வேதங்கள்
ஆல்மா 32


அதிகாரம் 32

ஆல்மா தங்கள் உபத்திரவங்களினிமித்தம் தாழ்ச்சியடைந்த எளியோருக்கு போதித்தல் – மெய்யானதும் காணப்படாததுமான ஒன்றில் நம்புகிறதே விசுவாசம் – தூதர்கள் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும், ஊழியம் செய்வர் என்று ஆல்மா சாட்சி கொடுத்தல் – ஆல்மா வார்த்தையை ஒரு விதைக்கு ஒப்பிடுதல் – அது நடப்பட்டு போஷிக்கப்படவேண்டும் – பின்பு அது விருட்சமாய் வளர்ந்து, நித்தியஜீவன் என்கிற கனி அதிலிருந்து பறிக்கப்படும். ஏறக்குறைய கி.மு. 74.

1 அந்தப்படியே, அவர்கள் போய் ஜனங்களுக்கு அவர்களுடைய ஜெப ஆலயங்களிலும், அவர்களுடைய வீடுகளிலும் பிரவேசித்து, தேவ வசனத்தைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள்; ஆம், அவர்கள் அவர்களுடைய வீதிகளிலும் வார்த்தையைப் பிரசங்கித்தார்கள்.

2 அந்தப்படியே, அவர்கள் மிகவும் பிரயாசப்பட்ட பின்பு ஏழ்மையான ஜனங்களுக்குள்ளே ஜெயம் பெறத்துவங்கினார்கள்; இதோ, ஜெப ஆலயங்களிலிருந்து அவர்கள் தங்களுடைய உரப்பான வஸ்திரத்தினிமித்தம் தள்ளப்பட்டார்கள்.

3 அவர்கள் அசுசியானவர்கள் என்று எண்ணப்பட்டு அவர்களுடைய ஜெப ஆலயங்களிலே பிரவேசித்து தேவனைத் தொழுதுகொள்ள அனுமதிக்கப்படாதிருந்தனர்; ஆகவே அவர்கள் எளியோராயிருந்தார்கள்; ஆம், அவர்கள் தங்களுடைய சகோதரரால் களிம்பு என்று எண்ணப்பட்டனர்; அவர்கள் உலகத்திற்கேற்ற காரியங்களில் எளியோராயிருந்தார்கள்; அவர்கள் இருதயத்திலும் எளிமையாயிருந்தார்கள்.

4 ஓனிடா மலையின்மீது ஜனங்களுக்கு ஆல்மா போதித்தும், அவர்களிடத்தில் பேசிக்கொண்டுமிருந்தபோது, உலகத்திற்கேற்ற காரியங்களில் தங்களின் வறுமையினிமித்தம், இருதயத்தில் எளிமையானோர் என்று நாங்கள் சொன்ன, அவர்களைச் சார்ந்த பெரும் கூட்டத்தினர் அவனிடத்தில் வந்தார்கள்.

5 அவர்கள் ஆல்மாவிடம் வந்தார்கள்; அவர்களின் தலைவன் அவனை நோக்கி: இதோ, என் சகோதரர் தங்கள் வறுமையினிமித்தம், சகல மனுஷராலும், குறிப்பாக ஆசாரியர்களால் மிகவும் அலட்சியம் பண்ணப்பட்டதினால் என்ன செய்வார்கள். எங்களுடைய சொந்த கைகளினால் நாங்கள் மிகுதியாய் பிரயாசப்பட்டு கட்டியெழுப்பின எங்களின் ஜெப ஆலயங்களிலிருந்து எங்களைத் தள்ளினார்கள்; எங்களுடைய மிகுந்த வறுமையினிமித்தமே எங்களை அவர்கள் புறம்பே தள்ளினார்கள். எங்கள் தேவனை வழிபட எங்களுக்கு இடமில்லை; இதோ, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றான்.

6 இப்பொழுது ஆல்மா இதைக் கேட்டபோது, அவனிடத்தில் திரும்பி, தன் முகத்தை அவனுக்கு நேராய் ஏறெடுத்து, அதிக சந்தோஷத்துடன் பார்த்தான்; அவர்களுடைய உபத்திரவங்கள் அவர்களை மெய்யாகவே தாழ்த்தியதையும், வசனத்தைக் கேட்க அவர்கள் ஆயத்தமாயிருப்பதையும், அவன் கண்டான்.

