வேதங்கள்
ஆபிரகாம் 4


அதிகாரம் 4

பூமியையும் அதிலுள்ள சகல ஜீவன்களையும் சிருஷ்டித்தலை தேவர்கள் திட்டமிடுகின்றனர் – அவர்களுடைய ஆறு நாட்கள் சிருஷ்டிப்பிற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

1 பின்னர் கர்த்தர் சொன்னார், நாம் இறங்கிப் போவோம். ஆரம்பத்தில் அவர்கள் இறங்கிப்போய், தேவர்களாகிய அவர்கள் வானங்களையும் பூமியையும் ஒழுங்குபடுத்தி உண்டாக்கினார்கள்.

2 அது உண்டாக்கப்பட்ட பின்பு பூமி பாழாகவும் வெறுமையாயுமிருந்தது, ஏனெனில் அவர்கள் பூமியைத்தவிர வேறெதையும் உண்டாக்கவில்லை; ஆழத்தின்மேல் இருள் ஆளுகை செய்திருந்தது, தேவர்களின் ஆவி ஜலத்தின்மேல் மூடியிருந்தது.

3 அவர்கள் (தேவர்கள்) சொன்னார்கள், வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்கள், வெளிச்சம் உண்டாயிற்று.

4 அவர்கள் (தேவர்கள்) வெளிச்சத்தை புரிந்துகொண்டார்கள், ஏனெனில் அது பிரகாசமாயிருந்தது; அவர்கள் வெளிச்சத்தைப் பிரித்தார்கள் அல்லது இருளை வெவ்வேறாகப் பிரித்தார்கள்.

5 தேவர்கள் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார்கள், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்கள். சாயங்காலத்திலிருந்து விடியற்காலம் வரைக்கும் அவர்கள் இரவு என்று பேரிட்டார்கள்; விடியற்காலத்திலிருந்து சாயங்காலம்வரைக்கும் பகல் என்று பேரிட்டார்கள்; பகலும் இரவும் என்று அவர்கள் அழைத்த இதுவே முதல் அல்லது ஆதியாயிருந்தது.

6 தேவர்களும் ஜலத்தின் மத்தியிலே ஒரு விரிவு உண்டாகக் கடவது, அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக் கடவது என்றார்கள்.

7 ஜலத்திலிருந்து விரிவுக்கு கீழிருந்ததும், விரிவுக்கு மேலே இருக்கிற அது ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கி, விரிவை தேவர்கள் கட்டளையிட்டார்கள்; அவர்கள் கட்டளையிட்டதைப்போல அது அப்படியே ஆயிற்று.

8 தேவர்கள் விரிவுக்கு வானம் என்று பேரிட்டார்கள், அது சாயங்காலத்திலிருந்து விடியற்காலம் வரையாயிருந்தது இரவு என்று அதை அவர்கள் அழைத்தார்கள்; அது விடியற்காலம் முதல் சாயங்காலமாயிருந்து அவர்கள் அதை பகல் என்று அழைத்தார்கள்; இரவும் பகலுமென அவர்கள் அழைத்தது இரண்டாவது முறையாகும்.

9 பின்பு தேவர்கள் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், பூமி வெட்டாந்தரையாகவும் வரக் கடவது என்று சொல்லி கட்டளையிட்டார்கள்; அவர்கள் கட்டளையிட்டதைப்போல அது அப்படியே ஆயிற்று;

10 தேவர்கள் வெட்டாந்தரையை பூமி என்று அறிவித்தார்கள்; சேர்ந்த ஜலத்தை திரண்ட தண்ணீர்கள் என்று அவர்கள் அறிவித்தார்கள்; தேவர்கள் அவைகள் கீழ்ப்படிந்ததெனக் கண்டார்கள்.

11 அப்பொழுது தேவர்கள், புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும்; தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களுக்குத் தங்கள் விதையையுடைய கனிகளைக்கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பிக்க பூமியை நாம் ஆயத்தப்படுத்துவோம் என்றார்கள்; அவர்கள் கட்டளையிட்டதைப்போல அது அப்படியே ஆயிற்று.

12 அதன் சொந்த விதையிலிருந்து புல்லைக் கொண்டுவரவும், பூண்டுகள் தன் சொந்த விதையிலிருந்து பூண்டுகளைக் கொண்டுவரவும், தன் இனத்துக்கேற்ற விதையைக் கொடுக்கவும், அதன் சொந்த விதையிலிருந்து பூமி மரத்தைக்கொண்டு வந்து, கனிகொடுத்து, அதன் விதை தன்னிலிருந்து அதையே திரும்பக் கொண்டுவரவும், தேவர்கள் பூமியை ஒழுங்குபடுத்தினர். அவைகள் கீழ்ப்படிந்தன என தேவர்கள் கண்டனர்.

13 அவர்கள் நாட்களை எண்ணினார்கள்; சாயங்காலத்திலிருந்து விடியற்காலம்வரை அவர்கள் அதை இரவு என்று அழைத்தார்கள்; விடியற்காலத்திலிருந்து சாயங்காலம்வரை அவர்கள் அதை பகல் என்று அழைத்தார்கள்; இது மூன்றாவது முறையாகும்.

