வேதங்கள்
ஆல்மா 2


அதிகாரம் 2

ராஜாவாக அம்லிசி வகை தேடுதலும் ஜனங்களால் புறக்கணிக்கப்படுதலும் – அவனைப் பின்பற்றியவர்கள் அவனை ராஜாவாக்குதல் – நேபியர்மீது அம்லிசியர் போர் தொடுத்து தோற்கடிக்கப்படுதல் – லாமானியரும் அம்லிசியரும், படைக்கலந்தும் தோற்கடிக்கப்படுதல் – அம்லிசியை ஆல்மா கொன்றுபோடுதல். ஏறக்குறைய கி.மு. 87.

1 அந்தப்படியே, கிதியோனைப் பட்டயத்தினாலே கொன்றவனும், சட்டப்படி கொல்லப்பட்டவனுமாகிய அந்த மனுஷனின் முறைமையின்படியே, தந்திரமுள்ளவனாயும், உலகத்தினுடைய விவேகத்திற்கேற்ப ஞானவானாயும் அம்லிசி என்ற பெயர்கொண்ட மனுஷனாலே, அவர்களின் ஆளுகையின் ஐந்தாம் வருஷத்தின் துவக்கத்திலே ஜனங்களுக்குள்ளே பிணக்குகள் உண்டானது.

2 இப்பொழுது, இந்த அம்லிசி தன்னுடைய தந்திரத்தினாலே தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்துக்கொண்டபடியாலே, அவர்கள் அதிக வல்லமை மிக்கவர்களாய் விளங்கினார்கள்; அம்லிசியை ஜனங்கள்மீது ராஜாவாய் ஏற்படுத்த அவர்கள் பிரயத்தனம் பண்ணினார்கள்.

3 இப்பொழுது இது சபையின் ஜனத்திற்கும், அம்லிசியின் ஏவுதலினிமித்தம் இழுபட்டுப் போகாத யாவருக்கும் திகைப்பூட்டியது; ஏனெனில் அவர்களுடைய சட்டத்தின்படி அப்படிப்பட்டவைகள் ஜனங்களின் குரலால் ஏற்படுத்தப்படவேண்டுமென அவர்கள் அறிந்திருந்தார்கள்.

4 ஆகவே அம்லிசி துன்மார்க்கனானபடியால், ஜனங்களின் சம்மதத்தை ஆதாயப்படுத்தக்கூடுமாயின் அவர்களிடத்திலிருந்து சபையின் உரிமைகளையும் சிலாக்கியங்களையும் நீக்கிப்போடுவான்; ஏனெனில் தேவனுடைய சபையை அழிப்பதே அவனுடைய நோக்கமாயிருந்தது.

5 அந்தப்படியே, ஜனங்கள் தேசமெங்கிலும் ஏகமாய் அவனவன் தன்தன் மனதிற்கேற்றபடி அம்லிசியைச் சார்ந்தோ, எதிர்த்தோ தனிக்குழுக்களாய் கூடி வெகுவாய்த் தர்க்கம்பண்ணி ஒருவரோடொருவர் வியக்கத்தக்க வகையில் விவாதித்தார்கள்.

6 இப்படியாக அந்தக் காரியத்தைக் குறித்த தங்கள் கருத்தைத் தெரிவிக்கும்படி அவர்கள் ஏகமாய்க் கூடிவந்தார்கள்; அவை நியாயாதிபதிகளுக்கு முன்பாக வைக்கப்பட்டன.

7 அந்தப்படியே, அம்லிசியை எதிர்த்து, ஜனங்கள் கருத்து தெரிவித்ததினிமித்தம் அவன் ஜனங்களுக்கு ராஜாவாக்கப்படவில்லை.

8 இப்பொழுது இது அவனுக்கு விரோதமானவர்களின் இருதயங்களை பூரிக்கச்செய்தது. ஆனால் அம்லிசி தனக்கு சாதகமாயிருப்போரை, தனக்கு சாதகமில்லாதோருக்கு விரோதமாய், கோபம் கொள்ளும்படி ஏவிவிட்டான்.