7 ஆதலால், அவன் மற்ற கூட்டத்திற்கு ஒன்றும் சொல்லாதவனாய், தன் கரத்தை நீட்டி, மெய்யாகவே மனஸ்தாபமுள்ளவர்கள் எனக் கண்டவர்களிடத்தில் கூக்குரலிட்டு, அவர்களுக்குச் சொன்னதாவது:

8 நீங்கள் இருதயத்தில் தாழ்மையுள்ளவர்கள் என நான் காண்கிறேன்; அப்படியானால் நீங்கள் பாக்கியவான்கள்.

9 இதோ, உங்கள் சகோதரன், நாங்கள் எங்கள் தேவனைத் தொழுது கொள்ளாதபடிக்கு, எங்களின் ஜெப ஆலயங்களிலிருந்து புறம்பே தள்ளப்பட்டோமே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான்.

10 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களுடைய ஜெப ஆலயங்களிலேயல்லாமல் வேறெங்கும் தேவனைத் தொழுது கொள்ளக்கூடாதென எண்ணுகிறீர்களா?

11 மேலும் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே தேவனைத் தொழவேண்டுமென, நீங்கள் எண்ணுகிறீர்களா என்றும் உங்களைக் கேட்கிறேன்.

12 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் தாழ்மையாயிருக்கும்படிக்கும், ஞானத்தைக் கற்கும்படிக்கும், உங்கள் ஜெப ஆலயங்களிலிருந்து தள்ளப்பட்டது நல்லது; நீங்கள் ஞானத்தைக் கற்பது அவசியமே; நீங்கள் புறம்பே தள்ளப்பட்டதாலும், உங்களுடைய மிகுந்த வறுமையினிமித்தம் உங்களின் சகோதரரால் நீங்கள் அலட்சியம் பண்ணப்பட்டதாலும், நீங்கள் இருதயத் தாழ்ச்சிக்குள்ளாக கொண்டுவரப்பட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் தாழ்மையாக்கப்பட வேண்டியது அவசியம்.

13 இப்பொழுது, நீங்கள் தாழ்மையாய் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டதினிமித்தம் நீங்கள் பாக்கியவான்கள்; ஏனெனில் சிலசமயங்களில் மனுஷன் தாழ்மையாயிருக்கக் கட்டாயப்படுத்தப்படும்போது, அவன் மனந்திரும்புதலைத் தேடுகிறான்; இப்போதும் மெய்யாகவே மனந்திரும்புகிற எவனும் இரக்கத்தைக் கண்டடைவான், இரக்கத்தைக் கண்டடைகிறவனும், இறுதிபரியந்தமும் நிலைத்து நிற்கிறவனுமே இரட்சிக்கப்படுவான்.

14 இப்பொழுதும், நான் உங்களுக்குச் சொன்னதுபோல, நீங்கள் தாழ்மையாயிருக்க கட்டாயப்படுத்தப்பட்டதினிமித்தம், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வசனத்தினிமித்தம் மெய்யாகவே தங்களைத் தாழ்த்தியவர்கள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று நீங்கள் எண்ணவில்லையா?

15 ஆம், தன்னையே மெய்யாகத் தாழ்த்தி, தன் பாவங்களிலிருந்து மனந்திரும்பி, முடிவுபரியந்தமும், நிலை நிற்கிறவன் எவனோ, அவனே ஆசீர்வதிக்கப்படுவான், ஆம் தங்களின் மிகுந்த வறுமையினிமித்தம் தாழ்மையாயிருக்கக் கட்டாயப்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும், அவன் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

16 ஆதலால், தாழ்மையாயிருக்கும்படி கட்டாயப்படுத்தப்படாமலேயே, தாழ்மையாயிருப்பவர்கள் பாக்கியவான்கள்; அதாவது, ஆம், அவர்கள் விசுவாசிப்பதற்கு முன்னமே, வசனத்தை அறியும்படி கொண்டுவரப்படாமல், அல்லது அவர்கள் அறிந்து கொள்ளத்தக்கதாக, பலவந்தப்படுத்தப்படாமலேயே, தேவ வசனத்தை விசுவாசித்து, இதய முரண்டில்லாமல் ஞானஸ்நானம் பெறுபவர்கள் பாக்கியவான்கள்.

