வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 6


பாகம் 6

ஏப்ரல் 1829ல், பென்சில்வேனியாவின் ஹார்மனியில், தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித்துக்கும் ஆலிவர் கௌட்ரிக்கும் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். ஏப்ரல் 7, 1829ல் மார்மன் புஸ்தகத்தின் மொழிபெயர்ப்பில் எழுத்தராக தனது பணியை ஆலிவர் கௌட்ரி ஆரம்பித்தார். மார்மன் புஸ்தகத்தின் பதிவேடு பொறிக்கப்பட்டுள்ள தகடுகளைப்பற்றிய தீர்க்கதரிசியின் சாட்சி குறித்த உண்மையைப்பற்றிய தெய்வீக வெளிப்பாட்டை அவர் ஏற்கனவே பெற்றிருந்தார். ஊரீம் மற்றும் தும்மீம் மூலமாக தீர்க்கதரிசி, கர்த்தரிடம் கேட்டு இந்த பதிலைப் பெற்றார்.

1–6, கர்த்தரின் வயலில் உழைப்பவர்கள் இரட்சிப்பைப் பெறுகிறார்கள்; 7–13, இரட்சிப்பின் வரத்தைவிட பெரிய வரம் இல்லை; 14–27, ஆவியின் வல்லமையால் சத்தியத்தைப்பற்றிய சாட்சி வருகிறது; 28–37, கிறிஸ்துவை நோக்கிப்பார்த்து தொடர்ந்து நன்மை செய்யுங்கள்.

1 மனுபுத்திரர்களுக்குள் ஒரு பெரிதும் அதிசயமுமான கிரியை வரப்போகிறது.

2 இதோ, நானே தேவன்; எனது வார்த்தைக்கு செவிகொடுங்கள், அவை ஜீவனும் வல்லமையுமுள்ள, இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தைவிட, கூரானதும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாகவுமிருப்பதால் எனது வார்த்தைகளுக்கு செவிகொடுங்கள்.

3 இதோ, வயல் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறது; ஆகவே, அறுவடைக்கு வாஞ்சிக்கிறவன் தனது முழு பலத்துடன் அரிவாளை நீட்டி, தேவனுடைய ராஜ்யத்தில் தனது ஆத்துமாவின் நித்திய இரட்சிப்புக்காக பொக்கிஷப்படுத்தும்படியாக பகலிருக்கும்வரை அறுவடை செய்யக்கடவன்.

4 ஆம், தனது அரிவாளை நீட்டி அறுவடை செய்கிறவன் தேவனால் அழைக்கப்படுகிறான்.

5 ஆகவே, என்னிடம் கேட்டால் நீ பெற்றுக்கொள்வாய்; நீ தட்டினால் அது உனக்குத் திறக்கப்படும்.

6 இப்பொழுது, நீ கேட்டபடியால், இதோ, எனது கட்டளைகளைக் கைக்கொள், சீயோனின் நோக்கத்தை நிலைப்படுத்த வகைதேடு என நான் உனக்குச் சொல்லுகிறேன்;

7 ஞானத்தையேயன்றி ஐஸ்வரியத்தை நாடாதிரு, இதோ, தேவனுடைய இரகசியங்கள் உனக்கு வெளிப்படுத்தப்படும், பின்னர் நீ ஐஸ்வரியவானாக்கப்படுவாய். இதோ, நித்திய ஜீவனை உடையவனே ஐஸ்வரியவான்.

8 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னிடத்தில் வாஞ்சிக்கிறதைப்போலவே அது உங்களுக்கு ஆகக்கடவது; நீங்கள் வாஞ்சித்தால், இந்த சந்ததியில் நீங்கள் அநேக நன்மைகளைச் செய்கிறவர்களாயிருப்பீர்கள்.

9 இந்த சந்ததிக்கு மனந்திரும்புதலையன்றி எதையும் சொல்லாதிருப்பாயாக; எனது கட்டளைகளைக் கைக்கொள், எனது கட்டளைகளின்படி எனது பணியை நடப்பிக்க உதவி செய், நீ பாக்கியவானாயிருப்பாய்.

10 இதோ, நீ ஒரு வரத்தைப் பெற்றிருக்கிறாய், உனது வரத்தால் நீ பாக்கியவானாயிருப்பாய். அது பரிசுத்தமானதென்பதையும், உன்னதத்திலிருந்து வருகிறதென்பதையும் நினைவுகூர்,

11 நீ கேட்க மனதாயிருந்தால், பெரிதும் அதிசயமுமான இரகசியங்களை நீ அறிந்துகொள்வாய்; ஆகவே, இரகசியங்களை கண்டுபிடிக்கத்தக்கதாக, சத்தியத்தின் ஞானத்திற்குள் அநேகரை நீ கொண்டுவரத்தக்கதாக, உனது வரத்தையை நீ பிரயோகித்து, ஆம், அவர்களது வழிகளின் தவறுகளை அவர்களுக்கு உணர்த்துவாய்.

