2010–2019
ஜெபத்துக்கு பதில்கள்
ஏப்ரல் 2019 பொது மாநாடு


ஜெபத்துக்கு பதில்கள்

பிதா நம்மை அறிகிறார், நமது தேவைகளை அறிகிறார், நமக்கு பரிபூரணமாக உதவி செய்வார்.

நமது பரலோக பிதா தன் பிள்ளைகள் மீது பரிபூரண அன்பு கொண்டிருக்கிறார் என்பது, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் முக்கிய ஆறுதலளிக்கும் ஒரு கோட்பாடு. அவரது பரிபூரண அன்பினிமித்தம், நமது வாஞ்சைகள் மற்றும் தேவைகளின்படி மட்டுமல்ல, அவரது எல்லையற்ற ஞானத்தின்படியும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். தீர்க்கதரிசி நேபியால் எளிதாக சொல்லப்பட்டிருக்கிறபடி, ”அவர் தம் பிள்ளைகளை நேசிக்கிறார் என நான் அறிவேன்.”1

நாம் அதை அறியாதபோதும் அல்லது புரியாதபோதும் கூட நமது வாழ்க்கையில் நுணுக்கமாக பரலோக பிதா இடைபடுதல் அந்த பரிபூரண அன்பின் ஒரு அம்சமாகும். நாம் பிதாவின் தெய்வீக வழிகாட்டுதலையும் உதவியையும் இதய பூர்வ உருக்கமான ஜெபத்தின் மூலம், நாம் நாடுகிறோம். நாம் நமது உடன்படிக்கைகளை மதித்து, நமது இரட்சகர் போல அதிகமாக இருக்க முயலும்போது, பரிசுத்த ஆவியின் செல்வாக்கு மற்றும் உணர்த்துதல் மூலம் நாம் தொடர்ந்த 2ஆற்றொழுக்கான, தெய்வீக வழிநடத்துதலுக்கு உரிமையுள்ளவர்கள்.

வேதங்கள் நமக்குப் போதிக்கின்றன: ”உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்வதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என அவர் அறிந்திருக்கிறார்.”3 மற்றும் அவர் ”எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், ஏனெனில் [அவரது] கண்களுக்கு முன்பாக அனைத்தும் உள்ளன.”4

தீர்க்கதரிசி மார்மன் இதற்கு ஒரு உதாரணம். அவனது பணியின் விளைவுகளைப் பார்ப்பதற்கு அவன் உயிரோடிருக்கவில்லை. எனினும் கர்த்தர் தன்னை கவனமாக வழிநடத்திக் கொண்டிருந்தார் என அவன் அறிந்திருந்தான். தனது பதிவேடுகளுடன் நேபியின் சிறிய தகடுகளை சேர்க்க அவன் உணர்த்தப்பட்டபோது,: ”மேலும் ஒரு ஞானமான நோக்கத்துக்காக இதைச் செய்கிறேன். ஏனெனில் எனக்குள் இருக்கிற கர்த்தரின் ஆவியானவரின் கிரியையின்படியே இவ்வாறாக என்னைத் தூண்டுகிறது. மேலும் இப்பொழுது நான் அனைத்துக் காரியங்களையும் அறியேன். ஆனால் வரப்போகிற அனைத்துக் காரியங்களையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். ஆகையால் தன் சித்தத்தின்படியே செய்ய அவர் எனக்குள் கிரியை செய்கிறார்,” என மார்மன் எழுதினான் .5 116 பக்கங்கள் கையெழுத்துப் பிரதிகள் வருங்காலத்தில் காணாமற்போவதை மார்மன் அறியவில்லையானாலும், கர்த்தர் அறிந்திருந்தார் மற்றும் அது நடக்குமுன்பே தடையை மேற்கொள்ள ஒரு வழியை ஆயத்தம் பண்ணினார்.

