வேதங்கள்
ஆல்மா 40


அதிகாரம் 40

கிறிஸ்து, சகல மனுஷரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுதல் – தங்களுடைய உயிர்த்தெழுதலின் நாளுக்காய்க் காத்திருக்கும்படி மரித்தோரில் நீதிமான்கள் பரதீசுக்கும், துன்மார்க்கர் புறம்பான இருளுக்கும் போவார்கள் – உயிர்த்தெழுதலில் அனைத்தும் அவைகளுடைய ஒழுங்கான சம்பூரண வடிவத்திற்கு மாற்றப்படும். ஏறக்குறைய கி.மு. 74.

1 இப்பொழுதும் என் குமாரனே, உன் மனம் மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து சஞ்சலப்பட்டிருப்பதை நான் உணர்ந்ததால், உனக்கு அதிகமாக நான் சொல்ல விரும்புகிறவைகள் இவைகளே.

2 இதோ, நான் உனக்குச் சொல்லுகிறேன், கிறிஸ்துவின் வருகை வரை உயிர்த்தெழுதல் இல்லை, அல்லது வேறு வார்த்தைகளிலெனில் எனில் அழிவுக்கேதுவானது அழியாமையை தரிப்பதில்லை, சாவானது சாவாமையை தரிப்பதில்லை.

3 இதோ, அவர் மரித்தோரின் உயிர்த்தெழுதலை சம்பவிக்கப்பண்ணுகிறார். ஆனால் இதோ, என் குமாரனே உயிர்த்தெழுதல் இன்னும் சம்பவிக்கவில்லை. இப்பொழுது நான் உனக்கொரு இரகசியத்தை வெளியாக்குகிறேன்; ஆயினும் பாதுகாக்கப்பட்ட அநேக இரகசியங்களுண்டு. அவைகளை தேவனேயல்லாமல், வேறொருவரும் அறியார். நான் அறியும்படிக்கு தேவனிடத்தில் கருத்தாய் நான் கேட்ட, உயிர்த்தெழுதலைக் குறித்த, அந்தக் காரியத்தை உனக்குக் காண்பிக்கிறேன்.

4 இதோ, மரித்தோரிலிருந்து யாவரும் எழும்பும்படியாக ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது இக்காலம் எப்போது வருமென்று ஒருவரும் அறியார்; ஆனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிற காலத்தை தேவன் அறிவார்.

5 மனுஷர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவது முதல் முறையிலா அல்லது இரண்டாவது முறையிலா, அல்லது மூன்றாவது முறையிலா என்பது முக்கியமல்ல; ஏனெனில் தேவன் இக்காரியங்கள் யாவையும் அறிந்திருக்கிறார்; மரித்தோரிலிருந்து யாவரும் உயிர்த்தெழும்படியாக ஒரு காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது, என்று நான் அறிவதே எனக்குப் போதுமானதாயிருக்கிறது.

6 மரிக்கும் காலத்திற்கும் உயிர்த்தெழும் காலத்திற்கும் ஓர் இடைவெளி அவசியமே.

7 இப்பொழுதும் மரணகாலத்திலிருந்து, உயிர்த்தெழ நிர்ணயிக்கப்பட்டிருக்கும் காலம் வரைக்கும், மனுஷ ஆத்துமாக்களுக்கு சம்பவிப்பது என்ன, என்று கேட்கிறேன்.

8 இப்பொழுது மனுஷர் உயிர்த்தெழ ஒன்றுக்கும் மேற்பட்ட காலங்கள் உள்ளதா என்பது முக்கியமல்ல; ஏனெனில் அனைவரும் ஒரே சமயத்தில் மரிப்பதில்லையே. இதுவும் முக்கியமல்ல, அனைத்தும் தேவனுக்கு ஒரு நாளைப் போலிருக்கிறது. மனுஷருக்கு மாத்திரம் காலம் அளக்கப்படுகிறது.

9 ஆதலால் மரணத்திலிருந்து எழும்பும்படியாக மனுஷருக்கு ஓர் காலம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது; மரணகாலத்திற்கும், உயிர்த்தெழும் காலத்திற்குமிடையே இடைவெளி உண்டு. இப்பொழுது இந்த இடைவெளி நேரத்தில் மனுஷருடைய ஆத்துமாக்களுக்கு சம்பவிப்பதென்ன என்பதே, நான் அறிய கர்த்தரிடத்தில் கருத்தாய் விசாரித்த காரியமாயிருக்கிறது; நான் அறிந்த காரியம் இதுவே.

