வேதங்கள்
ஆல்மா 35


அதிகாரம் 35

வார்த்தையைப் பிரசங்கிப்பது, சோரமியரின் சூதை நிர்மூலமாக்குகிறது – அவர்கள் மனமாறியவர்களை வெளியேற்றுதல், அவர்களோ எருசோனில் அம்மோனின் ஜனங்களோடு சேர்ந்து கொள்ளுதல் – ஜனங்களுடைய துன்மார்க்கத்தனிமித்தம் ஆல்மா, வருந்துதல். ஏறக்குறைய கி.மு. 74.

1 இப்பொழுது, அந்தப்படியே, அமுலேக் இவ்வார்த்தைகளைப் பேசி முடித்த பின்பு, அவர்கள் கூட்டத்திலிருந்து பிரிந்து, எருசோன் தேசத்திற்கு வந்தார்கள்.

2 ஆம், சோரமியருக்கு அவர்கள் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு, மீதமுள்ள சகோதரரும் எருசோன் தேசத்திற்கு வந்தார்கள்.

3 அந்தப்படியே, சோரமியரில் பிரபலமானவர்கள் தங்களுக்குப் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தைகளைக் குறித்து ஏகமாய்க் கூடி ஆலோசித்தார்கள். வார்த்தை அவர்களுடைய சூதை நிர்மூலமாக்கிப் போடுவதனிமித்தம் கோபமாயிருந்தார்கள்; ஆதலால், அவர்கள் வார்த்தைகளுக்கு செவிகொடாமற் போனார்கள்.

4 அவர்கள் செய்தி அனுப்பி, தேசம் முழுவதிலும் ஜனங்கள் யாவரையும், ஏகமாய்க் கூடச்செய்து, பேசப்பட்ட வார்த்தைகளைக் குறித்து அவர்களுடனே ஆலோசித்தார்கள்.

5 அவர்களுடைய அதிகாரிகளும், ஆசாரியர்களும், ஆசிரியர்களும் தங்களுடைய விருப்பங்களை ஜனங்களுக்குத் தெரிவிக்கவில்லை; ஆதலால் அவர்கள் எல்லா ஜனங்களுடைய எண்ணங்களையும் இரகசியமாய் அறிந்தார்கள்.

6 அந்தப்படியே, அவர்கள் சகல ஜனங்களின் எண்ணங்களை அறிந்த பின்பு, ஆல்மாவினாலும், அவன் சகோதரராலும் பேசப்பட்ட வார்த்தைகளுக்கு ஆதரவானோர் தேசத்திலிருந்து துரத்தப்பட்டார்கள்; அவர்கள் அநேகராயிருந்தார்கள்; அவர்களும் எருசோன் தேசத்திற்கு வந்தார்கள்.

7 அந்தப்படியே, ஆல்மாவும் அவன் சகோதரரும் அவர்களுக்கு ஊழியம் செய்தார்கள்.

8 சோரமியர் என்கிற ஜனங்கள் எருசோனிலிருக்கிற அம்மோனின் ஜனங்களிடத்தில் கோபமாயிருந்தார்கள். சோரமியரின் பிரதான அதிகாரி, பொல்லாதவனாயிருந்தபடியினால், அம்மோன் ஜனங்களிடத்திடம், தங்கள் தேசத்திலிருந்து, அவர்கள் தேசத்திற்குள் பிரவேசித்த யாவரையும், அவர்கள் புறம்பே தள்ள வேண்டுமென்ற, விருப்பம் கொண்டு, ஆள் அனுப்பினான்.

9 அவன் அவர்களுக்கு எதிராக அநேக பயமுறுத்தல்களைச் சொன்னான். இப்பொழுது அம்மோனின் ஜனங்கள் அவர்களுடைய வார்த்தைகளினால் பயந்து போகவில்லை; ஆகவே அவர்கள் அவர்களை வெளியே துரத்தாமல், தங்களிடத்தில் வந்த ஏழை சோரமியர் அனைவரையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் அவர்களைப் போஷித்து, வஸ்திரம் கொடுத்து அவர்கள் சுதந்தரிக்கும்படி நிலங்களை அளித்தார்கள்; அவர்கள் அவர்களுடைய தேவைக்கேற்ப உதவி செய்தார்கள்.