பிதா நம்மை அறிகிறார், நமது தேவைகளை அறிகிறார், நமக்கு பரிபூரணமாக உதவி செய்வார். சில சமயங்களில் அந்த உதவி அக்கணமே அல்லது குறைந்த பட்சம் தெய்வீக உதவிக்காக நாம் கேட்ட பின் விரைவில் கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் நமது மிக நேர்மையான மற்றும் தகுதியான வாஞ்சைகள் நாம் நம்புகிற வழியில் பதிலளிக்கப்படுவதில்லை, ஆனால் தேவன் பெரிய ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார் என நாம் காண்கிறோம். சில சமயங்களில் நமது நியாயமான வாஞ்சைகள் இந்த வாழ்க்கையில் கொடுக்கப்படுவதில்லை. அவரிடத்தில் நமது உருக்கமான விண்ணப்பங்களுக்கு நமது பரலோக பிதா பதிலளிக்கக்கூடிய வழிகளின் மூன்று வித்தியாசமான விவரங்கள் முலம் நான் விளக்குகிறேன்.

எங்கள் இளைய மகன் ப்ரான்ஸ் பாரிஸ் ஊழியத்தில் சேவை செய்ய அழைக்கப்பட்டான். சேவை செய்யும் ஆயத்தமாக வழக்கமான சட்டைகள், சூட்டுகள், டைகள், காலுறைகள் மற்றும் மேல் கோட் வாங்க அவனுடன் சென்றோம். துரதிருஷ்டவசமாக, அவன் விரும்பிய மேல் கோட் அவனுக்குத் தேவைப்பட்ட அளவில் உடனே இருப்பில் இல்லை. எனினும் கடை எழுத்தர் சில வாரங்களில் அந்த கோட் கிடைக்கும், மற்றும் ப்ரான்ஸுக்கு எங்கள் மகன் புறப்படுவதற்கு முன்பு ப்ரோவோ ஊழிய பயிற்சி மையத்தில் கொடுக்கப்பட்டுவிடும் என தெரிவித்தார். நாங்கள் கோட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு, அதைப்பற்றி அதிகமாக எதுவும் யோசிக்கவில்லை.

எங்கள் மகன் ஜூனில் ஊழிய பயிற்சி மையத்தில் சேர்ந்தான், மேல் கோட் ஆகஸ்டில் அவனது திட்டமிட்டபடியான புறப்படுதலுக்கு சில நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அவன் அதை அணிந்து பார்க்கவில்லை, ஆனால் அவசரமாக அவனது பெட்டியில் துணிகள் மற்றும் பிற பொருட்களுடன் வைத்தான்.

எங்கள் மகன் ஊழியம் செய்துகொண்டிருந்த பாரிசில் குளிர் காலம் நெருங்கியபோது, அவன் மேல் கோட்டை எடுத்து அணிய முயற்சித்தபோது, அது மிக சிறியதாக இருந்ததை கண்டதாக எங்களுக்கு கடிதம் எழுதினான். ஆகவே நாங்கள் அவன் பாரிசில் மற்றொரு கோட் வாங்கும்படியாக அவனது வங்கிக் கணக்கில் அதிக பணம் போட்டோம், அவனும் வாங்கினான். சிறிது எரிச்சலுடன் அவனுக்கு எழுதி, அவனுக்கு அதை பயன்படுத்த முடியாத பட்சத்தில் வேறு யாருக்காவது கொடுக்கச் சொன்னோம்.

பின்பு அவனிடமிருந்து நாங்கள் இந்த மின்னஞ்சலைப் பெற்றோம்: ”இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. ... எனது புதிய கோட் சிறப்பானதாயும் கனமானதாகவும் இருந்தாலும், காற்று எங்களை ஊடுருவிச் செல்வதாக தோன்றுகிறது. ... [எங்கள் அடுக்குமாடியிலிருந்த மற்றொரு ஊழியக்காரனுக்கு] என்னுடைய பழையகோட்டைக் கொடுத்துவிட்டேன், ஒரு நல்ல கோட் கிடைக்கும் வழிக்காக அவன் ஜெபித்துக் கொண்டிருந்ததாக அவன் சொன்னான். பல ஆண்டுகளுக்கு முன் அவன் மனமாறியிருக்கிறான், அவனுக்கு அம்மா மட்டுமே உண்டு... அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்த ஊழியக்காரர், அவனது ஊழியத்துக்கு அவனை ஆதரிக்கிறார், ஆகவே அந்த கோட் அவனது ஜெபத்துக்கான பதில், ஆகவே அதைப்பற்றி மிகவும் நான் மகிழ்ச்சியடைந்தேன்.6