17 ஆம், அநேகர் எங்களுக்கு வானத்திலிருந்து ஒரு அறிகுறியை காண்பித்தால், நாங்கள் நிச்சயமாய் அறிந்துகொண்டு, பின்பு நம்புகிறோம், என்கிறார்கள்.

18 இதுதான் விசுவாசமா, என்று நான் கேட்கிறேன். இதோ அப்படி அல்ல, என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒருவன் ஒரு காரியத்தை அறிந்திருந்தானேயானால் அவன் விசுவாசிக்க காரணமேதுமில்லையே. ஏனெனில் அவன்தான் அதை அறிந்திருக்கிறானே.

19 இப்பொழுது தேவனுடைய சித்தத்தை அறிந்து அதைச் செய்யாமல் போகிறவன், வெறுமனே விசுவாசித்தோ, அல்லது விசுவாசிக்கக் காரணம் மட்டும் உண்டாயிருந்து, மீறுதலினுள் விழுகிறவனைக் காட்டிலும் எவ்வளவாய் சபிக்கப்பட்டவனாயிருக்கிறான்.

20 இப்போது இக்காரியத்தைக் குறித்து நீங்கள் நிதானியுங்கள். இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஒன்று எப்படியோ, அப்படியே தான் மற்றதும். அது அவனவன் கிரியைகளுக்குத் தக்கதாய் இருக்கும்.

21 நான் விசுவாசத்தைக் குறித்து ஏற்கனவே சொன்னதுபோல, காரியங்களைக் குறித்து பூரண ஞானத்தைப் பெற்றிருப்பது விசுவாசமல்ல; ஆதலால், உங்களிடத்தில் விசுவாசம் இருந்தால் காணப்படாத மெய்யானவைகளை நீங்கள் நம்புகிறவர்களாயிருக்கிறீர்கள்.

22 இதோ, தம்முடைய நாமத்தை விசுவாசிக்கிற யாவர் மேலும், தேவன் இரக்கமாயிருக்கிறார் என்று, நீங்கள் நினைவுகூரவேண்டுமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதனால் தான் முதலாவது நீங்கள் தம்முடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

23 அவர் தம்முடைய வசனத்தை தூதர்கள் மூலமாக புருஷருக்கும், ஆம், புருஷருக்கு மாத்திரமல்ல ஸ்திரீகளுக்கும் அருளுகிறார். இது மாத்திரமல்ல, அநேகந்தரம் ஞானிகளையும், கற்றோரையும் தாறுமாறாக்குகிற வசனங்கள், சிறுபிள்ளைகளுக்கும், அருளப்படுகின்றன.

24 இப்பொழுது என் பிரியமான சகோதரரே, நீங்கள் உபத்திரவப்பட்டு, தள்ளப்பட்டுப் போனதினிமித்தம் நீங்கள் என்ன செய்யவேண்டுமென என்னிடத்திலிருந்து அறிந்துகொள்ள வாஞ்சித்ததால், மெய்யானவைகளுக்கேற்ப மாத்திரம், நான் உங்களை நிதானிப்பவனாக நீங்கள் எண்ணவேண்டுமென, நான் வாஞ்சிப்பதில்லை.

25 நீங்கள் அனைவரும் தாழ்மையாயிருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டவர்கள், என்று நான் சொல்லவில்லை; ஏனெனில் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், தங்களைத் தாங்களே தாழ்த்துகிறவர்களாய், உங்களுக்குள்ளும் சிலர் இருக்கிறார்கள், என்று மெய்யாகவே நான் விசுவாசிக்கிறேன்.

26 நான் விசுவாசத்தைக் குறித்து ஏற்கனவே சொன்னதுபோல, அது பூரண அறிவாக இருந்ததில்லை. என் வார்த்தைகளும் அப்படியே. விசுவாசம் பூரண அறிவு என்பதைத் தவிர, அதுபோல அவைகளினுடைய நிச்சயத்தையும், நீங்கள் பரிபூரணமாய் முதலிலேயே அறிந்துகொள்ள முடியாது.

27 இதோ, என் வார்த்தைகளைக் குறித்து ஒரு சோதனையைச் செய்யும்வகையில், உங்கள் புலன்களை எழுப்பி, உணர்ச்சி கொள்ளச் செய்து, கொஞ்ச விசுவாசத்தைப் பிரயோகியுங்கள். ஆம், ஒருவேளை விசுவாசிக்க வாஞ்சிப்பதைக் காட்டிலும், அதிகமாய் உங்களால் ஏதும் செய்யக்கூடாமற்போனால், என் வார்த்தைகளில் ஒரு பகுதிக்கு நீங்கள் இடம் கொடுக்கும்படியாய், நீங்கள் நம்புமளவும் இந்த வாஞ்சை உங்களுக்குள் கிரியை செய்வதாக.

