறுப்பேற்கக்கூடியவர்களுக்கும், பாவத்தைச் செய்யக்கூடுபவர்களுக்கும் பாவமன்னிப்பையும், ஞானஸ்நானத்தையும் போதிக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொல்லுகிறேன்; ஆம், மனந்திரும்பி, ஞானஸ்நானம் பெற்று தங்களின் சிறுபிள்ளைகளைப் போலவே தாழ்மையாயிருக்கவேண்டுமென்று பெற்றோருக்குப் போதி; அவர்கள் தங்களுடைய சிறுபிள்ளைகளுடனே இரட்சிக்கப்படுவார்கள்.

11 அவர்களுடைய சிறுபிள்ளைகளுக்கு மனந்திரும்புதலோ, ஞானஸ்நானமோ அவசியமில்லை. இதோ, ஞானஸ்நானம், பாவமன்னிப்புகேதுவாய் கட்டளைகளை நிறைவேற்றும்படிக்கான, மனந்திரும்புதலுக்காகவேயாகும்.

12 சிறுபிள்ளைகள் உலக அஸ்திபாரம் முதற்கொண்டு கிறிஸ்துவில் ஜீவனுள்ளோராய் இருக்கிறார்கள்; இப்படி இல்லையெனில், தேவன் பட்சபாதமுள்ள தேவனாயும், மாறுகிற தேவனாயும் மனுஷரை மதிக்கிறவராயுமிருக்கிறார்; ஏனெனில் எவ்வளவு சிறுபிள்ளைகள் ஞானஸ்நானம் இல்லாமல் மரித்துப் போயிருக்கிறார்கள்.

13 ஆதலால் ஞானஸ்நானம் இல்லாமல் சிறுபிள்ளைகள் இரட்சிக்கப்பட முடியாதென்றால், அவர்கள் முடிவில்லாத பாதாளத்திற்குச் சென்றிருக்க வேண்டும்.

14 இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், சிறுபிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் தேவை என்று எண்ணுகிறவன், கசப்பான பிச்சிலும், அக்கிரமக் கட்டுகளிலும் இருக்கிறான்; அவனுக்கு விசுவாசமோ, நம்பிக்கையோ, தயாளத்துவமோ இல்லை; ஆகையால் அவன் இதை எண்ணிக்கொண்டி ருக்கும்போதே கொல்லப்படுவானெனில், அவன் பாதாளத்திற்குப் போகவேண்டும்.

15 தேவன் ஞானஸ்நானத்தின் நிமித்தம் ஒரு பிள்ளையை இரட்சிக்கிறார் என்றும், ஞானஸ்நானம் இல்லாததால் மற்றொன்று அழிய வேண்டும் என்றும், எண்ணுவது பயங்கரமான துன்மார்க்கமாயிருக்கிறது.

16 இவ்விதமாய் கர்த்தருடைய வழிகளை புரட்டிப் போடுகிறவர்களுக்கு ஐயோ, ஏனெனில் அவர்கள் மனந்திரும்பாவிட்டால் அழிந்து போவார்கள். இதோ, தேவனிடத்திலிருந்து அதிகாரத்தைப் பெற்றவனாய் தைரியத்துடனே பேசுகிறேன்; மனுஷன் செய்யக்கூடியவற்றைக் குறித்து நான் அஞ்சுவதில்லை; ஏனெனில் பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்.

17 என்றுமுள்ள நித்திய அன்பாகிய தயாளத்துவத்தினால் நான் நிரப்பப்பட்டிருக்கிறேன்; ஆதலால் எல்லா பிள்ளைகளும் எனக்குச் சமமாயிருக்கிறார்கள்; ஆகவே நான் பூரண அன்போடே சிறுபிள்ளைகளை நேசிக்கிறேன்; அவர்கள் யாவரும் ஒன்றுபோல இரட்சிப்பைப் புசிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.

18 ஏனெனில் தேவன் ஒரு பட்சபாதமுள்ள தேவனும் அல்ல, மாறுகிறவரும் அல்ல; அவர் நித்திய நித்தியமாய் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்று, நான் அறிவேன்.

19 சிறுபிள்ளைகள் மனந்திரும்ப முடியாது; ஆகவே அவர்களுக்கு தேவனுடைய தூய இரக்கங்களை மறுப்பது பயங்கரமான துன்மார்க்கமாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இரக்கத்தினிமித்தம் அவர்கள் யாவரும் அவரில் ஜீவனுள்ளோராய் இருக்கிறார்கள்.

20 சிறுபிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் வேண்டுமென்று சொல்லுகிறவன் கிறிஸ்துவினுடைய இரக்கங்களை மறுத்து, அவருடைய பாவநிவர்த்தியையும், அவருடைய மீட்பின் வல்லமையையும் ஒன்றுமில்லாததாக்குகிறான்.

