வேதங்கள்
ஆல்மா 5


தேவனுடைய பரிசுத்த முறைமைக்கேற்ப பிரதான ஆசாரியனான ஆல்மா, ஜனங்களுக்கு தேசமுழுவதிலுமுள்ள அவர்களது பட்டணங்களிலும், கிராமங்களிலும் அறிவித்த வார்த்தைகள்.

அதிகாரம் 5 தொடங்கி

அதிகாரம் 5

இரட்சிப்பை ஆதாயப்படுத்திக்கொள்ள, மனுஷர் மனந்திரும்பி, கட்டளைகளைக் கைக்கொண்டு மறுபடியும் ஜென்மித்து, கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தங்கள் வஸ்திரங்களை சுத்திகரித்து, தாழ்மையாயிருந்து, பெருமையையும் பொறாமையையும் தங்களிடமிருந்து நீங்கலாக்கி நீதியான கிரியைகளைச் செய்யவேண்டும் – நல்மேய்ப்பன் தன் ஜனத்தை அழைக்கிறார் – துர்க்கிரியைகளைச் செய்கிறவர்கள் பிசாசின் பிள்ளைகளாயிருக்கிறார்கள் – ஆல்மா தன் உபதேசத்தின் சத்தியத்தைக் குறித்து சாட்சி பகர்ந்து மனுஷரை மனந்திரும்பும்படி கட்டளையிடுதல் – நீதிமான்களுடைய பெயர்கள் ஜீவபுஸ்தகத்திலே எழுதப்படும். ஏறக்குறைய கி.மு. 83.

1 இப்பொழுது, அந்தப்படியே, ஆல்மா முதலாவதாய் சாரகெம்லா தேசத்திலும் பின்பு எல்லா தேசங்களிலும் தேவனுடைய வசனங்களை ஜனங்களுக்கு அறிவிக்கலானான்.

2 அவனுடைய சொந்த பதிவேட்டின்படி, சாரகெம்லா தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சபையிலே ஜனங்களுக்கு அவன் போதித்த வார்த்தைகளாவன:

3 ஆல்மாவாகிய நான் இவற்றைச் செய்ய தேவனிடத்திலிருந்து வல்லமையையும், அதிகாரத்தையும் பெற்றிருந்த, என் தகப்பனாகிய ஆல்மாவினால் தேவசபைக்கு பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டேன். அவர் நேபி என்கிற தேசத்தின் எல்லைகளில் உள்ள, ஆம், மார்மன் என்று அழைக்கப்பட்ட தேசத்திலே சபையை ஸ்தாபிக்கத் தொடங்கினார், ஆம், மார்மன் தண்ணீர்களிலே தன் சகோதரருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், என்றும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4 இதோ, அவர்களின் ராஜாவாகிய நோவாவின் ஜனத்தினுடைய கரங்களிலிருந்து தேவனுடைய இரக்கத்தினாலும், வல்லமையினாலும் தப்புவிக்கப்பட்டார்கள் என்றும், உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5 இதோ, அதன் பின்னர், அவர்கள் வனாந்தரத்திலே லாமானியரின் கைகளால் அடிமைத்தனத்துக்கு கொண்டுவரப்பட்டார்கள்; ஆம், அவர்கள் சிறைத்தனத்திலிருந்தார்கள், கர்த்தர் மறுபடியுமாய் தன் வார்த்தையின் வல்லமையினாலே அவர்களை அடிமைத்தனத்திலிருந்து தப்புவித்தார்; இந்த தேசத்திற்குள்ளாக நாங்கள் கொண்டுவரப்பட்டோம். இங்கே, இந்த தேசத்திலும் முழுவதும் தேவனுடைய சபையை ஸ்தாபிக்கத் துவங்கினோம், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 இதோ, இந்த சபையைச் சார்ந்த என் சகோதரரே, நீங்கள் உங்களுடைய பிதாக்கள் சிறைப்பட்டதை இன்னும் போதுமானபடி நினைவிற்கொண்டிருக்கிறீர்களா? ஆம், அவர்களின் மீதிருந்த அவருடைய இரக்கத்தையும், நீடிய சாந்தத்தையும் போதுமானபடி இன்னும் நினைவிற்கொண்டிருக்கிறீர்களா? அன்றியும் பாதாளத்திலிருந்து அவர்களுடைய ஆத்துமாக்களை அவர் விடுவித்ததையும் நீங்கள் இன்னும் நினைவிற்கொண்டிருக்கிறீர்களா?

