வேதங்கள்
ஆல்மா 26


அதிகாரம் 26

அம்மோன் கர்த்தரைக் குறித்து மேன்மை பாராட்டுதல் – விசுவாசமுள்ளவர்கள் கர்த்தராலே பெலப்படுத்தப்பட்டு, ஞானம் அருளப்படுதல் – மனுஷர் விசுவாசத்தினால் ஆயிரமாயிரம் ஆத்துமாக்களை மனந்திரும்புதலுக்கேதுவாய் கொண்டுவரக்கூடும் – தேவனுக்கு சகல வல்லமையும் உண்டு. அவர் சகலத்தையும் அறிந்திருக்கிறார். ஏறக்குறைய கி.மு. 90–77.

1 இப்பொழுது அம்மோன் தன் சகோதரருக்குச் சொன்ன வார்த்தைகளாவன: என் உடன்பிறப்புகளே, என் சகோதரரே, இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நாம் களிகூர்ந்திருக்க எவ்வளவு பெரிய காரணமுண்டு; ஏனெனில் நாம் சாரகெம்லா தேசத்தை விட்டுப் புறப்பட்டபோது, தேவன் நமக்கு இப்படிப்பட்ட மேன்மையான ஆசீர்வாதங்களை அருளுவார் என்று எண்ணிப்பார்த்திருக்கக்கூடுமா?

2 இப்பொழுது நான் கேட்கிறேன். அவர் நம்மீது எப்பேர்ப்பட்ட மகத்தான ஆசீர்வாதங்களை அருளியிருக்கிறார்? நீங்கள் சொல்லக்கூடுமா?

3 இதோ, உங்களுக்காக நான் பிரதியுத்தரமளிக்கிறேன்; ஏனெனில் நம்முடைய சகோதரரான லாமானியர் காரிருளிலே, ஆம், காரிருளான துரவிலே இருந்தார்கள். ஆனால் இதோ, அவர்களில் எத்தனை பேர் தேவனுடைய அற்புதமான ஒளியைக் காணும்படியாய் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்! இந்த மகத்தான பணியை நிறைவேற்ற நாம் தேவனுடைய கரங்களில் கருவிகளாக்கப்பட்டதே நம் மேல் அருளப்பட்ட ஆசீர்வாதமாயிருக்கிறது.

4 இதோ, அவர்களில் ஆயிரமாயிரமானோர் களிகூருகிறார்கள். அவர்கள் தேவனுடைய மந்தைக்குள்ளாக கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.

5 இதோ, வயல் முதிர்ந்திருந்தது. நீங்கள் அரிவாளை நீட்டி, உங்கள் பெலத்தோடு அறுத்து, ஆம், நாள் முழுவதும் பிரயாசப்பட்டதினிமித்தம் நீங்கள் பாக்கியவான்கள். உங்கள் அரிக்கட்டுக்களின் எண்ணிக்கையைக் காணுங்கள்! அவைகள் வீணாய்ப்போகாதபடி களஞ்சியங்களில் சேர்க்கப்படும்.

6 ஆம், அவைகள் கடைசி நாளின்போது, புயலினால் உதிர்க்கப்படுவதுமில்லை; சுழல் காற்றினால் அவைகள் சீரழிக்கப்படுவதுமில்லை; புயல் வரும்போதோ, அவைகள் அவைகளுடைய ஸ்தலங்களில் சேர்க்கப்படும். அதினிமித்தம் புயல் அவைகளை ஊடுருவவும் முடியாது; ஆம், சத்துரு அவைகளை எடுத்துச் செல்லவிரும்புகிற எவ்விடமானாலும் கொடிய காற்றினால் அவைகள் அடிக்கப்பட்டுப் போவதுமில்லை.

7 ஆனால் இதோ, அறுவடையின் கர்த்தருடைய கரங்களில் அவைகள் இருக்கின்றன. அவைகள் அவருடையவைகள். அவர் அவைகளைக் கடைசி நாளின்போது எழும்பப்பண்ணுவார்.

