வேதங்கள்
ஆல்மா 18


அதிகாரம் 18

அம்மோனை அந்த மகா அரூபி என லாமோனி ராஜா எண்ணுதல் – அம்மோன் ராஜாவிற்கு சிருஷ்டிப்பைப்பற்றியும், மனுஷரிடத்தில் தேவனின் நடவடிக்கைகளையும், கிறிஸ்துவின் மூலம் வருகிற மீட்பையும்பற்றி போதித்தல் – லாமோனி விசுவாசித்து மரித்தவனைப்போல பூமியில் விழுதல். ஏறக்குறைய கி.மு. 90.

1 அந்தப்படியே, லாமோனி ராஜா தன் வேலையாட்கள் எழுந்து நின்று, அச்சம்பவத்தைக் குறித்து தாங்கள் கண்டவைகளை சாட்சி கொடுக்கும்படி கட்டளையிட்டான்.

2 அவர்கள் தாங்கள் கண்ட காரியங்களை சாட்சியாகச் சொன்னபோது, தன் மந்தையைக் காப்பதில் அம்மோனின் விசுவாசத்தையும், அவனைக் கொன்றுபோட வகை தேடினவர்களுக்கு விரோதமாய் போராடிய அவனின் மிகுந்த வல்லமையைக் குறித்தும், இவன் அறிந்து, மிகவும் ஆச்சரியப்பட்டு, மெய்யாகவே இவன் மனுஷரிலும் மேலானவன். இதோ, அவர்கள் செய்த கொலைகளினிமித்தம், இந்த ஜனங்கள் மீது இப்படிப்பட்ட பயங்கரமான தண்டனைகளை அனுப்பும் மகா அரூபி இவன்தானோ என்றான்.

3 அவர்கள் ராஜாவிற்குப் பிரதியுத்தரமாக: அவன் மகா அரூபியா, அல்லது மனுஷனா என்று நாங்கள் அறியோம்; அவன் ராஜாவினுடைய சத்துருக்களால் கொல்லப்பட முடியாதென்றும், அவன் எங்களோடு இருக்கும்போது அவனுடைய திறமையினிமித்தமும், மிகுந்த பெலத்தினிமித்தமும், ராஜாவின் மந்தைகளை சிதறடிக்க முடியாதென்றும் அறிந்திருக்கிறோம்; ஆதலால், அவன் ராஜாவிற்கு சிநேகிதன் என்று அறிகிறோம். இப்போதும் ராஜாவே, ஒரு மனுஷனுக்கு அவ்வளவு வல்லமை இருக்கக்கூடும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனெனில், அவனைக் கொன்றுபோட முடியாது என்று அறிந்திருக்கிறோம், என்றார்கள்.

4 இப்பொழுதும் ராஜா இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, அவன் அவர்களை நோக்கி: இதுவே அந்த மகா அரூபி என்று இப்போது அறிவேன். நான் உங்கள் சகோதரரைக் கொன்று போட்டது போல, உங்களைக் கொன்று போடாதபடிக்கு உங்கள் ஜீவனைக் காத்துக்கொள்வதற்காக இத்தருணத்தில் இவன் வந்திருக்கிறான். அதுவே நம் பிதாக்களால் பேசப்பட்ட அந்த மகா அரூபி என்றான்.

5 மகா அரூபி ஒன்று உண்டென்பது, லாமோனி தன் தகப்பனிடமிருந்து பெற்ற பாரம்பரியம். அந்த மகா அரூபியை அவர்கள் விசுவாசித்தபோதிலும், தாங்கள் செய்கிற யாவும் சரியானது என்று நம்பினார்கள்; ஆயினும் லாமோனி, தன் வேலையாட்களை கொன்றுபோட்டதினிமித்தம் தான் தவறு செய்தோமோ என்று மிகவும் பயப்படத் தொடங்கினான்.

6 அவர்களில் அநேகரை அவன் கொன்றுபோட்டிருந்தான். ஏனெனில் அவர்களுடைய சகோதரர்கள் தண்ணீர் இருக்குமிடத்தில் அவர்களின் மந்தைகளை சிதறடித்துப் போட்டார்கள்; இவ்வாறாக, அவர்கள் தங்கள் மந்தைகளைச் சிதறடிக்க விட்டதினால் கொல்லப்பட்டார்கள்.

7 சிபஸ் தண்ணீர்களண்டையில் லாமானியர் நின்று ஜனங்களுடைய மந்தைகளைச் சிதறடிப்பது அவர்களுடைய வழக்கமாயிருந்தது. அதினிமித்தம் அவர்கள் சிதறடிக்கப்பட்டுப் போனவைகளை தங்கள் தேசங்களுக்கு ஓட்டிச் செல்வது, அவர்களின் வழக்கமாயிருந்தது.