9 அந்தப்படியே, அவர்கள் ஏகமாய்க்கூடி அம்லிசியை தங்கள் ராஜாவாக நியமித்தார்கள்.

10 இப்பொழுது அம்லிசி, அவர்கள் மீது ராஜாவாக்கப்பட்டபோது, அவர்கள் தங்களின் சகோதரருக்கு விரோதமாய் ஆயுதங்களை எடுக்கவேண்டுமென கட்டளையிட்டான்; அவர்களை தனக்கு கீழ்ப்படுத்தும்படிக்கே இப்படிச் செய்தான்.

11 இப்போது அம்லிசியின் ஜனங்கள் அம்லிசியர் என்று, அம்லிசியின் பெயராலே அழைக்கப்பட்டார்கள்; மீதியானவர்கள் நேபியர், அல்லது தேவனுடைய ஜனம் என்று அழைக்கப்பட்டார்கள்.

12 நேபிய ஜனம் அம்லிசியரின் நோக்கங்களை அறிந்திருந்தபடியாலே, அவர்களைச் சந்திக்க ஆயத்தமானார்கள்; ஆம், அவர்கள் தங்களை பட்டயங்களாலும், ஈட்டிகளாலும், விற்களாலும், அம்புகளாலும், கற்களாலும், கவண்களாலும் மற்றும் சகலவிதமான யுத்த ஆயுதங்களாலும் ஆயுதம் தரித்துக்கொண்டார்கள்.

13 இவ்விதமாய், அம்லிசியரை அவர்கள் வரும்போது சந்திக்க ஆயத்தமாயிருந்தார்கள். அவர்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்றபடி சேனாதிபதிகளையும், உயர் சேனாதிபதிகளையும், பிரதானிகளையும் நியமித்தார்கள்.

14 அந்தப்படியே, ஒவ்வொரு வகையிலுமாக சகலவித யுத்த ஆயுதங்களால் அம்லிசி தன் மனுஷருக்கு ஆயுதம் தரித்தான்; அவன் தங்கள் சகோதரருக்கு விரோதமாய் தன் ஜனங்களை யுத்தத்திற்கு வழிநடத்தும்படியாய், அவர்கள்மீது அதிகாரிகளையும், தலைவர்களையும் நியமித்தான்.

15 அந்தப்படியே, சாரகெம்லாவின் தேசமருகே ஓடின சீதோன் நதிக்கு கிழக்கேயுள்ள அம்னிகூ மலையின் மேல் அம்லிசியர் வந்தடைந்தார்கள். அங்கே நேபியருடனே போர் தொடுக்க ஆரம்பித்தார்கள்.

16 பின்னும் நேபியின் ஜனங்களுடைய பிரதான நியாயாதிபதியாயும், அதிபதியாயுமிருந்த ஆல்மா தன்னுடைய ஜனங்களோடும், சேனாதிபதிகளோடும், பிரதான சேனாதிபதிகளோடும், தன் சேனைக்கு தலைவனாக அம்லிசியருக்கு விரோதமாய் எதிர்கொண்டு போனான்.

17 அவர்கள் சீதோனிற்கு கிழக்கே உள்ள மலையின் மீது அம்லிசியரைக் கொன்று போடத் தொடங்கினார்கள். அம்லிசியரும் நேபியரோடு அதிக பெலத்தோடு சண்டையிட்டதினாலே அநேக நேபியர், அம்லிசியர் முன்பாக வீழ்ந்தார்கள்.

18 இருப்பினும், கர்த்தர் நேபியரின் கரத்தை பெலப்படுத்தினதாலே, அவர்கள் அம்லிசியரை வெகுவாய் சங்கரித்தார்கள். இவர்கள் அவர்களின் சமுகத்தினின்று முறிந்தோடத் தொடங்கினார்கள்.

19 அந்தப்படியே, நேபியர், அம்லிசியரை அந்த நாள் முழுவதும் தொடர்ந்து, அவர்களில் பன்னிரண்டு ஆயிரத்து ஐநூற்று முப்பத்திரண்டு ஆத்துமாக்களைக் கொன்றுபோடும் மட்டும் அவர்களை சங்கரித்துப்போட்டார்கள். நேபியர்களுக்குள்ளே கொலை செய்யப்பட்டவர்கள் ஆறாயிரத்து ஐநூற்று அறுபத்திரண்டு ஆத்துமாக்கள்.

