வேதங்கள்
ஆல்மா 15


அதிகாரம் 15

ஆல்மாவும் அமுலேக்கும் சீதோமிற்குப்போய் சபையை ஸ்தாபித்தல் – சீஸ்ரமை ஆல்மா குணப்படுத்துதல் – அவன் சபையில் சேருதல் – அநேகர் ஞானஸ்நானம் பெறுதல், சபை விருத்தியடைதல் – ஆல்மாவும் அமுலேக்கும் சாரகெம்லாவிற்குப்போகுதல். ஏறக்குறைய கி.மு. 81.

1 அந்தப்படியே, ஆல்மாவும், அமுலேக்கும், அப்பட்டணத்தை விட்டுப்போகும்படி கட்டளையிடப்பட்டார்கள். ஆகவே அவர்கள் புறப்பட்டு சீதோம் தேசத்தினுள் பிரவேசித்தார்கள்; இதோ, ஆல்மாவின் வார்த்தைகளை விசுவாசித்ததினால் கல்லெறியப்பட்டு அம்மோனிகா தேசத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட எல்லா ஜனங்களையும், அங்கே அவர்கள் கண்டார்கள்.

2 அவர்கள் தங்கள் மனைவிகளுக்கும், பிள்ளைகளுக்கும், தங்களுக்கும் நேர்ந்தவைகளையும், அவர்கள் விடுவிக்கப்பட்ட வல்லமையைக் குறித்தும், அவர்களுக்குச் சொன்னார்கள்.

3 சீதோமில் சீஸ்ரம், தன் துன்மார்க்கத்தினிமித்தம் தன்னுடைய மனதில் அதிக வேதனைகளால் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலால் வியாதிப்பட்டுக் கிடந்தான். ஏனெனில் ஆல்மாவும், அமுலேக்கும் மரித்துப் போனார்கள் என்றும், தன்னுடைய அக்கிரமத்தினிமித்தமே அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், எண்ணினான். இந்த மகா பாவமும், மற்ற அநேக பாவங்களும் அவன் மனதை வாதித்து அதிலிருந்து அவன் மீளக்கூடாதபடிக்கு வியாதிக்குள்ளாக்கின; அதனாலே அவன் கடுமையான காய்ச்சலினால் அவதிப்பட்டான்.

4 பின்னும் அவன் ஆல்மாவும், அமுலேக்கும், சீதோம் தேசத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, இருதயத்தில் தைரியமடைந்தான்; அவர்கள் தன்னிடத்தில் வரவேண்டி, அவர்களுக்கு உடனே ஒரு செய்தி அனுப்பினான்.

5 அந்தப்படியே, அவர்கள் அவன் தங்களுக்கு அனுப்பின செய்திக்கு உடன்பட்டு, உடனே சீஸ்ரமின் வீட்டினுள் பிரவேசித்தார்கள்; அவன் கடுமையான காய்ச்சலினால் வியாதிப்பட்டு, பெலவீனனாய் கட்டிலின் மீது கிடக்கக் கண்டார்கள்; அவன் மனதும் அவனுடைய அக்கிரமங்களினிமித்தம் வேதனைக்குள்ளாகியிருந்தது; அவன் அவர்களைக் கண்டபோது தன் கைகளை நீட்டி, தன்னை அவர்கள் சுகப்படுத்தும்படி வேண்டினான்.

6 அந்தப்படியே, ஆல்மா அவன் கையைப் பிடித்து, அவனை நோக்கி, இரட்சிப்புக்கேதுவான கிறிஸ்துவினுடைய வல்லமையை விசுவாசிக்கிறாயா என்று கேட்டான்.

7 அவன் பிரதியுத்தரமாக: நீர் போதித்த வார்த்தைகளனைத்தையும் விசுவாசிக்கிறேன், என்றான்.

8 அதற்கு ஆல்மா: நீ கிறிஸ்துவின் மீட்பை விசுவாசித்தால் சுகமாவாய், என்றான்.

9 அவன்: நான் உம் வார்த்தைகளின்படியே விசுவாசிக்கிறேன், என்றான்.