12 உனது விசுவாசத்தை சார்ந்திருப்பவர்களைத்தவிர வேறொருவருக்கும் உனது வரத்தை காண்பிக்காதே. பரிசுத்தமான காரியங்களை அற்பமாய் எண்ணாதே.

13 நீ நன்மையானவற்றைச் செய்து, முடிவுபரியந்தம் விசுவாசத்தில் நிலைத்திருந்தால், தேவனுடைய ராஜ்யத்தில் நீ இரட்சிக்கப்படுவாய். அது தேவனுடைய சகல வரங்களிலும் மகத்தானதாகும். ஏனெனில் இரட்சிப்பின் வரத்தைவிட எந்த வரமும் பெரியதல்ல.

14 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ செய்தவற்றுக்காக, பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் நீ என்னிடம் விசாரித்தாய், இதோ, நீ விசாரிக்கும் போதெல்லாம் எனது ஆவியிடமிருந்து அறிவுரையைப் பெற்றாய். இல்லையெனில், இந்த நேரத்தில் நீ இருக்கிற இந்த இடத்திற்கு நீ வந்திருக்கமாட்டாய்.

15 இதோ, நீ என்னிடம் விசாரித்தாய், நான் உனது உள்ளத்தை தெளிவுபடுத்தினேன் என்பதை நீ அறிவாய்; சத்தியத்தின் ஆவியினால் நீ தெளிவுபடுத்தப்பட்டாயென நீ அறிந்துகொள்ளத்தக்கதாய் இந்தக் காரியங்களை குறித்து இப்பொழுது நான் உனக்குச் சொல்லுகிறேன்;

16 ஆம், உனது சிந்தனைகளையும் உனது இருதயத்தின் நோக்கங்களையும் தேவனைத் தவிர வேறு யாரும் அறியார்களென நீ அறிவாய் என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

17 நீ எழுதிக்கொண்டிருக்கிற வார்த்தைகள் அல்லது பணி மெய்யானது என ஒரு சாட்சியாக இவற்றை நான் உனக்குச் சொல்லுகிறேன்.

18 ஆகவே கருத்தாய் இரு; வார்த்தையினிமித்தம் எந்தக் கடினமான சூழ்நிலையில் அவனிருந்தாலும், எனது ஊழியக்காரன் ஜோசப் அண்டையிலே உண்மையுள்ளவனாய் நில்.

19 அவனது குற்றங்களில் அவனுக்கு புத்திமதி சொல், அவனிடமிருந்து புத்திமதிகளையும் பெற்றுக்கொள். பொறுமையாயிரு; தெளிந்த புத்தியுள்ளவனாயிரு; அடக்கமாயிரு; பொறுமையும், விசுவாசமும், நம்பிக்கையும், தயாளமும் கொண்டிரு.

20 இதோ, ஆலிவர், உன்னுடைய வாஞ்சையினிமித்தம் நான் உன்னுடனே பேசினேன்; ஆகவே இந்த வார்த்தைகளை உனது இருதயத்துக்குள் பொக்கிஷப்படுத்து. தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதில் உண்மையுள்ளவனாயும் கருத்துள்ளவனாயுமிரு, நான் எனது அன்பின் கரங்களால் உன்னை அணைத்துக் கொள்வேன்.

21 இதோ, நானே தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து. நானே என் சொந்தமானவர்களிடத்தில் வந்தேன், எனக்கு சொந்தமானவர்களே என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. நானே இருளில் பிரகாசிக்கிற ஒளி, இருளானது அதை விளங்கிக் கொள்ளவில்லை.

22 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், வேறு ஒரு சாட்சியை நீ வாஞ்சித்தால், இந்தக் காரியங்களைப்பற்றிய சத்தியத்தை அறிந்து கொள்வதற்காக உனது இருதயத்தோடு என்னை நோக்கிக் கூப்பிட்ட இரவை நினைத்துப் பார்.

23 இந்தக் காரியத்தைக் குறித்து உனது மனதிற்குள் நான் சமாதானத்தைப் பேசவில்லையா? தேவனிடமிருந்து வருகிறதைவிட மேன்மையான எந்த சாட்சியை நீ பெற முடியும்?

