வேதங்கள்
ஆல்மா 12


அதிகாரம் 12

சீஸ்ரமோடு ஆல்மா பேசுகிறான். விசுவாசமாயிருப்பவனுக்கு மாத்திரம் தேவ இரகசியங்கள் அருளப்படக் கூடும் – மனுஷர் அவர்களுடைய சிந்தனைகள், நம்பிக்கைகள், வார்த்தைகள், கிரியைகள் ஆகியவற்றிற்கேற்ப நியாயந்தீர்க்கப்படுதல் – துன்மார்க்கர் ஆவிக்குரிய மரணமடைதல் – அழிவுக்கேதுவான இவ்வாழ்க்கை சோதிக்கப்படுகிற காலமே – மீட்பின் திட்டம் உயிர்த்தெழுதலையும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் கொண்டுவருகிறது – மனந்திரும்பினோர் ஒரேபேறான குமாரன் மூலம் இரக்கத்தைப் பெறலாம். ஏறக்குறைய கி.மு. 82.

1 இப்பொழுதும் அமுலேக்கின் வார்த்தைகள் சீஸ்ரமை அமைதியாக்கியதை ஆல்மா கண்டு, அவனை அழிக்கும்படியான அவனுடைய பொய்யிலும் வஞ்சகத்திலும் அவனை அமுலேக் பிடித்ததை அவன் கண்டபடியால், தன்னுடைய குற்றவுணர்வினிமித்தம் அவன் நடுக்கமடையத் துவங்குவதையும் கண்டு, அவன் தன் வாயைத் திறந்து அவனிடம் பேசத்தொடங்கி, அமுலேக்கின் வார்த்தைகளை உறுதிப்படுத்தவும், அமுலேக் செய்ததைக்காட்டிலும் மேலாக காரியங்களை விவரிக்கவும் அல்லது வேதங்களை விளக்கவும் துவங்கினான்.

2 சீஸ்ரமிடம் ஆல்மா பேசிய வார்த்தைகள், சுற்றிலுமிருந்த ஜனங்களாலும் கேட்கப்பட்டது. பெருந்திரள்கூட்டமாக இருந்தபடியால், அவன் இவ்விதமாக பேசினான்,

3 சீஸ்ரமே நீ உனது பொய்யிலும், தந்திரத்திலும் பிடிபட்டுப் போனதைக் கண்டு. நீ மனுஷரிடத்தில் மாத்திரமல்ல, தேவனிடத்திலும் பொய்யுரைத்தபடியால், இதோ அவர் உன்னுடைய எண்ணங்களை எல்லாம் அறிந்திருக்கிறார். அவருடைய ஆவியானவராலே உன்னுடைய எண்ணங்கள் எங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டதையும் காண்கிறாய்.

4 பின்னும் இந்த ஜனங்களை எங்களுக்கு விரோதமாய் எழும்பப்பண்ணி எங்களை தூஷிக்கவும், புறம்பே தள்ளிப்போடவும், இவர்களிடத்தில் பொய்யுரைத்து, வஞ்சிக்கிறதற்கு தக்கதான பிசாசின் சூதுகளின்படியே, உன்னால் உண்டான திட்டமும் சூதுள்ளது, என்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்பதையும் நீ காண்கிறாய்.

5 இத்திட்டம் உன்னுடைய சத்துருவின் திட்டம். அவன் உன்மேல் தன் அதிகாரத்தைச் செலுத்தினான். உன்னிடம் சொல்லுகிறவைகளைத்தான், நான் அனைவருக்கும் சொல்லுகிறேன், என்று நீ நினைவில்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன்.

6 இதோ, சத்துருவானவன் இந்த ஜனங்களைப் பிடித்து, அதன் மூலம் உங்களைத் தனக்கு அடிமையாக்கி, தன்னில் உண்டான அடிமையாக்குகிற அதிகாரத்தினாலே உங்களை என்றென்றுமாய் அழித்துப் போடத்தக்கதாய், தன்னுடைய சங்கிலிகளாலே உங்களைப் பிணைத்து கட்டுவதற்காகவே, இவைகளெல்லாம் அவனாலான கண்ணியாய் இருக்கிறது, என்று நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.