21 அப்படிப்பட்டவர்களுக்கு ஐயோ. ஏனெனில் அவர்கள் மரண பயங்கரம், மற்றும் முடிவற்ற பாதாள வேதனையிலிருக்கிறார்கள். நான் அதைத் தைரியமாய்ப் பேசுகிறேன்; தேவன் எனக்குக் கட்டளையிட்டார். அவைகளைக் கவனித்துச் செவிகொடுங்கள், அல்லது அவைகள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பு உங்களுக்கு விரோதமாக நிற்கும்.

22 ஏனெனில் இதோ சிறுபிள்ளைகள் யாவரும், நியாயப்பிரமாணமில்லாத யாவரும் கிறிஸ்துவில் ஜீவிக்கிறார்கள்; ஏனெனில் நியாயப்பிரமாணமில்லாத யாவர் மேலும் மீட்பின் வல்லமை வருகிறது; ஆகையால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதவன் அல்லது ஆக்கினைக்குள்ளாக இராதவன் மனந்திரும்ப முடியாது; அப்படிப்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம் எதையும் கொண்டுவருவதில்லை.

23 கிறிஸ்துவின் இரக்கங்களையும், அவருடைய பரிசுத்த ஆவியின் வல்லமையையும் மறுத்து, செத்த கிரியைகளிலே நம்பிக்கை வைப்பது தேவனுக்கு முன்பாக கேலியாயிருக்கும்.

24 இதோ, என் குமாரனே, இது இப்படியிருக்கக்கூடாது; ஏனெனில் மனந்திரும்புதல் ஆக்கினைக்குக் கீழ் இருப்பவர்களுக்கும், மீறப்பட்ட நியாயப்பிரமாணத்தின் சாபத்தின் கீழ் இருப்பவர்களுக்குமே.

25 மனந்திரும்புதலின் முதற்கனிகள் ஞானஸ்நானம்; கட்டளைகளை நிறைவேற்றுவதால், விசுவாசத்தினாலே ஞானஸ்நானம் வருகிறது. கட்டளைகளை நிறைவேற்றுதல் பாவமன்னிப்பைக் கொண்டுவருகிறது.

26 பாவமன்னிப்பு, சாந்த குணத்தையும், இருதயத்தின் தாழ்மையையும் கொண்டுவருகிறது; சாந்த குணம், இருதயத்தின் தாழ்மை ஆகியவைகளினிமித்தம் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் வருகிறது. அந்த தேற்றரவாளனோ நம்பிக்கையாலும் பூரண அன்பினாலும் நிரப்புகிறார். அந்த அன்போ தேவனோடு சகல பரிசுத்தவான்களும் வாசம் செய்யும் முடிவு வரும்வரைக்கும் ஜெபத்திற்கேதுவாய் கருத்தாய் நிலைத்திருக்கும்.

27 இதோ, என் குமாரனே, நான் சீக்கிரமாய் லாமானியருக்கு விரோதமாக போகவில்லையெனில் நான் மறுபடியும் உனக்கு எழுதுவேன். இதோ, அவர்கள் மனந்திரும்பவில்லையெனில் இந்த தேசம் அல்லது நேபிய ஜனங்களின் பெருமை அவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும்.

28 என் குமாரனே அவர்களுக்கு மனந்திரும்புதல் வரும்படிக்கு அவர்களுக்காக ஜெபி. ஆனால் இதோ, ஆவி அவர்களோடு போராடுவதிலிருந்து ஓய்ந்துவிட்டதோ என்று அஞ்சுகிறேன்; தேசத்தின் இப்பகுதியிலே அவர்கள் தேவனிடத்திலிருந்து வருகிற சகல வல்லமையையும் அதிகாரத்தையும் தோற்கடிக்க வகை தேடுகிறார்கள்; அவர்கள் பரிசுத்த ஆவியானவரை மறுக்கிறார்கள்.

29 என் குமாரனே, அவர்கள் அப்பெரும் ஞானத்தைப் புறக்கணித்த பின்பு, தீர்க்கதரிசிகளால் பேசப்பட்ட தீர்க்கதரிசனங்களும், நம்முடைய இரட்சகர் தாமே பேசிய வார்த்தைகளும் நிறைவேறத்தக்கதாக, அவர்கள் சீக்கிரமாய் அழிய வேண்டும்.

30 என் குமாரனே, நான் உனக்கு மறுபடியும் எழுதும்வரை அல்லது சந்திக்கும்வரை உன்னிடத்தில் இருந்து விடை பெற்றுக்கொள்கிறேன். ஆமென்.