28 இப்பொழுது நாம் வார்த்தையை ஒரு விதைக்கு ஒப்பிடுவோம். உங்கள் இருதயத்தில் ஒரு விதை விதைக்கப்படும்படிக்கு நீங்கள் இடம்கொடுத்தால், இதோ, அது உண்மையான விதையாக அல்லது நல்ல விதையாக இருந்தால், அதை உங்கள் அவிசுவாசத்தினால் அகற்றாமலும், நீங்கள் கர்த்தருடைய ஆவியை எதிர்க்காமலும் இருந்தால், இதோ, அது உங்கள் மார்புகளினுள் விரிவடையும்; இந்த விரிவடைகிற அசைவுகளை நீங்கள் உணரும்போது, நீங்கள் உங்களுக்குள்ளாகவே இது நல்ல விதையாகத்தான் இருக்கவேண்டும், இந்த வார்த்தை நன்மையானது. ஏனெனில், அது என் ஆத்துமாவை விசாலமடையச் செய்யத் தொடங்குகிறது, ஆம், அது என் அறிவை விரிவாக்கத் தொடங்குகிறது, ஆம், அது எனக்கு சுவையானதாய் இருக்கத் தொடங்குகிறது, என்று சொல்லத் தொடங்குவீர்கள்.

29 இதோ, இது உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்காதோ? உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம்; ஆனாலும் அது பூரண ஞானத்திற்குள்ளாக வளரவில்லை.

30 ஆனால் இதோ விதையானது விரிவடைந்து, முளைவிட்டு வளரத் தொடங்கும்போது, நீங்கள் அந்த விதை நல்லது என்று சொல்லவேண்டும்; ஏனெனில் இதோ, அது விரிவடைந்து, முளைவிட்டு வளரத் துவங்குகிறது. இப்பொழுது இதோ, இது உங்களுடைய விசுவாசத்தை பெலப்படுத்தாதா? ஆம், உங்களுடைய விசுவாசத்தை அது பெலப்படுத்தும்: ஏனெனில் அது நல்ல விதை என்று நான் அறிவேனென்று, நீங்கள் சொல்லுவீர்கள். ஏனெனில் இதோ, அது முளைவிட்டு வளரத் துவங்குகிறது.

31 இப்போதும் இதோ, இது நல்ல விதையென்று நிச்சயமாய் நீங்கள் அறிவீர்களா? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம், ஏனெனில் ஒவ்வொரு விதையும் தன் சொந்த சாயலைப்போலவே பிறப்பிக்கிறது.

32 ஆதலால் விதை முளைத்தால் அது நல்லது. அது முளைக்காவிடில், இதோ, அது நல்லதல்ல. ஆகவே அது எறியப்படுகிறது.

33 இப்பொழுது இதோ, நீங்கள் சோதனையைச் செய்து, விதையை நட்டீர்கள். அதுவோ விரிவடைந்து, முளைத்து வளரத் துவங்கியதால், அந்த விதை நல்லது, என்று நீங்கள் அறிவது அவசியமே.

34 இப்பொழுது உங்களுடைய ஞானம் பூரணமானதா? ஆம், அந்தக் காரியத்தில் உங்கள் ஞானம் பூரணப்பட்டிருக்கிறது. உங்கள் விசுவாசமோ செயலற்றிருக்கிறது. இது நீங்கள் அறிந்திருப்பதினிமித்தமே, உங்கள் அறிவு தெளிவடையத் தொடங்குவதாலும், உங்கள் மனம் விசாலமடையத் தொடங்குவதாலும், வார்த்தை உங்கள் ஆத்துமாக்களில் விரிவடைந்திருக்கிறது என நீங்கள் அறிந்திருக்கிறதால், அது முளைவிட்டிருக்கிறது என்றும் அறிகிறீர்கள்.