7 இதோ, அவர்களுடைய இருதயத்தை அவர் மாற்றிப்போட்டார்; அவர்களை கனநித்திரையிலிருந்து எழப்பண்ணினார். அவர்களும் தேவனை அறிந்து விழித்தெழுந்தார்கள். இதோ, அவர்கள் காரிருளின் நடுவே இருந்தாலும், அவர்களுடைய ஆத்துமாக்கள் நித்திய வார்த்தையின் வெளிச்சத்தால் ஒளிபெற்றன; ஆம், அவர்கள் மரணக்கட்டுகளாலும், பாதாளத்தின் சங்கிலிகளாலும் சூழப்பட்டிருக்கிறார்கள். நித்திய அழிவு அவர்களுக்காகக் காத்திருக்கிறது.

8 பின்னும் என் சகோதரரே, அவர்கள் நிர்மூலமாக்கப்பட்டார்களா, என்று உங்களைக் கேட்கிறேன். இதோ, அல்லவே. அவர்கள் நிர்மூலமாக்கப்படவில்லை, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9 மரணத்தின் கட்டுகள் அறுக்கப்பட்டு, அவர்களைச் சூழ்ந்திருந்த பாதாளத்தின் சங்கிலிகள் அவிழ்க்கப்பட்டதா? என்று மறுபடியும் உங்களைக் கேட்கிறேன். உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆம். அவர்கள் கட்டவிழ்க்கப்பட்டார்கள். அவர்களுடைய ஆத்துமாக்கள் விசாலமடைந்தது. அவர்கள் மீட்பின் அன்பைக் குறித்துப் பாடினார்கள். அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

10 அவர்கள் எந்த நிபந்தனைகளினிமித்தம் மீட்கப்பட்டார்கள்? ஆம், அவர்கள் இரட்சிப்பை எதிர்நோக்கக் காரணமென்ன? அவர்கள் மரணத்தின் கட்டுக்களிலிருந்தும், பாதாளத்தின் சங்கிலிகளிலிருந்தும் அவிழ்க்கப்பட்ட காரணமென்ன? என்று உங்களைக் கேட்கிறேன்.

11 இதோ, உங்களுக்கு நான் பதிலளிக்கக்கூடும், அபிநாதியின் நாவால் பேசப்பட்ட வார்த்தைகளை என் தகப்பன் ஆல்மா விசுவாசிக்கவில்லையா? அவன் ஒரு பரிசுத்த தீர்க்கதரிசியல்லவா? அவன் தேவ வசனத்தைப் பேசவில்லையா, என் தகப்பனாகிய ஆல்மா அவைகளை விசுவாசிக்கவில்லையா?

12 அவருடைய விசுவாசத்திற்கேற்ப அவரின் இருதயத்திலே ஒரு பெரிய மாற்றம் உண்டாயிற்று. இதோ, இவைகளெல்லாம் உண்மையே, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

13 இதோ, அவர் உங்களுடைய பிதாக்களுக்கும் வசனத்தைப் பிரசங்கித்தார். அவர்களுடைய இருதயத்திலும் ஒரு பெரும் மாற்றம் உண்டாகி, தங்களைத் தாழ்த்தி மெய்யான ஜீவனுள்ள தேவனை நம்பினார்கள். இதோ முடிவுபரியந்தமும் அவர்கள் உண்மையுள்ளவர்களாய் விளங்கினதினிமித்தம் இரட்சிக்கப்பட்டார்கள்.

