வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20


பாகம் 20

சபை அமைப்பது பற்றியும், நிர்வாகத்தைப் பற்றியும், நியூயார்க்கின் பயெட்டியில் அல்லது அதற்கருகில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தலின் பகுதிகள் 1829ன் கோடை ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில் பிரமாணங்களும் உடன்படிக்கைகளும் என அறியப்பட்டிருந்த முழு வெளிப்படுத்தலும் ஏப்ரல் 6, 1830க்குப் பின்னர் விரைவிலேயே பதிக்கப்பட்டிருக்கலாம் (சபை அமைக்கப்பட்ட நாள்). தீர்க்கதரிசி எழுதினார், “தீர்க்கதரிசனம் மற்றும் வெளிப்படுத்தலின் ஆவியினால் பின்வருபவைகளை நாங்கள் அவரிடமிருந்து (இயேசு கிறிஸ்து) பெற்றுக்கொண்டோம். அது எங்களுக்கு அதிக தகவலைக் கொடுத்ததுமல்லாமல், அவரது சித்தம் மற்றும் கட்டளையின்படி எந்த குறிப்பிட்ட நாளில் அவரது சபையை பூமியின்மேல் மீண்டும் ஒருமுறை நாங்கள் அமைக்க ஆரம்பிக்கவேண்டுமென்றும் எங்களுக்கு சுட்டிக்காட்டியது.”

1–16, பிற்காலப் பணியின் தெய்வீகத்தைப்பற்றி மார்மன் புஸ்தகம் நிரூபிக்கிறது; 17–28, சிருஷ்டிப்பு, வீழ்ச்சி, பாவநிவர்த்தி மற்றும், ஞானஸ்நான கோட்பாடுகள் உறுதி செய்யப்பட்டன; 29–37, மனந்திரும்புதல், நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் மற்றும் ஞானஸ்நானத்தை ஆளுகை செய்யும் விதிகள் அமைக்கப்படுதல்; 38–67, மூப்பர்கள், ஆசாரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவிக்காரர்களின் கடமைகள் தொகுக்கப்படுதல்; 68–74, அங்கத்தினர்களின் கடமைகள், பிள்ளைகளை ஆசீர்வதித்தல், ஞானஸ்நானத்தின் செயல்வகை வெளிப்படுத்தப்படுதல்; 75–84, திருவிருந்து ஜெபங்கள், சபை அங்கத்தினரத்துவத்தை ஆளுகை செய்யும் விதிமுறைகள் கொடுக்கப்படுதல்.

1 இந்த கடைசி நாட்களில் கிறிஸ்துவின் சபையின் எழுச்சி, நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்ததிலிருந்து ஆயிரத்து எண்ணூற்று முப்பதாம் ஆண்டில், ஏப்ரல் என்றழைக்கப்படுகிற நான்காவது மாதத்தின் ஆறாவது நாளில் தேவனின் சித்தப்படியும் கட்டளைகளின்படியும் நமது தேசத்தின் சட்டங்களுக்கு ஏற்புடையதாக, அது ஒழுங்காக அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

2 அந்தக் கட்டளைகள், தேவனால் அழைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராகவும், இந்த சபையின் முதல் மூப்பராயிருக்கவும் நியமிக்கப்பட்ட ஜோசப் ஸ்மித் இளையவருக்கு கொடுக்கப்பட்டன.

3 தேவனால் அழைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராகவும், இந்த சபையின் இரண்டாவது மூப்பராயிருக்கவும் அவரது கைகளால் நியமிக்கப்பட்டவருமான ஆலிவர் கௌட்ரிக்கும் கொடுக்கப்பட்டன;

4 இது இப்போதும் என்றென்றைக்கும் சகல மகிமையும் உண்டாயிருக்கிற நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையின்படியாகும், ஆமென்.

