வேதங்கள்
ஆல்மா 24


அதிகாரம் 24

தேவ ஜனத்திற்கு விரோதமாய் லாமானியர் வருதல் – அந்தி-நேபி-லேகியர், கிறிஸ்துவில் களிகூருதலும் அவர்கள் தூதர்களால் சந்திக்கப்படுதலும் – தங்களைத் தற்காத்துக்கொள்ளாமல் மரணமடையத் தெரிந்துகொள்ளுதல் – அதிக லாமானியர் மனமாறுதல். ஏறக்குறைய கி.மு. 90–77.

1 அந்தப்படியே, அமுலோன் தேசம், ஏலாம் தேசம் மற்றும் எருசலேம் தேசத்திலுமாகச், சுற்றிலுமுள்ள தேசமனைத்திலிருந்தவர்களும், முடிவாக, மனம்மாறாத மற்றும் அந்தி-நேபி-லேகி என்ற பெயரை தங்கள்மீது தரித்துக்கொள்ளாதவர்களுமாகிய, அமலேக்கியரும், அமுலோனியரும், லாமானியரும் தங்கள் சகோதரருக்கு விரோதமாய்க் கோபமடையும்படிக்கு, அமலேக்கியராலும் அமுலோனியராலும் தூண்டப்பட்டார்கள்.

2 அவர்கள் தங்கள் ராஜாவிற்கு விரோதமாய் கலகம் பண்ணும் அளவுக்கும், அவன் தங்கள் ராஜாவாக இருக்கக்கூடாது என்ற அளவிற்கும், அவர்களுக்கு எதிராய் அவர்களின் வெறுப்பு மிகவும் அதிகரித்தது; ஆதலால் அவர்கள் அந்தி-நேபி-லேகி ஜனத்திற்கு விரோதமாய் ஆயுதம் ஏந்தினார்கள்.

3 இப்பொழுது ராஜா ராஜ்யபாரத்தை தன் குமாரனுக்குக் கொடுத்து, அவனை அந்தி-நேபி-லேகி என்ற பெயரில் அழைத்தான்.

4 லாமானியர், தேவ ஜனத்திற்கு விரோதமாய் சண்டையிட ஆயத்தம் பண்ணத் தொடங்கிய அதே வருஷத்தில் ராஜா மரித்துப்போனான்.

5 லாமானியர் தங்கள் சகோதரரை அழித்துப்போட செய்கிற ஆயத்தங்களை அம்மோனும் அவன் சகோதரரும், அவனோடு வந்த யாவரும் கண்டு, அவர்கள் மீதியான் தேசத்திற்கு போனார்கள். அங்கே அம்மோன் தன் சகோதரர் யாவரையும் சந்தித்தான்; லாமானியரிடத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, லாமோனியோடும், அந்தி–நேபி-லேகி என்ற அவன் சகோதரனோடும், ஆலோசனை நடத்தும்படி அவர்கள் அங்கிருந்து இஸ்மவேலின் தேசத்திற்கு வந்தார்கள்.

6 இப்பொழுது கர்த்தருக்குள் மனம்மாறிய ஜனங்களுள், தங்கள் சகோதரருக்கு விரோதமாய் ஆயுதமெடுக்க ஒரு ஆத்துமாவாகிலும் இல்லை; இல்லை, அவர்கள் யுத்தத்திற்கான ஆயத்தங்களொன்றையும் செய்யமாட்டார்கள். ஆம், அவர்கள் செய்யக்கூடாதென்று அவர்களுடைய ராஜாவும் கட்டளை பிறப்பித்தான்.

7 இப்போதும், இக்காரியத்தைக் குறித்து அவன் ஜனங்களுக்குச் சொன்ன வார்த்தைகள் இவைகளே: எனக்குப் பிரியமான ஜனமே, நமக்குப் போதிக்கவும், நம்முடைய துன்மார்க்கப் பிதாக்களின் பாரம்பரியங்களைக் குறித்து நமக்கு உணர்த்தவும், நம்முடைய சகோதரராகிய இந்த நேபியரை நமக்கு, தன் காருண்யத்தால் அனுப்பிய, நம்முடைய மகத்துவமுள்ள தேவனாகிய, என் தேவனுக்கு நன்றிகளைச் செலுத்துகிறேன்.