8 நம்முடைய தேவனின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக; நாம் அவரைப் பாடித் துதிப்போமாக. ஆம், அவருடைய பரிசுத்த நாமத்திற்கென்று நன்றிகளை ஏறெடுப்போமாக, ஏனெனில் அவர் என்றென்றும் நீதியை நடப்பித்திருக்கிறாரே.

9 ஏனெனில் நாம் சாரகெம்லா தேசத்தைவிட்டு வராமலிருந்திருப்போமானால், நம்மை மிகவும் நேசிக்கிற இந்த பிரியமான சகோதரர்கள், நமக்கு விரோதமாய் இப்பொழுதும் குரோதம்கொண்டு, அதினாலே வதைக்கப்பட்டும், தேவனுக்கு அந்நியர்களாயுமிருந்திருப்பார்கள்.

10 அந்தப்படியே, அம்மோன் இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, அவன் சகோதரனாகிய ஆரோன் அவனைக் கடிந்து, அம்மோனே உனது சந்தோஷம் உன்னை மேன்மை பாராட்டும்படியாக நடப்பிக்கிறதோ, என்று அஞ்சுகிறேன், என்றான்.

11 ஆனால் அம்மோன் அவனை நோக்கி சொன்னான்: நான் என் சுயபலத்திலும், என் சுயஞானத்திலும் மேன்மை பாராட்டுகிறதில்லை; ஆம், என் சந்தோஷம் பூரணமாயிருக்கிறது. என் இருதயம் சந்தோஷத்தால் விளிம்புமட்டும் நிரம்பியிருக்கிறது. நான் என் தேவனில் களிகூருவேன்.

12 ஆம், நான் ஒன்றுமில்லை. என் பெலத்தைப் பொறுத்தமட்டில் நான் பெலவீனன் என்று அறிந்திருக்கிறேன்; ஆகையால் நான் என்னைக் குறித்து மேன்மை பாராட்டாமல், தேவனைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன். ஏனெனில், அவருடைய பெலத்தினால், நான் சகலத்தையும் செய்யக்கூடும்; ஆம், இதோ, இத்தேசத்தில் நாம் அநேக பலத்த அற்புதங்களை நடத்தியிருப்பதால், அதனிமித்தம் அவருடைய நாமத்தை என்றென்றும் துதித்திருப்போம்.

13 இதோ, எத்தனை ஆயிரமாயிரமான நம்முடைய சகோதரரை அவர் பாதாளத்தின் வேதனைகளிலிருந்து விடுவித்தார். அவர்கள் மீட்கும் அன்பைப்பற்றிப் பாட அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இது நம்முள் இருக்கும் அவருடைய வார்த்தையின் வல்லமையினால்தான். ஆதலால் நாம் களிகூர்ந்திருக்க உன்னதமான காரணம் உண்டல்லவா?

14 ஆம், அவரே அதி உன்னதமான தேவன் என்பதினாலும், நம்முடைய சகோதரரை பாதாளத்தின் சங்கிலிகளிலிருந்து அவிழ்த்து விட்டதினாலும், அவரை என்றென்றுமாய்த் துதிக்க நமக்கு காரணம் இருக்கிறது.

15 ஆம், அவர்கள் என்றுமுள்ள அந்தகாரத்தினாலும், அழிவினாலும் சூழப்பட்டிருந்தார்கள்; ஆனால் இதோ, அவரோ, அவர்களை என்றுமுள்ள இரட்சிப்பாகிய தம் நித்திய வெளிச்சத்தினுள் கொண்டுவந்தார்; அவர்கள் இணையற்ற அவருடைய அன்பின் பெருக்கத்தால் சூழப்பட்டிருக்கிறார்கள்; ஆம், இந்தப் பெரிதும், மகத்துவமுமுள்ள கிரியையைச் செய்ய அவருடைய கரங்களில் நாம் கருவிகளாய் இருந்திருக்கிறோம்.