5 அவனது பாவங்களின் மீட்பை அவன் பெற்றான் என்று இந்த முதல் மூப்பருக்கு உண்மையிலேயே வெளிப்படுத்தப்பட்டபின்பு அவன் உலகத்தின் மாயைகளில் மீண்டும் சிக்கிக்கொண்டான்;

6 ஆனால் விசுவாசத்தின் மூலமாக, மனந்திரும்பி, உண்மையில் தன்னைத் தாழ்த்திய பின்பு, மின்னலைப் போன்ற, முகரூபமுடைய, எல்லா வெண்மைக்கும் மேலான வெண்மையான சுத்தமான வஸ்திரங்கள் தரித்த ஒரு பரிசுத்த தூதனைக் கொண்டு தேவன் அவனுக்கு ஊழியம் செய்தார்;

7 அவனுக்கு உணர்த்திய கட்டளைகளை அவனுக்குக் கொடுத்தார்;

8 மார்மன் புஸ்தகத்தை மொழிபெயர்ப்பதற்காக, முன்னமே ஆயத்தப்படுத்தப்பட்ட வழிகளின் மூலம் உன்னதத்திலிருந்து அவனுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்;

9 புறஜாதியாருக்கும் யூதருக்கும்கூட, ஒரு வீழ்ந்துபோன ஜனத்தின் பதிவேடும், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் பரிபூரணமும் அதில் அடங்கியிருக்கிறது;

10 அது உணர்த்துதலால் கொடுக்கப்பட்டு, தூதர்களின் பணிவிடைகளால் மற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு, அவர்களால் உலகத்திற்கு அறிவிக்கப்பட்டது,

11 பரிசுத்த வேதங்கள் மெய்யானவையென்றும், தேவன் மனுஷர்களுக்கு உணர்த்துகிறாரென்றும், முந்தய தலைமுறைகளைப்போல இந்தக் காலத்திலும், தலைமுறைகளிலும் தனது பரிசுத்த பணிக்காக அவர்களை அழைக்கிறாரென்றும் உலகத்திற்கு அது நிரூபித்தது;

12 அதனால் அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காட்டியது. ஆமென்.

13 ஆகவே, இத்தனை பேரும் சாட்சிகளைக் கொண்டிருப்பதால், அவர்களால் உலகம் நியாயந்தீர்க்கப்படும், இப்போதிலிருந்து இந்தப்பணியைப்பற்றி அநேகரும் அறிந்து கொள்வார்கள்.

14 விசுவாசத்தில் அதைப் பெற்றுக் கொள்கிறவர்களும், நீதி செய்கிறவர்களும் நித்திய ஜீவனின் கிரீடத்தைப் பெறுவார்கள்;

15 ஆனால் அவிசுவாசத்தில் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்துகிறவர்களுக்கும், அதை மறுதலிப்பவர்களுக்கும் அவர்களின் ஆக்கினைக்கேதுவாக அது திரும்பும்,

16 ஏனெனில் கர்த்தராகிய தேவன் அதைப் பேசினார், சபையின் மூப்பர்களான நாம் கேட்டு, உன்னதத்திலுள்ள, மகிமையும், மகத்துவமும் உடையவரின் வார்த்தைகளுக்கு, சாட்சியளிக்கிறோம், மகிமை என்றைக்கும் அவருடையதே, ஆமென்.

17 இந்தக் காரியங்களால், முடிவற்ற, நித்தியத்திலிருந்து நித்தியம்வரைக்கும் நித்திய, என்றென்றும், மாறாத அதே தேவன், வானத்தையும் பூமியையும் அதில் உள்ள சகல காரியங்களையும் வடிவமைத்த தேவன் பரலோகத்திலிருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம்;

18 தேவன் தம்முடைய சாயலில் மனுஷனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார், தன் உருவத்தில், தன்னைப்போலவே அவர்களை சிருஷ்டித்தார்;

19 ஜீவிக்கிற மெய்யான ஒரே தேவனாகிய அவரை, அவர்கள் நேசித்து சேவிக்க வேண்டுமெனவும், அவர் ஒருவரையே அவர்கள் தொழுதுகொள்ள வேண்டுமெனவும், அவர்களுக்கு கட்டளைகளைக் கொடுத்தார்.

20 ஆனால் இந்தப் பரிசுத்த நியாயப் பிரமாணங்களை மீறுவதால் மனுஷன் இச்சைக்கேதுவான, பிசாசுத்தன்மை கொண்ட வீழ்ந்த மனுஷனாகிறான்.