10 சகலமானோரும் உயிர்த்தெழும் காலம் வரும்போது, மனுஷனுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட காலங்கள் யாவையும் தேவன் அறிகிறார் என்று, அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

11 இதோ மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே ஆத்துமாவின் நிலையென்ன என்பதைக் குறித்து, இதோ, ஒரு தூதனால் எனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சகல மனுஷருடைய ஆவிகளும் இந்த அழிவுக்கேதுவான சரீரத்திலிருந்து வெளியே போனவுடனே, ஆம், நல்லவர்களோ, தீயவர்களோ சகல மனுஷருடைய ஆவிகளும் அவர்களுக்கு ஜீவன் தந்த தேவனிடத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

12 நீதிமான்களின் ஆவிகள் பரதீசு என்றும், இளைப்பாறும் நிலையென்றும், சமாதான நிலையென்றும் அழைக்கப்படுகிற மகிழ்ச்சி நிலையினுள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள் தங்களின் சகல பிரச்சினைகளிலிருந்தும், சகல தேவைகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் இளைப்பாறுவார்கள்.

13 இதோ நன்மையல்லாமல் தீய கிரியைகளைத் தெரிந்து கொண்ட பொல்லாதவர்களாகிய, ஆம், துன்மார்க்கரின் ஆவிகள், கர்த்தருடைய ஆவியின் ஓர் பங்கையோ அல்லது பகுதியையோ கொண்டிருப்பதில்லை. ஏனெனில் இதோ, நன்மையை விட தீமையை தெரிந்துகொள்கிறார்கள். ஆதலால் இதோ பிசாசின் ஆவி அவர்களுக்குள் புகுந்து, அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்தன. இவர்கள் புறம்பான இருளினுள்ளே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும், புலம்பலும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். இது பிசாசினுடைய சித்தத்தினால் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்ட, அவர்களுடைய சொந்த அக்கிரமத்தினாலேயே.

14 காரிருளிலும், அஞ்சத்தக்க நிலையிலுமிருந்து, தங்கள்மீது தேவனுடைய கோபாக்கினையை பயத்தோடு எதிர்நோக்குகிற துன்மார்க்க ஆத்துமாக்களின் நிலை இதுவே; தங்கள் உயிர்த்தெழுதலின் காலம் வரைக்கும் இவர்கள் இந்த நிலையிலும், நீதிமான்கள் பரதீசிலுமிருப்பார்கள்.

15 இப்பொழுதும் உயிர்த்தெழுதலுக்கு முன்பு ஆத்துமா இருக்கிற இந்த மகிழ்ச்சியின் நிலையையும், துர்பாக்கிய நிலையையும், முதலாம் உயிர்த்தெழுதல் என்று சிலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆம், ஆவியோ, ஆத்துமாவோ எழுவதும், பேசப்பட்ட வார்த்தைகளின்படி அவைகள் மகிழ்ச்சிக்கோ, துர்பாக்கியத்திற்கோ அனுப்பப்படுதலும் உயிர்த்தெழுதல் என்று அழைக்கப்பெறலாம், என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.

16 இதோ, இருந்தவர்களும், இருக்கிறவர்களும், மரித்தோரிலிருந்து கிறிஸ்து உயிர்த்தெழும்போது, இருக்கப்போகிறவர்களுமாகிய யாவருடைய உயிர்த்தெழுதலும் முதலாம் உயிர்த்தெழுதல் என்று மறுபடியும் இது சொல்லப்பட்டிருக்கிறது.

17 இவ்விதமாய்ச் சொல்லப்பட்ட இந்த முதலாம் உயிர்த்தெழுதல், ஆத்துமாக்களின் உயிர்த்தெழுதலும், அவைகளின் மகிழ்ச்சிக்கும் துர்பாக்கியத்திற்கும் ஒப்படைப்பதாய் இருக்கமுடியும், என்று நாம் எண்ணுவதில்லை. நீயும் இதுதான் அதன் பொருள் என்று எண்ண முடியாது.