14 இப்பொழுதும் சபையாராகிய என்னுடைய சகோதரரே, நீங்கள் தேவனில் ஆவிக்குரிய பிரகாரம் ஜென்மித்தீர்களா? உங்களுடைய முகரூபத்தில் அவரின் சாயலைப் பெற்றீர்களா? இந்த பெரும் மாற்றத்தை உங்கள் இருதயங்களிலே பெற்ற அனுபவமுண்டா?

15 நீங்கள் உங்களை சிருஷ்டித்தவரின் மீட்பிலே விசுவாசம் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் விசுவாசக்கண்ணால் முன்நோக்கி சாவுக்கேதுவான சரீரத்திலே செய்யப்பட்ட கிரியைகளுக்குத் தக்கதாக, நியாயந்தீர்க்கப்படும் பொருட்டு தேவனுக்கு முன்பாக நிற்கும்படி, இந்த சாவுக்கேதுவான சரீரம் சாவாமையில் எழுவதையும், இந்த அழிவிற்கேதுவானது அழியாமையில் எழுவதையும், பார்க்கிறீர்களா?

16 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்நாளிலே, ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்னிடம் வாருங்கள். இதோ இந்த பூமியின் பரப்பின்மீது செய்யப்பட்ட உங்கள் கிரியைகள் நீதியுள்ளவை என்கிற தேவனின் சத்தத்தை நீங்கள் கேட்பதை, உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா?

17 அல்லது, அந்நாளிலே கர்த்தாவே பூமியின் பரப்பின்மேல் எங்கள் கிரியைகள், நீதியான கிரியைகளே, என்று கர்த்தரை நோக்கி பொய்யுரைக்கலாம், அவர் உங்களை இரட்சிப்பார் என்று உங்களுக்குள்ளே எண்ணிக்கொள்ளுகிறீர்களோ?

18 அல்லது நீங்கள் தேவனுடைய கட்டளைகளை மறுதலித்ததை நினைத்துப்பார்த்து, உங்களுடைய துன்மார்க்கம் யாவையும் சீராய் எண்ணிப்பார்க்கும்படியாக, ஆம், உங்கள் குற்றங்கள் சகலத்தையும் நினைவிற்கொண்டு, அதினிமித்தம் உங்கள் ஆத்துமாக்கள் குற்றவுணர்ச்சியாலும் துக்கத்தாலும் நிரப்பப்பட்டு, தேவனுடைய நியாயாசனத்துக்கு முன்பாக கொண்டுவரப்படுவதை உங்களால் எண்ணிபார்க்கக்கூடுமா? என்று உங்களைக் கேட்கிறேன்.

19 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்நாளிலே நீங்கள் சுத்த இருதயத்தோடும் மாசற்ற கைகளோடும் தேவனைக் காணக்கூடுமா? தேவனுடைய சாயலை உங்களின் முகரூபங்களில் கொண்டு நீங்கள் காணக்கூடுமா? என்று உங்களைக் கேட்கிறேன்.

20 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிசாசிற்கு கீழ்ப்பட்டவர்களாகும்படிக்கு உங்களையே நீங்கள் கொடுத்த பின்னும், நீங்கள் இரட்சிக்கப்படக்கூடும் என்று எண்ணுகிறீர்களா?

21 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது என்பதை அந்நாளிலே அறிவீர்கள், ஏனெனில் தன்னுடைய வஸ்திரம் வெண்மையாக கழுவப்படாத எந்த மனுஷனும் இரட்சிக்கப்படான். ஆம், தன் ஜனத்தை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்க வருவாரென்று நம் பிதாக்களால் பேசப்பட்டவருடைய இரத்தத்தினாலே வஸ்திரங்கள் சுத்திகரிக்கப்பட்டு சகல கறைகளிலிருந்தும் கழுவப்பட வேண்டும்.

