வேதங்கள்
ஆல்மா 25


அதிகாரம் 25

லாமானியத் தாக்குதல் பரவுதல் – அபிநாதி தீர்க்கதரிசனமுரைத்ததைப் போலவே நோவாவின் ஆசாரியர்களுடைய சந்ததியார் அழிந்து போகுதல் – அநேக லாமானியர் மனம்மாறி, அந்தி-நேபி-லேகி ஜனத்தைச் சேர்ந்து கொள்ளுதல் – அவர்கள் கிறிஸ்துவில் விசுவாசித்து மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுதல் – ஏறக்குறைய கி.மு. 90–77.

1 இதோ, இப்பொழுது, அந்தப்படியே, அவர்கள் தங்கள் சகோதரரை கொன்று போட்டதினால், மிகுந்த கோபமடைந்த லாமானியர், நேபியர் மீது பழி தீர்க்கவேண்டுமென்று சூளுரைத்தார்கள்; அச்சமயத்தில் அவர்கள் அந்தி-நேபி-லேகியின் ஜனத்தைக் கொல்ல முற்படவில்லை.

2 ஆனால் அவர்களோ, தங்கள் படைகளைக் கூட்டிக்கொண்டு, சாரகெம்லா தேசத்து எல்லைகளுக்குள் போய், அம்மோனிகா தேசத்திலிருந்த ஜனங்கள்மேல் விழுந்து, அவர்களை நிர்மூலமாக்கினார்கள்.

3 அதற்குப் பின்பு அவர்கள் நேபியருடன் அநேக யுத்தங்கள் செய்து, அதிலே துரத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

4 லாமானியரில் கொல்லப்பட்ட பெரும்பாலோர், நோவாவின் ஆசாரியர்களான, அமுலோன் மற்றும் அவனுடைய சகோதரருடைய சந்ததியினருமே. அவர்கள் நேபியரின் கரங்களினால் கொல்லப்பட்டார்கள்.

5 மீதியானோர், கீழ் வனாந்தரத்தினுள் ஓடி, லாமானியர் மீது வல்லமையையும் அதிகாரத்தையும் பெற்று, லாமானியரில் அநேகர் அவர்களுடைய நம்பிக்கையினிமித்தம் அக்கினியால் அழிக்கப்படப் பண்ணினார்கள்.

6 அவர்களில் அநேகர் அதிக இழப்பையும் மிகுந்த உபத்திரவங்களையும் அனுபவித்த பின்பு, தங்கள் தேசத்திலே, தங்களுக்கு ஆரோனும், அவனுடைய சகோதரரும் பிரசங்கித்த வார்த்தைகளை நினைவுகூர்ந்து, கலக்கமடையத் துவங்கினார்கள். ஆதலால், அவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய பாரம்பரியங்களிலே அவிசுவாசம்கொண்டு கர்த்தர் மேலும், அவர் நேபியருக்கு மிகுந்த வல்லமையைக் கொடுத்தார் என்றும் விசுவாசிக்கத் துவங்கினார்கள். இப்படியாக வனாந்தரத்தில் அவர்களில் அநேகர் மனமாறினார்கள்.

7 அந்தப்படியே, இக்காரியங்களை விசுவாசித்த யாவரையும், ஆம், அமுலோன் குமாரர்களில் மீதியானவர்களான அந்த அதிகாரிகள் மரணத்திற்குள்ளாக்கினார்கள்.

8 இந்த இரத்த சாட்சியின் மரணம் அவர்களுடைய சகோதரரில் அநேகரை கோபமடையச் செய்தது; வனாந்தரத்தில் பிணக்குகள் ஏற்படத் துவங்கின; லாமானியர் அமுலோன் மற்றும் அவனுடைய சகோதரர்களின் சந்ததியாரையும் வேட்டையாடி அவர்களைக் கொன்றுபோடத் துவங்கினார்கள்; அவர்கள் கிழக்கு வனாந்தரத்திற்குள் பறந்தோடினார்கள்.

9 இதோ இன்றும் அவர்கள் லாமானியர்களால் தேடப்பட்டு வருகிறார்கள். தன்னை அக்கினியால் மரணமடையச் செய்த ஆசாரியரின் சந்ததியினரைக் குறித்து, அபிநாதி சொன்ன வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டன.