14 வானம் என்கிற விரிவிலே தேவர்கள் சுடர்களை உண்டாக்கி பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசத்தை உண்டுபண்ணினார்கள்; அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்க உண்டாக்கினார்கள்;

15 அவைகள் பூமியின் மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற விரிவிலே சுடர்கள் உண்டாயிருக்கும்படிக்கு அவர்கள் உண்டாக்கினார்கள்; அது அப்படியே ஆயிற்று.

16 தேவர்கள் பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்கள்; சிறிய சுடருடன் நட்சத்திரங்களையும் அவர்கள் வைத்தார்கள்;

17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானங்கள் என்கிற விரிவிலே சுடர்களாயிருக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும் அவர்கள் வைத்தார்கள்.

18 அவர்கள் கட்டளையிட்டவை அவைகள் கீழ்ப்படியும்வரைக்கும் தேவர்கள் அந்தக் காரியங்களைக் கவனித்தார்கள்.

19 சாயங்காலத்திலிருந்து விடியற்காலம்வரை அது இரவாயிருந்தது; விடியற்காலத்திலிருந்து சாயங்காலம்வரைக்கும் அது பகலாயிருந்தது; இது நான்காவது முறையாயிருந்தது.

20 பின்பு தேவர்கள், நீந்தும் ஜீவஜந்துக்களை, திரளாய் ஜெனிப்பிக்க ஜலத்தையும், பூமியின்மேல் வானம் என்கிற விரிவிலே பறக்கும் பறவைகளையும், நாம் ஆயத்தப்படுத்துவோமாக என்றார்கள்.

21 மகா மச்சங்களையும், ஜலத்திலே தங்கி தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜெனிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், பிறப்பிக்க தேவர்கள் ஜலங்களை ஆயத்தப்படுத்தினார்கள். சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் அவர்கள் ஆயத்தப்படுத்தினார்கள். அவைகள் கீழ்ப்படியுமென்றும் அவர்களுடைய திட்டம் நல்லதென்றும் தேவர்கள் கண்டார்கள்.

22 தேவர்கள், நாம் அவைகளை ஆசீர்வதித்து அவைகள் பலுகிப்பெருகி, சமுத்திரம் அல்லது திரளான தண்ணீர்களை நிரப்பும்படியும்; பறவைகள் பூமியில் பெருகவும் செய்வோம் என்றார்கள்.

23 சாயங்காலத்திலிருந்து விடியற்காலம்வரை அதை இரவென்றழைத்தார்கள்; விடியற்காலத்திலிருந்து சாயங்காலம்வரைக்கும் அதை பகலென அழைத்தார்கள்; இது ஐந்தாவது முறையாயிருந்தது.

24 பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கும்படியாக தேவர்கள் பூமியை ஆயத்தப்படுத்தினார்கள்; அவர்கள் சொன்னபடியே அது அப்படியே ஆயிற்று.

25 ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டு மிருகங்களையும், பூமியின் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும், பூமி பிறப்பிக்கும்படியாக தேவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள்; அவைகள் கீழ்ப்படியுமென தேவர்கள் கண்டார்கள்.

26 பின்பு தேவர்கள் தங்களுக்குள்ளே ஆலோசனை செய்து, நாம் இறங்கிப் போய் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப்பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆள அவர்களுக்கு நாம் ஆளுகை கொடுப்போம் என்றார்கள்.

27 ஆகவே, தங்களுடைய சாயலிலும், அவனைத் தேவசாயலாகவும், ஆணும் பெண்ணுமாகவும் மனுஷனை உண்டாக்க தேவர்கள் கீழிறங்கிப்போனார்கள்.

28 நாம் அவர்களை ஆசீர்வதிப்போம் என்று தேவர்கள் சொன்னார்கள். பின்பு தேவர்கள், அவர்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப்பறவைகளையும் பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளும்படிச் செய்வோம் என்றார்கள்.

29 பின்னும் தேவர்கள், இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், கனிமரங்களாகிய சகல வித விருட்சங்களையும் நாம் அவர்களுக்குக் கொடுப்போம்; ஆம், விதைதரும் கனிமரங்களாகிய விருட்சமாகிய அதை நாம் கொடுப்போம்; அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயிருக்கும் என்று சொன்னார்கள்.

30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகலபறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும், இதோ, அவைகளுக்கு நாங்கள் ஜீவனைக் கொடுப்போம், பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுப்போம், இவ்விதமாக இந்தக் காரியங்கள் யாவும் ஒழுங்குபடுத்தப்படும்.

31 தேவர்கள், நாங்கள் சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் செய்து அவைகளை நாங்கள் உண்டாக்குவோம். இதோ, அவைகள் மிகுந்த கீழ்ப்படிதலாயிருக்கும் என்று சொன்னார்கள். சாயங்காலத்திலிருந்து விடியற்காலம்வரைக்கும் அவைகள் இரவு என்றழைக்கப்படும்; விடியற்காலம் முதல் சாயங்காலம்வரைக்கும் அவைகள் பகல் என்றழைக்கப்படும் என்றார்கள்; ஆறாவது முறையாக அவர்கள் எண்ணிக்கை செய்தார்கள்.