வேதங்கள்
ஆல்மா 28


அதிகாரம் 28

பயங்கர யுத்தத்தில் லாமானியர் வீழ்த்தப்படுதல் – பத்தாயிரக்கணக்கானோர் கொல்லப்படுதல் – துன்மார்க்கர் நித்திய துன்பமனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுதல். நீதிமான்கள் என்றும் முடிவுறாத மகிழ்ச்சியை அடைதல். ஏறக்குறைய கி.மு. 77–76.

1 இப்பொழுதும், அந்தப்படியே, அம்மோன் ஜனம் எருசோன் தேசத்தில் ஸ்திரப்பட்டு, எருசோன் தேசத்தில் ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டு, எருசோன் தேசத்தைச் சுற்றிலும், ஆம், சாரகெம்லா தேசத்தைச் சுற்றிலும் எல்லையோரங்களில் நேபியரின் சேனைகள் நிறுத்தப்பட்டன. இதோ லாமானியரின் சேனைகள் தங்களுடைய சகோதரரை வனாந்தரத்தினுள் பின் தொடர்ந்தது.

2 அங்கே கொடிய யுத்தமொன்று நடைபெற்றது; ஆம், அப்படிப்பட்ட ஒன்றை தேசத்திலிருக்கும் ஜனங்கள் யாவரும், லேகி எருசலேமை விட்டுவந்த காலமுதல் அறிந்திருக்கவில்லை; ஆம், லாமானியரில் பதினாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், தூரமாய் சிதறடிக்கப்பட்டும் போயினர்.

3 ஆம், நேபி ஜனத்திற்குள்ளும் கொடிய சங்காரம் உண்டாயிருந்தது; ஆயினும் லாமானியர் துரத்தப்பட்டும், சிதறடிக்கப்பட்டும் போயினர். நேபி ஜனம் தங்களுடைய தேசத்திற்கு மறுபடியும் திரும்பினார்கள்.

4 இவ்வேளையிலே, தேசமுழுவதிலும், நேபியின் ஜனங்களுக்குள்ளும் மிகுந்த துக்கமும், புலம்பலும் கேட்கப்பட்டது.

5 ஆம், விதவைகள் தங்கள் புருஷர்களுக்காகவும், தகப்பன்மார்கள் தங்கள் குமாரர்களுக்காகவும், மகள் தன் சகோதரனுக்காகவும், சகோதரன் தன் தகப்பனுக்காகவும் அழுது புலம்பும் சத்தம் கேட்கப்பட்டது. இப்படியாக கொல்லப்பட்டுப்போன தங்களுடைய உறவினர்களுக்காக அவர்கள் யாவரும் அழுது புலம்பும் கூக்குரல் கேட்கப்பட்டது.

6 இது உண்மையாகவே ஒரு துக்க நாளாயிருந்தது; ஆம், அது இக்கட்டானதும், உபவாசமிருந்து ஜெபம் பண்ணுகிற காலமாயுமிருந்தது.

7 இப்படியாக நேபியின் ஜனத்தின்மேல் நியாயாதிபதிகளின் பதினைந்தாம் வருஷ ஆளுகையும் முடிவுற்றது;

8 இது அம்மோனும், அவனுடைய சகோதரரைப் பற்றியும், அவர்கள் நேபியின் தேசத்தில் மேற்கொண்ட பிரயாணங்களைப் பற்றியும், அவர்கள் தேசத்தில் அனுபவித்த துன்பங்களையும், துக்கங்களையும், உபத்திரவங்களையும், அவர்கள் அடைந்த விவரிக்க முடியாத சந்தோஷத்தையும், எருசோன் தேசத்திலே சகோதரர் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாதுகாப்பாயிருத்தலைப் பற்றியதான ஓர் விவரம். இப்பொழுதும் சகல மனுஷரின் மீட்பராயிருக்கிற கர்த்தர், அவர்களுடைய ஆத்துமாக்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக.

9 இது நேபியருக்குள்ளே நடந்த யுத்தங்களையும், பிணக்கையும், நேபியருக்கும், லாமானியருக்கும் இடையே நடந்த யுத்தங்களையும்பற்றிய ஒரு விவரம். நியாயாதிபதிகளின் பதினைந்தாம் வருஷ ஆளுகையும் முடிவுற்றது.

10 முதலாம் வருஷம் முதல் பதினைந்தாம் வருஷம்வரை, அநேகமாயிர ஜீவன்கள் அழிக்கப்பட்டன; ஆம், இரத்தம் சிந்துதலின் அஞ்சத்தக்க ஒரு நிலையை உண்டாக்கியது.

11 அநேக ஆயிரமானோரின் சடலங்கள் பூமியில் புதைக்கப்பட்டும், அநேக ஆயிரமானோரின் சடலங்கள் பூமியின் பரப்பின் மீது குவிக்கப்பட்டும், அழுகிப் போகின்றன. தங்கள் உறவினரின் இழப்பினிமித்தம் அநேக ஆயிரமானோர் துக்கப்படுகின்றனர். அவர்கள் நித்திய உபத்திரவத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், என்ற கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின்படி அவர்கள் பயப்பட காரணமிருக்கிறது.

12 மற்ற அநேக ஆயிரமானோர் உண்மையாகவே, தங்கள் உறவினர்களின் இழப்பினிமித்தம் துக்கமாயிருந்தாலும், அவர்கள் தேவனுடைய வலதுபாரிசத்திலே, என்றும் முடிவுபெறாத மகிழ்ச்சியான நிலையில் வாசமாயிருக்க எழுப்பப்படுகிறார்கள் என்ற கர்த்தருடைய வாக்குத்தத்தங்களை அறிந்தவர்களாக அதில் நம்பிக்கை வைத்துக் களிகூர்ந்து ஆர்ப்பரித்தார்கள்.

13 பாவத்தினாலும், மீறுதலினாலும், மனுஷருடைய இருதயங்களைப் பிடிக்க பிசாசானவன் வரையறுத்த தந்திரமான திட்டங்களால் வருகிற அவனுடைய வல்லமையினாலும் மனுஷனின் பாரபட்சம் எவ்வளவு பெரிதானது என நாம் காண்கிறோம்.

14 இப்படியாக, கர்த்தருடைய திராட்சைத் தோட்டங்களில் மனுஷர் கருத்தாய் பிரயாசப்பட வேண்டுமென்ற, அந்த பெரும் அழைப்பை நாம் காண்கிறோம்; இவ்விதமாக துக்கமாயிருப்பதற்கான பெரிய காரணமும் சந்தோஷத்திற்கான காரணமும் உண்டாயிருப்பதை நாம் காண்கிறோம், மனுஷருக்குள்ளே மரணத்தினாலும் அழிவினாலும் துக்கமும், ஜீவனுக்கேதுவான கிறிஸ்துவினுடைய ஒளியினிமித்தம் சந்தோஷமும் உண்டாயிருக்கிறது.