10 ஆல்மா கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டு: தேவனாகிய எங்கள் கர்த்தாவே, இந்த மனுஷன்மேல் இரக்கமாயிரும், கிறிஸ்துவின்மேல் வைத்திருக்கிற, அவனுடைய விசுவாசத்தின்படியே அவனை சுகப்படுத்துவீராக, என்றான்.

11 ஆல்மா இவ்வார்த்தைகளை உச்சரித்தபோது, சீஸ்ரம் தன் பாதங்களை ஊன்றி குதித்தெழுந்து நடக்கலானான்; அனைத்து ஜனங்களும் ஆச்சரியப்படும்படிக்கு அது செய்யப்பட்டது; இச்செய்தி சீதோம் தேசமெங்கிலும் பரவிற்று.

12 சீஸ்ரமிற்கு ஆல்மா கர்த்தருக்குள் ஞானஸ்நானம் கொடுத்தான். அவன் அது முதற்கொண்டு ஜனங்களுக்குள்ளே பிரசங்கிக்கலானான்.

13 ஆல்மா சீதோம் தேசத்திலே சபையை ஸ்தாபித்தான். அவன் ஞானஸ்நானம் பெற வாஞ்சிப்போருக்கு கர்த்தருக்குள் ஞானஸ்நானம் கொடுக்க தேசத்தில் ஆசாரியர்களையும், ஆசிரியர்களையும் நியமனம் பண்ணினான்.

14 அந்தப்படியே, சீதோமைச் சுற்றிலுமிருந்து அநேகர் வந்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்.

15 ஆனால் அம்மோனிகா தேசத்து ஜனங்களோ, இன்னும் கடின இருதயமுள்ளவர்களாயும், வணங்காக் கழுத்துள்ள ஜனமாயுமிருந்தார்கள். அவர்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பாமல் இருந்தார்கள். அவர்கள் நிகோரின் விசுவாசத்தைச் சார்ந்தவர்களாதலால், தங்களின் பாவங்களிலிருந்து மனந்திரும்புவதை நம்பாமல், ஆல்மா மற்றும் அமுலேக்கு வல்லமையைப் பிசாசினாலே பெற்றிருந்தார்களென்று எண்ணினார்கள்.

16 அந்தப்படியே, ஆல்மா மற்றும் அமுலேக்கைப் பொறுத்தவரை, அமுலேக்கு தேவ வசனத்தினிமித்தம், அம்மோனிகா தேசத்திலிருந்த தன் சகல பொன்னையும், வெள்ளியையும் விலையுயர்ந்த பொருட்களையும் வெறுத்து ஒதுக்கினான். தேவ வார்த்தையினிமித்தம், அவன் தனது முந்தைய நண்பர்களாலும், தன் தகப்பனாலும், உற்றாராலும் மறுக்கப்பட்டான்.

17 ஆகவே ஆல்மா, சீதோமில் சபையை நிறுவின பின்பு, ஒரு மாற்றத்தைக் கண்டு, ஜனங்கள் சாத்தானிடமிருந்தும், மரணத்திலிருந்தும், அழிவிலிருந்தும் விடுவிக்கப்படும்பொருட்டு, அவர்கள் தேவனுக்கு முன்பாக தாழ்மையாயிருந்து, தங்கள் பரிசுத்த ஸ்தலங்களில் பலிபீடத்திற்கு முன்பாக தேவனை தொழுதுகொள்ள, ஏகமாய்கூடி இடைவிடாமல் ஜெபித்து, தரித்திருந்து தங்கள் இருதயங்களில் பெருமை கொள்ளாதவர்களாய் இருப்பதையும், ஆல்மா கண்டான்.

18 நான் சொன்னதுபோல, ஆல்மா இவைகள் யாவையும் கண்ட பிறகு, அவன் அமுலேக்கைக் கூட்டிக்கொண்டு சாரகெம்லா தேசத்திற்கு வந்தான். தன் சொந்த வீட்டினுள்ளே அவனை அழைத்துக்கொண்டுபோய், அவன் உபத்திரவங்களிலிருந்து அவனுக்கு ஆறுதலளித்து, கர்த்தரிலே அவனைப் பெலப்படுத்தினான்.

19 இப்படியாய் நேபியின் ஜனங்கள்மேல் நியாயாதிபதிகளினுடைய ஆளுகையின் பத்தாம் வருஷம் முடிவுற்றது.