21 ஆகவே அவரால் கொடுக்கப்பட்ட, அந்த வேதங்களில் எழுதப்பட்டதைப்போல, சர்வவல்லமையுள்ள தேவன் அவரது ஒரேபேறான குமாரனைக் கொடுத்தார்.

22 சோதனைகளை அவர் தாங்கிக்கொண்டார், ஆனால் அவைகளுக்கு செவிகொடுக்கவில்லை.

23 அவர் சிலுவையில் அறையப்பட்டு, மரித்து மீண்டும் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்;

24 பிதாவின் சித்தத்தின்படி சர்வ வல்லமையுடன் ஆளுகைசெய்ய, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்க பரலோகத்துக்கு ஏறிப்போனார்.

25 அவரது பரிசுத்த நாமத்தில் நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் பெற்று, விசுவாசத்தில் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவர்கள் யாவரும் இரட்சிக்கப்படவேண்டும்,

26 ஒரு காலகட்டத்தில், மாம்சத்தில் அவர் வந்தபின்பு அவரை நம்பினவர்கள் மட்டுமல்ல, ஆரம்பத்திலிருந்தே இருந்த அனைவரும், அவர் வருகிறதற்கு முன்பாக இருந்த அனைவரும், பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நம்பின அனைவரும், பரிசுத்த ஆவியின் வரத்தால் அவர்கள் உணர்த்தப்பட்டவர்களாக பேசியவர்களும், சகல காரியங்களிலும் அவரை உண்மையாக சாட்சியளித்தவர்களும் நித்திய ஜீவனைப் பெறவேண்டும்,

27 அப்படியே பின்னர் வருபவர்களும், பிதாவையும் குமாரனையும் பற்றி சாட்சி பகருகிற பரிசுத்த ஆவியினால் தேவனின் வரங்களையும் அழைப்புகளையும் நம்புவோரும்;

28 முடிவற்ற, நித்திய மற்றும் அந்தமற்ற பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியும் ஒரே தேவன். ஆமென்.

29 சகல மனுஷர்களும் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நம்பிக்கை வைத்து அவரது நாமத்தில் பிதாவை தொழுது கொண்டு, அவரது நாமத்தில் விசுவாசத்தில் முடிவுபரியந்தம் நிலைத்திருக்கவேண்டும், அல்லது தேவனின் ராஜ்யத்தில் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது என்று நாம் அறிகிறோம்.

30 நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம் நீதிமான்களாக்கப்படுதல் நீதியாகவும் சத்தியமாகவுமிருக்குமென நாம் அறிகிறோம்.

31 தங்களின் முழுஊக்கத்தோடும், மனதோடும், பலத்தோடும் தேவனை நேசித்து ஊழியம் செய்கிற அனைவருக்கும், நமது கர்த்தரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையின் மூலம் பரிசுத்தமாதல் நீதியும் சத்தியமுமாயிருக்குமென நாம் அறிகிறோம்.

32 ஆனால் மனுஷன் கிருபையிலிருந்து விழுந்து ஜீவிக்கிற தேவனிடமிருந்து விலகிப்போக ஒரு சாத்தியமிருக்கிறது;

33 ஆகவே அவர்கள் சோதனையில் விழாதபடிக்கு, சபை செவிகொடுத்து எப்போதும் ஜெபிக்கக்கடவது;

34 ஆம் பரிசுத்தமாக்கப்பட்டவர்களும் கூட செவிகொடுக்கக்கடவர்கள்.

35 பரிசுத்த வேதங்களான அவரது புஸ்தகத்தின் தீர்க்கதரிசனத்திலிருந்து, அல்லது பரிசுத்த ஆவியின் வரத்தாலும் வல்லமையாலும் இப்போதிலிருந்து வரப்போகிற தேவனின் வெளிப்படுத்தல்கள், அல்லது தூதர்களின் பணிவிடைகள் கூட்டப்படவோ குறைக்கப்படவோ இல்லாமல், இந்தக் காரியங்கள் உண்மையென்றும் யோவானின் வெளிப்படுத்தல்களின்படியென்றும் நாங்கள் அறிகிறோம்.

36 கர்த்தராகிய தேவன் இதைப் பேசினார்; இப்போதைக்கும் என்றென்றைக்கும் அவருடைய பரிசுத்த நாமத்திற்கு கனமும், வல்லமையும், மகிமையும் செலுத்தப்படுவதாக. ஆமென்.

