வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 34


பாகம் 34

நவம்பர் 4, 1830ல் நியூயார்க், பயெட்டியில் ஆர்சன் பிராட்டுக்கு தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். அந்த சமயத்தில் சகோதரர் பிராட்டுக்கு பத்தொன்பது வயதாயிருந்தது. ஆறு வாரங்களுக்கு முன்பு அவரது மூத்த சகோதரர் பார்லி பி. பிராட்டால் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டதை முதல் முறையாக அவர் கேட்டபோது அவர் மனமாறி ஞானஸ்நானம் பெற்றார். இந்த வெளிப்படுத்தல் பீட்டர் விட்மர் மூத்தவர் வீட்டில் பெறப்பட்டது.

1–4, பாவநிவர்த்தியின் மூலமாக விசுவாசமுள்ளவர்கள் தேவகுமாரர்களாகிறார்கள்; 5–9, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது, இரண்டாம் வருகைக்கான பாதையை ஆயத்தப்படுத்துகிறது; 10–12, பரிசுத்த ஆவியின் வல்லமையால் தீர்க்கதரிசனம் வருகிறது.

1 எனது குமாரனாகிய ஆர்சன், கர்த்தராகிய தேவனும், உனது மீட்பருமான இயேசு கிறிஸ்து உனக்குச் சொல்லுகிறவற்றிற்கு செவிகொடுத்து, கேட்டு, பார்ப்பாயாக.

2 இருளிலே பிரகாசிக்கிற ஒளியான உலகத்தின் ஒளியும் ஜீவனுமாயிருக்கிறவர், இருளானது அதைப் புரிந்து கொள்வதில்லை;

3 அவரை நம்புகிற அநேகரும் தேவகுமாரர்களாகும்படிக்கு, தனது ஜீவனைக் கொடுக்குமளவுக்கு, உலகத்தில் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார். ஆகவே நீ என்னுடைய குமாரன்;

4 நம்பியதால் நீ பாக்கியவனாயிருப்பாய்;

5 எனது சுவிசேஷத்தை பிரசங்கிக்க என்னால் அழைக்கப்பட்டதால் நீ அதிக பாக்கியவானாயிருப்பாய்.

6 அவரது இரண்டாம் வருகைக்காக கர்த்தருக்கு பாதையை ஆயத்தப்படுத்தி நீண்டதாயும் சத்தமாயுமுள்ள ஒரு எக்காளச் சத்தத்தைப்போல, உன் குரலை உயர்த்தி மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியாருக்கு மனந்திரும்புதலை அறிவிப்பாயாக.

7 ஏனெனில் இதோ, மெய்யாகவே, மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், மேகத்தில் வல்லமையுடனும் மிகுந்த மகிமையோடும் நான் வருகிற காலம் சமீபித்திருக்கிறது.

8 எனது வருகையின் காலம் ஒரு மகத்தான நாளாயிருக்கும், ஏனெனில் தேசங்கள் யாவும் நடுங்கும்.

9 ஆனால் அந்த மகத்தான நாள் வருவதற்கு முன்பே, சூரியன் இருண்டுபோகும், சந்திரன் இரத்தமாக மாறும், நட்சத்திரங்கள் தங்கள் ஒளியைக் கொடுக்க மறுக்கும், சில விழுந்துபோகும், துன்மார்க்கர்மேல் பெரும் சங்காரம் காத்திருக்கிறது.

10 ஆகவே, கர்த்தர் பேசியதால் உன் குரலை உயர்த்து, அடக்கிக் கொள்ளாதே. ஆகவே, தீர்க்கதரிசனம் உரை, அது பரிசுத்த ஆவியின் வல்லமையால் கொடுக்கப்படும்.

11 நீங்கள் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், நான் வரும்வரை நான் உங்களுடனேகூட இருக்கிறேன்,

12 மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் சீக்கிரத்திலேயே வருகிறேன். நானே உங்கள் கர்த்தரும் மீட்பருமாயிருக்கிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.