வேதங்கள்
ஆல்மா 1


ஆல்மாவின் குமாரனாகிய
ஆல்மாவின் புஸ்தகம்

நேபியினுடைய ஜனங்களின் மீது முதற் தலைமை நியாயாதிபதியாயும், சபையின் பிரதான ஆசாரியனாயுமிருந்த ஆல்மாவின் குமாரனாகிய ஆல்மா எழுதிய விவரம். நியாயாதிபதிகளின் ஆளுகை, ஜனங்களுக்குள்ளே நடந்த யுத்தங்கள், மற்றும் பிணக்குகளைப்பற்றிய விவரம். அதுமட்டுமன்றி, லாமானியர்களுக்கும் நேபியர்களுக்கும் இடையே நடந்த ஒரு யுத்தத்தைப்பற்றி முதற் தலைமை நியாயாதிபதியாகிய ஆல்மாவின் பதிவேட்டின்படியான ஒரு விவரம்.

அதிகாரம் 1

நிகோர் கள்ள உபதேசங்களை உபதேசித்தல், ஒரு சபையை ஸ்தாபித்தல், ஆசாரிய வஞ்சனையைத் தோற்றுவித்தல், கிதியோனைக் கொல்லுதல் – நிகோர், அவனது குற்றங்களினிமித்தம் கொல்லப்படுதல் – ஜனங்களுக்குள்ளே ஆசாரிய வஞ்சகமும், துன்புறுத்தல்களும் பரவுதல் – ஆசாரியர்கள், தங்களைத் தாங்களே ஆதரித்துக் கொள்ளுதல். ஜனங்கள் எளிமையானோரைப் பராமரித்தல், சபை விருத்தியடைதல். ஏறக்குறைய கி.மு. 91–88.

1 இப்பொழுது, அந்தப்படியே, இப்போதிலிருந்து, நேபியின் ஜனத்தின்மீது நியாயாதிபதிகளினுடைய முதலாம் வருஷ ஆட்சியில், மோசியா ராஜா நல்லதொரு போராட்டத்தைப் போராடி, தேவனுக்கு முன்பாய் சன்மார்க்கனாய் நடந்து, தனக்கு பதிலாக ராஜரீகம்பண்ண யாரையும் விட்டுச் செல்லாமல், பூலோகத்தார் எல்லோரும் போகும் வழியே போனாலும், அவன் சட்டங்களை ஏற்படுத்தியிருந்தான். அவைகளும் ஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆதலால், அவன் ஏற்படுத்தின சட்டங்களின்படி தரித்திருக்க அவர்கள் கடமைப்பட்டவர்களானார்கள்.

2 அந்தப்படியே, நியாயாசனத்திலிருந்து ஆல்மாவினுடைய முதல் வருஷ ஆளுகையின்போது, அவன் சமுகத்திலே பருத்த உடல்வாகும், தன்னுடைய மிகுந்த வலிமையினிமித்தம் பிரசித்தம் பெற்றவனுமாகிய, ஒருவன் நியாயம் விசாரிக்கப்படும் பொருட்டு கொண்டுவரப்பட்டான்.

3 அவன் ஜனங்களுக்குள்ளே போய், தேவ வார்த்தை என்று அவன் சொல்லிக்கொண்டவற்றை அவர்களுக்குப் பிரசங்கித்து, சபைக்கு விரோதமாய்ப் பேசி, எல்லா ஆசாரியரும், ஆசிரியரும் பிரசித்தம்பெற்று விளங்கவேண்டுமென்றும், அவர்கள் தங்கள் கைகளினாலே பிரயாசப்படாமல், ஜனங்களாலே ஆதரிக்கப்படவேண்டியவர்கள் என்றும் ஜனங்களிளிடத்திலே அறிவித்தான்.

4 அவன் ஜனங்களிடம், மனுஷர் யாவரையும் கர்த்தர் சிருஷ்டித்து, சகல மனுஷரையும் மீட்டுக்கொண்டபடியாலே, முடிவிலே மனுஷர் யாவரும் நித்திய ஜீவனைப்பெறுவார்கள் என்றும், கடைசி நாளின்போது மனுக்குலம் யாவரும் இரட்சிக்கப்பட வேண்டும், ஆதலால் அவர்கள் பயமோ நடுக்கமோ கொள்ளாமல், தங்கள் சிரசுகளை உயர்த்தி, களிகூர்ந்திருக்கலாம் என்றும் சாட்சி கொடுத்தான்.

5 அந்தப்படியே, அவன் இவைகளைக்குறித்து அதிகமாய் போதித்ததினாலே, அநேகர் அவனது வார்த்தைகளை விசுவாசித்தார்கள். அநேகர் அவனை ஆதரித்து பணம் கொடுக்கவும் தொடங்கினர்.