20 அந்தப்படியே, அம்லிசியரை இனியும் ஆல்மா தொடர்ந்தோடக்கூடாமற் போனபோது, அவன் தன் ஜனங்கள், கிதியோன் பள்ளத்தாக்கிலே தங்கள் கூடாரங்களைப் போடும்படி கட்டளையிட்டான். அந்தப் பள்ளத்தாக்கு நிகோர் தன் கரத்திலிருந்த பட்டயத்தினால் கொன்றுபோட்ட, கிதியோன் என்பவனின் பெயரால் அழைக்கப்பட்டது; இந்தப் பள்ளத்தாக்கிலே நேபியர்கள் இராத்தங்கும்படி பாளயமிறங்கினார்கள்.

21 பின்னும் அம்லிசியரில் மீதியானாரை ஆல்மா பின்பற்றிச்சென்று அவர்களின் திட்டங்களையும், துர்யோசனைகளையும் அறிந்து அதினிமித்தம் தன்னை அவர்களிடமிருந்து காத்துக்கொள்ளவும், தன் ஜனங்கள் அழிக்கப்பட்டுப்போகாதபடிக்கு பாதுகாக்கப்படவும் வேவுகாரரை அனுப்பினான்.

22 அம்லிசியரின் பாளயத்தை வேவுபார்க்க அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள், சீராம், அம்நோர், மேன்தி, லிம்யர் என்பன; இவர்கள் தங்கள் மனுஷருடனே அம்லிசியரின் பாளயத்தை வேவுபார்க்கச் சென்றவர்கள்.

23 அந்தப்படியே, மறுதினத்திலே அவர்கள் அதிர்ச்சியோடும், மிகுந்த பயத்துடனும் தீவிரித்துக்கொண்டு நேபியரின் பாளயத்திற்குத் திரும்பி:

24 இதோ, நாங்கள் அம்லிசியரின் கூட்டத்தைப் பின்தொடர்ந்தோம்; நாங்கள் அதிர்ச்சியடையும்படிக்கு நேபியின் தேசத்திற்குப் போகும் வழியிலே சாரகெம்லாவின் தேசத்திற்கு மேலேயுள்ள மினோன் தேசத்திலே எண்ணிறைந்த லாமானியரின் சேனையைக் கண்டோம்; இதோ, அம்லிசியர் அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்;

25 அந்த தேசத்திலுள்ள நமது சகோதரர்கள் மேல் படையெடுத்து வருகிறார்கள்; அவர்களுக்கு முன்பாக தங்கள் மந்தைகளோடும் மனைவிகளோடும், பிள்ளைகளோடும் நம்முடைய பட்டணத்தை நோக்கி தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; நாம் தீவிரித்துப் போகாவிடில், அவர்கள் நம்முடைய பட்டணத்தையும் அபகரித்து, நம்முடைய தகப்பன்மார்களையும், பிள்ளைகளையும் மனைவிகளையும் கொன்றுபோடுவார்கள்.

26 அந்தப்படியே, நேபியின் ஜனங்கள் தங்கள் கூடாரங்களைப் பெயர்த்து, கிதியோன் பள்ளத்தாக்கைவிட்டு தங்களுடைய பட்டணமாகிய சாரகெம்லாவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

27 பின்னும் இதோ, அவர்கள் சீதோன் நதியைக் கடந்துபோகையில், ஏறக்குறைய சமுத்திரத்தின் மணலத்தனையாய் எண்ணிறைந்த லாமானியர்களும், அம்லிசியரும் அவர்களை நிர்மூலமாக்கிப்போட வந்தார்கள்.

28 இருப்பினும் கர்த்தருடைய கரத்தினாலே அவர்கள் பெலனடைந்ததினிமித்தமும், தங்களுடைய சத்துருக்களின் கைகளுக்குத் தங்களைத் தப்புவிக்கும்படி நேபியர் கர்த்தரிடத்திலே ஊக்கமாய் ஜெபித்ததினிமித்தமும், கர்த்தர் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு அவர்களைப் பெலப்படுத்தினார், லாமானியரும் அம்லிசியரும் அவர்களுக்கு முன்பாக வீழ்ந்துபோனார்கள்.