வீட்டிலிருந்து 6200 மைல்களுக்கு (10000கி.மீ. )அப்பால் ப்ரான்ஸில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் இந்த ஊழியக்காரனுக்கு அவசரமாக புதிய மேல் கோட், குளிர் அதிகமுள்ள குளிர்காலத்துக்கு தேவை, ஆனால் ஒன்றை வாங்கஅந்த ஊழியக்காரனுக்கு வழியில்லை என பரலோக பிதா அறிந்தார். மிகச் சிறிய மேல் கோட்டை யூட்டா, ப்ரோவோ துணிக்கடையிலிருந்து எங்கள் மகன் பெறுவான் எனவும் பரலோக பிதா அறிந்தார். பாரிசில் இந்த இரண்டு ஊழியக்காரர்களும் ஒன்றாக ஊழியம் செய்வார்கள், உடனடித் தேவையிலிருந்த ஊழியக்காரனின் தாழ்மையான நேர்மையான ஜெபத்துக்கு அந்த கோட் பதில் எனவும் அவர் அறிந்தார்.

இரட்சகர் போதித்தார்:

”ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல் அவைகள் ஒன்றாகிலும் தரையில் விழாது.

”உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.

”ஆதலால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் இல்லையா.?”7

பிற சூழ்நிலைகளில், நாம் நம்பிய விதத்தில் நமது தகுதியான வாஞ்சைகள் கொடுக்கப்படாதபோது, உண்மையாகவே இறுதியாக அது நமது ஆதாயத்துக்காகத் தான் இருக்கும். உதாரணமாக யாக்கோபுவின் குமாரனாகிய யோசேப்பு, அவன் கொலை செய்யப்படும் அளவுக்கு பொறாமைப்படப்பட்டு, தன் சகோதரர்களால் வெறுக்கப்பட்டான். மாறாக அவர்கள் அவனை எகிப்துக்கு அடிமையாக விற்றார்கள்.8 அவன் நம்பிய விதமாக அவனது ஜெபங்கள் பதிலளிக்கப்படவில்லை என ஒருவன் உணர்வானானால் அது யோசேப்பாகத்தான் இருக்க முடியும். உண்மையில் அவனது தெரிந்த துரதிருஷ்டம் அவனுக்கு பெரிய ஆசீர்வாதமாகி, அவனது குடும்பத்தை பட்டினியிலிருந்து காத்தது. பின்னர், எகிப்தின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஆன பிறகு, அதிக விசுவாசத்துடனும், ஞானத்துடனும் தன் சகோதரர்களிடம் அவன் சொன்னான்:

”என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம். அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம். ஜீவரட்சணை செய்யும்படிக்கு தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

”தேசத்தில் இப்போது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாகியிருக்கிறது. இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும்.

பூமியில் உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்கும், தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்.

ஆதலால் நீங்களல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பினார். 9

கல்லூரியிலிருந்தபோது, ஒரு வாஞ்சிக்கத்தக்க பகுதி நேர மாணவர் வேலை எங்கள் மூத்த மகனுக்கு கொடுக்கப்பட்டது. பட்டம் பெற்ற பிறகு அற்புதமான நிரந்தர வேலைக்கு வழிநடத்தும் ஆற்றல் அதற்கு இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு அவன் இந்த மாணவர் வேலையில் கடினமாக உழைத்தான், அதிக தகுதி பெற்றான், உடன் பணியாளர்களாலும் மேற்பார்வையாளர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டான். இறுதியாண்டு முடிவில் தெய்வீகமாக அனைத்தும் நல்லபடியாக நடந்தது (குறைந்தது என் மகன் நினைத்ததுபோல) அந்த நிரந்தர வேலை வந்தது, எல்லா அடையாளங்கள் மற்றும் எதிர்பார்ப்புப்படி உண்மையாகவே அவனுக்கு வேலை கிடைக்கும்.

