வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 3


பாகம் 3

ஜூலை 1828ல் பென்சில்வேனியாவின் ஹார்மனியில், லேகி புஸ்தகம் என்றழைக்கப்பட்ட மார்மன் புஸ்தகத்தின் முதல் பகுதியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட 116 பக்கங்கள் கொண்ட கையெழுத்துப் பிரதிகள் காணாமற்போனது சம்பந்தமாக தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பில் எழுத்தராக பணிபுரிந்த மார்டின் ஹாரிஸிடம், தன்னுடைய பாதுகாப்பிலிருந்து இந்த பக்கங்கள் ஒரு சிறிது காலமட்டும் போக, தீர்க்கதரிசி தயக்கத்துடன் அனுமதித்தார். இந்த வெளிப்பாடு ஊரீம், தும்மீம் மூலமாக கொடுக்கப்பட்டது. (பாகம் 10 பார்க்கவும்)

1–4, கர்த்தரின் மார்க்கம் ஒரு நித்திய சுற்று; 5–15, ஜோசப் ஸ்மித் மனந்திரும்ப வேண்டும் அல்லது மொழிபெயர்க்கும் வரத்தை இழந்துபோக வேண்டும்; 16–20, லேகியின் சந்ததியைக் காப்பாற்ற மார்மன் புஸ்தகம் வருகிறது.

1 தேவனின் கிரியைகளும், திட்டங்களும், நோக்கங்களும் தடைபடுவதில்லை, அவைகள் நின்றுபோவதுமில்லை.

2 ஏனெனில் தேவன் கோணலான வழிகளில் நடப்பதில்லை, அவர் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்புவதுமில்லை, தாம் சொன்னதிலிருந்து அவர் என்றும் மாறுவதுமில்லை, ஆகவே அவரது வழிகள் நேரானவை, அவருடைய மார்க்கம் ஒரு நித்திய சுற்று.

3 நினைவுகூருங்கள், தடைபடுவது தேவனின் கிரியையல்ல, ஆனால் மனுஷரின் வேலை என்பதை நினைவுகூருங்கள்.

4 ஏனெனில் ஒரு மனுஷன் அநேக வெளிப்படுத்தல்களைப் பெற்றிருந்தாலும், அநேக பெரும் செய்கைகளைச் செய்ய வல்லமை பெற்றிருந்தாலும், இன்னமும் தனது சொந்த பலத்திலே பெருமை பாராட்டி, தேவனின் ஆலோசனைகளை அற்பமாய் எண்ணி, மேலும் தனது சொந்த சிந்தனைகளின்படியும், மாம்ச விருப்பங்களின்படியும் ஆட்டுவிக்கப்பட்டால், அவன் விழவேண்டும், அவன்மேல் நீதியுள்ள தேவனின் பழிவாங்குதல் வரவேண்டும்.

5 இதோ, இந்தக் காரியங்கள் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன, ஆனால் உனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகள் எவ்வளவு கண்டிப்பானவை; நீ அவற்றை மீறாதிருந்தால், உனக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களையும் நினைவு கூருவாயாக.

6 மேலும் இதோ, தேவனின் கட்டளைகளையும் பிரமாணங்களையும் எத்தனை தரம் மீறியிருக்கிறாய், மனுஷர்களின் வற்புறுத்தலுக்கு இடம் கொடுத்தாய்.

7 ஏனெனில், இதோ, நீ தேவனைவிட மனுஷனுக்கு பயந்திருக்கக்கூடாது. இருப்பினும் மனுஷர் தேவனின் ஆலோசனைகளை அற்பமாய் எண்ணி, அவரது வார்த்தைகளை அசட்டை பண்ணுகிறார்கள்.

8 ஆயினும் நீ விசுவாசமாய் இருந்திருக்க வேண்டும், அவர் தனது புயத்தை நீட்டி, பொல்லாங்கனின் சகல கொடிய அஸ்திரங்களுக்கும் எதிராக உன்னை ஆதரித்திருப்பார், இக்கட்டுக்காலங்கள் அனைத்திலும் அவர் உன்னோடிருந்திருப்பார்.