22 என் சகோதரரே, இப்போது உங்களைக் கேட்கிறேன், தேவனுடைய நியாயவிசாரணைக்கூண்டிலே நீங்கள் நிற்கையில் உங்களுடைய வஸ்திரங்கள் இரத்தத்தினாலும், எல்லாவிதமான அசுசிகளாலும் கறைபடிந்திருக்குமேயானால் உங்களுடைய உணர்ச்சிகள் எப்படிப்பட்டதாயிருக்கும்? இதோ இவைகள் உங்களுக்கு விரோதமாய் என்னவற்றை சாட்சியாய் கொடுக்கும்?

23 இதோ, அவைகள் நீங்கள் கொலைபாதகரென்றும், எல்லாவிதமான துன்மார்க்கங்களிலும் குற்றவாளிகளாக இருக்கிறீர்கள் என்றும் சாட்சி கொடுக்காதோ?

24 இதோ என் சகோதரரே, அப்படிப்பட்ட ஒருவன் தேவனுடைய ராஜ்யத்திலே, சுத்திகரிக்கப்பட்டதும் கறையற்ற, சுத்தமான, வெண்மையான வஸ்திரங்களைத் தரித்த ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும், மற்ற பரிசுத்த தீர்க்கதரிசிகள் யாவரோடும் இடம் பெற முடியும், என்று எண்ணுகிறீர்களா?

25 அல்லவே, நீ அப்படிச் சொல்வாயானால், நம்முடைய சிருஷ்டிகரை ஆதியிலிருந்து பொய்யராக்கி, அல்லது ஆதியிலிருந்து அவர் பொய்யரென்றும் எண்ணிலாலொழிய அப்படிப்பட்டவர்களுக்கு பரலோக ராஜ்யத்தில் இடமுண்டு, என்று நீ எண்ண முடியாது. ஆனால் அவர்கள் பிசாசின் ராஜ்யத்தின் பிள்ளைகளாய் இருப்பதினிமித்தம் புறம்பே தள்ளப்படுவார்கள், என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

26 என் சகோதரரே, இதோ நான் உங்களிடத்தில் சொல்லுகிறேன், மனமாற்றத்தை அனுபவித்து, மீட்பின் அன்பைப்பற்றியதான பாடலை நீங்கள் பாட உணருவீர்களெனில், அவ்வாறே இப்பொழுது நீங்கள் உணரக்கூடுமா, என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

27 தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நடந்தீர்களா? இச்சமயத்திலே நீங்கள் மரிக்க அழைப்பைப் பெற்றால், உங்களுக்குள்ளே போதுமான அளவுக்கு தாழ்மையாயிருந்தீர்களா, தம்முடைய ஜனத்தை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்கும்பொருட்டு வரவிருக்கிற கிறிஸ்துவின் இரத்தத்தினாலே, உங்களுடைய வஸ்திரங்கள் சுத்திகரிக்கப்பட்டு, வெண்மையாக்கப்பட்டதென்றும் நீங்கள் சொல்லக்கூடுமோ?

28 இதோ, உங்களிடத்திலிருந்த பெருமையைக் களைந்தீர்களா? அப்படிச் செய்யவில்லையெனில், நீங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படவில்லை, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ நீங்கள் துரிதமாய் ஆயத்தப்படவேண்டும். பரலோக ராஜ்யம் சமீபித்திருப்பதாலே அப்படிப்பட்டவன் நித்திய ஜீவனை பெறுவதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

29 இதோ நான் சொல்கிறேன், உங்களில் எவனாகிலும் பொறாமையைக் களையாமல் இருக்கிறானா? அப்படிப்பட்டவன் ஆயத்தப்படாதவனே, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், அவன் துரிதமாய் ஆயத்தப்படவேண்டும் என்று மனதாயிருக்கிறேன். ஏனெனில் நாழிகை சமீபமாயிருக்கிறது, காலம் எப்போதுவரும், என்று அவன் அறியாதிருக்கிறான், ஏனெனில் அப்படிப்பட்டவன் குற்றமற்றவனாய் காணப்பட மாட்டான்.