10 இது சோரமியர், அம்மோன் ஜனங்களுக்கு விரோதமாய் கோபம் கொள்ளும்படி ஏவினது. அவர்கள் லாமானியரோடு கலந்து, அவர்களையும் அவர்களுக்கு விரோதமாய்க் கோபம் கொள்ள ஏவத் தொடங்கினார்கள்.

11 இப்படியாக, சோரமியரும், லாமானியரும் அம்மோன் ஜனங்களுக்கு விரோதமாகவும், நேபியர்களுக்கு விரோதமாகவும் யுத்தம் பண்ண ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

12 இப்படியாக நேபியரின் ஜனங்களின் மீது நியாயாதிபதிகளின் ஆளுகையின் பதினேழாம் வருஷம் நிறைவுற்றது.

13 லாமானியர் சேனைகளுக்கும், சோரமிய சேனைகளுக்கும் விரோதமாய் போர் புரிய, நேபியரின் சேனைகளுக்கு எருசோன் தேசத்திலே அதிக இடம் உண்டாகும் பொருட்டு, அம்மோன் ஜனங்கள் எருசோன் தேசத்திலிருந்து வெளியேறி மீலேக் தேசத்திற்கு வந்தார்கள். இப்படியாக நியாயாதிபதிகளின் ஆளுகையின் பதினெட்டாம் வருஷத்திலே, லாமானியருக்கும், நேபியருக்குமிடையே யுத்தம் மூண்டது; அவர்களுடைய யுத்தங்களைப்பற்றிய விவரம் இதற்குப்பின் கொடுக்கப்படும்.

14 சோரமியரில் அநேகரை மனந்திரும்புதலுக்குள் கொண்டுவரும்படியாக, தேவனுடைய கரங்களில் கருவிகளாக இருந்த பிறகு, ஆல்மாவும், அம்மோனும், அவர்கள் சகோதரரும், ஆல்மாவின் இரண்டு குமாரரும், சாரகெம்லா தேசத்திற்குத் திரும்பினார்கள்; மனந்திரும்பின யாவரும் அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்தப்பட்டார்கள்; ஆனால் எருசோன் தேசத்தில் அவர்கள் சுதந்தரித்துக் கொள்ளும்படியாக பூமி இருந்தது. அவர்கள் தங்களையும், தங்கள் மனைவிகளையும், பிள்ளைகளையும், தங்கள் நிலங்களையும் காக்க ஆயுதங்களை எடுத்தார்கள்.

15 இப்போது ஆல்மா, தன் ஜனத்தாருக்குள்ளிருந்த அக்கிரமத்தினாலும், ஆம், யுத்தங்களினாலும், இரத்தம் சிந்துதலினாலும், அவர்களுக்குள்ளிருந்த பிணக்குகளாலும், மனம் சஞ்சலப்பட்டு, ஒவ்வொரு பட்டணத்திலுமுள்ள சகல ஜனங்களுக்கும் வார்த்தையை அறிவிக்கச் சென்று, ஆட்களை அனுப்பி, ஜனங்களுடைய இருதயங்கள் கடினப்படத் தொடங்குவதை கண்டவனாய், வார்த்தையின் கண்டிப்பினிமித்தம் அவர்கள் புண்பட்டதால், அவனது இருதயம் மிகவும் துக்கித்தது.

16 ஆதலால் அவன் தன் குமாரர் ஒவ்வொருவனுக்கும், தனித்தனியே, நீதிக்கேற்ற காரியங்களைக் குறித்த, தன் பொறுப்பைக் கொடுக்க, அவர்கள் ஏகமாய் கூடும்படி செய்தான். அவனது சொந்த பதிவேட்டின்படியே, அவன் அவர்களுக்குக் கொடுத்த அவனுடைய கட்டளைகளின் விவரம் நம்மிடத்தில் இருக்கிறது.