வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 136


பாகம் 136

அயோவாவின் கவுன்சில் பிளப்ஸூக்கு அருகிலுள்ள மிசௌரி நதியின் மேற்குக்கரையில் ஒமாஹா தேசம், இஸ்ரவேல் முகாம், வின்டர் குவார்டர்ஸில் கர்த்தரின் வார்த்தையும் சித்தமும் தலைவர் பிரிகாம் யங் மூலமாகக் கொடுக்கப்பட்டது

1–16, மேற்கு நோக்கிய பயணத்திற்காக இஸ்ரவேல் முகாம் எவ்வாறு அமைக்கப்படவேண்டுமென விளக்கப்பட்டிருக்கிறது; 17–27, எண்ணற்ற சுவிசேஷ தரங்களின்படி வாழ பரிசுத்தவான்கள் கட்டளையிடப்பட்டார்கள்; 28–33, பரிசுத்தவான்கள் பாடி, ஆடி, ஜெபித்து ஞானத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்; 34–42, தீர்க்கதரிசிகள் கனம்பண்ணப்படும்படியாகவும் துன்மார்க்கர் ஆக்கினைக்குள்ளாகும்படியாகவும் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

1 மேற்கு நோக்கிய அவர்களுடைய பயணத்தில் இஸ்ரவேலின் முகாமைக் குறித்து கர்த்தரின் வார்த்தையும் சித்தமும்:

2 பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் எல்லா ஜனங்களும், அவர்களோடு பயணம் செய்கிறவர்களும், ஒரு உடன்படிக்கையுடனும், வாக்குத்தத்தத்துடனும், நமது தேவனாகிய கர்த்தரின் சகல கட்டளைகளையும், விதிகளையும் காத்துக்கொள்ள, ஒரு உடன்படிக்கையுடனும் வாக்குத்தத்தத்துடனும் நமது தேவனாகிய கர்த்தரின் பிரமாணங்களின்படியும் குழுக்களாக ஒழுங்குபடுத்தப்படுவார்களாக.

3 நூறு பேருக்கு தலைவர்களுடனும், ஐம்பது பேருக்கு தலைவர்களுடனும், பத்து பேருக்கு தலைவர்களுடனும், அவர்களுக்குத் தலைவர்களாக அப்போஸ்தலர்களின் வழிகாட்டுதலின்கீழ், அவர்கள் தலைமையில், தலைமையாக ஒரு தலைவருடனும் அவருடைய இரண்டு ஆலோசகர்களுடனும் பன்னிரு அப்போஸ்தலர்கள் வழிநடத்துதலில் குழுக்கள் அமைக்கப்படுவதாக.

4 கர்த்தரின் எல்லா நியமங்களின்படியும் நாம் நடப்போம் என்பது நமது உடன்படிக்கையாயிருக்கும்.

5 ஒவ்வொரு அணியும், அவர்களால் முடிந்த வண்டிகள், உணவுப்பொருட்கள், ஆடைகள் மற்றும் பயணத்திற்கான பிற அத்தியாவசியமானவைகளை ஒவ்வொரு குழுவும் தாங்களாகவே ஏற்பாடு செய்துகொள்வார்களாக.

6 குழுக்கள் அமைக்கப்பட்ட பின்பு, தாமதமானவர்களுக்கு ஆயத்தப்படுத்த தங்களுடைய பெலத்தோடு அவர்கள் போவார்களாக.

7 ஒவ்வொரு குழுவும் தங்களுடைய குழுத்தலைவர்களுடனும், தலைவர்களுடனும் அடுத்த வசந்தத்தில் எவ்வளவு பேர் போகலாமென தீர்மானிப்பார்களாக; பின்னர் வசந்தகாலப் பயிர்களுக்கான விவசாயத்திற்கு ஆயத்தம்செய்ய முன்னோடிகளாகச் செல்ல அணிகளையும், விதைகளையும், விவசாயத்திற்கான கருவிகளையும் எடுத்துச்செல்ல சரீர திராணியுள்ள, திறமைவாய்ந்த மனுஷர்களின் ஒரு போதுமான எண்ணிக்கையுள்ளவர்களை தேர்ந்தெடுப்பார்களாக.