30 மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்களில் எவனாகிலும் தன் சகோதரனை பரிகாசம் பண்ணுகிறானா, அல்லது அவன்மீது துன்புறுத்தல்களைக் குவிக்கிறானா?

31 அப்படிப்பட்டவன் ஆயத்தப்படாதிருப்பதினாலே அவனுக்கு ஐயோ. அவன் மனந்திரும்பும் காலம் சமீபித்திருக்கிறது, அல்லது அவன் இரட்சிக்கப்பட முடியாது.

32 ஆம், அக்கிரமக்காரர் யாவருக்கும் ஐயோ! மனந்திரும்புங்கள், மனந்திரும்புங்கள், ஏனெனில் தேவனாகிய கர்த்தர் இப்படி உரைத்திருக்கிறார்!

33 இதோ சகல மனுஷரையும் அவர் அழைக்கிறார், ஏனெனில் அவர்களுக்கு நேராக இரக்கத்தின் கரங்கள் நீட்டப்பட்டுள்ளன. அவர் சொல்கிறார் மனந்திரும்புங்கள், உங்களை நான் ஏற்றுக்கொள்வேன்.

34 ஆம், அவர் சொல்கிறார், நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நீங்கள் ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிப்பீர்கள்; ஆம், நீங்கள் ஜீவ அப்பத்தையும் தண்ணீரையும் இலவசமாய்ப் புசித்துக் குடிப்பீர்கள்.

35 ஆம், என்னிடத்திலே வாருங்கள். நீதியின் கிரியைகளை நடப்பியுங்கள். நீங்கள் வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படமாட்டீர்கள்.

36 ஏனெனில், இதோ காலம் சமீபமாய் இருக்கிறது, நற்கனியைக் கொடாதவனும் நீதியின் கிரியைகளைச் செய்யாதவனும், அழுது துக்கிக்க வேண்டியிருக்கும்.

37 அக்கிரமக்காரரே, உலகத்தின் வீணான காரியங்களில் பெருமை கொண்டிருப்பவரே, நீதியின் வழிகளை அறிந்திருக்கிறோம், என்று நீங்கள் சொல்லியும், மேய்ப்பனற்ற ஆடுகளைப்போல, வழிதப்பிப்போனீர்கள். மேய்ப்பர் ஒருவர் உங்களை அழைத்தும், இன்னும் அழைத்துக் கொண்டேயிருந்தாலும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை.

38 இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நல்ல மேய்ப்பன் உங்களை அழைக்கிறார் என்று; ஆம், கிறிஸ்து என்ற தம்முடைய சொந்த நாமத்தின்படியே உங்களை அவர் அழைக்கிறார்; நீங்கள் அழைக்கப்படுகிற நாமத்தின்படியே உங்களை அழைக்கிற அந்த நல்மேய்ப்பனின் சத்தத்திற்குச் செவிகொடாமற் போவீர்களெனில், இதோ, நீங்கள் நல்மேய்ப்பரின் ஆடுகள் இல்லை.

39 இப்போதும் நீங்கள் நல்மேய்ப்பரின் ஆடுகள் அல்லவெனில், நீங்கள் எந்த மந்தையைச் சார்ந்தவர்கள்? இதோ, பிசாசு உங்களுக்கு மேய்ப்பனாயும், நீங்கள் அவனுடைய மந்தையைச் சார்ந்தோராயும் இருக்கிறீர்கள், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதை மறுதலிக்க எவனால் கூடும்? இதோ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இதை மறுதலிக்கிறவன் பொய்யனும் பிசாசின் பிள்ளையுமாயிருக்கிறான்.

