வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 62


பாகம் 62

ஆகஸ்டு 13, 1831ல் மிசௌரி, சாரிட்டனில் மிசௌரி நதிக்கரையில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தல். இந்த நாளில் இன்டிபென்டன்ஸிலிருந்து கர்த்லாந்திற்கு போகும் தங்கள் பாதையில் சென்றுகொண்டிருந்த தீர்க்கதரிசியும் அவரது குழுவினரும், சீயோன் தேசத்திற்கு செல்லும் ஏராளமான மூப்பர்களை அவர்களது வழியில் சந்தித்தார்கள், மனமகிழ்ச்சியான வந்தனங்களுக்குப் பின்னர் இந்த வெளிப்படுத்தலைப் பெற்றார்.

1–3, சாட்சிகள் பரலோகத்தில் பதிவு செய்யப்படுகிறது; 4–9, மூப்பர்கள், நியாயமாகத் தோன்றுகிறபடியும் ஆவியால் வழிகாட்டப்படுகிறபடியும் பயணம்பண்ணி பிரசங்கிக்கவேண்டும்.

1 இதோ, மனுஷனின் பெலவீனத்தையும், சோதனைக்குட்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவி செய்வதென்பதையும் அறிந்தவரும், உங்களுடைய மத்தியஸ்தருமான இயேசு கிறிஸ்துவாகிய உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார், என்னுடைய சபையின் மூப்பர்களே கேளுங்கள்.

2 இன்னமும் சீயோன் தேசத்திற்குப் போகாதவர்கள் மேல் மெய்யாகவே என்னுடைய கண்கள் நோக்கமாயிருக்கின்றன; ஆகவே உங்களுடைய ஊழியம் இன்னும் நிறைவாகவில்லை.

3 ஆயினும் நீங்கள் பாக்கியவான்கள், ஏனெனில் நீங்கள் சாட்சி சொன்னவைகளை தூதர்கள் பார்க்கும்படியாக பரலோகத்திலே எழுதப்பட்டிருக்கிறது; அவர்கள் உங்களினிமித்தம் களிகூர்ந்தார்கள், உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டன.

4 இப்பொழுது உங்களுடைய பயணத்தை நீங்கள் தொடருங்கள். சீயோன் தேசத்திலே கூடிச்சேருங்கள்; ஒரு கூட்டத்தை நடத்தி ஒருமித்து சந்தோஷப்படுங்கள், உன்னதத்திலிருப்பவருக்கு ஒரு திருவிருந்தை செலுத்துங்கள்.

5 ஆம், உங்களுக்கு நன்மையாகத் தோன்றுகிறபடி ஒருமித்து அல்லது இருவர் இருவராக, பின்னர் சாட்சியளிக்க நீங்கள் திரும்பலாம், எனக்கு அது ஒரு பொருட்டல்ல. விசுவாசமாகமட்டும் இருங்கள், பூமியின் குடிகளுக்கு அல்லது துன்மார்க்கரின் சபைகளுக்கு மத்தியில் நற்செய்திகளை அறிவியுங்கள்.

6 இதோ, வாக்குத்தத்தம் நிறைவேறவும், உங்களுக்கு மத்தியிலுள்ள விசுவாசிகள் காக்கப்படவும் மிசௌரி தேசத்தில் ஒருமித்து களிகூரவும் கர்த்தராகிய நான் உங்களை ஒன்று கூட்டியிருக்கிறேன். கர்த்தராகிய நான் விசுவாசிகளுக்கு வாக்களிக்கிறேன், பொய் சொல்லமுடியாது.

7 கர்த்தராகிய நான் சித்தமாயிருக்கிறேன், உங்களுக்கு மத்தியிலே யாராவது குதிரைகள்மேல், அல்லது கழுதைகள்மேல் அல்லது ரதங்களில் சவாரி செய்ய விரும்பினால், சகல காரியங்களிலும் ஒரு நன்றியுள்ள இருதயத்துடன், கர்த்தரின் கரங்களிலிருந்து அதை அவன் பெற்றால், இந்த ஆசீர்வாதங்களை அவன் பெறுவான்.

8 நியாயமாய்த் தோன்றுகிறபடியும் ஆவியின் வழிகாட்டுதல்களின்படியும் செய்யப்பட இந்தக் காரியங்கள் உங்களோடு நிலைத்திருக்கும்.

9 இதோ, ராஜ்யம் உங்களுடையது. இதோ, எப்பொழுதும் நான் விசுவாசிகளுடனேயே இருக்கிறேன். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.