24 இப்பொழுது, இதோ, நீ ஒரு சாட்சியைப் பெற்றிருக்கிறாய்; ஏனெனில் எந்த மனுஷனும் அறியாத காரியங்களை நான் உனக்குக் கூறினால், நீ ஒரு சாட்சியைப் பெற்றதாகாதா?

25 நீ என்னிடத்தில் வாஞ்சித்தால், எனது ஊழியக்காரனாகிய, ஜோசப்பைப் போல, மொழிபெயர்க்க ஒரு வரத்தை, இதோ, நான் உனக்கு அருளுவேன்.

26 மெய்யாகவே, மெய்யாகவே, மனுஷர்களின் துன்மார்க்கத்தினிமித்தம் மறைத்து வைக்கப்பட்டிருந்த எனது சுவிசேஷம் அதிகமாக அடங்கியிருக்கிற பதிவேடுகளிருக்கின்றன என நான் உனக்குச் சொல்லுகிறேன்.

27 பின்னர் பரலோகத்தில் உனக்காக பொக்கிஷங்களை சேர்த்து வைக்க ஒரு வாஞ்சையான நல்ல வாஞ்சை உனக்கிருந்தால், அக்கிரமத்தால் மறைத்து வைக்கப்பட்டிருந்த எனது வேதங்களின் பகுதிகளை, உனது வரத்தால், வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் நீ உதவவேண்டுமென இப்பொழுது நான் உனக்கு கட்டளையிடுகிறேன்.

28 இப்பொழுது, இதோ, இந்த ஊழியத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவரக்கூடிய இந்த வரத்தின் திறவுகோல்களை உனக்கும் எனது ஊழியக்காரனாகிய ஜோசப்புக்கும் கொடுக்கிறேன்; ஒவ்வொரு வார்த்தையும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்கினால் நிலைவரப்படும்.

29 மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், எனது வார்த்தைகளையும், எனது சுவிசேஷத்தின் பகுதியையும், ஊழியத்தையும் அவர்கள் மறுதலித்தால், நீ பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் எனக்கு செய்வதை விட உனக்கு அவர்கள் ஒருபோதும் அதிகமாய்ச் செய்யமுடியாது.

30 எனக்குச் செய்ததைப்போல உனக்கு அவர்கள் செய்தாலும், நீ பாக்கியவானாயிருப்பாய், ஏனெனில் மகிமையில் நீ என்னோடு வாசம் பண்ணுவாய்.

31 ஆனால் கொடுக்கப்படப்போகிற சாட்சியால் நிலைவரப்போகிற எனது வார்த்தைகளை அவர்கள் மறுதலிக்காமலிருந்தால், அவர்கள் பாக்கியவான்களாயிருப்பார்கள், பின்னர் உன் பிரயாசங்களின் கனிகளில் நீ மகிழ்ச்சியைப் பெறுவாய்.

32 எனது சீஷர்களுக்கு நான் சொன்னதைப்போல, மெய்யாகவே, மெய்யாகவே, நான் உனக்குச் சொல்லுகிறேன், ஒரு காரியத்தைக் குறித்து எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது எனது நாமத்தினாலே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன், அப்படியே உங்கள் நடுவிலேயும் நானிருக்கிறேன்.

33 எனது குமாரர்களே, நன்மை செய்ய பயப்படாதிருங்கள், ஏனெனில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே நீங்கள் அறுப்பீர்கள்; ஆகவே நீங்கள் நன்மையை விதைத்தால் உங்களின் பலனாக நீங்கள் நன்மையானவற்றையே அறுப்பீர்கள்.

34 ஆகவே, சிறுமந்தையே பயப்படாதே; நன்மை செய், பூமியும் நரகமும் உனக்கு விரோதமாக திரண்டாலும், நீங்கள் என் கன்மலையின் மேல் கட்டப்பட்டிருந்தால் அவைகளால் மேற்கொள்ளமுடியாது.

35 இதோ, நான் உன்னை குற்றம் சுமத்தமாட்டேன்; நீ உன் வழிகளில்போய் இனி பாவஞ்செய்யாதே; நான் உனக்குக் கட்டளையிட்ட பணியை தெளிந்த புத்தியுடன் நிறைவேற்று.

36 ஒவ்வொரு எண்ணத்திலும் என்னை நோக்கிப்பார்; சந்தேகப்படாதே, பயப்படாதே.

37 எனது விலாவிலே குத்தப்பட்ட காயங்களையும், என் கைகளிலும் கால்களிலும் உள்ள ஆணிகளின் தழும்புகளையும் பார்; விசுவாசமாயிரு, எனது கட்டளைகளைக் கைக்கொள், பரலோக ராஜ்யத்தை நீ சுதந்தரித்துக் கொள்வாய். ஆமென்.