7 ஆல்மா இவ்வார்த்தைகளைப் பேசின பின்பு, சீஸ்ரம் தேவனுடைய வல்லமையை இன்னும் அதிகமாய் விசுவாசித்து மிகுந்த நடுக்கங் கொண்டான். ஆல்மாவும், அமுலேக்கும், தன் இருதயத்தின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் அறிந்திருக்கிறார்கள் என்று, அவன் உணர்ந்ததாலே தன்னைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள், என்று உணர்த்தப்பட்டான்; ஏனெனில் தீர்க்கதரிசன ஆவியின்படியே இவைகளை அவர்கள் அறிந்துகொள்ள அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது.

8 தேவனுடைய ராஜ்யத்தைப்பற்றி இன்னும் அதிகமாய் அறிந்துகொள்ள, சீஸ்ரம் அவர்களிடத்தில், கருத்துடனேகூட வினாவத் தொடங்கினான். அவன் ஆல்மாவை நோக்கி: நீதிமானும், அநீதியானவனுமான, யாவரும் மரித்தோரிலிருந்து எழுந்து தேவனுக்கு முன்பாக தங்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாந்தீர்க்கப்படும்படி கொண்டு வரப்பட, அமுலேக் கூறியவற்றின் அர்த்தமென்னவென்று, கேட்டான்.

9 ஆல்மா அவைகளைக் குறித்து விவரித்துச் சொன்னதாவது: அநேகர் தேவனுடைய இரகசியங்களை அறியும்படிக்கு அருளப்பட்டிருக்கிறார்கள்; எனினும் மனுபுத்திரர் தமக்கு கருத்துடனே செவிகொடுப்பதற்கும் கருத்துடைமைக்கும் ஏற்ப, அவர்களுக்கு தாம் அருளுகிற தம்முடைய வார்த்தையின் ஒரு பங்குக்கு மாத்திரமே கற்பிக்கக்கூடாதென்று அவர்களுக்குக் கண்டிப்பான கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

10 ஆகையினாலே, தன் இருதயத்தை கடினப்படுத்துகிறவன் எவனோ அவன் வார்த்தையின் சிறிய பங்கைப் பெறுவான். தன் இருதயத்தை கடினப்படுத்தாதவன் எவனோ அவனுக்கு வார்த்தையின் பெரும்பங்கு தேவ இரகசியங்களை அறிந்துகொள்ள அவனுக்கு அளிக்கப்படும்வரைக்கும், அவன் அவற்றை முழுமையாக அறியும்வரைக்கும் அளிக்கப்படுகிறது.

11 தங்கள் இருதயங்களை கடினப்படுத்துபவர்களுக்கு, அவருடைய இரகசியங்களைக் குறித்து அவர்கள் ஒன்றும் அறியாது போகும் மட்டும், வார்த்தையின் சிறிய பங்கு கொடுக்கப்படும்; பின்பு அவர்கள் பிசாசினால் அடிமையாக்கப்பட்டு, அவன் சித்தத்தின்படி அழிவிற்குள்ளாக வழிநடத்தப்படுகிறார்கள். இப்பொழுது நரகத்தின் சங்கிலிகள் என்பதின் பொருள் இதுவே.

12 அமுலேக் சாவைக்குறித்தும், சாவிலிருந்து, சாவாமைக்கு எழும் நிலை குறித்தும், நம்முடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும்படி, தேவனுடைய நியாயவிசாரணைக் கூண்டுக்கு முன்பாக கொண்டுவரப்படுதல் குறித்தும், தெளிவாய் பேசியிருக்கிறான்.

13 பின்பு நம்முடைய இருதயங்கள் கடினப்படுத்தப்பட்டால், ஆம், வார்த்தைக்கு விரோதமாய் இருதயங்களை கடினப்படுத்துவோமாயின், நம்மிலே அது காணப்படாதபடிக்கு, அஞ்சத்தக்க நிலையிலிருப்போம், ஏனெனில் பின்பு நாம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவோம்.