நல்லது, அவன் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எங்கள் ஒருவராலும் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் நன்கு ஆயத்தம் செய்தான், நேர்முகம் சரியாக செய்தான், மிக தகுதி பெற்ற போட்டியாளன், அதிக நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் ஜெபித்தான். அவன் உருக்குலைந்து நொறுங்கிப் போனான். அந்த முழு செயலும் எங்களைத் தலையைச் சொறிய வைத்தது. அவனது நியாயமான ஆசையில் தேவன் ஏன் அவனைக் கைவிட்டார்?

பல வருடங்களுக்குப் பின் பதில் தெளிவானது. பட்டம் பெற்ற பிறகு அவனது கனவு வேலையைப் பெற்றிருந்தால், இப்போது அவனுடைய நித்திய ஆதாயமும் ஆசீர்வாதமுமாக இப்போது நிரூபணமாகியுள்ள வாழ்க்கையை மாற்றும் சந்தர்ப்பத்தை அவன் இழந்திருப்பான். (எப்போதும் போல) ஆரம்பத்திலிருந்தே முடிவை தேவன் அறிகிறார், இந்த விஷயத்தில் மிக உயர்ந்த அனுகூலத்துக்காக அநேக நியாயமான ஜெபங்களுக்குப் பதில்கள் இல்லை என்பதே.

சில சமயங்களில் நீதியாகவும், கண்டிப்பாகவும், நேர்மையாகவும் தேடுபவை இந்த உலகில் கொடுக்கப்படுவதில்லை.

சகோதரி பாட்ரீசியா பார்க்கின்சன் சாதாரண கண்பார்வையுடன் பிறந்தாள், ஆனால் ஏழு வயதில் குருடாகத் தொடங்கினாள். ஒன்பது வயதில் வீட்டிலிருந்து 90 மைல்கள் (145 கிமீ) தூரமுள்ள யூட்டாவின் ஆக்டன் செவிடர் மற்றும் குருடர்களுக்கான யூட்டா பள்ளிக்கு செல்லத் தொடங்கி, பள்ளியில் தங்க வேண்டிய தேவை ஏற்பட்டு, ஒரு ஒன்பது வயது பிள்ளை அனுபவிக்கக்கூடிய வீடட்டைப்பற்றிய எல்லா ஏக்கத்தையும் அவள் அனுபவித்தாள்.

11 வயதில் முழுமையாக தன் கண்பார்வையை இழந்தாள். 15 வயதில் நிரந்தரமாக உள்ளூர் பள்ளிக்குச் செல்ல வீடு திரும்பினாள். அவள் கல்லூரிக்குச் சென்று, தொடர்பு ஒழுங்கின்மை மற்றும் மனநலவியலில் பட்டம் பெற்று, பின்னர் சந்தேகங்கொண்ட பல்கலைக்கழக அதிகாரிகளுடன் போராடி, முதுகலைக் கல்லூரிக்குச் சென்று பேச்சுமொழி நோயியல் முதுகலைப் பட்டம் பெற்றாள். பாட் இப்போது 53 ஆரம்ப வகுப்பு பிள்ளைகள் மத்தியிலே வேலை செய்கிறாள், அவளது பள்ளி மாவட்டத்தின் நான்கு பேச்சு மொழி வல்லுநர்களை மேற்பார்வையிடுகிறாள். அவள் சொந்த வீடும் காரும் வைத்திருக்கிறாள், நண்பர்களும் குடும்பத்தினரும் தேவைப்படும்போது பாட்டுக்கு வண்டி ஓட்டுகிறார்கள்.