9 இதோ, ஜோசப், கர்த்தரின் பணியைச் செய்ய நீ தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறாய், ஆனால் மீறுதலினிமித்தம், நீ விழிப்புடனில்லாவிட்டால் நீ வீழ்ந்து போவாய்.

10 ஆனால், நினைவுகூர், தேவன் இரக்கமுள்ளவர், ஆகவே, நான் உனக்குக் கொடுத்த கட்டளைகளுக்கு விரோதமாக நீ செய்தவைகளுக்காக மனந்திரும்பு, நீ இன்னமும் தெரிந்துகொள்ளப்பட்டவனே, இப்பணிக்காக மீண்டும் அழைக்கப்பட்டிருக்கிறாய்.

11 இதை நீ செய்யவில்லையெனில், நீ விடுவிக்கப்பட்டு, மற்ற மனுஷர்களைப் போலிருப்பாய், எந்த வரத்தையும் பெற்றிருக்க மாட்டாய்.

12 மேலும் தேவன் உனக்குக் கொடுத்த ஞானத்தையும் மொழிபெயர்க்கும் வல்லமையையும் நீ விட்டு விடும்பொழுது, நீ அந்த பரிசுத்தமானதை துன்மார்க்கனுடைய கரங்களில் கொடுக்கிறாய்,

13 அவன் தேவனின் ஆலோசனைகளை அற்பமாய் எண்ணியவனும், தேவனுக்கு முன்பாக செய்யப்பட்ட மிகவும் பரிசுத்தமான வாக்குத்தத்தங்களை மீறினவனும், தனது சொந்த நியாயத்தை சார்ந்து, அவனது சொந்த ஞானத்தில் பெருமை பாராட்டுகிறவனுமாயிருந்தான்.

14 சிலகாலத்திற்கு உனது சிலாக்கியங்களை நீ இழந்து போவதற்கு இதுவே காரணம்,

15 ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே உனது வழிகாட்டியானவரின் ஆலோசனையை நீ மிதித்துப்போட்டாய்.

16 ஆயினும் எனது பணி நடந்தேறும், யூதர்களின் சாட்சியின் மூலமாக எவ்வளவாய் ஒரு இரட்சகரைப்பற்றிய ஞானம் உலகத்திற்குள் வந்திருக்கிறதோ அவ்வளவாய் ஒரு இரட்சகரைப்பற்றிய ஞானம் என் ஜனத்துக்கு வரும்,

17 தங்கள் பிதாக்களின் சாட்சியின் மூலமாக நேபியருக்கும், யாக்கோபியருக்கும், யோசேப்பியருக்கும், சோரமியருக்கும் வரும்.

18 அவர்களுடைய அக்கிரமங்களினிமித்தமும், அருவருப்புகளினிமித்தமும், தங்கள் சகோதரர்களான நேபியர்களை அழிக்க கர்த்தர் அனுமதித்த, தங்கள் பிதாக்களின் அநீதியினிமித்தம், அவிசுவாசத்தில் நலிந்துபோன, லாமானியர், லெமுவேலர் மற்றும் இஸ்மவேலரின் ஞானத்துக்கும் இந்த சாட்சி வரும்.

19 இந்த குறிப்புக்கள் அடங்கியுள்ள இத்தகடுகள், கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்த வாக்குத்தத்தங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காகவும்,

20 லாமானியர்கள் தங்கள் பிதாக்களின் ஞானத்திற்குள் வரும்படிக்கும், கர்த்தரின் வாக்குத்தத்தங்களை அறிந்துகொள்ளும்படிக்கும், அவர்கள் சுவிசேஷத்தில் நம்பிக்கை வைத்து இயேசு கிறிஸ்துவின் நற்குணங்களில் சார்ந்திருக்கும்படிக்கும், அவரது நாமத்தில் விசுவாசத்தின் மூலமாக மகிமைப்படும்படிக்கும், தங்களின் மனந்திரும்புதல் மூலமாக அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கும், இந்த நோக்கத்துக்காகவே பாதுகாக்கப்பட்டன. ஆமென்.