14 ஏனெனில் நம்முடைய வார்த்தைகள் நம்மை ஆக்கினைக்குள்ளாக்கும், ஆம், நம் கிரியைகளனைத்தும் நம்மை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கும். நாம் கறையற்றவர்களாக காணப்பட்டோம்; நம்முடைய எண்ணங்களும், நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும், நாமிருக்கும் அந்த பயங்கரமான நிலையிலே தேவனைப் பார்க்க தைரியமில்லாதவர்களாய் இருப்போம்; மலைகளும் கற்பாறைகளும், அவர் பிரசன்னத்திலிருந்து நம்மை மறைத்துப்போடும்படிக்கு நம்மேல் விழ நாம் கட்டளையிட இயல்வது, நமக்கு மிகவும் மகிழ்ச்சிதரும்.

15 அப்படிச் செய்வது கூடாத காரியம்; ஏனெனில் நாம் வந்து, அவருடைய மகிமையிலும், வல்லமையிலும், பலத்திலும் மகத்துவத்திலும், துரைத்தனத்திலும், அவர் சமுகத்தில் நின்று, அவருடைய நியாயத்தீர்ப்புகள் நியாயமானதென்றும், நம்மிடத்திலே என்றென்றுமாய் உண்டான அவமானத்திலே, தன்னுடைய சகல கிரியைகளிலும் அவர் நியாயமானவர் என்றும், மனுபுத்திரரிடத்தில் அவர் இரக்கமாய் இருக்கிறார் என்றும், அவருடைய நாமத்தில் விசுவாசித்து மனந்திரும்புதலுக்கேதுவான கனியைக்கொண்டுவருகிற அனைவரையும் இரட்சிக்க அவரிடத்திலே வல்லமை உண்டென்றும் அறிக்கையிடவேண்டும்.

16 இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன்; அப்பொழுது இரண்டாம் மரணம் என்கிற மரணம் சம்பவிக்கும். அது ஆவிக்குரிய மரணமாகும். அச்சமயத்தில்தானே இம்மைக்குரிய மரணத்திற்கேதுவாய் தன் பாவங்களில் செத்துப்போகிறவன் ஆவிக்குரிய மரணத்திற்கேதுவாயும் மரித்துப்போவான், ஆம், நீதிக்கேற்றவைகளின்படியும் மரித்துப்போவான்.

17 அப்பொழுது அவர்களுடைய வேதனைகள் கந்தகமும், அக்கினியிலான கடலைப்போல இருக்கும். அதன் ஜூவாலைகளோ என்றென்றும் மேல் எழும்பும். அச்சமயத்தில் சாத்தான் அவர்களை தன் சித்தத்திற்கு அடிமைப்படுத்தியிருப்பதினிமித்தம் அவனுடைய அதிகாரத்தினாலும், சிறைத்தனத்தினாலும் அவர்கள் என்றென்றுமாய் அழிந்துபோக சங்கிலிகளால் கட்டப்படுவார்கள்.

18 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பின்னர், மீட்பு நிறைவேறாததைப்போல, அவர்களிருப்பார்கள்; ஏனெனில் அவர்கள் தேவனுடைய நீதியின்படியே மீட்கப்பட முடியாது; இனிமேலும் அழிவில்லை என அறிந்து, அவர்கள் மரிக்க முடியாது.

19 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மா இவ்வார்த்தைகளை பேசிய பின்பு, ஜனங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

20 ஆனாலும் அவர்களுக்கு பிரதான ஆசாரியனாயிருந்த அந்தியோனா என்பவன் முன்னே வந்து அவனை நோக்கி: மனுஷன் மரணத்திலிருந்து எழுந்து, ஆத்துமா ஒருபோதும் அழிந்துபோகாதபடிக்கு, அழிவுக்கேதுவான நிலையிலிருந்து, அழிவற்ற நிலைக்கு மாறுவான், என்றும் நீ சொன்னதென்ன?

21 நம்முடைய முதற்பெற்றோர் பிரவேசித்து, ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்து, என்றென்றுமாய் ஜீவித்திருக்கக்கூடாதபடிக்கு, தேவன் ஏதேன் தோட்டத்தின் கிழக்குத் திசையிலே கேருபீன்களையும், சுடரொளி பட்டயத்தையும் வைத்தார், என்று வேதம் சொல்லுகிறதன் அர்த்தமென்ன? இதனால் அவர்கள் என்றென்றுமாய் ஜீவிக்க வாய்ப்பில்லாமல் போனதை நாம் காண்கிறோம், என்றான்.