37 மீண்டும் சபைக்கு ஞானஸ்நானத்தின் விதத்தைக் குறித்து கட்டளைகளின் வழியாக தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்துகிற, ஞானஸ்நானம்பெற வாஞ்சிக்கிற, நொறுங்குண்ட இருதயங்களோடும், நருங்குண்ட ஆவிகளோடும் வருகிற, தங்களுடைய பாவங்கள் எல்லாவற்றிற்கும் உண்மையாகவே மனந்திரும்பியதாக சபைக்கு முன்னதாக சாட்சியளிக்கிற, முடிவுபரியந்தம் சேவைசெய்ய ஒரு தீர்மானத்துடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தங்கள்மேல் தரித்துக்கொள்ள சித்தமாயிருக்கிற, தங்கள் பாவங்களின் மன்னிப்பிற்காக தங்களின் கிரியைகளால் கிறிஸ்துவின் ஆவியை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என உண்மையிலேயே தெரிவிக்கிற சகலரும் ஞானஸ்நானத்தால் அவரது சபைக்குள் வரவேற்கப்படுவார்கள்.

38 மூப்பர்கள், ஆசாரியர்கள், ஆசிரியர்கள், உதவிக்காரர்கள் மற்றும் கிறிஸ்துவின் சபை அங்கத்தினர்களின் கடமை, ஒரு அப்போஸ்தலர் ஒரு மூப்பராயிருக்கிறார், அவரது அழைப்பு ஞானஸ்நானம் கொடுக்கவும்;

39 பிற மூப்பர்களையும், ஆசாரியர்களையும், ஆசிரியர்களையும், உதவிக்காரர்களையும் நியமிக்கவும்;

40 கிறிஸ்துவின் மாம்சம் மற்றும் இரத்தத்தின் அடையாளங்களான அப்பத்தையும் திராட்சைரசத்தையும் நிர்வகிக்கவும்,

41 வேதவசனங்களின்படி அக்கினி மற்றும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திற்காக கைகளை வைப்பதால் சபையில் ஞானஸ்நானம் பெற்றவர்களை திடப்படுத்தவும்;

42 போதிக்கவும், வியாக்கியானம் செய்யவும், புத்தி சொல்லவும், ஞானஸ்நானம் கொடுக்கவும், சபையைக் கண்காணிக்கவும்;

43 கைகளை வைப்பதாலும் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாலும் சபையைத் திடப்படுத்தவும்;

44 அனைத்துக் கூட்டங்களையும் முன்னின்று நடத்தவும் ஆகும்.

45 தேவனின் கட்டளைகளின்படியும், வெளிப்படுத்தல்களின்படியும் பரிசுத்த ஆவியால் நடத்தப்படுகிறபடி மூப்பர்கள், கூட்டத்தை நடத்த வேண்டும்.

46 பிரசங்கித்தல், போதித்தல், வியாக்கியானம் செய்தல், புத்தி சொல்லுதல், ஞானஸ்நானம் கொடுத்தல், திருவிருந்தை நிர்வகித்தல்,

47 ஒவ்வொரு அங்கத்தினரின் வீடுகளில் சந்தித்தல், சத்தமாகவும் இரகசியமாகவும் ஜெபிக்க, குடும்பத்தின் எல்லா கடமைகளையும் நிறைவேற்ற அவர்களுக்கு புத்தி சொல்லுதல் ஆசாரியரின் கடமை ஆகும்.

48 பிற ஆசாரியர், ஆசிரியர் மற்றும் உதவிக்காரர்களை அவர் நியமிக்கவும் செய்யலாம்.

49 மூப்பர் யாருமில்லாத நேரத்தில் கூட்டங்களை அவர் முன்னின்று நடத்தவேண்டும்;

50 ஆனால் மூப்பர் ஒருவரிருக்கும்போது, பிரசங்கித்தல், போதித்தல், வியாக்கியானம் செய்தல், புத்தி சொல்லுதல் மற்றும் ஞானஸ்நானம் கொடுப்பதை மட்டுமே அவர் செய்யவேண்டும்.