6 அவன் தன் இருதயத்திலே மேட்டிமையாய், விலையுயர்ந்த வஸ்திரங்களை உடுத்தத் தொடங்கினான், தன் உபதேசங்களின்படியே சபை ஒன்றையும் ஸ்தாபிக்க ஆரம்பித்தான்.

7 அந்தப்படியே, அவன் தன் வார்த்தையை விசுவாசித்தவர்களுக்கு பிரசங்கிக்கப் போனபோது, தேவனுடைய சபையைச் சார்ந்த அவர்களின் ஆசிரியர்களில் ஒருவனைச் சந்தித்தான். சபையைச் சார்ந்த ஜனங்களை தான் புறம்பே வழிநடத்திச் செல்லும்படிக்கு அவனோடு கடுமையாய் விவாதித்தான். ஆனால் அந்த மனுஷன் தேவனுடைய வசனங்களைக் கொண்டு புத்திசொல்லி அவனை எதிர்த்து நின்றான்.

8 அந்த மனுஷனுடைய நாமம் கிதியோன் என்பதாகும்; அவன் லிம்கியின் ஜனங்களைச் சிறைத்தனத்திலிருந்து விடுவிப்பதில் தேவனுடைய கரங்களிலே ஒரு கருவியாய் விளங்கியவன்.

9 இப்பொழுது, கிதியோன் தேவனுடைய வசனங்களால் அவனை எதிர்த்து நின்றபடியால், அவன் கிதியோன் மேல் உக்கிரம்கொண்டு, தன் பட்டயத்தை உருவி அவனை வெட்டத் தொடங்கினான். கிதியோன் வயது முதிர்ந்தவனானதால், அவனுடைய வெட்டுக்களைத் தடுக்க இயலாமல் பட்டயத்தாலே கொல்லப்பட்டான்.

10 அவனைக் கொலை செய்தவன், சபையின் ஜனங்களால் பிடிக்கப்பட்டு, அவன் செய்த குற்றங்களுக்குத்தக்கதாய் நியாயம் விசாரிக்கப்படும் பொருட்டு ஆல்மாவின் முன்னே கொண்டுவரப்பட்டான்.

11 அந்தப்படியே, அவன் ஆல்மாவின் முன்நின்று, தனக்காக தைரியத்தோடு வழக்காடினான்.

12 அன்றியும் ஆல்மா அவனை நோக்கி: இதோ இந்த ஜனங்களுக்குள்ளே ஆசாரிய வஞ்சகம் தோற்றுவிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதோ நீ ஆசாரிய வஞ்சகத்தினால் மாத்திரமல்ல, அதை பட்டயத்தினாலே நிறைவேற்ற பிரயத்தம் பண்ணினதினிமித்தமும் குற்றம் புரிந்திருக்கிறாய். ஆசாரிய வஞ்சகம் இந்த ஜனங்களுக்குள்ளே கட்டாயப்படுத்தப்பட்டால், அது அவர்களை முழுவதுமாய் அழித்துப்போடும்.

13 ஆம், இந்த ஜனத்திற்குள்ளே அதிக நற்கிரியைகளை புரிந்த நீதிமானுடைய இரத்தத்தைச் சிந்தினாய், உன்னைத் தப்பவிட்டோமாயின், அவன் இரத்தம் பழிவாங்கும்படியாக எங்கள்மீது வரும்.

14 ஆகையால் எங்களுடைய கடைசி ராஜாவாகிய மோசியாவினால் கொடுக்கப்பட்ட சட்டத்தின்படி, நீ மரணத்திற்கேதுவாய் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறாய்; அது இந்த ஜனங்களாலே ஏற்றுக்கொள்ளப்பட்டாயிற்று; அதினிமித்தம் இந்த ஜனங்கள் சட்டத்தைக் கைக்கொள்ளவேண்டும், என்றான்.

15 அந்தப்படியே, அவனை அவர்கள் பிடித்தார்கள், அவன் நாமம் நிகோர் என்பதாகும்; அவர்கள் அவனைப் மேன்தி என்ற மலையின் உச்சிக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கே அவன், தான் ஜனங்களுக்குப் போதித்தது, தேவனுடைய வசனத்திற்கு விரோதமானதே என்று பூமிக்கும், வானத்திற்கும் நடுவே ஒப்புக்கொண்டான், அல்லது ஒப்புக் கொள்ளச் செய்யப்பட்டான்; அங்கே இழிவான முறையில் செத்து மடிந்தான்.