16 ஆதலால், நாம் களிகூர்வோமாக. ஆம், கர்த்தரில் களிகூர்வோமாக. ஆம், நம்முடைய சந்தோஷம் பூரணப்பட்டிருப்பதாலே, நாம் களிகூருவோமாக. ஆம், நம்முடைய தேவனை என்றென்றுமாய்த் துதிப்போமாக. இதோ மிகுதியாய்க் கர்த்தரில் மகிமைப்பட யாரால் கூடும்? ஆம், மனுபுத்திரரின் மீது இருக்கும் அவருடைய மிகுந்த வல்லமையையும், அவருடைய இரக்கத்தையும், அவருடைய நீடிய சாந்தத்தையும் மிகுதியாய்ச் சொல்ல யாரால் கூடும்? இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் உணருகிறதில் சிறிதளவாகிலும் சொல்ல என்னால் கூடாது.

17 நம்மை நம்முடைய அஞ்சத்தக்கதும், பாவமானதும், அசுசியானதுமான நிலையிலிருந்து இழுத்துக் கொள்ளும்படியாக, நம்முடைய தேவன் இரக்கம் கொள்வார் என்று யார் எண்ணியிருக்கக்கூடும்?

18 இதோ, நாம் அவருடைய சபையை அதம் பண்ணுவோமென்று பயமுறுத்தி கோபத்தோடு, சென்றோம்.

19 அவர் அப்போதே, நம்மை அஞ்சத்தக்க அழிவிற்குள்ளாக ஒப்படைக்காததேன்? ஆம், தம்முடைய நீதியின் பட்டயத்தை நம்மீது விழச்செய்து, நம்மை நித்திய மனமுறிவிற்குள்ளாகத் தீர்க்காததேன்?

20 இதை நினைக்கையில், என் ஆத்துமா அநேகமாய் விலகி ஓடுவது போலிருக்கிறது. இதோ, அவர் தமது நீதியை நம்மேல் செலுத்தாமல், தம்முடைய மிகுந்த இரக்கத்தினால், நம்மை மரணமும், துர்ப்பாக்கியமுமான அந்த என்றுமுள்ள துரவைக் கடக்கச் செய்து, நம்முடைய ஆத்துமாக்களின் இரட்சிப்பு மட்டும் அழைத்து வந்திருக்கிறார்.

21 இப்பொழுதும், இதோ, என் சகோதரரே, இவைகளை அறிகிற சுபாவ மனுஷன் எவராகிலும் உண்டா? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனஸ்தாபப்படுகிறவர்களேயல்லாமல் வேறொருவரும் இவைகளை அறியார்.

22 ஆம், எவன் மனந்திரும்பி, விசுவாசத்தைப் பிரயோகித்து, நற்கிரியைகளை நடப்பித்து, இடைவிடாமல் தொடர்ந்து ஜெபிக்கிறானோ, அவனுக்குத்தான் தேவ இரகசியங்களை அறியும்படியாக அருளப்பட்டிருக்கிறது. ஆம், அவனுக்குத்தான் என்றுமே வெளிப்படாத காரியங்கள் வெளிப்படுத்தப்படும். நம்முடைய இந்தச் சகோதரரை மனந்திருப்புதலுக்குள் கொண்டு வரும்படியாய் நமக்கு அருளப்பட்டதைப்போலவே, மனந்திரும்புதலுக்குள்ளாக ஆயிரமாயிரம் ஆத்துமாக்களைக் கொண்டு வரும்படியாக அவனுக்கும் அருளப்படும்.

23 என் சகோதரரே, நாம் சாரகெம்லா தேசத்திலிருக்கும் நம்முடைய சகோதரரை நோக்கி, நாங்கள் நம்முடைய சகோதரராகிய லாமானியருக்குப் பிரசங்கிக்க, நேபியின் தேசத்திற்குப் போகிறோம் என்று சொன்னபோது, அவர்கள் இகழ்ந்து நகைத்ததை நினைவில் கொண்டிருக்கிறீர்களா?