8 இதோ, நம்முடைய இருதயங்களை மென்மையாக்க அவர் தம்முடைய ஆவியில் ஓர் பாகத்தை அளித்ததினிமித்தமும், இந்த நம்முடைய சகோதரராகிய நேபியருடன் நாம் தொடர்பு கொள்ளத் தொடங்கியதினிமித்தமும், என் மகத்துவமுள்ள தேவனுக்கு நன்றிகளைச் செலுத்துகிறேன்.

9 இதோ, இந்த தொடர்பைத் தொடங்கியதினிமித்தம், நம்முடைய பாவங்களைக் குறித்தும், நாம் செய்த அநேக கொலைகளைக் குறித்தும் உணர்த்தப்பட்டதற்காகவும், என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

10 ஆம், என் தேவன், என் மகத்துவமுள்ள தேவன், நாம் இவைகளிலிருந்து மனந்திரும்பும்படிக்கு அருளி, நாம் செய்த அந்த அநேக பாவங்களிலிருந்தும், கொலைகளிலிருந்தும் நம்மை மன்னித்ததினிமித்தமும், நம்முடைய இருதயங்களிலிருக்கும் குற்றவுணர்வை, தம்முடைய குமாரனின் நற்கிரியையினால் நீக்கிப்போட்டதினிமித்தமும், என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

11 இப்பொழுதும் இதோ, என் சகோதரரே, (மனுஷகுலம் யாவிலும் மிகவும் வீழ்ந்து போனவர்கள் நாமாதலால்) நாம் செய்யவேண்டியதெல்லாம் நாம் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும், கொலைகளிலிருந்தும், மனந்திரும்பி, நம்முடைய இருதயங்களிலிருந்து அவைகளைத் தேவன் நீக்கும்படிக்கு, நம்முடைய கறையை தேவன் நீக்கும்படியாக, அவர் சமுகத்தில் போதுமான அளவு மனந்திரும்புவதே, நாம் செய்யவேண்டிய காரியமாயிருக்கிறது.

12 இப்பொழுதும் எனக்கு மிகவும் அருமையான சகோதரரே, தேவன் நம்முடைய கறைகளை நீக்கிப்போட்டதாலும், நம் பட்டயங்கள் பிரகாசமடைந்ததாலும், இனிமேல் நம்முடைய பட்டயங்களை நமது சகோதரருடைய இரத்தத்தால் கறைபடாது வைத்திருப்போமாக.

13 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படியல்ல. நம்முடைய பட்டயங்கள் நம்முடைய சகோதரரின் இரத்தத்தால் கறைபடியாது வைத்திருப்போமாக; ஏனெனில், ஒருவேளை மறுபடியும் நம்முடைய பட்டயங்களை கறைபடுத்துவோமாயின், நம்முடைய பாவங்களின் நிவர்த்திக்கென்று சிந்தப்படவிருக்கிற, நமது மகத்துவமுள்ள தேவனுடைய குமாரனின் இரத்தத்தினால், இனி ஒருபோதும் அவைகள் பிரகாசமடையும்படி கழுவப்பட முடியாது.

14 அந்த மகத்துவமுள்ள தேவன் நம் மீது இரக்கம்கொண்டு, நாம் அழிந்துபோகக்கூடாதென்று இவைகளை நமக்குத் தெரியப்பண்ணினார்; ஆம், அவர் நம்முடைய பிள்ளைகளை நேசிப்பதைப்போலவே, நம்முடைய ஆத்துமாக்களை நேசிப்பதினால் இவைகளை நமக்கு முன்னதாகவே தெரியப்பண்ணினார்; ஆதலால் இரட்சிப்பின் திட்டத்தை நமக்கும், பின் தலைமுறைகளுக்கும் தெரியப்பண்ணும்படிக்கு, அவர் தம்முடைய இரக்கத்தால் தம் தூதர்கள் மூலம் நம்மைச் சந்திக்கிறார்.

15 நமது தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவர்! நம்முடைய கறைகள் நம்மிடத்திலிருந்து நீக்கப்படவும், நம்முடைய பட்டயங்களை பிரகாசமடையச் செய்யவும், நம்மால் இயன்றதைச் செய்யவேண்டியிருப்பதால், அவருடைய வார்த்தை நமக்கு கொடுக்கப்பட்டது முதல், அதினிமித்தம் நம்மை சுத்திகரித்ததினால், நாம் நம்முடைய சகோதரரின் இரத்தத்தினால் நமது பட்டயங்களை கறைப்படுத்தவில்லையென்றும், கடைசி நாளிலோ, அல்லது அவருக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்பட நிற்கும்படிகொண்டு வரப்படும் அந்நாளிலோ, பட்டயங்கள் பிரகாசமாயிருக்கும்படிக்கும், நம்முடைய தேவனுக்குச் சாட்சியமாயிருக்கும் பொருட்டும், அவைகளை மறைத்து வைப்போமாக.