10 ஏனெனில் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் எனக்கு எதைச் செய்கிறீர்களோ அது, வரப்போகிறவைகளுக்கு முன் மாதிரியாக இருக்கும், என்றான்.

11 இப்பொழுது அபிநாதி தேவனில் தன் விசுவாசத்தினிமித்தம், அக்கினியால் மரணத்தை அனுபவித்தவர்களுள் முதலாமவன். தான் அனுபவித்ததைப் போலவே அநேகரும் அக்கினியால் மரணத்தை அனுபவிப்பார்கள் என்பதே அவன் சொன்ன காரியமாகும்.

12 அவன் நோவாவின் ஆசாரியர்களை நோக்கி, அவன் எப்படி மரிக்கிறேனோ அப்படியே அவர்களுடைய சந்ததியாரும் அநேகரை மரணமடையச் செய்வார்களென்றும், மேய்ப்பனற்ற ஆடுகள் துஷ்டமிருகங்களால் விரட்டப்பட்டுக் கொல்லப்படுவதைப் போலவே, அவர்களும் தூரமாய் சிதறடிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள், என்றான். இப்பொழுது இதோ, அவர்கள் லாமானியரால் விரட்டப்பட்டு, வேட்டையாடப்பட்டு, கொல்லப்பட்டதினிமித்தம், இந்த வார்த்தைகள் மெய்ப்பிக்கப்பட்டன.

13 அந்தப்படியே, தாங்கள் நேபியரை மேற்கொள்ள முடியாதென்று லாமானியர் கண்டபோது, தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள்; அவர்களில் அநேகர் இஸ்மவேல் தேசத்திலும், நேபியரின் தேசத்திலும் வாசம் செய்ய வந்து, தேவ ஜனமான அந்தி-நேபி-லேகி ஜனத்துடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

14 அவர்களும் தங்கள் சகோதரர் செய்ததைப்போல, தங்களுடைய யுத்த ஆயுதங்களைப் புதைத்தார்கள். அவர்கள் நீதியுள்ள ஜனமாகத் துவங்கினார்கள், அவர்கள் கர்த்தருடைய வழிகளில் நடந்து அவருடைய கட்டளைகளையும் சட்டங்களையும் கைக்கொண்டு ஆசரித்தார்கள்.

15 ஆம், அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டார்கள். ஏனெனில் மோசேயின் நியாயப்பிரமாணம் அனைத்தும் இன்னும் நிறைவேறாததால் அவர்கள் அதைக் கைக்கொள்ள வேண்டியது அவசியமாயிற்று. மோசேயின் நியாயப்பிரமாணம் மட்டுமன்றி, கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து, மோசேயின் நியாயப்பிரமாணம் அவருடைய வருகைக்கொரு முன்னடையாளமென்று கருதி, அவர் தங்களுக்கு வெளிப்படும் காலம்வரைக்கும், அந்த வெளியரங்கமான ஆசரிப்புகளைக் கைக்கொள்ள வேண்டுமென்று நம்பினார்கள்.

16 இரட்சிப்பு மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் வருகிறதென்று அவர்கள் எண்ணவில்லை; ஆனால் மோசேயின் நியாயப்பிரமாணம் கிறிஸ்துவில் அவர்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்த உதவியது; இப்படியாக அவர்கள் நித்திய ஜீவனைப் பெறுவோமென்ற விசுவாசத்தின் மூலம், நம்பிக்கையை நிலைநிறுத்தி, வரப்போகிறவைகளைச் சொன்ன தீர்க்கதரிசன ஆவியைச் சார்ந்திருந்தார்கள்.

17 இதோ, தங்கள் ஜெபத்திற்குத் தக்கதாக தங்களுக்குக் கர்த்தர் அளித்ததைக் கண்டும், ஒவ்வொரு காரியத்திலும் அவர் தங்களுக்குத் தம்முடைய வார்த்தையை மெய்ப்பித்ததினிமித்தமும், லாமானியருக்குள்ளே, தாங்கள் பெற்ற ஜெயத்தினிமித்தமும், அம்மோனும் ஆரோனும், ஓம்னரும், ஈம்னியும், அவர்களுடைய சகோதரரும் மிகுதியாய்க் களிகூர்ந்தார்கள்.