24 ஏனெனில் அவர்கள் நம்மை நோக்கி: நீங்கள் லாமானியரை சத்திய ஞானத்திற்குள் கொண்டுவரக்கூடும் என்று எண்ணுகிறீர்களா? இரத்தம் சிந்துதலில் மனம் மகிழ்பவர்களாயும், மிகக் கொடிய அக்கிரமத்தைச் செய்வதில் தங்கள் நாட்களைக் கழிப்பவராயும், அக்கிரமக்காரனின் வழியைப்போலவே, ஆதியிலிருந்து தங்கள் வழிகளிலுமிருக்கிற, அந்த வணங்காக் கழுத்துள்ள ஜனமாகிய லாமானியருக்கு, அவர்களுடைய பிதாக்களின் பாரம்பரியங்கள் தவறானவை என்று உணர்த்த உங்களால் கூடுமென்று எண்ணுகிறீர்களா என்றார்கள். இப்பொழுது என் சகோதரரே, இப்படியே பேசினார்கள் என்பதை நீங்களும் நினைவில் கொண்டிருக்கிறீர்களா.

25 அவர்கள்: நம்மை மேற்கொண்டு நம்மை அழித்துப் போடாதபடிக்கு நாம் அவர்களையும், அவர்களுடைய அக்கிரமத்தையும் தேசத்திலிருந்து அழிக்கும் பொருட்டாக, அவர்களுக்கு விரோமாய் ஆயுதங்களை எடுப்போம், என்றார்கள்.

26 ஆனால் இதோ, என் பிரியமான சகோதரரே, நாம் நம்முடைய சகோதரரை அழித்துப்போடும் நோக்கத்தோடு அல்லாமல், அவர்களின் ஆத்துமாக்கள் சிலவற்றையாகிலும் மீட்கும் நோக்கத்தோடே நாம் வனாந்தரத்தினுள் வந்தோம்.

27 நம்முடைய உள்ளங்கள் சோர்ந்து, நாம் திரும்பிப் போகலாம் என்று இருக்கையில், இதோ, கர்த்தர் நம்மைத் தேற்றி, உங்கள் சகோதரராகிய லாமானியர் மத்தியில் போய், உங்களுடைய உபத்திரவங்களைப் பொறுமையோடே சகித்திருங்கள். நான் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுப்பேன், என்றார்.

28 இப்போதும் இதோ, நாம் வந்து அவர்களுக்குள்ளே போனோம், நம்முடைய துன்பங்களை பொறுமையோடு சகித்திருந்தோம். நாம் வறுமையை சகித்தோம்; நாம் உலகத்தின் இரக்கங்களில் சார்ந்திருந்து, ஆம், நாம் உலகத்தின் இரக்கங்களில் மாத்திரம் சார்ந்திராமல், தேவ இரக்கங்களிலும் சார்ந்து வீட்டுக்கு வீடு சென்றோம்.

29 நாம் அவர்களுடைய வீடுகளினுள் பிரவேசித்து அவர்களுக்குப் போதித்தோம். நாம் அவர்களுக்கு அவர்களுடைய வீதிகளிலும் போதித்தோம்; நாம் அவர்களுக்கு அவர்களுடைய மலைகளின் மேலும் போதித்தோம்; நாம் அவர்களுடைய ஆலயங்களிலும், அவர்களுடைய ஜெப ஆலயங்களிலும் பிரவேசித்து அவர்களுக்குப் போதித்தோம்; நாம் தள்ளப்பட்டோம், பரியாசம்பண்ணப்பட்டோம், உமிழப்பட்டோம், நாம் தாடைகளில் அடிக்கப்பட்டோம்; நாம் கல்லெறியப்பட்டோம். பிடிக்கப்பட்டு வலிய கயிறுகளால் கட்டப்பட்டு சிறையினுள் தள்ளப்பட்டோம்; தேவனுடைய வல்லமையினாலும், ஞானத்தினாலும் மறுபடியும் விடுவிக்கப்பட்டோம்.

30 ஒருவேளை நாம் சில ஆத்துமாக்களையாகிலும் மீட்கும் கருவியாக இருக்கும் பொருட்டு, சகல உபத்திரவங்களையும் சகித்திருந்து, இவை யாவையும் செய்தோம்; ஒருவேளை நாம் சிலரையாகிலும் மீட்கும் கருவியாக இருக்கக் கூடுமேயானால் நமது சந்தோஷம் பூரணப்படுமென்று எண்ணியிருந்தோம்.