8 இந்த ஜனங்களுக்கு விரோதமாக விதவைகள் மற்றும், தந்தையரை இழந்தவர்களின் கூக்குரல்கள் இந்த ஜனத்துக்கு விரோதமாக கர்த்தரின் செவிகளுக்கு வராதிருக்கும்படியாக வறியோர், விதவைகள், தந்தையரை இழந்தவர்கள், இராணுவத்துக்குப் போனவர்களின் குடும்பங்களை சேர்த்துக்கொள்வதில், தங்களுடைய சொத்துக்களை பிரித்துக்கொண்டதின்படி ஒவ்வொரு குழுவும் சமமான பகுதியை தாங்குவார்களாக.

9 இந்த பருவத்தில் அங்கேயே தங்கவேண்டியவர்களுக்காக வீடுகளையும் தானியங்களையும் விளைவிக்க, வயல்களையும் ஒவ்வொரு குழுவும் ஆயத்தப்படுத்துவார்களாக; தம்முடைய ஜனங்களைக் குறித்து இதுவே கர்த்தரின் சித்தமாயிருக்கிறது.

10 ஒரு சீயோன் பிணையத்தை கர்த்தர் கண்டுபிடிக்கிற இடத்திற்கு இந்த ஜனங்களை நகர்த்த ஒவ்வொரு மனுஷனும் அவனுடைய எல்லா செல்வாக்கையும் சொத்தையும் பயன்படுத்துவானாக.

11 ஒரு சுத்த இருதயத்தோடும், முழு விசுவாசத்தோடும் இதை நீங்கள் செய்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்; உங்களுடைய ஆடுகளிலும், உங்களுடைய மாடுகளிலும், உங்களுடைய வயல்களிலும், உங்களுடைய வீடுகளிலும், உங்களுடைய குடும்பங்களிலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்.

12 என்னுடைய ஊழியக்காரனாகிய எஸ்றா டி. பென்சனும், எராஸ்டஸ் ஸ்னோவும் ஒரு குழுவை ஒழுங்குபடுத்துவார்களாக.

13 என்னுடைய ஊழியக்காரனாகிய ஆர்சன் பிராட்டும், வில்பர்ட் உட்ரப்பும் ஒரு குழுவை ஒழுங்குபடுத்துவார்களாக.

14 என்னுடைய ஊழியக்காரனாகிய அமசா லைமனும், ஜார்ஜ் எ. ஸ்மித்தும்கூட ஒரு குழுவை ஒழுங்குபடுத்துவார்களாக.

15 தலைவர்களையும், நூறு பேருக்கும், ஐம்பது பேருக்கும், பத்து பேருக்கும் குழுத்தலைவர்களையும் நியமிப்பார்களாக.

16 சமாதானத்தின் தேசத்திற்குப் போக அவர்கள் ஆயத்தமாயிருக்கும்படியாக, நியமிக்கப்பட்ட என்னுடைய ஊழியக்காரர்கள் இதை, என்னுடைய சித்தத்தை பரிசுத்தவான்களுக்கு போய் போதிப்பார்களாக.

17 நீ உன் வழியில் போய் நான் உனக்குச் சொன்னபடி செய், உன்னுடைய சத்துருக்களுக்குப் பயப்படாதே; ஏனெனில் என்னுடைய பணியை நிறுத்த அவர்களுக்கு வல்லமையிருக்காது.

18 என்னுடைய சொந்த ஏற்ற காலத்திலே சீயோன் மீட்கப்படும்.

19 எந்த மனுஷனாவது தனக்கென்று விருத்தி செய்துகொள்ள நாடி, என்னுடைய ஆலோசனையை நாடாதிருப்பானானால், அவனுக்கு வல்லமையிருக்காது, அவனுடைய முட்டாள்தனம் வெளியரங்கமாக்கப்படும்.