படம்
சகோதரி பாட்ரீசியா பார்க்கின்சன்

10 வயதில் குறைந்து கொண்டிருந்த கண்பார்வையை போக்க மற்றொரு மருத்துவ சிகிச்சைக்காக திட்டமிடப்பட்டிருந்தது. அவளது மருத்துவ சிகிச்சையைப்பற்றி சரியாக என்ன நடக்கப் போகிறது என அவளது பெற்றோர் எப்போதும் சொல்லி வந்தனர். ஆனால் ஏதோ காரணத்துக்காக இந்த குறிப்பிட்ட சிகிச்சையைப்பற்றி சொல்லவில்லை. நேரம் குறிக்கப்பட்ட சிகிச்சையைப்பற்றி அவளது பெற்றோர் சொன்னபோது, அவளது தாயின் வார்த்தைகளின்படி, பாட் ”ஒரு குழப்பம்”. பாட் மற்றொரு அறைக்கு ஓடிச் சென்று, பின்னர் திரும்ப வந்து தன் பெற்றோரிடம் கொஞ்சம் கோபத்துடன் ”என்னவென சொல்கிறேன்” என்றாள். எனக்குத் தெரியும், தேவனுக்குத் தெரியும், அது உங்களுக்கும் தெரியும். நான் எஞ்சிய வாழ்க்கையில் குருடாக இருக்கப் போகிறேன்.”

பல ஆண்டுகளுக்கு முன்னர் கலிபோர்னியாவில் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தினரைச் சந்திக்க பாட் கலிபோர்னியாவுக்கு பயணித்தாள். அவளது மூன்று வயது சகோதரனின் மகனுடன் வெளியிலே சென்றிருந்தபோது, அவளிடம் அவன் சொன்னான், ”பாட் அத்தை, புதிய கண்கள் கொடுக்குமாறு நீங்கள் ஏன் பரலோக பிதாவிடம் கேட்கக் கூடாது?” ஏனெனில் நீங்கள் பரலோக பிதாவிடம் கேட்டால், நீங்கள் கேட்பது எதுவானாலும் அவர் கொடுப்பார். நீங்கள் அவரிடம் கேட்க வேண்டியது மட்டுமே.”

அக்கேள்வியால் பாட் அதிர்ச்சியடைந்ததாக சொன்னாள், ஆனால் பதிலளித்தாள், ”சில சமயங்களில் பரலோக பிதா அப்படி செய்வதில்லை. சில சமயங்களில் நீ ஏதாவதொன்றைக் கற்க வேண்டுமென்று விரும்புகிறார், உனக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பதில்லை. சில சமயங்களில் நீ காத்திருக்க வேண்டும். பரலோக பிதாவும் இரட்சகரும், நமக்கு எது சிறந்தது மற்றும் நமக்கு எது தேவை என அறிவர். ஆகவே, உங்களுக்குத் தேவையான நேரத்தில் எல்லாவற்றையும் அவர்கள் கொடுப்பதில்லை.”

அநேக ஆண்டுகளாக பாட்டை எனக்குத் தெரியும், அண்மையில் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாள் என்ற உண்மை என்னைக் கவர்கிறது. அவள் பதிலளித்தான், ”என்னோடு நீ வீட்டில் இருந்ததில்லையா? எனக்கான நேரங்கள் உண்டு. எனக்கு மனஅழுத்தம் இருந்தது, நான் அதிகம் அழுதிருக்கிறேன்.” எனினும் அவள் சொன்னாள், ”அவ்வப்போது என் பார்வையை இழக்கத் தொடங்கினேன். அது அதிசயம். ஆனால் பரலோக பிதாவும் இரட்சகரும் என்னோடும் என் குடும்பத்தோடும் இருக்கிறார்கள் என நான் அறிவேன். எங்களால் முடிந்தவரை சிறப்பாக அதைக் கையாண்டோம், என் அபிப்பிராயப்படி நாங்கள் சரியாக அதைக் கையாண்டோம். நான் போதுமானபடி வெற்றி பெற்றேன், பொதுவாக நான் மகிழ்ச்சியானவள். எல்லாவற்றிலும் அவரது கரத்தை நினைவுகூர்கிறேன். நான் குருடியாக இருப்பதால், நான் கோபமாக இருக்கிறேனா என கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறேன், நான் யாரிடம் கோபப்பட வேண்டும்? இந்த விஷயத்தில் பரலோக பிதா என்னுடன் இருக்கிறார்; நான் தனியாக இல்லை. அவர் எல்லா நேரத்திலும் என்னோடு இருக்கிறார்.”

