வேதங்கள்
ஆல்மா 49


அதிகாரம் 49

ஆக்கிரமிக்கும் லாமானியர் அரண்களால் சூழப்பட்ட பட்டணங்களான அம்மோனிகாவையும், நோவாவையும் கைப்பற்ற முடியாமல் போகுதல் – அமலேக்கியா தேவனை சபித்து, மரோனியின் இரத்தத்தைக் குடிக்க சபதமிடுதல் – ஏலமனும் அவன் சகோதரரும் தொடர்ந்து சபையைப் பெலப்படுத்துதல். ஏறக்குறைய கி.மு. 72.

1 இப்பொழுதும், அந்தப்படியே, பத்தொன்பதாவது வருஷத்தின், பதினோராவது மாதத்தின், பத்தாவது நாளன்று, லாமானியரின் படைகள் அம்மோனிகா தேசத்தை நோக்கி நெருங்குவது காணப்பட்டது.

2 இதோ, அப்பட்டணம் மறுபடியும் கட்டப்பட்டிருந்தது. பட்டணத்தின் எல்லைகளில் ஒரு சேனையை மரோனி நிறுத்தியிருந்தான். லாமானியர் கற்களாலும், அம்புகளாலும் சண்டையிட்டபடியால், இதோ, அவர்களுடைய அம்புகளிலிருந்தும், கற்களிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள, அவர்கள் சுற்றிலும் மண் சுவர்கள் எழுப்பியிருந்தார்கள்.

3 இதோ, அம்மோனிகா பட்டணம் மறுபடியும் கட்டப்பட்டிருந்ததென்று சொன்னேன். ஆம், அதில் ஒரு பகுதி மறுபடியும் கட்டப்பட்டிருந்தது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; லாமானியர் அதை ஜனங்களின் அக்கிரமத்தினிமித்தம், ஒரு விசை ஏற்கனவே அழித்துப் போட்டிருந்ததால், அது தங்களுக்கு மறுபடியும் சுலபமாக இரையாகிவிடும், என்று எண்ணினார்கள்.

4 ஆனால் இதோ, அவர்களுடைய ஏமாற்றம் எவ்வளவு பெரிதாயிருந்தது; ஏனெனில் இதோ, நேபியர்கள் பூமியைத் தோண்டி தங்களைச் சுற்றி ஒரு மண்வரம்பு அமைத்திருந்தார்கள். அது மிகவும் உயரமாய் இருந்ததாலே, லாமானியர் தாக்கும்படி அவர்கள் மேல் தங்கள் கற்களையும், தங்கள் அம்புகளையும் எறியவும், அவர்கள் நுழைவாயில் அல்லாமல், வேறெந்த வழியிலும், அவர்கள் மேல் விழவும் கூடாமற்போயிற்று.

5 இப்பொழுது, பாதுகாப்பிடங்களை ஆயத்தப்படுத்துவதிலான நேபியரின் ஞானத்தினிமித்தம், லாமானியர்களின் சேனாதிபதிகள் மிகவும் அதிர்ந்து போனார்கள்.

6 தங்கள் எண்ணிக்கையின் மிகுதியினிமித்தம், இது காலம் வரை தாங்கள் செய்ததுபோல, அவர்கள் மேல் விழ வந்திருப்பது தங்களின் பாக்கியம் என்று லாமானியர்களின் தலைவர்கள் இப்பொழுது எண்ணினார்கள்; ஆம், அவர்கள் தங்களை கேடயங்களாலும், மார்புக் கவசங்களாலும், ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தங்களை தோல் வஸ்திரங்களாலும் ஆம், தங்கள் நிர்வாணத்தை மறைக்கும்படியாக மிகவும் கெட்டியான வஸ்திரங்களாலும் தயார்படுத்தியிருந்தார்கள்.