20 தேடுங்கள்; ஒருவருக்கொருவர் உங்களுடைய வாக்குறுதிகளை காத்துக் கொள்ளுங்கள்; உங்களுடைய சகோதரனுடையதை இச்சியாதேயுங்கள்.

21 கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குகிற தீமையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் நானே உங்களுடைய தேவனாகிய கர்த்தர், உங்களுடைய பிதாக்களின் தேவனாகிய, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபுவின் தேவனாகிய கர்த்தர்.

22 இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திற்கு வெளியே வழி நடத்தியவர் நானே; என்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலை இரட்சிக்க கடைசி நாட்களில் என்னுடைய கரம் நீட்டப்பட்டிருக்கிறது.

23 ஒருவருக்கொருவர் விவாதம் செய்வதை நிறுத்துங்கள்; ஒருவருக்கொருவர் தீமை பேசுவதை நிறுத்துங்கள்.

24 குடிப்பதை நிறுத்துங்கள்; மேலும் உங்களுடைய வார்த்தைகள் ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி இருப்பதாக.

25 உங்களுடைய அயலானிடத்தில் நீங்கள் இரவல் வாங்கினால் நீங்கள் இரவல் வாங்கியதை நீங்கள் திருப்பிக்கொடுப்பீர்களாக; உங்களால் திருப்பிக்கொடுக்க முடியவில்லையானால் அவன் உங்களை நியாயந்தீர்க்காதிருக்கும்படிக்கு நேரடியாக உங்களுடைய அயலானிடத்தில் கூறுங்கள்,

26 உங்களுடைய அயலான் தொலைத்ததை நீங்கள் கண்டுபிடித்தால் மீண்டும் அதை நீங்கள் அவனிடத்தில் ஒப்படைக்கும் மட்டும் நீங்கள் அவனைக் கருத்தாய் தேடுங்கள்.

27 நீ ஒரு ஞானமுள்ள உக்கிராணக்காரனாய் இருக்கும்படியாக உன்னிடமுள்ளவற்றை பாதுகாப்பதில் நீ கருத்தாய் இருப்பாயாக; ஏனெனில் அது உன்னுடைய தேவனாகிய கர்த்தரின் இலவசமான வரம், நீ அவருடைய உக்கிராணக்காரனாயிருக்கிறாய்.

28 நீ சந்தோஷமாயிருந்தால், பாடலுடனும் வாத்தியத்துடனும் ஆடலுடனும், துதியின் ஜெபத்தோடும் ஸ்தோத்திரத்தின் ஒரு ஜெபத்துடனும், நன்றி செலுத்துதலுடனும் கர்த்தரைத் துதி.

29 நீ துக்கமாயிருந்தால் உங்களுடைய ஆத்துமாக்கள் சந்தோஷப்படும்படியாக விண்ணப்பத்தோடு உன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி கூப்பிடு.

30 உன்னுடைய சத்துருக்களுக்குப் பயப்படாதே, ஏனெனில் அவர்கள் என்னுடைய கைகளிலிருக்கிறார்கள், அவர்களுக்கு என்னுடைய விருப்பத்தின்படி செய்வேன்.

31 அவர்களுக்காக நான் வைத்திருக்கிற மகிமையாகிய சீயோனின் மகிமையைப் பெற அவர்கள் ஆயத்தமாயிருக்கும்படியாக என்னுடைய ஜனங்கள் சகல காரியங்களிலும் சோதிக்கப்படவேண்டும்; சிட்சையைத் தாங்காதவன் என்னுடைய ராஜ்யத்துக்கு தகுதியுள்ளவனில்லை.

32 அறியாமையிலிருக்கிறவன் பார்க்கும்படியாக அவன் கண்கள் திறக்கப்படும்படியாகவும், அவன் கேட்கும்படியாக அவனுடைய காதுகள் திறக்கப்படும்படியாகவும், தன்னைத் தாழ்த்தி தன்னுடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி அழைத்து அவன் ஞானத்தைக் கற்றுக்கொள்வானாக;

33 ஏனெனில் தாழ்மையானவர்களுக்கும், நருங்குண்டவர்களுக்கும் தெளிவுண்டாக்கவும் பக்தியற்றவர்களின் ஆக்கினைக்காகவும் என்னுடைய ஆவி உலகத்திற்குள் அனுப்பப்பட்டுள்ளது.