16 இருப்பினும், தேசமெங்கிலும் ஆசாரிய வஞ்சகம் பரவுவதை இது முடிக்கவில்லை. ஏனெனில் உலகத்தின் வீணானவைகளை விரும்புகிற அநேகர் அங்கே இருந்தார்கள். அவர்கள் கள்ள உபதேசங்களைப் போதித்தார்கள்; கனமடையவும், ஐஸ்வரியத்தைப் பெறவுமே அப்படிச் செய்தார்கள்.

17 இருப்பினும் தெரிந்துவிட்டால், பொய்யர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று அவர்கள் சட்டத்திற்கு பயந்ததால் பொய்யுரைக்கவில்லை. ஆகவே தங்களுடைய நம்பிக்கையின்படியே உபதேசிப்பவர்களாக பாவனை செய்தார்கள்; அவனுடைய நம்பிக்கையினிமித்தம் எந்த ஒரு மனுஷன் மீதும் சட்டத்திற்கு அதிகாரமில்லாதிருந்தது.

18 திருடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர்கள் சட்டத்திற்கு அஞ்சி திருடவில்லை. கொலை செய்தவன் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டான் என்பதால், அவர்கள் கொள்ளையடிக்கவும், கொலை செய்யவும் இல்லை.

19 ஆனால், அந்தப்படியே, தேவனுடைய சபையைச் சார்ந்திருந்து, கிறிஸ்துவினுடைய நாமத்தை தங்கள்மீது தரித்துக்கொண்டவர்களை தேவனுடைய சபையைச் சாராதவர்கள் துன்பப்படுத்தத் தொடங்கினார்கள்.

20 ஆம், அவர்களது தாழ்மையினிமித்தமும், தங்களுடைய பார்வையிலே மேட்டிமையாயில்லாததாலும், தேவ வசனத்தை பணமும், விலையுமின்றி ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டதினிமித்தமும், அவர்களை சகல விதமான வார்த்தைகளாலும் துன்புறுத்தி, உபத்திரவப்படுத்தினார்கள்.

21 சபையைச் சார்ந்திருந்த எவரும், எழும்பி சபையைச் சார்ந்திராதவர்களை துன்பப்படுத்தக் கூடாதென்றும், தங்களுக்குள்ளே துன்புறுத்தல் விளைவிக்கக் கூடாதென்றும், சபையின் ஜனங்களுக்குள்ளே ஒரு கண்டிப்பான சட்டமிருந்தது.

22 ஆயினும் அவர்களுக்குள்ளே அநேகர் மேட்டிமையாயிருக்கத் தொடங்கி தங்கள் சத்துருக்களுடன் அடிதடி விளைவிக்கும் வரைக்குமாய், கொடூரமாக தர்க்கித்துப் பேச ஆரம்பித்தார்கள்; அவர்கள், ஆம், ஒருவருக்கொருவர் முஷ்டிகளால் அடித்துக்கொண்டார்கள்.

23 ஆல்மாவின் ஆளுகையின் இரண்டாம் வருஷத்திலே சபைக்கு விரோதமாய் அநேக துன்புறுத்தலின் காரணமாக அது இருந்தது. ஆம் அது சபையின் பாடுகளுக்குக் காரணமாயிருந்தது.

24 அநேகருடைய இருதயங்கள் கடினப்பட்டுப் போனபடியாலும், அவர்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டதாலும், தேவ ஜனத்திற்குள்ளே அவர்கள் நினைவுகூரப்படாமல் போனார்கள். அநேகர் அவர்களிடமிருந்து விலகிப்போனார்கள்.

25 இது விசுவாசத்திலே உறுதியாய் நின்றிருந்தவர்களுக்கு அதிக சோதனையாய் அமைந்தாலும், அவர்கள் தேவ கட்டளையைக் கைக்கொள்ளுவதில் அசைக்கமுடியாதவர்களாயும், நிலைநிற்பவர்களுமாயிருந்து, தங்கள்மீது சுமத்தப்பட்ட துன்பங்களை பொறுமையோடே சகித்திருந்தார்கள்.

26 ஆசாரியர்கள் தங்கள் வேலைகளைவிட்டு தேவனுடைய வசனத்தை ஜனங்களுக்கு போதிக்கச் சென்றபோது ஜனங்களும் தங்களுடைய பணிகளைவிட்டு, தேவனுடைய வசனத்தை கேட்கப்போனார்கள். ஆசாரியர் அவர்களுக்கு தேவ வசனத்தைப் பிரசங்கித்த பின்பு, தங்கள் பணிகளுக்கு கருத்தாய்த் திரும்பினார்கள். ஆசாரியன் தனக்கு செவி கொடுப்பவர்களிலும் மேலாக தன்னை எண்ணிக் கொள்ளாதிருந்தான். ஏனெனில் பிரசங்கி, கேட்பவனிலும் பெரியவனுமல்ல, ஆசிரியன் கற்பவனிலும் மேன்மையானவனுமல்ல. அவ்விதம் அவர்கள் அனைவரும் சமமானவர்களே. ஒவ்வொரு மனுஷனும் தன்தன் பலத்திற்கேற்ப பிரயாசப்பட்டான்.