16 இப்பொழுதும் என் சகோதரரே, நம்முடைய சகோதரர் நம்மை அழிக்க வகை தேடினால், இதோ, நாம் நம்முடைய பட்டயங்களை மறைத்து வைப்போமாக, ஆம், அவைகள் பிரகாசமாயிருக்கும்படிக்கும், அவைகளை நாம் பயன்படுத்தவேயில்லை என்று, கடைசி நாளின்போது சாட்சியமாய் இருக்கும்படிக்கும், அவைகளை பூமியில் ஆழமாகப் புதைப்போம்; நம்முடைய சகோதரர் நம்மை அழித்துப்போட்டால், இதோ, நாம் நம்முடைய தேவனிடத்திற்குப் போய் இரட்சிக்கப்படுவோம்.

17 இப்பொழுதும், அந்தப்படியே, ராஜா இவைகளைச் சொல்லிமுடித்தபோது, ஜனங்கள் யாவரும் ஒன்றாய்க் கூட்டப்பட்டு, தங்கள் பட்டயங்களையும், மனுஷனின் இரத்தத்தைச் சிந்தப் பயன்படுத்தப்பட்ட சகல ஆயுதங்களையும் எடுத்து, பூமியின் ஆழத்திலே புதைத்தார்கள்.

18 மனுஷனுடைய இரத்தத்தைச் சிந்த இனி ஒருபோதும் ஆயுதங்களை தாங்கள் பயன்படுத்துவதில்லையென்று, அவர்களுடைய பார்வையில் தேவனுக்கும் மனுஷனுக்கும் சாட்சியமாக இதை அவர்கள் செய்தார்கள்; அவர்கள் தங்கள் சகோதரருடைய இரத்தத்தை சிந்துவதை விட, தங்களின் சொந்த ஜீவனைக் கொடுப்போம் என்றும், ஒரு சகோதரனிடமிருந்து பிடுங்குவதை விட, தாங்கள் அவர்களுக்குக் கொடுப்போம் எனவும், தங்கள் நாட்களைச் சோம்பலாய் இருந்து கழிப்பதை விட, தங்களின் கைகளினால் மிகுதியாய்ப் பிரயாசப்படுவோம் என்றும், தேவனிடத்தில் உடன்படிக்கை பண்ணவும், உறுதி செய்யவுமே, இதைச் செய்தார்கள்.

19 இப்படியாக இந்த லாமானியர் விசுவாசிக்கவும், சத்தியத்தை அறியவும் கொண்டு வரப்பட்டபோது, அவர்கள் உறுதியாய் இருந்து, பாவத்தைச் செய்வதைப் பார்க்கிலும், மரணத்தைக்கூட சகிப்பார்கள் என நாம் காண்கிறோம்; இவ்விதமாக அவர்கள் சமாதான ஆயுதங்களைப் புதைத்தார்கள், அல்லது, அவர்கள் சமாதானத்திற்காக யுத்த ஆயுதங்களைப் புதைத்தார்கள், என நாம் பார்க்கிறோம்.

20 அந்தப்படியே, அவர்களுடைய சகோதரரான லாமானியர், யுத்தத்திற்கென ஆயத்தங்களை மேற்கொண்டு, ராஜாவை அழிக்கவும், அவனுக்குப் பதிலாய் மற்றொருவனை நியமிக்கவும், தேசத்திலிருந்து அந்தி-நேபி-லேகி ஜனத்தாரை அழிக்கும் நோக்கத்துடனே நேபியின் தேசம் வரைக்கும் வந்தார்கள்.

21 இப்பொழுது அவர்கள் தங்களுக்கு விரோதமாய் வருவதை, ஜனங்கள் கண்டபோது, அவர்கள் அவர்களைச் சந்திக்கப்போய், அவர்களுக்கு முன்பு, பூமியில் சாஷ்டாங்கமாய் விழுந்து, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளத் துவங்கினார்கள்; இப்படியாக அவர்கள் அந்த நிலையிலிருந்தபோது லாமானியர் அவர்கள்மீது விழுந்து, அவர்களை பட்டயத்தினால் கொன்றுபோடத் துவங்கினார்கள்.