51 ஒவ்வொரு அங்கத்தினரின் வீடுகளில் சந்தித்து, சத்தமாகவும் இரகசியமாகவும் ஜெபிக்கவும், குடும்பத்தின் எல்லா கடமைகளையும் செய்யவும் அவர்களுக்கு புத்திசொல்லவும் வேண்டும்.

52 தேவைப்படுகிற சமயங்களில் இந்த எல்லா கடமைகளிலும் ஆசாரியர் மூப்பருக்கு உதவ வேண்டும்.

53 எப்போதும் சபையைக் கண்காணித்து, அவர்களோடிருந்து அவர்களை பெலப்படுத்துவது ஆசிரியரின் கடமை;

54 சபையில் எந்த அக்கிரமமுமில்லாமலும், ஒருவருக்கொருவர் மனக்கடினமில்லாதிருக்கவும், பொய் சொல்லாமலும், புறங்கூறாமலிருக்கவும், தூஷணம் பேசாதிருக்கவும் பார்த்துக் கொள்ளவேண்டும்;

55 அடிக்கடி சபை ஒன்றுகூடுவதையும், எல்லா அங்கத்தினர்களும் தங்கள் கடமையைச் செய்வதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

56 மூப்பர் அல்லது ஆசாரியர் இல்லாதபோது கூட்டங்களை அவர் முன்னின்று நடத்தவேண்டும்,

57 தேவைப்படுகிற சமயங்களில் சபையில் அவரது எல்லா கடமைகளிலும் உதவிக்காரர்களால் உதவப்படவேண்டும்.

58 ஆனால் ஞானஸ்நானம் கொடுக்க, திருவிருந்தை நிர்வகிக்க, அல்லது கைகளை வைக்க ஆசிரியர்களுக்கோ அல்லது உதவிக்காரர்களுக்கோ அதிகாரமில்லை;

59 ஆயினும், அவர்கள் சகலரையும் எச்சரித்து, வியாக்கியானமளித்து, புத்தி சொல்லி, போதித்து கிறிஸ்துவண்டை அழைக்கவேண்டும்.

60 ஒவ்வொரு மூப்பரும், ஆசாரியரும், ஆசிரியரும், உதவிக்காரரும், அவருக்கு தேவனுடைய வரங்களின் மற்றும், அழைப்புகளின்படி நியமிக்கப்பட வேண்டும்; அவரை நியமிக்கிறவரிடத்திலுள்ள பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அவர் நியமிக்கப்படவேண்டும்.

61 மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது சொல்லப்பட்ட மாநாடுகள் வழிகாட்டுகிற அல்லது ஏற்பாடு செய்யப்படுகிறபடி அவ்வப்போது இந்த கிறிஸ்துவின் சபை உள்ளடக்கிய ஏராளமான மூப்பர்கள் மாநாட்டில் சந்திக்கவேண்டும்;

62 அந்த நேரத்தில் செய்யப்படவேண்டிய அவசியமான சபையின் விவகாரங்கள் எதுவாயினும் சொல்லப்பட்ட மாநாடுகளில் செய்யப்படவேண்டும்.

63 மூப்பர்கள் தங்களின் அதிகாரப்பூர்வ அனுமதிகளை, பிற மூப்பர்களிடமிருந்து, அவர்கள் சார்ந்த சபை அல்லது மாநாடுகளிலிருந்து வாக்குகளால், பெறவேண்டும்.

64 ஒரு ஆசாரியரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆசாரியரும், ஆசிரியரும் அல்லது உதவிக்காரரும் அந்த நேரத்தில் அவரிடமிருந்து ஒரு சான்றிதழைப் பெறவேண்டும், அந்த சான்றிதழ் ஒரு மூப்பரிடம் சமர்ப்பிக்கப்படும்போது ஒரு அதிகாரப்பூர்வ அனுமதிக்கு அவரை உரிமையுள்ளவராக்கும், அது அவரது அழைப்புகளின் கடமைகளை நடப்பிக்க அவருக்கு அதிகாரமளிக்கும் அல்லது அவர் அதை ஒரு மாநாட்டிலிருந்து பெறலாம்.

