வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 41


பாகம் 41

பிப்ருவரி 4, 1831ல் சபைக்கு ஒஹாயோவின் கர்த்லாந்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். தேவனின் “பிரமாணத்தைப்” பெறுவதற்காக ஜெபிக்க தீர்க்கதரிசிக்கும் சபையின் மூப்பர்களுக்கும் இந்த வெளிப்படுத்தல் அறிவுறுத்துகிறது (பாகம் 42 பார்க்கவும்). அப்போதுதான் நியூயார்க்கிலிருந்து கர்த்லாந்துக்கு ஜோசப் ஸ்மித் வந்து சேர்ந்தார். “அவருடன் தங்குமாறும் அவர்களுக்கு வீடுகளையும் பொருட்களையும் அவர் ஏற்பாடு செய்து தருவதாகவும் சகோதரர் ஜோசப்பையும் சிட்னியையும் [ரிக்டன்] ஒஹாயோவின் தாம்சனுக்கு அருகிலிருந்த சபை அங்கத்தினரான லீமன் கோப்லி கேட்டுக்கொண்டார்.” ஜோசப்பும் சிட்னியும் எங்கு வசிக்கவேண்டுமென்றும் எட்வர்ட் பாட்ரிட்ஜை சபையின் முதல் ஆயராக இருக்க அழைக்கும்படியும் பின்வரும் வெளிப்படுத்தல் தெளிவுபடுத்துகிறது.

1–3, வெளிப்படுத்தலின் ஆவியால் மூப்பர்கள் சபையை நிர்வாகம் செய்வார்கள்; 4–6, கர்த்தரின் நியாயப்பிரமாணத்தை உண்மையான சீஷர்கள் பெற்றுக் கைக்கொள்வார்கள்; 7–12, எட்வர்ட் பாட்ரிட்ஜ் சபைக்கு ஆயராக அறிவிக்கப்பட்டார்.

1 எனது ஜனங்களே, செவிகொடுத்துக் கேளுங்கள் என கர்த்தராகிய உங்கள் தேவன் சொல்லுகிறார், நான் சொல்லுகிறதைக் கேட்கிற உங்களை சகல ஆசீர்வாதங்களிலும் மிக மகத்தானதால் ஆசீர்வதிக்க நான் பிரியமாயிருக்கிறேன். எனது நாமத்தை அறிவித்து, நான் சொல்கிறதைக் கேட்காதவர்களை சகல சாபங்களிலும் கடுமையானதால் நான் சபிக்கமாட்டேனோ.

2 நான் அழைத்த என்னுடைய சபையின் மூப்பர்களே, கேளுங்கள், இதோ, என்னுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்படி நீங்கள் ஒன்றுகூடிவரவேண்டும் என நான் உங்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்;

3 எனது சபையை எவ்வாறு நிர்வாகம் செய்வதென்பதையும் எனக்கு முன்பாக சகல காரியங்களையும் சரியாகக் கொண்டிருக்கும்படிக்கு நீங்கள் அறிந்து கொள்ளவும் எனது நியாயப்பிரமாணத்தை உங்கள் விசுவாசத்தின் ஜெபத்தால் நீங்கள் பெறுவீர்கள்.

4 நான் வரும்போது நான் உங்களின் அதிபதியாயிருப்பேன்; இதோ, நான் சீக்கிரத்திலேயே வருகிறேன், எனது நியாயப்பிரமாணம் கைக்கொள்ளப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.

5 எனது நியாயப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கிறவனே எனது சீஷனாயிருக்கிறான்; அதை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி அதன்படி நடக்காதவன் எனது சீஷனாயிருக்கமாட்டான், உங்களுக்கு மத்தியிலிருந்து அவன் புறம்பே தள்ளப்படுவான்;

6 ஏனெனில், ராஜ்யத்தின் பிள்ளைகளுக்கு சொந்தமான காரியங்கள், தகுதியில்லாதவர்களுக்கு அல்லது நாய்களுக்கு கொடுக்கப்படுவது, அல்லது முத்துக்களை பன்றிகளுக்கு முன்பாகப் போடுவது செய்யத்தகாதது.

7 மீண்டும், எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவன் வாழ்வதற்கும் மொழிபெயர்ப்பதற்கும் ஒரு வீடு கட்டப்பட்டிருக்கவேண்டும்.

8 மீண்டும், எனது ஊழியக்காரனாகிய சிட்னி ரிக்டன், எவ்வளவாய் எனது கட்டளைகளைக் கைக்கொள்கிறானோ அவ்வளவாய் அவனுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி வாழவேண்டும்.

9 மீண்டும், எனது ஊழியக்காரனாகிய எட்வர்ட் பாட்ரிட்ஜை நான் அழைத்திருக்கிறேன்; சபையின் குரலால் அவன் நியமிக்கப்படவேண்டும், சபைக்கு ஒரு ஆயராக நியமிக்கப்படவேண்டும், அவனது வியாபாரத்தை விட்டுவிட்டு சபையின் பிரயாசங்களில் அவனது முழுநேரத்தையும் செலவிடவேண்டுமென்றும் நான் ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன்.

10 அவைகளை நான் கொடுக்கிற நாளில் என் பிரமாணங்களில் அவனுக்கு நியமிக்கப்படவிருக்கிறபடி, எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும்படிக்கே.

11 இது ஏனெனில், எனக்கு முன்பாக அவனுடைய இருதயம் பரிசுத்தமாயிருக்கிறது. ஏனெனில் அவன் பூர்வகால கபடற்ற நத்தானியேலைப் போன்றவன்.

12 இந்த வார்த்தைகள் உனக்குக்கொடுக்கப்பட்டவை, எனக்கு முன்பாக அவைகள் பரிசுத்தமானவை; ஆகவே, அவைகளை எவ்வாறு காத்துக் கொள்கிறாய் என்பதில் எச்சரிக்கையாயிரு, ஏனெனில் நியாயத்தீர்ப்பின் நாளில் உங்களின் ஆத்துமாக்களின் சார்பில் அவைகள் பதிலளிக்கப்படவேண்டும். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.