22 இப்படியாக எந்த எதிர்ப்பையும் சந்திக்காமல், அவர்கள் ஆயிரத்து ஐந்து பேரைக் கொன்று போட்டார்கள்; அவர்கள் தங்கள் தேவனோடு வாசம் பண்ணப் போனதினாலே அவர்கள் பாக்கியவான்களென்று நாம் அறிவோம்.

23 இப்பொழுது தங்கள் சகோதரர் பட்டயத்திற்குப் பயந்தோடவோ, வலது புறமோ, இடது புறமோ திரும்பாமல், ஆனால் கீழே விழுந்து, மரித்து, பட்டயத்தினால் மரிக்கும் தருவாயிலும், தேவனைத் துதிப்பதை லாமானியர் கண்டபோது,

24 இப்பொழுது லாமானியர் இதைக் கண்டபோது, அவர்கள் அவர்களைக் கொன்று போடுவதை நிறுத்தினார்கள்; பட்டயத்தினால் விழுந்துபோன தங்கள் சகோதரருக்காக அநேகரின் இருதயங்கள் பொங்கின. ஏனெனில் தாங்கள் செய்தவற்றிற்காக மனந்திரும்பினார்கள்.

25 அந்தப்படியே, அவர்கள் தாங்கள் செய்த கொலைகளுக்காக மனஸ்தாபப்பட்டமையால், தங்கள் யுத்த ஆயுதங்களை கீழே போட்டு, அவைகளை மறுபடியும் எடுக்கமாட்டார்கள். அவர்களோ தங்களைக் கொல்ல கரங்களை உயர்த்துகிற மனுஷனுடைய இரக்கங்களைச் சார்ந்திருக்கிற அவர்களுடைய சகோதரரைப்போல சாஷ்டாங்கமாய் விழுந்தார்கள்.

26 அந்தப்படியே, அந்நாளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், தேவ ஜனத்தோடு சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் மிகுதியாய் இருந்தார்கள்; கொல்லப்பட்டுப்போனவர்கள் நீதிமான்களாய் இருந்தபடியாலே, அவர்கள் இரட்சிக்கப்பட்டார்களே அன்றி, சந்தேகப்பட நம்மிடத்தில் எந்த ஒரு காரணமுமில்லை.

27 அவர்களில் துன்மார்க்கன் ஒருவனாகிலும் மடிந்து போகவில்லை; ஆனால் சத்திய ஞானத்திற்கோ, ஆயிரத்திற்கு அதிகமானோர் கொண்டுவரப்பட்டார்கள்; இப்படியாய் கர்த்தர் தமது ஜனத்தின் இரட்சிப்பிற்காக, அநேக வழிகளில் கிரியை செய்வதைக் காண்கிறோம்.

28 தங்கள் சகோதரரில் அநேகரைக் கொன்றுபோட்ட லாமானியரில் அதிகம்பேர் அமலேக்கியரும் அமுலோனியருமாக இருந்தார்கள். அவர்களில் அதிகமானோர் நிகோரின் முறைமையைச் சார்ந்தோராய் இருந்தார்கள்.

29 இப்பொழுது, கர்த்தருடைய ஜனத்தோடு சேர்ந்துகொண்டவர்களில், அமலேக்கியரோ, அமுலோனியரோ, நிகோரின் முறைமையைச் சார்ந்தவர்களோ இல்லை. ஆனால் அவர்கள் லாமான் மற்றும் லெமுவேல் ஆகியோரின் நிஜ சந்ததியினரே.

30 இப்படியாக ஜனங்கள் தேவ ஆவியால் ஒருதரம் தெளிவுபடுத்தப்பட்டு, நீதியானவைகளுக்கடுத்த காரியங்களைக் குறித்து அதிக ஞானத்தைப்பெற்று, பின்னர் பாவத்திலும் மீறுதலினுள்ளும் விழுவார்களெனில், அவர்கள் மிகவும் கடினமானவர்களாகிப் போய், இப்படியாக அவர்களின் நிலை, இக்காரியங்களை அவர்கள் அறியாதிருந்த நிலையைக் காட்டிலும் கேடுள்ளதாகிறது, என்பதை தெளிவாய்ப் பகுத்தறியலாம்.