65 ஒரு ஒழுங்காக ஸ்தாபிக்கப்பட்ட அதன் கிளை இருக்குமிடத்தில் அந்த சபையின் வாக்கு இல்லாமல் இந்த சபையில் யாரும் எந்த அலுவலிலும் நியமிக்கப்படுவதில்லை;

66 ஆனால் வாக்கு கேட்கப்பட, சபையின் கிளை இல்லாதபோது தலைமை தாங்கும் மூப்பர்கள், பயணம் செய்யும் ஆயர்கள், பிரதான ஆலோசகர்கள், பிரதான ஆசாரியர்கள், மற்றும் மூப்பர்கள் நியமிக்கும் சிலாக்கியத்தைப் பெறலாம்.

67 பிரதான ஆசாரியத்துவத்தின் ஒவ்வொரு தலைவரும் (அல்லது தலைமை தாங்கும் மூப்பர்), ஆயரும், பிரதான ஆலோசகரும், பிரதான ஆசாரியரும், பிரதான ஆலோசனைக்குழுவின் அல்லது பொது மாநாட்டின் வழிகாட்டுதலின்படி நியமிக்கப்படவேண்டும்.

68 ஞானஸ்நானத்தினால் வரவேற்கப்பட்ட பின் அங்கத்தினர்களின் கடமைகள் சகல காரியங்களும் ஒழுங்காக நடத்தப்படும்படியாக, திருவிருந்தில் அவர்கள் பங்கேற்பதற்கும், மூப்பர்களால் கைகள் வைக்கப்பட்டு திடப்படுத்தப்படுவதற்கும் முன்பாக, கிறிஸ்துவின் சபை சம்பந்தப்பட்ட சகல காரியங்களையும் அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக, வியாக்கியானம் செய்ய மூப்பர்களுக்கும் அல்லது ஆசாரியர்களுக்கும் போதுமான நேரமிருக்கவேண்டும்.

69 அவர்கள் அதற்கு தகுதியுள்ளவர்களென்றும், கர்த்தருக்கு முன்பாக பரிசுத்தத்தில் நடப்பதாக பரிசுத்த வேதங்களுக்கு ஏற்றதான கிரியைகளும் விசுவாசமும் இருக்கத்தக்கதாக ஒரு தேவ தன்மையுடைய நடத்தையாலும், உரையாடலாலும் சபைக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் அங்கத்தினர்கள் காட்டவேண்டும்.

70 பிள்ளைகளுள்ள கிறிஸ்துவின் சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் சபையின் முன்பு மூப்பர்களிடத்தில் அவர்களைக் கொண்டுவர வேண்டும், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்து அவரது நாமத்தில் அவர்களை ஆசீர்வதிப்பார்கள்.

71 தேவனுக்கு முன்பாக மனந்திரும்புதலுக்கு இயல்கிற பொறுப்பேற்கும் வயதை அடையாத யாரும் கிறிஸ்துவின் சபையில் வரவேற்கப்பட மாட்டாது.

72 மனந்திரும்புகிற அனைவருக்கும் பின்வரும் முறையில் ஞானஸ்நானம் நிர்வகிக்கப்பட வேண்டும்,

73 தேவனால் அழைக்கப்பட்டவர், ஞானஸ்நானம் கொடுக்க இயேசு கிறிஸ்துவிடமிருந்து அதிகாரம் பெற்றவர், ஞானஸ்நானத்திற்காக தன்னை ஒப்புக்கொடுத்த அவன் அல்லது அவளுடன் தண்ணீருக்குள் சென்று, அவனை அல்லது அவளை பெயர் சொல்லி அழைத்து, சொல்வார்: இயேசு கிறிஸ்துவினால் ஆணையிடப்பட்டவனாய் நான் உனக்கு பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் அளிக்கிறேன், ஆமென்.

74 பின்னர் அவர் அவனை அல்லது அவளை தண்ணீரில் மூழ்கவைப்பார், மீண்டும் தண்ணீரிலிருந்து வெளியே கொண்டுவருவார்.

