வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 59


பாகம் 59

ஆகஸ்டு 7, 1831ல் மிசௌரியிலுள்ள சீயோனின், ஜாக்சன் மாகாணத்தில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த வெளிப்படுத்தலுக்கு முன்னால் கர்த்தர் வழிகாட்டியபடி தேசம் அர்ப்பணிக்கப்பட்டு வருங்கால ஆலயத்திற்கான இடம் ஒதுக்கப்பட்டது. இந்த வெளிப்படுத்தல் பெறப்பட்ட நாளில் ஜோசப் நைட் மூத்தவரின் மனைவியான பாலி நைட் மரித்தார், அவர் சீயோனில் மரித்த சபையின் முதல் அங்கத்தினர். “ஓய்வுநாளை எவ்வாறு கைக்கொள்ளவேண்டும் மற்றும் எவ்வாறு ஜெபித்து உபவாசிக்க வேண்டுமென்றும் அறிவுரையாக” இந்த வெளிப்படுத்தலை ஆரம்பகால அங்கத்தினர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

1–4, சீயோனிலுள்ள உண்மையுள்ள பரிசுத்தவான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; 5–8, அவர்கள் கர்த்தரை நேசித்து பணிசெய்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும்; 9–19, கர்த்தரின் நாளை பரிசுத்தமாய் ஆசரிப்பதால், பரிசுத்தவான்கள் உலகப்பிரகாரமாகவும் ஆவிக்குரியவிதத்திலும் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்; 20–24, இம்மையில் சமாதானமும் மறுமையில் நித்திய ஜீவனும் நீதிமான்களுக்கு வாக்களிக்கப்படுகிறது.

1 இதோ, என்னுடைய மகிமைக்கென்ற ஒத்த நோக்கத்துடன் என்னுடைய கட்டளைகளின்படி இந்த தேசத்திற்கு வந்த அவர்கள் பாக்கியவான்களென கர்த்தர் சொல்லுகிறார்.

2 ஏனெனில் ஜீவிக்கிறவர்கள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள், மரிப்பவர்கள் தங்களுடைய சகல பிரயாசங்களிலிருந்தும் இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களை பின் தொடரும்; அவர்களுக்காக நான் ஆயத்தம் செய்த என் பிதாவினுடைய வாசஸ்தலங்களில் அவர்கள் ஒரு கிரீடத்தைப் பெறுவார்கள்.

3 ஆம், சீயோன் தேசத்தின்மேல் காலூன்றி நின்றவர்களும், என்னுடைய சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிந்தவர்களுமானவர்கள் பாக்கியவான்களாயிருப்பார்கள்; ஏனெனில் அவர்களின் பலனாக பூமியின் நன்மையான காரியங்களை அவர்கள் பெறுவார்கள், அது அதன் பெலத்தால் கொண்டுவரப்படும்.

4 எனக்கு முன்பாக உண்மையாயும் கருத்தாயுமிருப்பவர்கள் உன்னதத்திலிருந்து ஆசீர்வாதங்களுடன், ஆம், கட்டளைகளுடன், ஒரு சில கட்டளைகளுடன் அல்ல, அவர்களின் சமயத்தில் வெளிப்படுத்தல்களுடனும் கிரீடம் சூட்டப்படுவார்கள்.

5 ஆகவே, இப்படியாக சொல்லி, நான் அவர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுக்கிறேன், உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஊக்கத்தோடும், மனதோடும், பெலத்தோடும் உன்னுடைய தேவனாகிய கர்த்தரை நீ நேசிப்பாயாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவரை சேவிப்பாயாக.

6 உன்னைப் போலவே உன் அயலானையும் நேசிப்பாயாக. களவு செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை அல்லது அதைப்போன்ற எதையும் செய்யாதிருப்பாயாக.

7 சகல காரியங்களிலும் உன் தேவனாகிய கர்த்தருக்கு நன்றி செலுத்துவாயாக.

8 உனது தேவனாகிய கர்த்தருக்கு நீதியில், ஒரு நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும் ஒரு பலியைச் செலுத்துவாயாக.