8 அந்தப்படியே, லாமோனி ராஜா தன் வேலையாட்களிடத்தில் விசாரித்து அத்தகையான மகத்துவமான வல்லமையை உடைய மனுஷன் எங்கே? என்று கேட்டான்.

9 அவர்கள் அவனை நோக்கி: இதோ அவன் உமது குதிரைகளுக்குத் தீவனம் கொடுத்துக் கொண்டிருக்கிறான், என்றார்கள். வேலையாட்கள் தங்கள் மந்தைகளுக்கு தண்ணீர் காட்டும் சமயத்திற்கு முன்பாக, அவர்கள் தன் குதிரைகளையும், இரதங்களையும் ஆயத்தப்படுத்தி, நேபியின் தேசத்திற்கு தன்னை கூட்டிச் செல்ல வேண்டுமென்று, ராஜா கட்டளையிட்டிருந்தான். ஏனெனில் தேசமனைத்திற்கும் ராஜாவாகிய, லாமோனியின் தகப்பன், நேபியின் தேசத்தில் ஒரு பெரும் விருந்தை ஆயத்தப்படுத்தியிருந்தான்.

10 இப்பொழுது அம்மோன் தன் குதிரைகளையும், தன் இரதங்களையும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று, லாமோனிய ராஜா கேள்விப்பட்டு, அம்மோனின் விசுவாசத்தினிமித்தம், ஆச்சரியப்பட்டுப் போய், மெய்யாகவே என் வேலையாட்கள் எல்லோரிலும், இந்த மனுஷனைப்போல விசுவாசமுள்ள வேலைக்காரன் எவனுமில்லை; என் எல்லா கட்டளைகளையும் நிறைவேற்ற அவைகளை நினைவில் கொண்டிருக்கிறான்.

11 இப்பொழுது மெய்யாகவே இது அந்த மகா அரூபி என்று அறிவேன். அவன் என்னிடத்தில் வரவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன், ஆனால் அஞ்சுகிறேன், என்றான்.

12 அந்தப்படியே, அம்மோன் குதிரைகளையும், இரதங்களையும் ராஜாவிற்கென்றும், அவனது வேலையாட்களுக்கென்றும் ஆயத்தப்படுத்திய பின்பு, அவன் ராஜாவினிடம் போனான். ராஜாவினுடைய முகரூபம் மாறியிருப்பதைக் கண்டான்; ஆகவே அவன் அவனது சமுகத்திலிருந்து திரும்பிச் செல்லவிருந்தான்.

13 ராஜாவின் வேலையாட்களில் ஒருவன் அவனை நோக்கி, ரபானா, என்றான். அதற்கு வல்லமையுள்ள மாபெரும் ராஜாவே என்று அர்த்தமாம். அவர்கள் தங்கள் ராஜாக்களை வல்லமை பொருந்தியவர்களாகவே கருதினார்கள். அதனால் அவன் அவனை நோக்கி: ரபானா, நீர் தங்கவேண்டுமென்று ராஜா சித்தமாயிருக்கிறார், என்றான்.

14 ஆதலால் அம்மோன், ராஜாவிடம் திரும்பி, அவனை நோக்கி: ராஜா நான் உமக்கு என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்றான். ராஜா அவனிடத்தில் தான் சொல்வதறியாது, அவர்களின் காலக்கணக்கின்படி, ஒரு மணிநேரம் பிரதியுத்தரமளிக்காமல் இருந்தான்.

15 அந்தப்படியே, அம்மோன் மறுபடியும் அவனை நோக்கி: என்னிடமிருந்து நீர் வேண்டுவதென்ன என்று கேட்டான். ராஜா அவனுக்கு மறுமொழி கொடாதிருந்தான்.

16 அந்தப்படியே, அம்மோன் தேவ ஆவியால் நிறைந்தவனாய் ராஜாவினுடைய எண்ணங்களை அறிந்தான். அவன் அவனை நோக்கி: நான் உமது வேலையாட்களையும் மந்தைகளையும் காப்பாற்றினேன் என்றும், உமது மந்தைகளையும், உமது வேலையாட்களையும் காப்பாற்றும் பொருட்டு அவர்களுடைய சகோதரரில் ஏழுபேரை கவணாலும், பட்டயத்தாலும் கொன்று போட்டு, மீதியிருப்போரின் கரங்களை வெட்டிப் போட்டேன் என்று நீர் கேள்விப்பட்டிருக்கிறீர். இதோ, அது நீர் மலைத்துப்போகச் செய்திருக்கிறது.