27 ஒவ்வொரு மனுஷனும் தான் வைத்திருந்தவற்றிற்கேற்ப தங்கள் பொருட்களை எளியோருக்கும், திக்கற்றோருக்கும், வியாதியஸ்தருக்கும், உபத்திரவப்படுவோருக்கும் கொடுத்தார்கள்; அவர்கள் விலையுயர்ந்த வஸ்திரங்களைத் தரிக்காதபோதும், நேர்த்தியாயும், சௌந்தரியமுள்ளவர்களாயும் இருந்தார்கள்.

28 இவ்விதமாய் சபையின் விவகாரங்களை அமைத்தார்கள்; தங்களுக்கு சகல துன்புறுத்தல்கள் இருந்தபோதிலும், மறுபடியும் தொடர்ந்து சமாதானத்தை நிலைவரப்பண்ணினார்கள்.

29 சபையின் ஸ்திரத்தன்மையினிமித்தம் அவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் மிகுதியாய் பெற்று, ஐஸ்வரியவான்களானார்கள், அவர்கள் ஆடுகளையும், மாடுகளையும் விதவிதமான கொழுத்தவைகளையும் மிகுதியாயும், தானியங்களையும், பொன்னையும் வெள்ளியையும், விலையேறப்பெற்றவைகளையும் மிகுதியாயும், பட்டையும் பஞ்சுநூலினால் செய்யப்பட்ட சீலைகளையும், விதவிதமான சாதா துணிகளையும் மிகுதியாய் பெற்றிருந்தார்கள்.

30 ஆகையால், தங்களுடைய விருத்தியடைந்த நிலையிலும் வஸ்திரமில்லாதவனையும், பட்டினியாயிருப்போனையும், விடாய்த்திருப்போனையும், வியாதியஸ்தனையும், போஷிக்கப்பட்டிராதவனையும் திருப்பி அனுப்பவில்லை; ஐஸ்வரியத்தின் மீது தங்கள் இருதயத்தை வைக்கவில்லை; அதனால் முதியோருக்கும், வாலிபருக்கும், அடிமைக்கும், சுயாதீனனுக்கும், புருஷர்களுக்கும், ஸ்திரீகளுக்கும் சபையைச் சேர்ந்த மற்றும் சேராதவர்களுக்குமாய் அனைவருக்கும் பட்சபாதமின்றி தேவையிலிருந்தவர்களுக்கு உதாரத்துவமாய் கொடுத்தார்கள்.

31 இப்படியாய் அவர்கள் விருத்தியடைந்து, தங்கள் சபையைச் சாராதவர்களைக் காட்டிலும் ஐஸ்வரியவான்களானார்கள்.

32 ஏனெனில் அவர்களுடைய சபையைச் சாராதவர்கள் குறிசொல்வதிலும், விக்கிரக ஆராதனை, அல்லது சோம்பேறித்தனத்திலும் வீண் பேச்சிலும், பொறாமையிலும், பிணக்கிலும், ஈடுபட்டு, விலையுயர்ந்த வஸ்திரங்களை தரிப்போராய்த், தங்களைத் தாங்களே மேட்டிமையாய் எண்ணிக்கொண்டார்கள்; துன்புறுத்தல்களிலும், பொய்யுரைப்பதிலும், திருடுவதிலும், கொள்ளையிடுவதிலும், வேசித்தனங்களிலும், கொலைசெய்வதிலுமான சகலவித அக்கிரமங்களிலும், தங்களை உட்படுத்தி, பெருமையாய் பிணக்கு விளைவிப்போராய் இருந்தார்கள், இருப்பினும் சட்டத்தை மீறுகிறவர்கள் மீது கூடியமட்டும் சட்டம் அதிகாரத்திலிருந்தது.

33 அந்தப்படியே, இவ்விதமாய் சட்டத்தை அவர்கள்மீது பிரயோகப்படுத்தினதினிமித்தமும், அவனவன் தான் செய்தவற்றுக்கேற்ப துன்பமனுபவித்தபடியாலும், அவர்கள் அமைதலானார்கள், தெரியவருமோ என்று பயந்து துன்மார்க்கத்தை செய்யாதிருந்தார்கள். எனவே நேபியின் ஜனங்களுக்குள்ளே நியாயதிபதிகளின் ஐந்தாம் வருஷ ஆளுகைவரைக்கும் அதிக சமாதானம் நிலைவரப்படுத்தப்பட்டது.