9 உலகத்தால் கறைபடாதபடிக்கு உங்களை முழுவதுமாக காத்துக்கொள்வீர்களாக, என்னுடைய பரிசுத்த நாளில் ஜெப ஆலயத்திற்குச் சென்று உங்களுடைய திருவிருந்துகளை நீங்கள் செலுத்துவீர்களாக;

10 ஏனெனில் உங்கள் பிரயாசங்களிலிருந்து இளைப்பாறவும், உன்னதத்திலிருப்பவருக்கு உங்களின் ஆராதனையைச் செலுத்தவும் இந்த நாளே உங்களுக்கு நிர்வகிக்கப்பட்டிருக்கிறது;

11 ஆனாலும் சகல நாட்களிலும் சகல காலங்களிலும் உங்களுடைய பொருத்தனைகள் நீதியில் செலுத்தப்படலாம்;

12 ஆனால் உங்களுடைய சகோதரருக்கும் கர்த்தருக்கும் முன்பாக உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு உன்னதமானவரிடத்தில் உங்களின் போஜனபலிகளையும் திருவிருந்துகளையும் கர்த்தரின் நாளான இந்த நாளில் நீங்கள் செலுத்த நினைவுகூருவீர்களாக.

13 இந்நாளில் நீங்கள் வேறொன்றையும் செய்யாதிருப்பீர்களாக, உங்கள் உபவாசம் பரிபூரணப்பட அல்லது, வேறு வார்த்தைகளிலெனில் உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படியாக, கபடமில்லாத இருதயத்தோடு உங்களின் ஆகாரம் மட்டும் ஆயத்தப்படுத்தப்படுவதாக.

14 மெய்யாகவே, இது உபவாசமும் ஜெபமாயுமிருக்கிறது, அல்லது வேறு வார்த்தைகளில் எனில் களிகூருதலும் ஜெபமும்.

15 துதியுடனும் உற்சாகமான இருதயங்களோடும் முகமலர்ச்சியுடனும் இருப்பீர்களாக, மிகுந்த நகைப்புடன் அல்ல, ஏனெனில் இது பாவம். ஆனால் ஒரு சந்தோஷமான இருதயத்தோடும் ஒரு உற்சாகமான முகத்தோடும், இந்தக்காரியங்களை நீங்கள் நன்றியுடன் செய்கின்ற அளவில்,

16 மெய்யாகவே நான் சொல்லுகிறேன், நீங்கள் இதைச் செய்கின்ற அளவில், பூமியின் முழுமையும் உங்களுடையதாகும், மரங்களில் ஏறுகிற, பூமியின்மீது நடக்கிற, வெளியின் சகலவித மிருகங்களும், ஆகாயத்துப்பறவைகளும்;

17 ஆம், பூண்டுகளும், ஆகாரத்திற்கோ அல்லது வஸ்திரத்திற்கோ, அல்லது வீடுகளுக்கோ களஞ்சியங்களுக்கோ, அல்லது சிங்காரவனங்களுக்கோ, அல்லது தோட்டங்களுக்கோ, அல்லது திராட்சைத்தோட்டங்களுக்கோ, பூமியில் வருகிற நன்மையான காரியங்களும்;

18 ஆம், பூமியில் வருகிற சகல காரியங்களும், அதனதன் காலத்தில் மனுஷனின் பலனுக்காகவும் பயனுக்காகவும், கண்ணுக்கு பிரியமாயிருக்கவும், இருதயம் மகிழவும் உண்டாக்கப்பட்டது;

19 ஆம், ஆகாரத்திற்காகவும் வஸ்திரத்திற்காகவும், ருசிக்காகவும் வாசனைக்காகவும், சரீரத்தைப் பெலப்படுத்தவும் ஆத்துமாவை உயிரூட்டவுமே.

20 இந்த சகல காரியங்களும் மனுஷனுக்கு அவர் கொடுத்ததால் இது தேவனை பிரியப்படுத்துகிறது; ஏனெனில் இந்த காரணத்துக்காக நிதானத்துடன், அதிகப்படியாக அல்ல, கொள்ளையினாலும் அல்லாமல், பயன்படுவதற்காக அவைகள் உண்டாக்கப்பட்டன.

21 சகல காரியங்களிலும் அவரது ஈடுபாட்டை அறிக்கையிடாதவர்களையும் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களையும் தவிர, தேவனை மனுஷன் நிந்திக்க எதையும் செய்யமுடியாது அல்லது யாருக்கும் எதிராகவும் அவரது கோபம் மூளாதிருக்கும்.

22 இதோ, இது பிரமாணத்தின்படியும் தீர்க்கதரிசிகளின்படியேயுமே; ஆகவே, இந்த காரியத்தைக் குறித்து இனியும் என்னை தொந்தரவு செய்யாதிருங்கள்.

23 ஆனால் நீதியின் கிரியைகளைச் செய்கிறவன் அவனது பலனைப் பெறுவான், இம்மையில் சமாதானத்தையும் மறுமையில் நித்திய ஜீவனையும் அடைவான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

24 கர்த்தராகிய நானே இதைப் பேசினேன், ஆவி சாட்சி கொடுக்கிறது. ஆமென்.