7 இப்படியாக ஆயத்தப்படுத்தியிருந்ததாலே, அவர்கள் தங்கள் விருப்பத்தின்படி, தங்களின் சகோதரரை எளிதாக மேற்கொண்டு, அவர்களை அடிமைத்தனத்தின் நுகத்தடிக்கு கீழ்ப்படுத்தவோ, அல்லது கொன்று சங்கரிக்கவோ எண்ணினார்கள்.

8 ஆனால் இதோ, அவர்கள் மிகவும் ஆச்சரியப்படும்படியாக, லேகியின் பிள்ளைகளுக்குள்ளே என்றும் அறியப்பட்டிராத வண்ணம், அவர்களுக்காக, ஆயத்தப்பட்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் மரோனியின் போதனைகளின்படியே லாமானியரோடு யுத்தம் பண்ண ஆயத்தப்பட்டிருந்தார்கள்.

9 அந்தப்படியே, அவர்களினுடைய யுத்த ஆயத்த விதங்களினால் லாமானியரும், அமலேக்கியரும் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

10 இப்பொழுதும், அமலேக்கியா ராஜா, தன் சேனையின் தலைமையேற்று நேபியின் தேசத்தை விட்டு வந்திருப்பானாகில், ஒருவேளை அவன் நேபியரை அம்மோனிகா பட்டணத்தில் லாமானியர் தாக்கச் செய்திருக்கக்கூடும்; ஏனெனில் இதோ, அவன் தன் ஜனத்தின் இரத்தத்திற்காக கவலைப்பட்டதில்லை.

11 ஆனால், இதோ, அமலேக்கியா தானே யுத்தம் புரிய வரவில்லை. இதோ, அவனுடைய சேனாதிபதிகள் நேபியரை அம்மோனிகா பட்டணத்தில் தாக்க தைரியம் கொள்ளவில்லை. ஏனெனில் லாமானியர் அவர்களுடைய மறைவிடங்களைக் கண்டு ஏமாந்துபோய், அவர்கள் மேல் விழக்கூடாத அளவிற்கு நேபியருக்குள்ளே விவகார நிர்வாகத்தை மரோனி மாற்றியிருந்தான்.

12 ஆதலால், அவர்கள் வனாந்தரத்தினுள் திரும்பிப் போய், நேபியர்களுக்கு விரோதமாய் தாங்கள் வருவதற்கு, அடுத்த சிறந்த இடம் நோவாவின் தேசம் என்று கருதி, தங்கள் பாளயத்தோடு அதை நோக்கி சென்றார்கள்.

13 மரோனி சுற்றிலுமுள்ள தேசமனைத்திலும் அமைந்திருக்கும் ஒவ்வொரு பட்டணத்தையும் பலப்படுத்தியிருந்ததை அல்லது பாதுகாப்பு அரண்களைக் கட்டியிருந்ததை அவர்கள் அறியாதிருந்தனர்; ஆதலால் அவர்கள் ஒரு நிலையான தீர்மானத்தோடு, நோவா தேசத்திற்கு நேராய் அணிவகுத்து முன் சென்றார்கள். ஆம், அவர்களுடைய சேனாதிபதிகள் முன் வந்து அந்நகரத்தின் ஜனங்களை அழிக்கப் போவதாக ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்கள்.

14 ஆனால் இதோ, இதுவரைக்கும் ஒரு பெலனற்ற இடமாக இருந்த நோவா பட்டணம், அவர்கள் ஆச்சரியப்படும்படியாய், மரோனியின் செயல்களினால் இப்பொழுது பெலனடைந்து, ஆம், அம்மோனிகா பட்டணத்தின் பலத்தையும் மிஞ்சுவதாயிருந்தது.

15 இப்பொழுதும், இதோ, இது மரோனியின் ஞானமாயிருந்தது. ஏனெனில் அவர்கள் அம்மோனிகா பட்டணத்தைக் கண்டு பயந்து போவார்கள் என்றும், தேசத்திலே மிகவும் பெலனற்ற பகுதியாக நோவா பட்டணம் இதுகாலம்வரை இருந்தபடியால், அவர்கள் யுத்தம் பண்ணுவதற்கு அங்கே அணிவகுத்து வருவார்கள் என்றும் அவன் எண்ணியிருந்தான்; இப்படியாக அது அவனது வாஞ்சையின்படியே சம்பவித்தது.