22 இப்பொழுது ஆல்மா, அவனை நோக்கி: நான் விளக்க வந்ததும் இதுவே. தேவனுடைய வசனத்தின்படி, ஆதாம் அந்த தவிர்க்கப்பட்ட கனியைப் புசித்ததினாலே வீழ்ந்து போனான், என்று நாம் காண்கிறோம்; அவனுடைய வீழ்ச்சியினிமித்தம் மனுக்குலமனைத்தும் வீழ்ந்துபோய், தொலைந்த ஜனமானோம், என்றான்.

23 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அச்சமயத்தில் ஆதாம் அந்த ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்திருக்கக் கூடுமேயானால், மரணமே இராமல், வார்த்தை வெறுமையாய் போய், தேவனை பொய்யராக்கியிருக்கும்; ஏனெனில், அவர் நீ புசிப்பாயாகில் நீ சாகவே சாவாய், என்றார்.

24 அமுலேக்கினால் பேசப்பட்ட அந்த இம்மைக்குரிய மரணமாகிய, சாவு மனுக்குலம் மேல் வருகிறதை நாம் காண்கிறோம்; ஆயினும் மனுஷன் மனந்திரும்பும்படிக்கு அவனுக்கு ஓர் காலம் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதினிமித்தம் இவ்வாழ்க்கை சோதிக்கப்படும் நிலையாகவும், தேவனை சந்திக்க ஆயத்தப்படும் காலமாகவும், நாங்கள் சொன்ன, மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு வருகிற, நித்திய நிலைக்கு ஆயத்தப்பட வேண்டிய காலமாகும்.

25 இப்பொழுதும் உலக அஸ்திபார முதற்கொண்டு திட்டமிடப்பட்ட, இந்த மீட்பின் திட்டம் இல்லையெனில், மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாமற்போயிருக்கும்; அப்படியல்லாமல் ஏற்கனவே பேசப்பட்ட, மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுகிற, மீட்பின் திட்டம் திட்டமிடப்பட்டிருக்கிறது.

26 இப்படியிருக்க இதோ, நம்முடைய முதற் பெற்றோர்கள் சென்று, ஜீவ விருட்சத்தின் கனியைப் புசித்திருக்கக் கூடுமேயானால், ஆயத்தப்படுகிற நிலையில்லாமல் என்றென்றுமாய் பரிதபிக்கப் படத்தக்கவர்களாயிருந்திருப்பார்கள்; இப்படியாக மீட்பின் திட்டம் வெறுமையாக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தை எத்தகைய விளைவுமில்லாமல், அவமாக்கப்பட்டிருக்கும்.

27 ஆனால் இதோ, அப்படியில்லை, ஆனால் மனுஷர் மரித்துப்போகும்படிக்கு விதிக்கப்பட்டிருந்தது; மரித்துப்போன பின்பும், முடிவு என்று நாங்கள் சொன்ன அதே நியாயத்தீர்ப்புக்கு, நியாயந்தீர்க்கப்படும்படி வர வேண்டும்.

28 மனுஷனுக்கு சம்பவிக்கவேண்டியவைகளை தேவன் நியமித்த பின்பு, இதோ, தாம் அவர்களுக்கு நியமித்தவைகளை மனுஷன் அறிந்துகொள்வது அவசியம் எனக் கண்டார்;

29 அதனால் மனுஷரோடு சம்பாஷிக்க தூதர்களை அனுப்பினார். அவர்கள் அவருடைய மகிமையைக் காணச் செய்தார்கள்.

30 அச்சமயம் முதற்கொண்டு அவர்கள் அவருடைய நாமத்தைத் தொழுது கொள்ளலானார்கள்; ஆனபடியால் தேவன் மனுஷரோடு சம்பாஷித்து, உலகத்தின் அஸ்திபாரம் முதற்கொண்டு இடப்பட்ட மீட்பின் திட்டத்தை அவர்களுக்கு அறிவித்தார்; இதை அவர்களுடைய விசுவாசம், மனந்திரும்புதல், மற்றும் பரிசுத்த கிரியைகளுக்குத் தக்கதாக வெளிப்படுத்தினார்.