18 இதோ, அப்படியல்ல என்று நான் உனக்குச் சொல்லுகிறேன்; ஆனால் ஆதாமின் நாட்கள் துவங்கி கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வரைக்குமாய் இருந்தோருடைய, ஆத்துமா சரீரத்தோடு மறுபடியும் சேருதலே அதன் அர்த்தமாகும்.

19 துன்மார்க்கரும், நீதிமான்களுமான சொல்லப்பட்ட யாவருடைய ஆத்துமாக்களும், சரீரங்களும் ஒரே சமயத்தில் மறுபடியும் சேரும், என்று நான் சொல்லவில்லை; அவர்களில் சகலமானோரும் எழுவார்கள். அல்லது வேறு வார்த்தைகளிலெனில் அவர்களுடைய உயிர்த்தெழுதல், கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, மரிப்போருடைய உயிர்த்தெழுதலின் முன்னே சம்பவிக்குமென்று, நான் சொல்லுவதே போதுமானதாயிருக்கிறது.

20 இப்பொழுதும், என் குமாரனே, அவர்களுடைய உயிர்த்தெழுதல் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின்போது வருமென்று நான் சொல்லவில்லை. ஆனால் இதோ, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின்போதும், அவர் பரத்திற்கேறும்போதும், நீதிமான்களுடைய ஆத்துமாக்களும், சரீரங்களும் மறுபடியும் ஒன்றாய்ச் சேரும், என்ற என் கருத்தைச் சொல்லுகிறேன்.

21 அது அவரின் உயிர்த்தெழுதலின்போது சம்பவிக்குமா அல்லது அதற்குப் பின்பாவென்று நான் சொல்லவில்லை; ஆனாலும் மரித்தோர் எழுந்து வந்து, சரீரமும் ஆத்துமாவுமாக இரண்டும் மறுபடியும் இணைக்கப்பட்டு தேவனுக்கு முன்பாக நிற்கும்படி கொண்டுவரப்பட்டு, அவர்களுடைய கிரியைகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்க்கப்படும், தேவனால் நிர்ணயிக்கப்பட்ட காலம்வரைக்கும், மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும், இடையே ஒரு இடைவெளியும், சந்தோஷத்தில் அல்லது துர்பாக்கியத்தில் ஆத்துமாவின் ஒரு நிலையுமிருக்கும் என்று மாத்திரம் சொல்லுகிறேன்.

22 ஆம், இது தீர்க்கதரிசிகளின் வாயால் சொல்லப்பட்ட அந்தக் காரியங்களை மறுபடியும் கொண்டுவருகிறது.

23 ஆத்துமா சரீரத்தோடும், சரீரம் ஆத்துமாவோடும் திரும்பிச் சேர்க்கப்படும்; ஆம், சகல கை, கால்களும், மூட்டுகளும், தங்களுடைய சரீரங்களுடன் திரும்பவும் சேர்க்கப்படும்; ஆம், தலைமயிரில் ஒன்றாகிலும் தொலைந்து போகாது; ஆனால் சகலமும் அவைகளினுடைய ஒழுங்கான பரிபூரண அமைப்பிலே திரும்பச் சேர்க்கப்படும்.

24 இப்பொழுதும், என் குமாரனே, திரும்பச் சேர்க்கப்படும் என்று தீர்க்கதரிசிகளின் வாயால் சொல்லப்பட்ட காரியம் இதுவே.

25 நீதிமான்கள் தேவ இராஜ்ஜியத்தில் அதன் பின்பு பிரகாசிப்பார்கள்.

26 ஆனால் இதோ, துன்மார்க்கர் மீது பயங்கர மரணமொன்று வருகிறது; ஏனெனில் அவர்கள் நீதிக்கேதுவானவைகளைக் குறித்த காரியங்களுக்கு மரித்துப் போகிறார்கள்; ஏனெனில் அவர்கள் அசுத்தமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். அசுத்தமுள்ள எதுவும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது; ஆனால் அவர்கள் தள்ளப்பட்டு, பொல்லாதவைகளான தங்களுடைய பிரயாசங்கள் அல்லது தங்களுடைய கிரியைகளின் கனிகளைப் புசிக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறார்கள்; அவர்கள் கசப்பான பாத்திரத்தின் வண்டல்களைக் குடிக்கிறார்கள்.