40 இதோ நன்மையானதெதுவும் தேவனிடத்திலிருந்து வருகிறதென்றும், தீமையானதெதுவும் பிசாசினிடத்திலிருந்து வருகிறதென்றும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

41 ஆதலால் ஒருவன் நற்கிரியைகளைச் செய்கிறானெனில், அவன் நல்மேய்ப்பரின் சத்ததிற்குச் செவிகொடுப்பவனும், அவரைப் பின்பற்றுகிறவனுமாய் இருக்கிறான். ஆனால் பொல்லாங்கைச் செய்கிறவன் பிசாசின் சத்தத்திற்குச் செவிகொடுப்பதினாலே அவனுடைய பிள்ளையாயும் அவனைப் பின்பற்றுகிறவனுமாயிருப்பான்.

42 இதைச் செய்கிறவனெவனும் தன் சம்பளத்தைப் பெறவேண்டும்; நீதிக்கடுத்த காரியங்களைப் பொறுத்தவரை, அவன் அனைத்து நற்கிரியைகளுக்கும் மரித்தவனாய், தன் சம்பளமாக மரணத்தைப் பெறுகிறான்.

43 இப்படியிருக்க என் சகோதரரே, நான் என்னுடைய ஆத்துமபலத்தோடு பேசுகிறபடியாலே, நீங்கள் எனக்குச் செவிகொடுக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன்; ஏனெனில் இதோ, நீங்கள் தப்பிதம்பண்ணக்கூடாதபடிக்கு நான் உங்களிடத்திலே தெளிவாய், அல்லது தேவனுடைய கட்டளைகளின்படி பேசினேன்.

44 ஏனெனில் கிறிஸ்து இயேசுவிலே உண்டாயிருக்கிற தேவனுடைய பரிசுத்த முறைமையின்படியே, இவ்விதமாய் பேசும்படி நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்; ஆம், வரப்போகிறவைகளைக்குறித்து நம்முடைய பிதாக்கள் பேசிய காரியங்களை இந்த ஜனத்திற்கு நான் எழுந்து நின்று சாட்சிகொடுக்க வேண்டுமென்று, கட்டளையிடப்பட்டேன்.

45 இவைகள் மட்டுமல்ல. இவைகளைக் குறித்து நான் அறிந்திருக்கிறேன் என்று எண்ணவில்லையா? இதோ நான் பேசியவை சத்தியமானவை என அறிந்திருக்கிறேன், என்று உங்களுக்குச் சாட்சி கொடுக்கிறேன். நான் அவைகளின் நிச்சயத்தை அறிந்ததைப்பற்றி எப்படி நினைக்கிறீர்கள்?

46 இதோ, தேவனுடைய பரிசுத்த ஆவியினாலே அவை எனக்குத் தெரிவிக்கப்பட்டன, என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ, இவைகளை நான் அறிந்து கொள்ளும்படிக்கு அநேக நாட்கள் உபவாசித்து ஜெபித்தேன். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆவியினாலே அவைகளை எனக்குத் தெரிவித்தபடியாலே, இப்பொழுது அவைகள் மெய்யானவை என்று அறிந்திருக்கிறேன்; இதுவே எனக்குள் உண்டாயிருக்கிற வெளிப்படுத்தலின் ஆவி.

47 மேலும் நம்முடைய பிதாக்களால் பேசப்பட்டவைகள் சத்தியமானவை என்றும், எனக்குள்ளிருக்கிற தீர்க்கதரிசன ஆவியின்படியே எனக்கு வெளிப்படுத்தப்பட்டதென்றும், இதுவும் தேவாவியானவருடைய வெளிப்படுத்தலாயிருக்கிறது என்றும், இது எனக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது, என்றும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

48 வரப்போகிறதைக் குறித்து உங்களுக்கு நான் சொல்லும் யாவும் மெய்யானதே, என்று நான் அறிந்திருக்கிறேன், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; பிதாவின் ஒரேபேறானவரான குமாரனாகிய, கிருபையிலும் இரக்கத்திலும், சத்தியத்திலும் பூரணப்பட்டவராகிய, இயேசு கிறிஸ்து வருவார், என்பதை நான் அறிந்திருக்கிறேன், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இதோ, தம் நாமத்திலே உறுதியாய் விசுவாசிக்கிற சகல மனுஷரின் பாவங்களையும், ஆம், உலகத்தினுடைய பாவங்களை எடுத்துப்போட வருகிறவர் அவரே.