31 ஆகவே, அவர்கள் இம்மைக்குரியவைகளான முதற் கட்டளைகளை மீறினவர்களில் முதலானவர்களாதலால், தேவர்களைப்போலாகி, தீமையிலிருந்து நன்மையை அறிந்து, தீமை செய்வதா அல்லது நன்மை செய்வதா என்று, தங்களுடைய சித்தத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப நடக்கும் நிலையில் வைக்கப்பட்டு அல்லது, செயல்படும் நிலையில் தங்களை வைத்ததால், அவர் மனுஷருக்கு கட்டளைகளைக் கொடுத்தார்.

32 தேவன் அவர்களுக்கு மீட்பின் திட்டத்தை வெளிப்படுத்திய பின்பு, அவர்கள் தீமையைச் செய்யக்கூடாதென்றும், அப்படிச் செய்வார்களெனில் நீதியின் காரியங்களுக்கேற்ப நித்தியமாய் மரித்துப்போகிற, இரண்டாம் மரணத்திற்குள்ளாவார்களென்றும், அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுத்தார். ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் மீது, மீட்பின் திட்டம் வல்லமையைச் செலுத்தமுடியாது. ஏனெனில் தேவனுடைய உச்சித நன்மையின்படி நியாயத்தின் கிரியைகள் அழிக்கப்படமுடியாது.

33 (கொடுக்கப்பட்ட மீட்பின் திட்டமாயிருப்பதால்), தேவன் தம்முடைய குமாரனின் நாமத்தினாலே மனுஷரை அழைத்து சொன்னதாவது, நீங்கள் மனந்திரும்பி உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாமலிருப்பீர்களெனில், பின்னர் நான் என்னுடைய ஒரேபேறான குமாரன்மூலம் உங்கள் மீது இரக்கமாயிருப்பேன்.

34 ஆகையால், மனந்திரும்பி, தன் இருதயத்தை எவன் கடினமாக்காமலிருக்கிறானோ, அவனே பாவமன்னிப்புக்கு ஏதுவாய், என்னுடைய ஒரேபேறான குமாரனின் மூலம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்வான். இவர்களே என்னுடைய இளைப்பாறுதலினுள்ளே பிரவேசிப்பார்கள்.

35 தன் இருதயத்தை கடினப்படுத்தி எவன் அக்கிரமத்தைச் செய்கிறானோ, இதோ, அவன் என் இளைப்பாறுதலில் பிரவேசிக்கக் கூடாதென்று என் உக்கிரத்திலே ஆணையிடுகிறேன்.

36 இப்பொழுது என் சகோதரரே, இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் உங்கள் இருதயங்களை கடினப்படுத்துவீர்களெனில், நீங்கள் கர்த்தருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை. ஆதலால் உங்களுடைய அக்கிரமம் அவரை கோபமூட்டினபடியால் முதலில் கோபமூட்டியது போல, ஆம், இந்தக் கடைசி கோபமூட்டுதலிலும், முதலாவது போல தம்முடைய வார்த்தையின்படியே உங்கள் ஆத்துமாக்கள் நித்தியமாய் அழிந்துபோகும்படிக்கு, இறுதி மரணம் மற்றும் முதல் மரணம் போல, தம்முடைய வார்த்தையின்படியே, தம்முடைய உக்கிரத்தை அனுப்புகிறார்.

37 ஆகையினாலே என் சகோதரரே, இவைகளை நாம் அறிந்திருக்கிறதினாலும், இவைகள் மெய்யானவையானதாலும், நாம் மனந்திரும்பி, நம்முடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல், நம் தேவனாகிய கர்த்தர் கொடுத்த இந்த இரண்டாம் கட்டளைகளினாலே அவருடைய உக்கிரத்தை நம் மீது வரவழையாமலும், அவரை கோபமூட்டாமலும், அவருடைய வார்த்தையின்படியே ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கிற தேவனுடைய இளைப்பாறுதலிலே பிரவேசிப்போமாக.