29 அந்தப்படியே, முகமுகமாய் ஆல்மாவும் அம்லிசியும் தங்கள் பட்டயங்களைக் கொண்டு சண்டையிட்டார்கள்; ஒருவரோடொருவர் பயங்கரமாய்ப் போராடினார்கள்.

30 அந்தப்படியே, தேவனுடைய மனுஷனாகிய ஆல்மா மிகுந்த விசுவாசத்தைப் பிரயோகப்படுத்தி, கர்த்தாவே இந்த ஜனம் இரட்சிக்கப்படவும், பாதுகாக்கப்படவும், நான் உம்முடைய கரங்களிலே ஒரு கருவியாய் இருக்கும்பொருட்டு, எனக்கு இரங்கி, என் ஜீவனைக் காத்துக்கொள்ளும், என்று கூக்குரலிட்டான்.

31 இப்பொழுதும் ஆல்மா இந்த வார்த்தைகளை சொல்லிய பிறகும், மீண்டும் அம்லிசியுடனே போராடினான்; அம்லிசியை பட்டயத்தினாலே கொன்றுபோடுமளவிற்கு அவன் பெலப்படுத்தப்பட்டான்.

32 பின்னும் அவன் லாமானியரின் ராஜாவுடனே கூட போராடினான்; ஆனால் லாமானியரின் ராஜாவோ ஆல்மாவின் சமுகத்தினின்று பின்வாங்கி, ஆல்மாவுடன் சண்டையிட தன் காவற்காரர்களை அனுப்பினான்.

33 ஆனாலும் ஆல்மா, தன்னுடைய காவற்காரர்களோடு சேர்ந்து, லாமானியரின் காவற்காரர்களை வெட்டி துரத்துமட்டும் அவர்களுடனே சண்டையிட்டான்.

34 சீதோன் நதிக்கு மேற்புறத்திலிருந்த லாமானியருடனும் அம்லிசியருடனும் சண்டையிடவும், தன் ஜனம் கடக்க விசாலமாய் இருக்கும்பொருட்டு, லாமானியரில் மடிந்துபோன சடலங்களை சீதோன் நதியினுள் வீசி, சீதோன் நதியின் மேற்குப் புறத்தண்டையில் அமைந்த நிலத்தை சுத்தம் செய்தான்.

35 அந்தப்படியே, அவர்கள் யாவரும் சீதோன் நதியைக் கடந்த பின்னர், லாமானியரும் அம்லிசியரும் எண்ண முடியாதளவிற்கு, எண்ணிறைந்தவர்களாய் இருப்பினும் அவர்களுக்கு முன்பாக தப்பியோடினார்கள்.

36 அவர்கள் நேபியரின் சமுகத்தினின்று எல்லைகளுக்கு அப்பால், மேற்கிலும் வடக்கிலுமுள்ள வனாந்தரத்திற்கு நேராய் தப்பியோடினார்கள்; ஊக்கமாய் நேபியர் பின்தொடர்ந்து அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

37 அவர்கள் எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிர்க்கப்பட்டு, வெட்டப்பட்டு, எர்மவுன்ட்ஸ் என்று அழைக்கப்பட்ட வனாந்தரத்தை அவர்கள் அடையும் மட்டுமாய் மேற்கிலும், வடக்கிலுமாய் துரத்தப்பட்டு சிதறடிக்கப்பட்டார்கள்; வனாந்தரத்தின் அப்பகுதி துஷ்ட, பட்சிக்கிற காட்டு மிருகங்களினாலே நிறைந்திருந்தது.

38 அந்தப்படியே, அநேகர் காயங்களினிமித்தம் வனாந்தரத்திலே மரித்துப்போனார்கள். அந்த விலங்குகளாலும், ஆகாயத்தின் பருந்துகளாலும் பட்சிக்கப்பட்டார்கள்; அவர்களுடைய எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு பூமியின் மீது குவிக்கப்பட்டிருக்கிறது.