35 அப்படியென்றால், இது நிஜமன்றோ? நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம் அது ஒளியாயிருப்பதினிமித்தமே; ஒளியாயிருக்கிற எதுவும் பகுத்தறியக்கூடியதாய் இருப்பதால், நல்லதாயிருக்கிறது. ஆதலால் அது நல்லதென்று நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்; இதோ, இந்த ஒளியை நீங்கள் ருசி பார்த்த பின்பு, உங்கள் ஞானம் பூரணப்பட்டதாயிருக்குமா?

36 இதோ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். அப்படியல்ல, சோதனையைச் செய்து விதை நல்லதா என்று அறியும்படிக்கு, முயற்சி செய்ய, விதையை ஊன்ற நீங்கள் உங்கள் விசுவாசத்தை மட்டுமே பிரயோகித்ததினிமித்தம், உங்கள் விசுவாசத்தை நீங்கள் ஒதுக்கிவிடக்கூடாது.

37 இதோ, விருட்சம் வளரத் துவங்கும்போது, நீங்கள் சொல்வீர்கள், அது வேர் விட்டு, வளர்ந்து, நமக்குக் கனியைக் கொடுக்கும்படி, அதை அதிக ஜாக்கிரதையாய்ப் போஷிப்போமாக. இப்போதும் இதோ, நீங்கள் மிகுந்த ஜாக்கிரதையாய்ப் போஷிப்பதால், அது வேர் விட்டுவளர்ந்து, கனி கொடுக்கும்.

38 நீங்கள் அந்த விருட்சத்தை உதாசீனப்படுத்தினால், அதனுடைய போஷிப்பைக் குறித்துக் கவலைப்படாமற் போனால், இதோ அது எந்த வேரும் விடாது; சூரியனின் வெப்பம் வரும்போது, அதைச் சுட்டெரிக்கும். வேரில்லாததினால் அது காய்ந்து போகும், நீங்கள் அதைப் பிடுங்கி, வெளியே எறிவீர்கள்.

39 இப்போதும் இந்த விதை நல்லதல்ல என்பதினாலோ, அல்லது அதனுடைய கனி விரும்பத்தக்கதாக இல்லை என்பதினாலோ அல்ல. இது ஏனென்றால் உங்கள் நிலம் வெறுமையாயிருப்பதினாலும், விருட்சத்தை நீங்கள் போஷிக்காததினாலுமே. ஆதலால் கனியை நீங்கள் பெறமுடியாது.

40 இப்படியாக, அதனுடைய கனியை விசுவாசக்கண்ணால் எதிர்பார்த்து, வார்த்தையைப் போஷியாமலிருந்தால், ஜீவ விருட்சத்தின் கனியை நீங்கள் ஒருபோதும் பறிக்கவே முடியாது.

41 வார்த்தையைப் போஷிப்பீர்களெனில், ஆம், விருட்சம் வளரத் தொடங்கும்போது, அதிக கருத்தோடும், பொறுமையோடும், உங்கள் விசுவாசத்தினால், அதைப் போஷித்து, அதனுடைய கனியை எதிர்பார்த்திருப்பீர்களெனில், அது வேர் விடும்; இதோ, அது நித்திய ஜீவன் வரை வளர்கிற விருட்சமாயிருக்கும்.

42 வார்த்தை உங்களில் வேர் விடும்படிக்கு, நீங்கள் அதைப் போஷிப்பதில் எடுத்துக்கொண்ட உங்களுடைய கருத்தினிமித்தமும், விசுவாசத்தினிமித்தமும், பொறுமையினிமித்தமும், இதோ, விலையேறப்பெற்றதும், தித்திப்பானவைகளைக் காட்டிலும் தித்திப்பானதும், வெண்மையானவைகளைக் காட்டிலும் வெண்மையாகவும், ஆம், சுத்தமுள்ளவைகளைக் காட்டிலும் சுத்தமுள்ளதாகவும் இருக்கிற, அதனுடைய கனியை நீங்கள் பறிப்பீர்கள்; நீங்கள் நிறைக்கப்பட்டு, இனி பசித்தும், விடாய்த்தும் போகாதவரை, இக்கனியை ருசிப்பீர்கள்.

43 அப்படியானால் என் சகோதரரே, இவ்விருட்சம் உங்களுக்குக் கனியை கொடுக்கக் காத்திருந்து, உங்கள் விசுவாசம், உங்கள் கருத்து, பொறுமை, மற்றும், நீடிய சாந்தத்தினிமித்தம், பலனை அறுவடை செய்வீர்கள்.