16 இதோ, அப்பட்டணத்தின் மனுஷர் மேல் லேகியை சேனாதிபதியாக மரோனி நியமித்திருந்தான்; இவன் சீதோன் நதியின் கிழக்கேயுள்ள பள்ளத்தாக்கிலே லாமானியரோடு போராடின அதே லேகிதான்.

17 இப்பொழுதும் இதோ, அந்தப்படியே, அப்பட்டணத்தை லேகி ஆளுகிறான் என்று லாமானியர் கண்டறிந்தபோது, அவர்கள் மறுபடியுமாய் ஏமாந்து போனார்கள். ஏனெனில் அவர்கள் லேகிக்கு மிகவும் பயந்தார்கள்; ஆயினும் அவர்களுடைய சேனாதிபதிகள் அப்பட்டணத்தை தாக்க ஒரு சபதம் செய்திருந்தார்கள். ஆகவே அவர்கள் தங்கள் சேனைகளைக் கொண்டு வந்தார்கள்.

18 இப்பொழுதும் இதோ, கட்டப்பட்டிருந்த கரையின் அதி உயரத்தினிமித்தமும், சுற்றிலும் தோண்டப்பட்டிருந்த துரவின் அதி ஆழத்தினிமித்தமும், லாமானியர் அவர்களின் பாதுகாப்பு அரண்களுக்குள் நுழைவாயிலைத் தவிர, வேறெந்த வழியிலும் பிரவேசிக்க இயலவில்லை.

19 மற்ற எந்த வழியிலாகிலும் அரணுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் யாவரையும், கற்களையும், அம்புகளையும் அவர்கள் மீது எறிந்து அழித்துப்போட, இப்படியாக நேபியர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்.

20 தங்களது பாதுகாப்பு ஸ்தலத்திற்குள் நுழைவாயில் வழியே வருவதற்கு முயற்சிக்கும் அனைவரையும் அடித்துப்போடும்படி, பட்டயங்களையும் கவண்களையும் உடைய, தங்களின் பராக்கிரமசாலிகளின் குழுவை நிறுத்தி வைத்து, அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்; இப்படியாக தங்களை லாமானியரிடமிருந்து காத்துக் கொள்ள அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்.

21 அந்தப்படியே, லாமானியர்களின் சேனாதிபதிகள் தங்கள் சேனைகளை நுழைவாயிலின் இடத்தின் முன்னே கூடிவரச் செய்து, நேபியருடைய பாதுகாப்பு ஸ்தலத்தினுள் பிரவேசிக்க, அவர்களுடன் போராடத் துவங்கினார்கள்; ஆனால் இதோ, அவர்கள் ஒவ்வொரு முறையும் பின்னாகத் துரத்தப்பட்டதினிமித்தம், அவர்கள் மிகுதியான சங்காரத்தாலே கொல்லப்பட்டனர்.

22 இப்பொழுதும் அவர்கள் நுழைவாயில் வழியாக நேபியரின் மீது வல்லமை பெறமுடியாததைக் கண்டபோது, தங்கள் சேனைகள் செல்லும்படி ஒரு வழியுண்டாக்கவும், அதன்மூலம் சண்டையிடுவதற்கு ஒரு சமமான சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கும்படிக்கும், அவர்கள் மண்ணினாலான மதில்களை இடித்துப்போட ஆரம்பித்தார்கள்; ஆனால் இதோ, இந்த முயற்சிகளிலே அவர்கள் தங்கள் மீது எறியப்பட்ட கற்களாலும், அம்புகளாலும் அழிக்கப்பட்டுப் போனார்கள்; அவர்கள் துரவுகளை மண்ணினாலான மதில்களை இடித்துத் தள்ளி மூடுவதற்குப் பதிலாக, அவை அவர்களுடைய மரித்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் உடல்களால் ஓரளவுக்கு நிரப்பப்பட்டன.