49 இப்போதும் இந்த முறைமையின்படியே, ஆம், எனக்குப் பிரியமான சகோதரருக்கும், ஆம், தேசத்திலிருக்கிற சகலமானோருக்கும், ஆம், முதியோருக்கும், இளைஞருக்கும், அடிமையாயிருப்போருக்கும், சுயாதீனருக்கும், ஆம், வயோதிபருக்கும், நடுவயதினருக்கும், எழும்புகிற தலைமுறையினருக்கும் ஆம், அவர்கள் மனந்திரும்பி மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் கூக்குரலிடவே, நான் அழைக்கப்பட்டிருக்கிறேன், என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

50 ஆம், ஆவியானவர் சொல்வதாவது, பூமியின் கடையாந்திரங்களே மனந்திரும்புங்கள், ஏனெனில் பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது. தேவகுமாரன் தன் மகிமையிலும், தன் பலத்திலும், பராக்கிரமத்திலும், வல்லமையிலும், அதிகாரத்தோடும் வருகிறார். ஆம், என் பிரியமான சகோதரரே, ஆவியானவர் சொல்வதை உங்களுக்குச் சொல்லுகிறேன், இதோ பூமியனைத்திற்கும் ராஜாவானவரின் மகிமையைப் பாருங்கள், பரலோக ராஜா வெகு சீக்கிரமாய் மனுபுத்திரர் யாவரின் மத்தியில் பிரகாசிப்பார்.

51 மேலும் ஆவியானவர் எனக்குச் சொல்கிறார், ஆம், பலத்த சத்தமாய் கூக்குரலிட்டு சொல்வதாவது, ஏனெனில் நீங்கள் மனந்திரும்பாவிடில் பரலோக ராஜ்யத்தை எந்த வகையிலும் நீங்கள் சுதந்தரிப்பதில்லை, இந்த ஜனங்களுக்குள்ளே போய், மனந்திரும்புங்கள், என்று சொல்.

52 நான் மறுபடியும் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆவியானவர் சொல்கிறார், இதோ, மரத்தின் வேரண்டையிலே கோடாரி வைக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நல்ல கனியைக் கொடாத எந்த மரமும் வெட்டப்பட்டு, ஆம், அழிக்கப்பட முடியாததும், அவியாததுமான அக்கினியிலே போடப்படும். இதோ, பரிசுத்தர் இதை உரைத்தார். நினைவில் கொள்ளுங்கள்.

53 இப்பொழுதும் என் அன்பு சகோதரரே, சொல்லப்பட்ட இவைகளை உங்களால் எதிர்க்க முடியுமா, ஆம், அவைகளைப் புறக்கணித்து, பரிசுத்தரை உங்கள் பாதங்களால் மிதித்துப் போடுவீர்களோ? ஆம், உங்களுடைய இருதயத்திலே பெருமை கொள்வீர்களோ? ஆம், நீங்கள் விலை உயர்ந்த வஸ்திரங்களை தரிப்பதிலும் உலகத்தின் வீணானவைகளான உங்களுடைய சம்பத்துகளிலே இருதயங்களை வைத்து இன்னும் நிலை நிற்பீர்களோ?

54 ஆம், நீங்கள் மற்றவர்களைக் காட்டிலும் மேன்மையானவர்கள் என்று இன்னும் நினைப்பீர்களோ? தங்களையே தாழ்த்தி, தேவனுடைய பரிசுத்த முறைமையின்படி நடப்பதினிமித்தம், இச்சபையினுள் வரவழைக்கப்பட்டு பரிசுத்த ஆவியால் சுத்திகரிக்கப்பட்டு மனந்திரும்புதலுக்கேதுவாய் கிரியைகளைச் செய்கிற உங்கள் சகோதரரை இன்னும் துன்புறுத்துவீர்களோ?