இந்த விஷயத்தில் அவளது பார்வையை இந்த வாழ்க்கையில் திரும்ப பெறும் வாஞ்சை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அவளது அப்பாவிடம் அவள் கற்ற கருத்து, ”இதுவும் கடந்து போகும்.”10

தலைவர் ஹென்றி பி. ஐரிங் சொன்னார், ”இந்த நேரத்தில் பிதா உங்களையும், உங்கள் உணர்வுகளையும், உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரின் உலகப்பிரகார தேவைகளையும் அறிகிறார்.”11 நான் குறிப்பிட்ட மூன்று அனுபவங்களிலும் காணப்படுகிற இந்த பெரிய ஆறுதலான சத்தியம் காணப்படலாம்.

சகோதர சகோதரிகளே, சில சமயங்களில் நமது ஜெபங்கள் நாம் எதிர்பார்க்கிற விளைவுகளுடன் விரைவாக பதிலளிக்கப்படுகின்றன. சில சமயங்களில் நாம் நம்புகிற விதமாக நமது ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதில்லை. ஆயினும் காலப்போக்கில் நாம் முதலில் எதிர்பார்த்தவற்றை விட தேவன் பெரிய ஆசீர்வாதங்களை ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என நாம் கற்கிறோம். சில சமயங்களில் தேவனிடத்தில் நமது நியாயமான விண்ணப்பங்கள் இந்த வாழ்க்கையில் கொடுக்கப்பட மாட்டாது. 12 மூப்பர் நீல் ஏ. மாக்ஸ்வெல் சொன்னார், ”விசுவாசத்தில் தேவனின் நேரமும் அடங்கும்.”13

அவரது சொந்த விதத்திலும், நேரத்திலும் பரலோக பிதா நம்மை ஆசீர்வதித்து, நமது அக்கறைகளையும், அநியாயங்களையும், ஏமாற்றங்களையும் நீக்குகிறார் என்ற உறுதி நமக்கு உண்டு.

பென்யமீன் இராஜாவின் மேற்கோள், ”இப்படியிருக்க தன் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்பவர்களின் ஆசீர்வாதமானதும், மகிழ்ச்சியானதுமான நிலையை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன். ஏனெனில் இதோ ஆவிக்குரியதும் லௌகீகமானதுமான சகல காரியங்களிலும், அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்கள் உண்மையுள்ளவர்களாய் இறுதிபரியந்தம் நிலைத்திருப்பார்களெனில் முடிவற்ற மகிழ்ச்சியுள்ள நிலையிலே தேவனோடு வாசம் செய்யும்படி பரலோகத்துக்குள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். கர்த்தராகிய தேவன் இதைப் பேசியிருப்பதாலே, இந்தக் காரியங்கள் சத்தியமானவை என நினைவுகூருங்கள்.”14

தேவன் நமது ஜெபங்களைக் கேட்கிறார் என நான் அறிவேன்.15 எல்லாம் அறிந்த அன்பான பிதாவாக, அவர் நமது ஜெபங்களுக்கு பரிபூரணமாக அவரது எல்லையற்ற ஞானத்தின்படி நமது முடிவான ஆதாயம் மற்றும் ஆசீர்வாதத்தின்படியான வழிகளில் நமது ஜெபங்களுக்கு அவர் பதிலளிக்கிறார். அப்படியே இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.