23 இப்படியாக நேபியர் தங்கள் விரோதிகளின்மேல் சகல வல்லமையையும் கொண்டிருந்தார்கள்; இப்படியாக லாமானியர் தங்கள் சேனாதிபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுப் போகுமட்டும், நேபியரை அழிக்க முயற்சித்தார்கள்; ஆம், லாமானியரில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள்; அதற்கு மாறாக நேபியரில் ஒரு ஆத்துமாவாகிலும் கொல்லப்படவில்லை.

24 நுழைவாயிலினூடாக வந்த லாமானியரின் அம்புகளுக்கு பாதுகாக்கப்படாத ஐம்பது பேர் வரை காயம் அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கேடயங்களினாலும், தங்கள் மார்புக் கவசங்களினாலும், தங்கள் தலைக் கவசங்களினாலும் மறைக்கப்பட்டதால், அவர்களது காயங்கள் அவர்களுடைய கால்களிலே காணப்பட்டன, அக்காயங்களில் அநேகம் மிகவும் கடுமையாயிருந்தன.

25 அந்தப்படியே, லாமானியர் தங்கள் சேனாதிபதிகள் யாவரும் கொல்லப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் வனாந்தரத்தினுள் ஓடிப்போனார்கள். அந்தப்படியே, பிறப்பிலே நேபியனாயிருந்த தங்கள் ராஜாவாகிய அமலேக்கியாவிற்கு, தங்களின் மகா இழப்பைக் குறித்து அறிவிக்க, அவர்கள் நேபியின் தேசத்திற்குத் திரும்பினார்கள்.

26 அந்தப்படியே, நேபியரிடத்தில் தன் விருப்பத்தை அடையவில்லை, அவன் அவர்களை அடிமைத்தன நுகத்தடிக்குக் கீழ்ப்படுத்தவில்லை என்பதற்காக, அவன் தன் ஜனத்தின் மேல் மிகுந்த கோபம்கொண்டான்;

27 ஆம், அவன் மிகவும் கோபம்கொண்டு தேவனைச் சபித்து, மரோனியையும் சபித்து, அவனுடைய இரத்தத்தைக் குடிப்பேன் என்று ஒரு சபதத்தோடு ஆணையிட்டான்; மரோனி தன் ஜனத்தினுடைய பாதுகாப்பிற்காக ஆயத்தம் பண்ணுவதில், தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டதினிமித்தமே இப்படிச் செய்தான்.

28 அந்தப்படியே, மாறாக, தங்களைத் தங்கள் விரோதிகளின் கைகளுக்குத் தப்புவிக்கப்பண்ணின, தங்கள் தேவனாகிய கர்த்தரின் இணையற்ற வல்லமைக்காக, அவருக்கு நேபியின் ஜனங்கள் நன்றி தெரிவித்தார்கள்.

29 இப்படியாக நேபியின் ஜனங்களின் மேல், நியாயாதிபதிகளின் பத்தொன்பதாம் வருஷ ஆளுகையும் முடிவுற்றது.

30 ஏலமனாலும், சிப்லோனாலும். கொரியாந்தனாலும், அம்மோனாலும், அவன் சகோதரர்களாலும், மற்றும் மனந்திரும்புதலுக்கேதுவாய் ஞானஸ்நானத்தைப் பெற்று, ஜனங்களுக்குள்ளே பிரசங்கிக்க அனுப்பப்பட்டு, தேவனுடைய பரிசுத்த முறைமையினால் நியமிக்கப்பட்ட அனைவராலும், தங்களுக்கு அறிவிக்கப்பட்ட தேவ வார்த்தைக்கு அவர்கள் செவிகொடுத்து கருத்தாய் இருந்ததினிமித்தம், அவர்களுக்குள்ளே தொடர்ந்து சமாதானமும் நிலவியது. சபையும் மிகவும் விருத்தியடைந்தது.