17 உம்மை மிகவும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் அந்த காரியம் என்ன என்று உம்மைக் கேட்கிறேன். இதோ, நான் ஒரு மனுஷனும், உம்முடைய வேலைக்காரனுமாவேன்; ஆகவே, உமக்கு நன்மை என்று படுகிறதெதுவோ, அதை நான் செய்வேன், என்றான்.

18 இவ்வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அம்மோன் தன் எண்ணங்களையும் அறிந்திருக்கிறான் என்று மீண்டும் ஆச்சரியப்பட்டுப் போனான்; ஆயினும் லாமோனி ராஜா தன் வாயைத் திறந்து, அவனை நோக்கி: நீர் யார்? சகலவற்றையும் அறிந்திருக்கிற அந்த மகா அரூபி நீர்தானா என்றான்.

19 அதற்கு அம்மோன் பிரதியுத்தரமாக: நான் அல்ல, என்றான்.

20 பின்னும் ராஜா நீர் என் இருதயத்தின் எண்ணங்களை அறிந்திருக்கிறதெப்படி? நீர் தைரியமாய்ப் பேசி இக்காரியங்களைக் குறித்து எனக்குச் சொல்லும்; என் மந்தைகளைச் சிதறடித்த, என் சகோதரரை எந்த வல்லமையைக் கொண்டு கொன்று, அவர்களுடைய கரத்தை வெட்டிப்போட்டீர் என்பதை, எனக்குச் சொல்வீராக.

21 இக்காரியங்களைக் குறித்து எனக்கு நீர் சொல்வீராகில், நீர் விரும்புகிற எதையும் உமக்குத் தருவேன்; வேண்டுமானால் உம்மை என் சேனைகளை வைத்து பாதுகாப்பேன்; ஆனாலும் நீர் அவர்களெல்லாரிலும் வல்லவர் என்று, நான் அறிந்திருக்கிறேன்; இருப்பினும் நீர் என்னிடத்தில் விரும்புகிற எதையும் உமக்குத் தருவேன், என்றான்.

22 அம்மோன் ஞானமுள்ளவனாய், ஆயினும் தீமையற்றவனாய் லாமோனியை நோக்கி: நான் எந்த வல்லமையினால் இவைகளைச் செய்கிறேன், என்று உமக்குச் சொன்னால் நீர் என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பீரோ? நான் உம்மிடத்தில் வாஞ்சிக்கும் காரியமும் இதுவே, என்றான்.

23 ராஜா பிரதியுத்தரமாக: ஆம், உம்முடைய வார்த்தைகளனைத்தையும் விசுவாசிக்கிறேன் என்றான். இப்படியாக அவன் உபாயத்தினால் கவரப்பட்டான்.

24 அம்மோன் தைரியங்கொண்டு அவனை நோக்கி பேசத் தொடங்கி: தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறீரா என்று கேட்டான்.

25 அவன் அதற்கு பிரதியுத்தரமாக: அது என்னவென்று எனக்கு விளங்கவில்லை, என்றான்.

26 அம்மோன், நீர் மகா அரூபி ஒன்று உண்டென்று விசுவாசிக்கிறீரா என்று கேட்டான்

27 அவன் ஆம், என்றான்.

28 அம்மோன், இதுதான் தேவன் என்றான். மறுபடியும் அம்மோன் அவனை நோக்கி: தேவனாகிய இந்த மகா அரூபி, பரலோகத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தையும் சிருஷ்டித்தார், என்று விசுவாசிக்கிறீரா? என்று கேட்டான்.

29 அதற்கு அவன்: ஆம், பூமியிலுள்ள யாவையும் அவர் படைத்தார் என்று விசுவாசிக்கிறேன்; ஆனால் பரலோகத்தைப்பற்றி எனக்குத் தெரியாது, என்றான்

30 அம்மோன் அவனை நோக்கி: தேவனும், அவருடைய சர்வ பரிசுத்த தூதர்களும் வாசம் செய்யும் ஸ்தலமே பரலோகம் என்றான்.

31 லாமோனி ராஜா: அது பூமிக்கு மேலே உள்ளதா என்று கேட்டான்.

32 அம்மோன்: ஆம், அவர் மனுப்புத்திரர் யாவரையும் பார்க்கிறார். ஆதியிலிருந்து சகலமும் அவருடைய கையினால் சிருஷ்டிக்கப்பட்டதால், அவர் இருதயத்தின் சகல எண்ணங்களையும் நோக்கங்களையும் அறிந்திருக்கிறார், என்றான்.