75 கர்த்தராகிய இயேசுவை நினைவுகூரும்படிக்கு அப்பத்திலும் திராட்சைரசத்திலும் பங்கேற்க சபை அடிக்கடி ஒன்றுகூடுவது தேவையாயிருக்கிறது;

76 மூப்பர் அல்லது ஆசாரியர் அதை நிர்வகிக்கலாம்; இந்த முறையில் இதை அவர் நிர்வகித்த பின்பு, சபையோடு அவர் முழங்கால்படியிட்டு பக்தியான ஜெபத்தில் பின்வருமாறு சொல்லி பிதாவை அவர் அழைப்பார்:

77 நித்திய பிதாவாகிய தேவனே, இந்த அப்பத்தைப் புசிக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவர்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தை நினைவுகூரும்படிக்கு புசிக்கும்படிக்கும், உம்மிடத்தில் சாட்சி பகரவும், நித்திய பிதாவாகிய தேவனே, அவருடைய ஆவியை அவர்கள் எப்பொழுதும் தங்களோடே கொண்டிருக்கும்படி உம்முடைய குமாரனுடைய நாமத்தை தங்கள்மீது தரித்துக்கொள்ளவும், அவரை எப்பொழுதும் நினைவுகூரவும், தங்களுக்கு அவர் கொடுத்திருக்கிற அவருடைய கட்டளைகளை கைக்கொள்ளவும் சித்தமாயிருக்கும்படிக்கும் இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென்.

78 திராட்சைரசத்தை நிர்வகிக்கும் முறை, அவர் கிண்ணத்தை எடுத்து பின்வருமாறு சொல்ல வேண்டும்:

79 நித்திய பிதாவாகிய தேவனே, இந்த திராட்சைரசத்தை பானம் பண்ணுகிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும், அவர்களுக்காக சிந்தப்பட்ட உமது குமாரனுடைய இரத்தத்தை நினைவுகூரும்படிக்கும், உம்மிடத்தில் அவர்கள் சாட்சி பகரும்படிக்கும், நித்திய பிதாவாகிய தேவனே, அவரை எப்பொழுதும் நினைவுகூரும்படிக்கும், அவருடைய ஆவியை அவர்கள் தங்களோடே கொண்டிருக்கும்படிக்கும் இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

80 கிறிஸ்துவின் சபையின் எந்த அங்கத்தினரும் மீறுதல் செய்தால், அல்லது ஒரு தவறில் கண்டுபிடிக்கப்பட்டால் வேதங்கள் வழிகாட்டுகிறார்போல கையாளப்படவேண்டும்.

81 சபையின் மூப்பர்களால் நடத்தப்படுகிற ஏராளமான மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக ஒன்று அல்லது அதிகமான ஆசிரியர்களை கிறிஸ்துவின் சபையை உள்ளடக்கிய பல்வேறு சபைகளின் கடமையாயிருக்கும்.

82 கடந்த மாநாட்டிற்குப் பின்பு சபையுடன் தங்களை இணைத்துக்கொண்ட பல்வேறு அங்கத்தினர்களின் பட்டியலுடன்; அல்லது சில ஆசாரியர்களால் அனுப்பப்பட்ட; அவ்வப்போது, பிற மூப்பர்களால் நியமிக்கப்படுகிற மூப்பர்களில் யாராவது ஒருவரால் முழு சபையின் எல்லா பெயர்களின் ஒழுங்கான பட்டியல் ஒரு புஸ்தகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும்படியாக;

83 அப்படியாக, யாராவது சபையிலிருந்து நீக்கப்பட்டால் அவர்களின் பெயர்கள் சபையின் பெயர்களின் பொதுப்பட்டியலிலிருந்து அழிக்கப்படும்.

84 அவர்கள் வசிக்குமிடத்திலிருந்து வெளியே போகிற அங்கத்தினர்கள் அனைவரும், அவர்கள் அறியப்படாத ஒரு சபைக்குப் போகிறதாயிருந்தால், அவர்கள் சபையின் ஒழுக்கமான அங்கத்தினர்களென்றும் நன்னடத்தையுடையவர்களென்றும் சான்றிதழ் கடிதம் ஒன்றை எடுத்துப்போகலாம், மூப்பர் அல்லது ஆசாரியருக்கு தனிப்பட்டதாக பரிச்சயமானவராக அங்கத்தினர் இருந்தால் அந்த மூப்பராலோ அல்லது ஆசாரியராலோ சான்றிதழ் கையொப்பமிடப்படலாம். அல்லது சபையின் ஆசிரியர்களால் அல்லது உதவிக்காரர்களால் அது கையொப்பமிடப்படலாம்.