31 இப்பொழுதும் இதோ, நாம் எதிர்பார்த்து நம்முடைய பிரயாசங்களின் கனிகளைக் காணமுடியும்; அவைகள் கொஞ்சம்தானா? இல்லை, அவை அதிகமாய் உள்ளன, என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்கள் தங்களுடைய சகோதரரின் மீதும், நம் மீதும் வைத்திருக்கிற அன்பினிமித்தம், அவர்களுடைய உத்தமத்தைக் குறித்து நாம் சாட்சி பகரமுடியும்.

32 ஏனெனில் இதோ, அவர்கள் தங்கள் பகைவரின் ஜீவனை வாங்கிப் போடுவதைக் காட்டிலும் தங்கள் ஜீவனைப் பலியாய்க் கொடுப்பார்கள்; அவர்கள் தங்கள் சகோதரர்பால் வைத்திருக்கிற தங்களின் அன்பினிமித்தம், தங்கள் யுத்த ஆயுதங்களை ஆழமாய்ப் பூமியில் புதைத்துப்போட்டார்கள்.

33 இப்பொழுது இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், தேசம் முழுவதிலும் இப்படிப்பட்ட மேன்மையான அன்பு உண்டாயிருந்ததா? இதோ, இல்லை, நேபியருக்குள்ளும் உண்டாயிருக்கவில்லை, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

34 ஏனெனில் இதோ, இவர்கள் தங்கள் சகோதரருக்கு விரோதமாய் ஆயுதங்களை உயர்த்துவார்கள்; தாங்கள் கொல்லப்பட தங்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் இதோ, அவர்களில் எவ்வளவு பேர் தங்கள் ஜீவனை விட்டார்கள். அவர்களுடைய அன்பினாலும், பாவத்தின் மேலிருந்த அவர்களுடைய வெறுப்பினிமித்தமும் அவர்கள் தங்களுடைய தேவனிடத்திற்குப் போனார்கள், என்று நாம் அறிவோம்.

35 இப்போது நாம் களிகூர்ந்திருக்க நமக்குக் காரணமில்லையா? ஆம், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். களிகூர்ந்திருக்க நமக்கு உண்டான காரணத்தைப்போல், உலக ஆரம்ப முதல், வேறே எந்த மனுஷருக்கும் உண்டாயிருக்கவில்லை; என் சந்தோஷம் என் தேவனில் மேன்மைபாராட்டும்படியாகப் பெருகுகிறது; ஏனெனில் அவர் சகல வல்லமையையும், சகல ஞானத்தையும், சகல அறிவையும் பெற்றிருக்கிறார். அவர் சகலத்தையும் அறிகிறார். மனந்திரும்பி, தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்புக்கேதுவாய் அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறார்.

36 இது மேன்மை பாராட்டலாய் இருந்தால், நான் இன்னும் மேன்மை பாராட்டுவேன்; ஏனெனில் இதுவே என் ஜீவனும், என் வெளிச்சமும், என் சந்தோஷமும், என் இரட்சிப்பும் என்றுமுள்ள அழிவிலிருந்து என்னை மீட்பதுமாய் இருக்கிறது. ஆம், அந்நிய தேசத்தில் தன் அடிமரத்திலிருந்து உடைந்துபோன, இஸ்ரவேல் விருட்சத்தின் கிளையாகிய இந்த ஜனத்தின் மீது, கரிசனையுள்ள என் தேவனின் நாமம் ஸ்தோத்திரிக்கப்படுவதாக, என்று சொல்லுகிறேன். ஆம், அந்நிய தேசத்தில் அலைந்து திரிந்தவர்கள் மேல், கரிசனையுள்ள என் தேவனின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக.

37 இப்பொழுதும் என் சகோதரரே, ஒவ்வொரு ஜனமும், எத்தேசத்தில் இருந்தாலும், அவர்களைக் குறித்து தேவன் கரிசனமாயிருக்கிறார் என்று நாம் பார்க்கிறோம்; ஆம், அவர் தம் ஜனத்தைக் கணக்கிடுகிறார், அவருடைய மனதின் இரக்கம் பூமி முழுவதும் இருக்கிறது. இப்பொழுது, இதுவே என் சந்தோஷமும், என் நன்றியறிதலுமாயிருக்கிறது. நான் என் தேவனுக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். ஆமென்.