33 பின்னும் லாமோனி ராஜா: நீர் பேசின இந்த சகல காரியங்களையும் விசுவாசிக்கிறேன். நீர் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவரா என்று கேட்டான்.

34 அம்மோன் அவனை நோக்கி: நானோ மனுஷன்; ஆதியிலே மனுஷன் தேவ சாயலின்படியே சிருஷ்டிக்கப்பட்டான். ஜனங்கள் நியாயமும், சத்தியமுமான ஞானத்திற்குக் கொண்டுவரப்பட, இவைகளை அவர்களுக்குப் போதிக்கும்படி, பரிசுத்த ஆவியாலே அழைக்கப்பட்டிருக்கிறேன்.

35 அந்த ஆவியின் ஒரு பாகம் என்னில் வாசமாயிருக்கிறது. அதுவே என்னுடைய விசுவாசத்தின்படியேயும், தேவனிலிருக்கிற விருப்பத்தின்படியேயும், எனக்கு ஞானத்தையும் வல்லமையையும் கொடுக்கிறது.

36 அம்மோன் இவைகளைச் சொன்ன பின்பு, அவன் உலக சிருஷ்டிப்பு தொடங்கி ஆதாமின் படைப்பைப்பற்றியும், மனுஷனின் வீழ்ச்சி பற்றிய, சகல காரியங்களையும் சொல்லி, அவர்களுடைய தகப்பனாகிய லேகி எருசலேமை விட்டுப்போகும் வரைக்கும், தீர்க்கதரிசிகளால் பேசப்பட்ட, பரிசுத்த வேதங்களையும் சொல்லி, ஜனங்களுடைய பதிவேடுகளையும் அவனுக்கு முன் வைத்தான்.

37 அவன் (ராஜாவிற்கும், அவனுடைய வேலையாட்களுக்கும்) தங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மேற்கொண்ட சகல பிரயாணங்களையும், பட்டினியாயும், விடாய்த்தும்போய் அவர்கள் பட்ட கஷ்டங்களையும், உபத்திரவங்களையும், இன்னும் மற்ற காரியங்களையும், அவர்களுக்குச் சொன்னான்.

38 அவன் அவர்களுக்கு லாமான், லெமுவேல் மற்றும் இஸ்மவேல் குமாரர்கள் ஏற்படுத்திய கலகங்களைக் குறித்தும், ஆம், அவர்களுடைய சகல கலகங்களையும் சொன்னான். லேகி எருசலேமைவிட்டுச் சென்ற காலம் முதல், அச்சமயம் வரைக்குமான சகல பதிவேடுகளையும், வேதங்களைக் குறித்தும் வியாக்கியானம் பண்ணினான்.

39 இது மாத்திரமல்ல, அவன் அவர்களுக்கு, உலக அஸ்திபாரமுதல் ஆயத்தப்படுத்தப்பட்ட மீட்பின் திட்டத்தை அவர்களுக்கு விளக்கினான்; அவர்களுக்கு கிறிஸ்துவின் வருகையைக்குறித்து அவன் தெரியப்பண்ணினான். கர்த்தருடைய சகல கிரியைகளையும் அவர்களுக்குத் தெரியப்பண்ணினான்.

40 அந்தப்படியே, இவைகள் யாவையும் அவன் சொல்லி ராஜாவுக்கு அவைகளை விளக்கின பின்பு, ராஜா அவனது வார்த்தைகள் யாவையும் விசுவாசித்தான்.

41 அவன் கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டு: கர்த்தாவே, நேபியின் ஜனத்தின்மீது நீர் வைத்த உம்முடைய ஏராளமான இரக்கத்தைப்போல என் மீதும் என் ஜனத்தின்மீதும் இரக்கமாயிரும், என்றான்.

42 இப்பொழுது அவன் இதைச் சொன்னவுடனே, மரித்தவனைப்போல, பூமியில் விழுந்தான்.

43 அந்தப்படியே, அவன் வேலையாட்கள் அவனைத் தூக்கி, அவன் மனைவியிடத்தில் கொண்டு சென்று, மஞ்சத்தின் மீது படுக்க வைத்தார்கள். இரண்டு இராப்பகலாக அவன் மரித்தவன் போலக் கிடந்தான். அவன் மனைவியும், குமாரர்களும், குமாரத்திகளும், அவனது இழப்பினிமித்தம், லாமானியரின் சம்பிரதாயப்படி, மிகவும் புலம்பி துக்கம் கொண்டாடினார்கள்.