34 உங்களுடைய சகோதரர்கள் உங்களையும் உன்னுடைய சாட்சியையும் தள்ளிவிட்டார்கள், உங்கள் சாட்சியையும் மறுதலித்தனர், தேசமும் உங்களை வெளியே விரட்டியது;

35 இப்பொழுது பிரசவ வேதனைப்படுகிற ஒரு பெண்ணைப்போல அவர்களுடைய ஆபத்து நாட்களும் துக்கத்தின் நாட்களும் வருகின்றன; அவர்கள் சீக்கிரத்திலேயே, ஆம், சீக்கிரத்திலேயே மனந்திரும்பாவிட்டால், அவர்களுடைய துக்கம் பெரிதாயிருக்கும்.

36 ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசிகளையும், அவர்களிடத்திலே அனுப்பப்பட்டவர்களையும் கொன்று போட்டார்கள்; குற்றமற்ற இரத்தத்தை அவர்கள் சிந்தினார்கள். அவை தரையிலிருந்து அவர்களுக்கு விரோதமாக கதறுகிறது.

37 ஆகவே, இந்தக் காரியங்களைக் குறித்து ஆச்சரியப்படாதிருங்கள், ஏனெனில் நீங்கள் இன்னமும் சுத்தமாகவில்லை; நீங்கள் இன்னமும் என்னுடைய மகிமையை தாங்கமுடியாது; ஆனால் என்னுடைய பணிவிடை செய்யும் பணியாட்களாலும், என்னுடைய பணியைக் கொண்டுவர, வானங்களிலிருந்து என்னுடைய சொந்தக் குரலால், ஆதாமிலிருந்து ஆபிரகாமின் நாட்கள் வரையிலும், ஆபிரகாம் முதல் மோசே வரையிலும், மோசே முதல் இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்கள் வரையிலும் இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்கள் முதல் என்னுடைய கிரியையை நடப்பிக்க என் தூதர்களால் நான் அழைத்த ஜோசப் ஸ்மித் வரையிலும், நான் உங்களுக்குக் கொடுத்த சகல வார்த்தைகளையும் காத்துக் கொள்வதில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிருந்தால் நீங்கள் அதைக் காண்பீர்கள்;

38 அந்த அஸ்திபாரத்தை அவன் போட்டான், மற்றும் உண்மையுள்ளவனாயிருந்தான்; அவனை நான் என்னிடத்தில் எடுத்துக் கொண்டேன்.

39 அவனுடைய மரணத்தினால் அநேகம் பேர் ஆச்சரியப்பட்டார்கள்; ஆனால் அவன் கனமடையும் படிக்கும் துன்மார்க்கர் ஆக்கினையடையும் படிக்கும் அவனுடைய இரத்தத்தினால் அவனுடைய சாட்சியை அவன் முத்திரிக்கவேண்டியது அவசியமாயிருந்தது.

40 உங்களுடைய சத்துருக்களிடமிருந்து உங்களை நான் விடுவிக்கவில்லையோ, அதில் மட்டுமே என்னுடைய நாமத்தின் சாட்சியை நான் விட்டுவைத்தேனோ?

41 இப்பொழுது, ஆகவே, என்னுடைய சபையின் ஜனங்களே செவி கொடுங்கள்; மூப்பர்களே ஒன்று சேர்ந்து கேளுங்கள்; நீங்கள் என்னுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டீர்கள்.

42 உங்கள்மேல் நியாயத்தீர்ப்புகள் வராதிருக்கும்படிக்கும், உங்களுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதிருக்கும்படிக்கும், உங்களுடைய சத்துருக்கள் உங்களை மேற்கொள்ளாதிருக்கும்படிக்கும் என்னுடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொள்வதில் கருத்தாயிருங்கள். ஆகவே இப்போதைக்கு வேறொன்றுமில்லை, ஆமென், ஆமென்.