55 ஆம், தரித்திரக்கும், திக்கற்றோருக்கும் முதுகைத் திருப்புவதில் தொடர்ந்து, அவர்களுக்கு உங்கள் பொருளை ஈயாமலிருப்பதில் நிலைத்திருப்பீரோ?

56 முடிவாய் துன்மார்க்கத்திலே தரித்திருக்கிற யாவருக்கும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், துரிதமாய் மனந்திரும்பாவிடில், வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படுவார்கள்.

57 இப்பொழுதும், நான் உங்களிடத்தில் சொல்லுகிறேன், நல்மேய்ப்பனின் சத்தத்தைப் பின்பற்றிச் செல்ல வாஞ்சிக்கிற யாவரும், துன்மார்க்கரிடமிருந்து பிரிந்து விலகிவந்து, அவர்களுடைய அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள்; இதோ, துன்மார்க்கரின் பெயர்கள், என் ஜனத்தினுடைய பெயர்களோடு இணைந்திராது, என்ற தேவ வசனம் நிறைவேற துன்மார்க்கரின் பெயர்கள் நீதிமான்களின் பெயர்களோடு எண்ணப்படாதபடிக்கு அவர்களுடைய பெயர்கள் அழிக்கப்படும்.

58 நீதிமான்களுடைய பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படும். அவர்களுக்கு என்னுடைய வலது பாரிசத்திலே ஒரு சுதந்தரத்தை அருளுவேன். இப்பொழுதும் என் சகோதரரே, இதற்கு விரோதமாய் நீங்கள் சொல்ல ஏதாகிலும் உண்டா? நான் உங்களிடத்தில் சொல்லுகிறேன், நீங்கள் இதற்கு விரோதமாய் பேசினால், அது அபத்தமாய்ப் போகும். ஏனெனில் தேவ வசனம் நிறைவேற வேண்டும்.

59 அநேக ஆடுகள் இருந்தும், ஓநாய்கள் பிரவேசித்து மந்தையைப் பட்சித்துப் போடாதவாறு, அவைகளை கவனிக்காத, மேய்ப்பன் உங்களில் உண்டா? இதோ தன் மந்தையினுள் ஓநாய் நுழைந்தால் அதை துரத்தாமலிருப்பானோ? ஆம், அவரால் முடியுமானால் இறுதியில் அதை அவன் கொன்று போடுவானே.

60 இப்போதும், நல்மேய்ப்பன் உங்களை அழைக்கிறார் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்? நீங்கள் அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பீர்களெனில், அவர் உங்களைத் தம் மந்தையில் சேர்த்துக்கொள்வார். நீங்கள் அவருடைய ஆடுகளாயிருப்பீர்கள்; நீங்கள் நிர்மூலமாகாதபடிக்கு, தங்களுக்குள்ளே பட்சிக்கிற ஓநாய்களை பிரவேசிக்க வொட்டாதிருக்க வேண்டுமென்று, அவர் கட்டளையிடுகிறார்.

61 இப்பொழுதும் ஆல்மாவாகிய நான், உங்களிடத்தில் பேசிய வார்த்தைகளை ஆசரிக்கவேண்டுமென்று, எனக்குக் கட்டளையிட்டவருடைய வார்த்தைகளைக் கொண்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

62 சபையைச் சார்ந்தோருக்கு கட்டளையின் வாயிலாகவும், சபையைச் சார்ந்திராதோருக்கு ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிக்கிறவர்களாகும்படி, மனந்திரும்புதலுக்கேதுவான ஞானஸ்நானத்தைப் பெற, வரவேண்டுமென்று அழைப்பினாலும் பேசுகிறேன்.